திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Sunday, July 7, 2013

வழியெங்கும் புத்தகங்கள்


வழியெங்கும் புத்தகங்கள்
bk reading நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பாயில் தினசரிகள்,வார,மாத இதழ்கள் கிடக்கும்.பெரிய ஆட்கள் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பார்கள்.அப்போது பொடியன்களான நாங்கள் சிலர் அவ்வப்போது உள்ளே நுழைந்து எதையாவது வாசிப்போம்.பிறகு மணியடிக்கவும் ஓடிவிடுவோம்.அப்படி ஒருநாள் ஒரு வார இதழில் வாசித்த பெட்டிச்செய்தியில் , பகத்சிங்கைத் தூக்கு மேடைக்கு அழைத்த போது அவர் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார் என்றும் அதை முழுதாகப் படித்து முடிக்கும்வரை கால அவகாசம் கேட்டார் என்றும் படித்து முடித்ததும் மகிழ்ச்சியோடு தூக்கு மேடைக்குப் போனார் என்றும் எழுதியிருந்தது.பாருய்யா சாகப்போற நேரத்திலே கூடப் படிச்சிருக்கான்...அவன் மனுசனா.. நாம மனுசங்களா என்று பெரியவர்கள் ரெண்டுபேர் பேசிக்கொண்டதையும் கேட்டேன்.அந்த செய்தியும் பேச்சும் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
பின்னர் பெரியவனாகிக் கோவில்பட்டியில் கல்லூரியில் படித்த காலத்தில்(1970-71) பஸ் நிலையத்துக்கு எதிரே என்சிபிஹெச் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.சிவப்புப் புத்தகங்களின் அணிவகுப்பில் லெனின் எழுதிய புத்தகங்களைத் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.மேசை அருகே சேர் போட்டு அமர்ந்திருந்த வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மனிதர் ஒருவர் என்ன புத்தகம் தேடுறே தம்பி என்று கேட்டார்.’பகத்சிங் சாவதற்கு முன்னால் படித்த லெனின் புத்தகம்’ என்று சொன்னேன்.உடனே அவர் ‘அரசும் புரட்சியும் ‘என்ற நூலை எடுத்துக்கொடுத்தார்.என்னை இன்றும் செதுக்கிக் கொண்டிருக்கும் புத்தகமாக அது இருக்கிறது.இதையும் சேர்த்துப்படி என்று அந்தச் சிவந்த மனிதர் ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம் ,தனிச்சொத்து,அரசு ஆகியற்றின் தோற்றம் என்கிற புத்தகத்தையும் அன்பளிப்பாக எனக்கு வழங்கினார்.அந்த இரண்டு புத்தகங்களும் நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு பைண்டிங் கிழிந்து தாள் தாளாக ஆகிவிட்டாலும் பொக்கிஷம் போலக் கையில் வைத்திருக்கிறேன்.அதே நூல்களின் வேறு இரு பிரதிகள் அப்புறம் வாங்கிவிட்டாலும் அந்தப் பெரியவர் கொடுத்ததுதான் என் புத்தகமாக என் வாசிப்புக்கான சொந்தப் பிரதியாக பிரியத்துடன் வைத்திருக்கிறேன்.அந்தப்பிரதி பேசுவது போல வேறு பிரதிகள் என்னோடு நெருங்கிப் பேச முடிவதில்லை.அந்தப் புத்தகங்களை எனக்கு எடுத்துக் கொடுத்த பெரியவர் பெயர் எஸ்.எஸ்.தியாகராஜன் என்பதும் அவர் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும் அவர் என் சித்தப்பாவின் நண்பர் என்பதும் பின்னர் அறிய நேர்ந்த கூடுதல் தகவல்கள்.
அரசு என்பது காலம் காலமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒன்று- அது எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டும்தான் என்கிற என் பொதுப்புத்தியை வெடிகொண்டு தகர்த்தன இவ்விரு புத்தகங்களும்.தீர்க்க முடியாத வர்க்கப்பகைமையின் விளவுதான் அரசு.தனிச்சொத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் பெயர்தான் அரசு என்பதும் வரலாற்றில் தனிச்சொத்து தோன்றுவதற்கு முன்னால் அரசு என்கிற வன்முறைக்கருவி இருந்திருக்கவில்லை என்பதும் இவ்விரு புத்தகங்களால் தெளிவானது.அப்போது இலக்கிய வாசிப்பில் நான் நா.பார்த்தசாரதியிடமிருந்து விடைபெற்று ஜெயகாந்தனின் ஆளுகைக்குள் வந்துகொண்டிருந்த காலமாகவும் இருந்தது.பொன்விலங்கும் குறிஞ்சிமலரும் அந்த நாட்களில் என் மனதுக்கு நெருக்கமான நாவல்களாக இருந்தன.அரவிந்தனைப்போல சத்தியமூர்த்தியைப்போல தேசம் பற்றிய பொங்கும் பெருமிதத்தோடும் ஒருவித கற்பிதமான சத்திய ஆவேசத்தோடும் சிலபல நா.பா. கொட்டேசன்களோடும் ஒரு பூரணியை அல்லது பாரதி-கல்யாணியைத் தேடும் இளைஞனாக இருந்துகொண்டிருந்தேன்.கோகிலா என்ன செய்துவிட்டாள் என்கிற குறுநாவல்தான் ஜெயகாந்தனில் நான் முதலில் வாசித்தது.அப்படியே அவர் இழுத்துக்கொண்டு போய்விட்டார்.பாரீசுக்குப் போவின் கலை சார்ந்த தத்துவ விவாதங்களில் பிரமித்து அக்கினிப்பிரவேசத்தில் குளித்தெழுந்த கங்காவைப் பின்தொடர்ந்து சிலநேரங்களில் சில மனிதர்களைச் சந்தித்துச் சினிமாவுக்குப் போன சித்தாளுவுடன் ரிக்‌ஷாவில் ஏறி எம்.ஜி.ஆரின் பட வால் போஸ்டரை உடம்பில் சுற்றிக்கொண்டு அலைந்தேன்.விகடனில் அவர் எழுதிய வசீகரமான தொடர்களை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் வெகு சீக்கிரமாக நான் ஜெயகாந்தனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள நேர்ந்தது. புதுக்கவிதை பொங்குமாங்கடல்போலப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்த நாட்களாக அவை இருந்தன.பழைய தடைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு மொழி புதிய எல்லைகளில் பிரவேசித்த அனுபவத்தில் நின்று ஜெயகாந்தனின் சத்தமான குரலை முன்போலக் கேட்க முடியவில்லை.வண்ணநிலவன்,வண்ணதாசனிடம் மிக இயல்பாக வந்து சேர்ந்தேன்.வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலையும் தோழர் பால்வண்ணம் கொடுத்த ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக்குறிப்புகளையும் ஒரே சமயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.இந்தப்பிரியங்களும் பாசங்களும்தான் வாழ்க்கை என்று கடல்புரத்துப் பிலோமிக்குட்டி சொன்னதையும் சிறைக்குள்ளே உலகத்தொழிலாளர் மீதான பாசத்துடன் ஜூலியஸ் பூசிக் மேதினம் கொண்டாடியதையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசித்துக்கொண்டிருந்தேன்.’உன் அடிச்சுவட்டில் நான்’ புத்தகத்தையும் அதே நேரம் வாசித்து அந்த ட்ராயைப்போல உலகத்தின் மக்கள் எல்லோருக்காகவும் சாகத் தயாராகிக்கொண்டிருந்தேன்.வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதைத்தொகுப்பின் அகல விரித்த வார்த்தைப் பரப்பில் தீட்டப்பட்ட நுட்பமான ஓவியங்களைக் கண்டு மனம் நடுங்கி ’எச்சங்கள்’ சிறுவர்களின் எச்சிற்சோடாக் குடிக்கும் காட்சியைக்கண்டு மனம் பதறி அச்சிறுவர்களுக்காகப் போராட உறுதிகொண்டேன்- கண்ணீரைத்துடைத்துக்கொண்டு.
இப்படியான மனநிலையோடு பாலியல் சார்ந்த குழப்பங்களும் கூடவே ஓடிவந்து கொண்டிருந்த ஒரு வயதில் –அப்போதுதான் ராணுவத்திலிருந்தும் திரும்பியிருந்தேன் –ராணுவமுகாம்களில் வாசிக்கக் கிடைத்த கமலாதாஸ் அக்காவும் சஸ்தி பிரதாவும் பாரதி முகர்ஜியும் இன்னும் என்னோடு இருந்துகொண்டிருந்தார்கள்.குறிப்பாக சஸ்தி பிரதாவின் HE AND SHE, MY GOD DIED YOUNG போன்ற நாவல்களும் கமலாதாசின் என் கதையும் கவிதைகளும் கதைகளும் இருட்டுக்குள் என்னை இழுத்துக்கொண்டே இருந்தன.இருட்டு எப்போதும் மயக்கம் தரவல்ல வசீகரத்தோடு கூடியதுதானே.
கல்லூரிநாட்களின் இறுதியில் அறிமுகமான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ உரையாடல்களையும் இன்னும் விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய COMMENTARIEES ON LIVING இரண்டு தொகுதிகளும் BEYOND VIOLENCE மற்றும் THE AWAKENING YEARS ,அவருடைய கிருஷ்ணமூர்த்தி நோட் புக் போன்ற நூல்கள் என்னோடு இருந்தன.அப்போதைய என்னுடைய பட்ஜெட்டில் அவற்றை வாங்கியது பெரிய செலவுதான்.என்றாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அப்படி ஈர்த்தார்.கேள்வி பதில் பாணியிலான அவருடைய உரைகள் அன்று என்னை ஆட்டி வைத்தன.
நீங்கள் ஒரு குழுவோடு உங்களை ஏன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்? ஒரு இனத்தோடு-ஒரு மதத்தோடு- ஒரு இயக்கத்தோடு?ஒரு கூட்டத்தோடு உங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் கணத்தில் உங்கள் படைப்பாற்றல் (CREATIVITY) மறும் கேள்வி கேட்கும் சுரணை முற்றுப்பெற்று விடுகிறது.என்கிற ஜே.கே யின் முன்வைப்பு நீண்ட காலம் என்னை அலைக்கழித்தது.
ஆனால் ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்ப்பில் வாசித்த ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சீய மெய்ஞ்ஞானம் நூல் என்னைப் பிடித்திழுத்துப் பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தில் தள்ளிவிட்டது.இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பச்சைக்குழந்தைகளுக்குச் சொல்வதுபோலச் சொன்ன புத்தகம் அது.அதைத்தொடர்ந்து ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை நூலையும் பொதுவுடமைதான் என்ன என்கிற புத்தகத்தையும் வாசித்ததில் மனம் மேலும் துலக்கமானது.வரலாற்று ரீதியாக ஒரு கதை வடிவில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் மனித குல வரலாற்றின் முக்கியமான பக்கங்களையும் பேசிய வால்கா முதல் கங்கை வரை வாசித்து அதில் வரும் ஒரு கதாபாத்திரமான ரேக்காபகத் என்கிற பெயரைப் புனைபெயராகக் கொண்டு சில கதைகளைச் செம்மலரில் எழுதினேன்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்தும் சஸ்தி பிரதாவிடமிருந்தும் கமலாதாசிடமிருந்தும் முறையாக விடைபெற்று வர மாரீசு கான்போர்த்தின் இயக்கவியல் பொருள் முதல்வாதம் நூலும் சோவியத் வெளியீடாக அன்று வந்த Marxist Ideology என்கிற அட்டவணைகள் நிறைந்த எளிய புத்தகமும்தாம் கை கொடுத்தன.மனம் என்பதின் செயல்பாடுகள் பற்றியும் உள்மனம்-வெளி மனம்-ஆழ் மனம் மற்றும் அறிவு-உணர்வு என்பவற்றின் அடிப்படை அறிவியல் உண்மைகளோடும் இயக்கவியலைப் புரிய வைத்த இப்புத்தகங்கள் என் வாழ்க்கையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டன.
என் பசிக்குத் தீனியாக அப்போது சென்னை புக்ஸ் பாலாஜி பல நல்ல நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.போல்ஷ்விக் கட்சியின் வரலாறு அப்போது வெளியாகியிருந்தது.அந்தக் கறுப்பு ஞாயிறு பற்றிய பக்கங்கள் என் மனதைப் பாதித்தன.பின்னர் பேட்டில்ஷிப் பொடெம்கின் திரைப்படத்தைப் பார்த்தபோது ஒடெஸ்ஸா படிக்கட்டுகள் காட்சி மீண்டும் என்னைப் போல்ஷ்விக் கட்சியின் வரலாற்றைப் படிக்க வைத்தது.சோவியத்யூனியனைப்போலவே அன்று கிழக்கு ஜெர்மனியிலிருந்தும் ஏராளமான மார்க்சிய அடிப்படை நூல்கள் வந்து கொண்டிருந்தன.அப்புத்தகங்கள் சோவியத் புத்தகங்களைப்போல சிவப்பு வண்ணத்தில் அல்லாமல் நீல வண்ன அட்டைகளுடன் இருக்கும்.ப்ளூ மார்க்சிஸ்ட்ஸ் என்று அவற்றைப்பற்றிய ஒரு கேலியான சிரிப்பு கோவில்பட்டித் தோழர்களிடம் இருக்கும்.
பிளெக்கனோவின் இரு புத்தகங்கள் அந்தத் தருணத்தில் தெளிவான பார்வையைத் தந்தன.வரலாற்றில் தனி நபர் பாத்திரம் என்கிற நூலும் கலையும் வாழ்க்கையும் என்ற நூலும்.அப்போது கு.சின்னப்ப்பாரதியின் தாகம் நாவலும் டி.செல்வராஜின் மலரும் சருகும் நாவலும் வந்துவிட்டிருந்தன.இதுதான் எனது பாதை எனத் தீர்மானிக்க இவ்விரு நாவல்களும் பிளெக்கனோவின் நூல்களும் வழிகாட்டின என்பேன்.
இவ்வளவு புத்தகங்களுக்குப் பிறகுதான் நான் 1848இல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தேன்.ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது என்று துவங்கி எத்தனை இலக்கியப்பூர்வமான மொழிநடையில் உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேர அறைகூவி அழைத்த புத்தகம் அது.இன்றுவரை அப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு புதிய தெளிவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.எதைப்பற்றி எழுதப்போனாலும் பேசப்போனாலும் கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒருமுறை பார்த்துக்கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.அப்போது Radical review பத்திரிகையில் இ.எம்.எஸ். அவர்களின் நேர்காணல் ஒன்று வெளியாகி இருந்தது.CPI-CPM-CPI-ML என்பது அந்நேர்கணலின் தலைப்பு அதைப்படிச்சிட்டு அப்புறம் இதைப்படி என்று தோழர் பால்வண்ணம் என்னிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் என்கிற நூலையும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை என்கிற சிறு நூலையும் கொடுத்தார். கட்சித்திட்டம் என்றால் ஏதோ அது அவர்கள் கட்சியைப்பற்றியும் அவர்களின் வழியைப் புகழ்ந்தும் எழுதியிருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு அது ஓர் ஆழமான வரலாற்று ஆவணம்போல பல உண்மைகளை அடுக்கி மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கு மக்களை அழைக்கும் புத்தகமாக இருந்து என்னை ஆச்சர்யப்படுத்தியது.
சோவியத் நூல்களைச் சரளமாக வாசிக்கும் பழக்கம் இதற்குள் வந்துவிட்டிருந்தது.கார்க்கியைவிட அன்று என்னை மிகவும் ஈர்ப்பவராக தஸ்தாவ்ஸ்கியே இருந்துகொண்டிருந்தார்.வெண்ணிற இரவுகளின் பனி பொழியும் பாதைகளில் காதல்வயப்பட்ட இளைஞனாக நான் நடந்துகொண்டிருந்தேன்.சிங்கிஸ் ஐத்மாத்தோவின் ஜமீலாவைக் காதலிக்கும் பலகோடி உலக இளைஞர்களில் நானும் ஒருவனாக நிலவொளியில் நீந்திக்கொண்டிருந்தேன்.கோகோலின் ’மேல்கோட்’டை அணிந்து இருமிக்கொண்டு அந்தோன் செகாவின் கதைகளுக்குள் ஆறாவது வார்டில் ஒரு பாத்திரமாக மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருந்தேன்.இவான் துர்கனேவின் முதற்காதல் என்கிற குறுநாவல் என்னை அந்நாவலில் வரும் சிறுபையனாகவே மாற்றியது.டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில் வரும் ஏமாற்றுக்காரப் பெண்ணும் அவள்மீது காதல் கொண்டு வாழ்நாள் முழுக்க அவள் பின்னாலேயே ஏமாந்து அலையும் அந்த இளைஞனும் அந்தக்காதலின் புனிதமும் மனதைத் தாக்கினாலும் இது ஒரு கிறித்துவப்பார்வையுடன் எழுதப்பட்ட நாவல் என்று டால்ஸ்டாயையே விமர்சிக்கும் அளவுக்கு அப்போது வளர்ந்துவிட்டிருந்தேன்.
உண்மையில் அன்றைய பல இளைஞர்களைப்போலவே நானும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்னும் பெரும் கடலில் விழுந்து கிடந்தேன்.நட் ஹாம்சனின் நிலவளம் நாவல் மனித வாழ்க்கையை ஆதியிலிருந்து புரிந்து கொள்ள உதவிய வரலாற்று ஆவணம் போல வந்து சேர்ந்த்து.அந்நாவலில் வரும் மேல் உதடு பிளந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த அவளைப்போலவே மேல் உதடு பிளந்த குழந்தையை அவள் யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைக்கும் காட்சியில் இன்னும் மனம் உறைந்துபோய்க் கிடக்கிறேன்.நிலவளம் போலத் தமிழில் வந்த ஒரு புத்தகமாக அப்போது சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை இயற்கையை வெல்லும் மனிதக்கதையாகப் புரிந்து கொண்டேன்.இன்று அதே கதையை இயற்கையை அழித்த மனிதன் சீரழியும் கதையாகப் புரிந்துகொள்கிறேன். வி.ஸ.காண்டேகரின் எரிநட்சத்திரம் நாவலில் வரும் புரட்சிகர இளைஞனாக என் ஆசிரியர்களுடன் வாதம் செய்திருக்கிறேன்..வங்கத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் ஏராளம்.விபூதிபூஷனின் இலட்சிய இந்து ஓட்டல், பங்கிம் சந்திரரரின் விவசாய எழுச்சியை மையமாக்க் கொண்ட வந்தேமாதரம் பாடலைத் தந்த ஆனந்த மடம் நாவல் ,வெளிநாட்டுக்குப் பிழைக்கப்போகும் உயர்சாதி இளைஞன் பற்றிய பாரதி நாவல் எனப்பல நாவல்கள். தாகூரின் கீதாஞ்சலி வாசித்துத் தலை நிமிர்த்தி நடந்திருக்கிறேன்.வங்க நாவல்களின் தத்துவப் பார்வையை விட என்னோடு எளிமையாகவும் நெருக்கத்துடனும் பேசிய கதைகளாக மலையாள எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும் குறுநாவல்களும் பஷீரின் சிறுகதைகளும் கேசவ்தேவின் நடிகையும் ஓர் அழகியின் சுயசரிதையும் என் திருமணத்துக்கு அன்பளிப்பாக வந்த என்.பி.டி.யின் சமீபத்திய மலையாளச்சிறுகதைகள் தொகுப்பும் என ஒரு வளமான பங்கு கேரளத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.அந்த அளவுக்குத் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு ஏதும் செல்லவில்லை என்பது இன்றுவரை தீராத ஒரு சோகம்தான்.
இந்த சந்தர்ப்பத்தில் நான் தொழிற்சங்க இயக்கத்தில் கூட்டங்களில் பேசுகிற ஆளாக மாறிப்போனதால் தேவையை ஒட்டித் தேடிப்படிக்கும் பழக்கமும் வந்து விட்டது.அப்படி வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் என தோழர் இ.எம்.எஸ். அவர்கள் எழுதிய INDIAN PLANNING IN CRISIS என்கிற நூலையும் அதன் தொடர்ச்சியாக வந்த CRISIS INTO CHAOS என்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பொருளாதார அமைப்பு குறித்து எழுந்த விவாதங்கள் 1948இல் திட்டக்கமிஷன் உருவாக்கப்பட்ட பின்னணி அதன் பின் இயங்கிய வர்க்க அரசியல் பற்றியெல்லாம் தெளிவாக விளக்கிய நூல்கள் இவை.இ.எம்.எஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவர் எழுதிய எல்லா நூல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது.அவரது இந்திய வரலாறு-ஒரு சுருக்கமான வரலாறும், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன் என்கிற நூலும் அப்போது தமிழில் கிடைத்தன.பின்னர் அவரது A HISTORY OF INDIAS FREEDOM STRUGGLE என்கிற புத்தகம் வந்ததும் ஓடிப்போய் வாங்கிப்படித்தேன்.இப்போது அது தமிழிலேயே கிடைக்கிறது.நம் நாட்டின் கடந்த கால வரலாற்றை ஒரு மார்க்சிய நோக்கில் பயில இதைவிடச் சிறந்த புத்தகம் வேறொன்றும் இல்லை.பின்னர் வேதங்களின் நாடு வந்தது.இந்தியாவில் சாதிகளின் தோற்ரம் பற்றிய ஒரு புதிய விளக்கத்தை இந்நூல் தந்த்து.
அங்கிருந்து என் வாசிப்பு வரலாற்று நூல்களின் மீது ஆவலுடன் தாவியது.குறிப்பாக இந்திய வரலாறு,தமிழக வரலாறு குறித்து என்ன துண்டுத்தாள் கிடைத்தாலும் வாங்கி வாசித்துத் தீவிரமாக்க் குறிப்புகளும் எடுத்துக்கொண்டிருந்தேன்.இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் நூல்கள் பலவற்றை அப்போது என்.சி.பி.எச் வெளியிட்டுக்கொண்டிருந்தது.என்சிபிஎச் கிளை பொறுப்பாளர் ஒருவரிடம் ரகசியமாக்க் கணக்கு வைத்துக்கொண்டு மாத்த் தவனையில் அந்த எல்லா வரலாறு நூல்களையும் வாங்கிக் குவித்து வெறிகொண்டு படித்துக்கொண்டிருந்தேன்.டி.டி.கோசாம்பியின் பண்டைய இந்திய வரலாறு,ராகுல்ஜியின் ரிக் வேத கால ஆரியர்கள்,ரோமிலா தாப்பரின் வரலாறும் வக்கிரங்களும்,சுவீரா ஜைஸ்வாலின் வைஷ்ணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,ஆர்.பி.ஷர்மாவின் பண்டைய இந்தியாவில் அரசு நிர்வாகத்தின் தோற்றம்,விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்கள்,பி.சி.ஜோசியின் 1857 புரட்சி ,சுசோபன் சர்க்காரின் வங்காள மறுமலர்ச்சி என எண்ணற்ற புத்தகங்கள்.படித்த நூல்களை நோட்டுப்போட்டுக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டிருந்தேன் –எதற்கென்று தெரியாமலே.இவ்வாசிப்பில் 1857 புரட்சியை ஒரு தனித்த சிறப்பு வாய்ந்த நூலாக உணர்ந்தேன்.ஒரு வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான நூலாக இது அமைந்தது.ஏற்கனவே 1857 சிப்பாய்ப் புரட்சி பற்றி வேறு சில நூல்களையும் நான் வாசித்திருந்தேன்.மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் முயற்சியில் 1957இல் அரசு வெளியிட்ட 1857 என்கிற விரிவான ஆங்கில நூலையும் பட்டாபி சீத்தாராமையா எழுதிய 1857 கலகம் என்கிற நூலையும் சவர்க்காரின் இந்தியப்புரட்சி நூலையும் வாசித்திருந்தாலும் அவை எதுவும் பி.சி.ஜோஷியின் நூலுக்கு ஈடாக நிற்கவில்லை.1857 புரட்சி பற்றிய வரலாறுக் காரணங்கள்,அன்றைய பத்திரிகைகளில் அது பற்றி வந்த செய்திகள்,நாட்டுப்புறப்பாடல்கள் ,பிற நாட்டு அறிஞர்கள் அப்புரட்சி பற்றி எழுதிய குறிப்புகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நூலாக அது வந்திருந்தது.என்னைப்போன்ற அன்றைய இளம் வாசகர்களுக்குச் சரியான தீனியாக அது அமைந்தது.கோ.கேசவனின் எழுத்துக்களை நான் இந்த சமயத்தில்தான் வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது.அவரது சமூகமும் கதைப்பாடல்களும் என்கிற சின்னஞ் சிறிய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை இருக்கிறது.பாளையக்காரர்களின் காலத்தைப்புரிந்துகொள்ள தமிழில் இதைவிடச் சிறந்த நூல் ஏதும் இல்லை என்பேன்.அவரது மண்ணும் மனித உறவுகளும், இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் இயக்கமும் இலக்கியப்போக்குகளும் போன்ற நூல்களையெல்லாம் ஒருசேரத் தேடித் தேடி வாசித்தேன்.இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களுக்குக் கல்வி புகட்டும் மொழியில் அவர் எழுதினார்.அவரது மறைவு இட்து சிந்தனை உலகுக்குப் பேரிழப்பாகும்.
இப்போது கதைகள் எழுதவும் துவங்கியிருந்தேன்.ஒரு திட்டமிட்ட பாடத்திட்ட அடிப்படையில் இலக்கியங்களைக் கற்பது என்று முடிவு செய்து கால வாரியாக நூல்களைப் பட்டியலிட்டு நூலகங்களிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் நிறைய சொந்தமாகவும் வாங்கிப் படிக்கலானேன்.(இந்த வைராக்கியம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது எனக்கு ஆச்சரியமே-அவ்வளவு நீண்ட காலத்துக்கு என் புத்தி ஒரு நிலையில் நிற்பது –வாசிப்பைப் பொறுத்து-அபூர்வம்தான்)
1920களின் முக்கிய உரைநடை இலக்கிய எழுத்துக்கள் என பாரதியின் சிறுகதைகளையும் அவரது சந்திரிகையின் கதை என்னும் நாவலையும் அ.மாதவய்யாவின் குட்டிக்கதைகளையும் வ.வே.சு.அய்யரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பையும் படித்தேன்.சமூகத்துக்கு ஏதேனும் சொல்லத்துடித்த கதைகளாக அவற்றை உணர்ந்தேன்.மாதவய்யா கதைகளின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நான் எதிர்பாராதவை.சிறுகதை என்னும் வடிவம் பூரணமாகக் கைவராத படைப்புகளாக இம்மூவரின் கதைகள் இருந்தன.ஆனாலும் சிறுகதையின் துவக்கம் சமூக அக்கறை கொண்ட்தாகவே இருந்தது-உள்மனப் பயணம் பற்றியதாக இல்லை என்பது குறிக்கத்தக்கது.
1925இல் இம்மூவரும் மறைந்து விட்ட பின் புதுமைப்பித்தனும் கு.ப.ராஜகோபாலனும் மௌனியும் முன்னுக்கு வந்தனர்.இப்போதுபோல ஒட்டுமொத்தத் தொகுப்புகள் அக்காலத்தில் இல்லை.மௌனியின் அழியாச்சுடர் ஒரு தொகுப்புதான் வந்திருந்தது.என்னைப்போலவே(!) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கதை எழுதியவர் அவர் என்பதாலும் சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் அவரைப்பற்றிச் சொன்னதாலும் அவரை ஆவலுடன் வாசித்து ஏமாந்தேன்.அன்றுமுதல் இன்றுவரை மௌனி என்னை வசீகரிக்கவில்லை.புதுமைப்பித்தனின் காஞ்சனை,புதுமைப்பித்தன் கதைகள் ,துன்பக்கேணி போன்ற பத்துத்தொகுப்புகள் என் கையில் இருந்தன.ஒவ்வொரு கதையும் எனக்குப் பாடம் சொன்ன கதைதான்.இலங்கைக்குப் போய் பரங்கிப்புண் பெற்ற மருதாயியின் சோகமும் கடவுளோடு ஒருநாள் கழித்த கந்தசாமிப் பிள்ளையின் எள்ளலும் மகாமசானம் என்று சென்னைப்பட்டணத்தை மயானம் என்று சொல்லி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்த கோபமும் அவருக்கன்றி யாருக்கு வரும்? கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் தொகுப்பின் கதைகள் இன்றைக்கும் மனதை ஈர்ப்பவையாக இருக்கின்றன.சிறிது வெளிச்சம்,ஆற்றாமை,மெகருன்னிசா போன்றவை இறவாப்புகழ் பெற்ற கதைகள்தாம்.
40களின் படைப்பாளிகளில் நான் தடுமாறி விழுந்தது கு.அழகிரிசாமியின் மடியில்தான்.இன்றைக்குவரை எனக்கு ஆதர்சம் அவர்தான்.நான் கதை எழுதிய ஒவ்வொரு நாளும் அவரது மடியில் உட்கார்ந்து கதை எழுதுவதான உணர்வே எனக்கு இருக்கும்.எளிய வார்த்தைகளில் எங்கள் கரிசல் மனிதர்களின் கள்ளமில்லாத உள்ளத்துடன் கதை சொன்ன அவர்தான் எமக்கு அப்பா.அவரது சிரிக்கவில்லை,தவப்பயன்,அன்பளிப்பு,கற்பக விருட்சம் போன்ற 11 தொகுப்புகள் அன்று என் கைவசம் இருந்தன. அது பற்றிய அளவற்ற கர்வமும் எனக்கு இருத்து.அவற்றை மொத்தமாக வாங்கிப்போன ஜோதிவிநாயகம் திருப்பித்தராமலே போய்விட்டது ஒரு சோகம்தான்.இன்று மொத்தக்கதைகளின் தொகுப்பு வந்துவிட்டாலும் அந்த என் புத்தகங்கள் போன சோகத்தை அது ஈடு செய்யவில்லை.
50-60 களின் இலக்கிய ஆளுமைகளாக அசோகமித்திரனும் கி.ராஜநாராயணனும் சி.சு.செல்லப்பாவும் ஜி.நாகராஜனும் சுந்தரராமசாமியும் லா.ச.ராமாமிர்தமும் என் வாழ்வில் வந்து சேர்ந்தார்கள்.சென்னை வாழ்வின் கீழ் மத்தியதர வாழ்வைக்களனாக்க் கொண்ட அசோகமித்திரனின் சிறுகதைகளைப்(காலமும் ஐந்து குழந்தைகளும் ) பார்க்கிலும் என்னைப் பாதித்தவை அவரது அற்புதமான நாவல்களான கரைந்த நிழல்கள்,தண்ணீர்,பதினெட்டாவது அட்சக்கோடு போன்றவைதாம்.தண்ணீரில் வரும் ஜமுனாவின் துக்கம் நம்முடையதாகிவிடும்.அதை ஒரு குறியீட்டு நாவல் என்று அப்போது பேசிக்கொள்வார்கள்.பத்னெட்டாவது அட்சக்கோடு ஹைதராபாத்தைக் கதைக் களனாகக் கொண்டு இந்து முஸ்லீம் கலவரத்தில் சிதையும் மனித மாண்புகள் பற்றி நுட்பமாகப் பேசிய நாவல்.கி.ரா எங்க காட்டுப் பெரியவர். வேட்டி,கிடை,கன்னிமை போன்ற சிறுகதைத் தொகுப்புகளாலும் கோபல்லபுரம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் ஆகிய நாவல்களாலும் கரிசல் வாழ்வின் பல பரிமாணங்கலை எளிய பேச்சுவழக்கில் கதைகளாக்ச் சொன்னவர் கி.ரா.பிரசாதம் சிறுகதைத் தொகுப்புத்தான் சுந்தரராமசாமியின் எழுத்துக்களில் நான் முதலில் வாசித்தது.புளியமரத்தின் கதையை ரொம்ப்ப் பின்னாளில்தான் வாசித்தேன்.அவருடைய எழுத்தின் மீது ஏற்பட்ட ஒரு வசீகரமும் மோகமும் இன்றுவரை தீரவில்லை.ஜே.ஜே.சில குறிப்புகள்தான் அவருடைய மாஸ்டர்பீஸ்.கருத்துரீதியாக அந்நாவலில் விமர்சனம் எனக்குண்டெனிலும் மொழி மற்றும் உத்தி ரீதியில் அது வந்த காலத்தில் மிக முன்னதாகப் பாய்ந்த படைப்பு அது.லா.ச.ராவை அன்று வாசித்தபோது பிரமிப்பாக இருந்தது.மொழியின் எல்லைகளை இவ்வளவு தூரம் விரிக்க முடியுமா என்று வியந்ததுண்டு.பின்னர் 90களில் அபிதாவை எடுத்து வாசித்தபோது என்னால் வாசிக்கவே முடியாத அயர்ச்சி ஏற்பட்டது.ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு குறுநாவலும் நாளை மற்றொரு நாளே நாவலும் தமிழ் நவீன இலக்கியம் அதிகம் பேசாத பக்கங்களைப் பேசின.எல்லோரும் வாழ்க்கையை முன்வாசல் வழியாகப் பார்க்கும்போது ஜி.நாகராஜன் புழக்கடை வழியே அதைப் பார்க்கிறார் என்ற சு.ரா.வின் கருத்து முற்றிலும் சரிதான்.இன்றும் என்னை ஈர்க்கும் ஒரு எழுத்து ஜி.நாகராஜனுடையது.
70-80 களில் நானும் மைதானத்தில் இறங்கியிருந்தேன்.எனக்கு முன்னால் பிரபஞ்சனும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும்,பூமணியும்,பா.செயப்பிரகாசமும் ,கந்தர்வனும் மேலாண்மை பொன்னுச்சாமியும் போய்க்கொண்டிருந்தார்கள்.
தொழிற்சங்க மற்றும் இலக்கிய உலகத்தோடு நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து சில வேலைகளைச் செய்தபோது என் அறிவுலகின் வாசல்கள் இன்னும் அகலத் திறந்தன.கே.கிருஷ்ணகுமாரின் இயற்கை,சமுதாயம்,மனிதன் என்ற புத்தகம் எளிமையாக மனித குலவரலாற்றினூடாக அறிவியல் செய்த பயணம் பற்றிப் பேசியது. அறிவியல் இயக்கம் எனக்குச் செய்த மாபெரும் உதவி சில தலை சிறந்த மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்ததுதான். ச.மாடசாமி,டாக்டர் சுந்தரராமன்,டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்,டாக்டர் ராமானுஜம்,டாக்டர் (?) செந்தில்பாபு போன்ற அறிஞர்கள் எனக்கு முற்றிலும் புதியதோர் உலகத்துப் புத்தகங்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களாக அமைந்தனர்.
எளிய மக்களின் மனதோடு பேசும் கலையைக் கற்றுத்தந்த பேராசிரியர் ச.மாடசாமியின் எனக்குரிய இடம் எங்கே? அவரவர் கிணறு,சொலவடைகளும் சொன்னவர்களும் ஆகிய மூன்று நூல்களும் வாசிப்பவரின் மனங்களை விசாலமாக்கும் தன்மையுடையவை..சொலவடைகள் புத்தகம் கடுமையான உழைப்பையும் ஈடுபாட்டையும் கோரிய புத்தகம்.டாக்டர் சுந்தரராமன் தான் எமக்கு அந்தோனியோ கிராம்ஷியையும் மிஷேல் பூக்கோவையும் அறிமுகம் செய்து வைத்தவர்.அவருடைய அறிமுகத்தால் உந்தப்பெற்றுத் தேடிப் பிடித்து வாசிக்க முயன்ற புத்தகங்களென கிராம்ஷியின் PRISON NOTE BOOK மற்றும் CULTURAL WRITINGS ஆகிய இரு நூல்களையும் குறிப்பிட வேண்டும்.தோழர் தொ.மு.சி.ரகுநாதனின் கடைசி நாட்களில் இப்புத்தகங்களை அவர் கேட்கக் கொண்டுபோய்க் கொடுத்த சந்தோஷமும் எனக்குக் கிட்டியது.சவுத் விஷன் பாலாஜி வெளியிட்ட (எஸ்.வி.ஆர்-கீதா) அந்தோனியோ கிராம்ஷி-வாழ்வும் சிந்தனையும் அக்காலத்தில் முதல் அறிமுக முயற்சி.இப்போது விடியலில் அதைவிட நல்ல புத்தகங்கள் வந்துவிட்டன.
செந்தில்பாபு வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்வாம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.இப்போது அவரை விடவே முடியவில்லை.நான் முதலில் வாசித்த்து அவரது AGE OF EXTREMES தான் .நான் வாசித்த வரலாற்று நூல்களில் CLASSIC என்று இந்நூலைத்தான் சொல்வேன்.20ஆம் நூற்றாண்டைப்பற்றிய ஒரு முழுமையான பார்வையை இந்நூல்தான் வழங்கியது.அவருடைய Nations and Nationalism,Age of Empires,Age of Capitalism, சமீபத்திய Globalisation,Democracy and Terrorism போன்ற நூல்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரிந்துகொள்ள உதவிய நூல்கள்.ஒவ்வொரு நூற்றாண்டும் நமக்குச் சில வார்த்தகளை விட்டுச்செல்கின்றன என்கிற அவருடைய வரியும் மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு-நினைவு படுத்திக்கொண்டே இருப்பது வரலாற்றாளனின் கடமை என்கிற வரியும் மறக்க முடியாதவை.
த.வி.வெங்கடேஸ்வரன் திருவனந்தபுரத்தில் இருந்தபோதும் இப்போது டெல்லியில் இருக்கும்போதும் அவ்வப்போது அறிய புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்பவராக இருக்கிறார்.முக்கியமாக புவியியல் நூல்களின் அரசியலை எனக்குப்புரிய வைத்து Jared Diamond என்கிற அற்புதமான புவியியல் எழுத்தாளரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.Jared Diamond இன் Why Geography என்கிற நூல் புவியியல் கற்பதன் அவசியத்தையும் உன்னதத்தையும் எனக்கு உணர்த்தின.அவருடைய இன்னொரு புத்தகமான GUNS,GERMS AND STEEL இதுவரையிலும் பார்க்காத ஒரு புதிய புவியியல் கோணத்தில் உலக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவியது.வரைபடங்களின் அரசியலையும் வரைபடங்களின் வழியே வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் SUSAN GOLE அவர்களின் நூல்கள் சில உதவின.குறிப்பாக INDIA WITHIN GANGES- இண்டியா இந்த்ரகேஞ்சம் என்கிற அவரது நூல் ஐரோப்பியர்களின் பார்வையில் ஆதி காலந்தொட்டு இந்தியா பற்றிய சித்திரங்கள் எவ்விதம் மாறி மாறி வடிவம் கொண்டன என்பதை விளக்குகிறது.- இப்பாதையில் புத்தகங்களோடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு ஆளுமை சேலம் சகஸ்ரநாமம்.நானும் அவரும் சேர்ந்து மனிதகுல வரலாறு,சமூக வரலாறு, கட்சித்திட்டம் போன்றவற்றை நழுவுபடக்காட்சிகளாகத் தயாரிக்கப் பெரும் திட்டங்கள் தீட்டினோம்.(நடக்கிறதோ இல்லையோ கனவுகளை விரித்துக்கொண்டே இருப்பதுதான் வாழ்வின் ஆதாரம் இல்லையா).மனித குல வரலாறு தொடர்பான சமீபத்திய பல நூல்களை அவர் பல ஊர்களிலிருந்து தருவித்தார்.ஒரு மேப் பாணியிலான கண்காட்சியைத் தயாரித்து ஆளுக்கு ஒரு செட் வைத்துக்கோண்டோம். சில ஊர்களுக்குக் கொண்டு சென்றோம்.அதற்குள் பவர் பாயிண்ட் என்கிற இன்னும் சிறப்பான வடிவம் வந்துவிட்டது.அவர் மூலம் வாசிக்க்க் கிடைத்த புத்தகங்களில் முக்கியமானவையாக JaredJared Diamond எழுதிய DioThe Rise anf Fall of Third Chimpanzee யையும் by Robert Wright எழுதிய The Moral Animal என்கிற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.மரபணு ஆராய்ச்சிகளின் விளைவாக மனித குலம் பிறந்தது ஆப்பிரிக்கா கண்ட்த்தில்தான் என்பது நிரூபணமான பிறகு இந்நூல்களை வாசித்தது நம் வேர்களை இன்னும் நெருக்கமாக அடையாளம் காண உதவியது. நமது ஆதி விலங்கினத் தொடர்பு எவ்விதம் இன்றுவரை நம் பண்பாட்டு வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் நாம் ஏன் இவ்விதமாக வாழ்கிறோம் என்பதற்கான டார்வினிய அடிப்படையிலான விளக்கத்தை இந்நூல்கள் அளிக்கின்றன.
90களில் சோவியத் யூனியன் சிதறுண்டதும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் வீழ்ச்சியடைந்ததும் பண்பாட்டுத்தளத்தில் நாம் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. எனது பார்வையும் இயக்கத்தின் பார்வையோடு சேர்ந்து மாற்றம் பெற்றது.அம்பேத்கரின் நூற்றாண்டு அவரது சிந்தனைகளின் மீது கவனத்தைத்திருப்பியது எனலாம்.அவரது நூல்கள் தமிழில் வெளியாகத் துவங்கியதும் ஈர்ப்புக்கு ஒரு வடிவம் கொடுத்தது.அவருடைய இந்தியாவில் சாதிகள் என்கிற கொலம்பியா பல்கலைக்கழக உரையும் புத்தரும் அவரது தம்மமும் என்கிற நூலும் காந்தியும் காங்கிரசும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன என்கிற நூலும் முதல் வாசிப்பிலேயே வாசகனின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன.அவரைப்பற்றிய புத்தகங்களில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் அம்பேத்கர் ஆய்வு மையம் வெளியிட்ட அம்பேத்கர்-ஒரு பன்முகப்பார்வை ஒரு நல்ல எளிமையான அறிமுக நூலாகவும் DR.AMBEDKAR AND UNTOUCHABILITY- என்கிற CHRISTOPHER JAFFRELOT அவர்களின் நூல் அவரது சிந்தனைகளின் அறிமுகமாகவும் எனக்கு வாசிக்கக் கிடைத்தன.மராட்டிய அரசு வெளியிட்டுள்ள 40க்கு மேற்பட்ட அம்பேத்கர் நூல்வரிசையில் 20க்கு மேற்பட்டவற்றை வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். முழு தொகுதிகளையும் வாங்கியாக வேண்டும்.அவருடைய ஆய்வு முறையும் ஆழ்ந்தகன்ற வாசிப்பும் ஒவ்வொரு வார்த்தையிலும் குமுறும் அவரது கோபாவேசமும் அம்பேத்கரை என் மனதின் உச்சத்தில் கொண்டு வைத்துள்ளது-மிகத் தாமதமாக அவரிடம் வந்து சேர்ந்தோமே என்கிற குற்ற உணர்ச்சியுடன்.
தந்தை பெரியாரின் நூல்களில் பெண் ஏன் அடிமையானாள்? மற்றும் திராவிடர் கழக வெளியீடுகளான பெரியார் களஞ்சியம் பத்துத் தொகுதிகள் (பெண்ணியம்,சாதி மட்டும்)வாங்கி வாசித்திருந்தாலும் வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டு பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் வெளியிட்ட பெரியாரின் குடி அரசு எழுத்துக்களின் 27 தொகுதிகளை வாங்கி பரீட்சைக்குப் படிப்பது போல (ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டி இருந்ததால்)படித்த அனுபவம் அலாதியானது.பெரியாரின் எழுத்துக்களில் மிளிரும் கிண்டலும் கேலியும் நாட்டுப்புறக் கதைகளும் சொலவடைகளும் தனியே விவரித்து எழுதத்தக்கவை. காதல் பற்றிய அவரது கிண்டலான கருத்துக்கள் முதல் வாசிப்பில் எனக்கு வியப்பூட்டின. மக்கள் மொழியில் மக்களிடம் பேசிய மகத்தான தலைவராக அவர் மனதில் உயர்ந்து நிற்கிறார்.கிராம்ஷி சொல்லும் Organic Intellectual இவர்தான் என்று தோன்றியது.
பெண்களின் நிலை குறித்துத் தொடர்ந்து பேசி வந்தாலும் வலுவான புத்தகங்கள் வாசிக்க்க் கிடைக்காத சூழலில் எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஏ.எஸ்.பத்மாவதி அவர்கள் வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது அரிய பல நூல்களை அப்படியே எனக்கே எனக்கு என அள்ளிக்கொடுத்து விட்டார்.அவற்றில் – SIMON DE BEUOVA எழுதிய நான் ரொம்ப காலமாகத் தேடிக்கொண்டிருந்த THE SECOND SEX என்கிற புத்தகமும் இருந்தது.பிரான்ஸ் நாட்டையும் ஐரோப்பாவையும் குலுக்கிய அப்புத்தகம் பெண்நிலையில் நின்று இவ்வுலகைக் காணப் புதிய சாளரங்களைத் திறந்து விட்டது.The Beauty Myth மற்றும் Sacrificing Ourselves ஆகிய இரு புத்தகங்களும் வ.கீதா எழுதிய Gender மற்றும் Patriarchy ஆகிய இரு நூல்களும் பெண்ணியம் தொடர்பான என் பல குழப்பங்களுக்கும் விடையளிப்பதாக அமைந்தன.
நெல்லைக்குப் பணியாற்ற வந்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தமிழறிஞர் தொ.பரமசிவமும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனும் எனக்குச் செய்துள்ள உதவிகள் சொல்லாலே விளக்கிவிட முடியாதவை.இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த சில முக்கியமான புத்தகங்களை சலபதிதான் எனக்கு வாங்கித்தந்தார்.ஊர்வசி புட்டாலியாவின் The Otherside of Silence கமலா பாஷின் எழுதிய Borders and Boundaries ஆகிய இரு நூல்களும் எந்த வரலாற்று நூலும் இதுவரை சொல்லியிராத தேசப்பிரிவினையின் காயங்களைத் திறந்து காட்டின.இந்தியாவின் விடுதலை என்பது பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட ஒரு வரலாறுதான் என்பதை இவ்விரு நூல்களும் நம் முகத்திலறைந்து சொல்கின்றன.கண்ணீரில் கரைந்தபடி வாசித்த நூல்கள் இவை.எஸ்.ராமானுஜம் மொழி பெயர்ப்பில் வெளியான மண்ட்டோ படைப்புகள் இவ்வரிசையில் ஓர் மகத்தான நூலாகும்.
தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் என்கிற நூல் தமிழகப்பண்பாட்டு வரலாற்றில் உண்மையிலேயே அறியப்படாத ஒரு தமிழகத்தை அறிமுகம் செய்து பலத்த அதிர்வுகளை உண்டாக்கிய நூல்.அந்நூலை நாங்கள் எம் தோள்களில் சுமந்து சென்று விற்பனை செய்தோம்.இன்று அவருடைய எல்லாக் கட்டுரைகளும் பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலாக வந்துள்ளது.நாட்டார் தெய்வங்களி வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டுவந்த வாழும் நா.வானமாமலை என நான் மதிக்கிற தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் அடித்தள மக்கள் வரலாறு, கொலையில் உதித்த தெய்வங்கள்,கிறித்துவமும் சாதியும் ,மந்திரங்கள் சடங்குகள் என அவரது ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு எழுத்தும் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அடிப்படையான நூல்களாக அமைந்துள்ளன.சின்ன வயதிலேயே பெரும் சாதனைகள் புரிந்தவராக நான் மதிக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் அந்தக்காலத்தில் காப்பி இல்லை,நாவலும் வாசிப்பும்,திராவிட இயக்கமும் வேளாளரும்,முச்சந்தி இலக்கியம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழில் வரலாற்று நூல்களின் வரிசையில் மிக முக்கிய இடம் பிடிப்பவை.
தமிழகத்தில் நானறிந்த ஒரே பொருளாதார வரலாற்றாய்வாளரான முனைவர் கே.ஏ.மணிக்குமாரின் 1930களில் தமிழகம் என்கிற நூலும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த அவரது 1957 RIOTS என்கிற நூலும்(அச்சில்) தமிழக வரலாற்றுக்கு அரிய பங்களிப்புகளாகும்.முத்துராமலிங்கத்தேவர் பற்றிய ஒரு விருப்பு வெறுப்பற்ற கணிப்பை மணிக்குமார் அவர்களின் இந்நூல் செய்துள்ளது குறிப்பிட்த்தக்கது.1930களில் தமிழகம் நூலை முன் வைத்து புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றை ஆய்வு செய்து பார்ப்பது அவசியம்.30களின் பொருளாதார மந்தம் பற்றி பல கதைகளில் புதுமைப்பித்தன் அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.
நான் சந்தித்த மனிதர்கள் எல்லோருடைய முகங்களுமே எனக்குச் சில புத்தகங்களாகவே மனதில் தோன்றுகின்றன.புத்தகம் சுமந்த (புத்தகங்களை நானும் என்னைப் புத்தகங்களும் ) வரலாறுதான் என் கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமுமாக இருக்க முடியும்.என் மனப்போக்கின் ஒவ்வொரு திருப்பத்தையும் நடப்புகளும் நிகழ்வுகளும் தீர்மானித்ததை விட மேலே குறிப்பிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களே தீர்மானித்தன என்று உறுதியாகச் சொல்லுவேன்.
சமீபத்திய வாசிப்பில் இளம்பிறை,குட்டி ரேவதி, சுகிர்தராணி,சல்மா,மாலதி மைத்ரி போன்ற பெண் படைப்பாளிகளின் கவிதைகளும் கதைகளும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் தன் வரலாறும் ப்ரியாபாபுவின் எழுத்துக்களும் என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன என்பேன்.இவர்களைப்பற்றி இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு வரியில் எழுதுவது நியாயமில்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வாழ்வை முன்வைத்துப் பேசுகிறார்கள்.பொதுவான அம்சம் ஒன்றுண்டு என்பதால் பொதுவாக்க் குறிப்பிட்டேன்.வாசிக்கும் ஆண் மனதைக் குற்ற உணர்வு கொள்ளச்செய்யும் படைப்புகளாக இவை யாவும் உள்ளன என்பதே அது.
கீரனூர் ஜாகிர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா,யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி மற்றும் சேகுவேரா இருந்த வீடு போன்ற படைப்புக்கள் சமீபத்தில் நான் வாசித்து அதிர்வுக்குள்ளான உயிர்த்துடிப்புள்ள படைப்புக்கள்.இஸ்லாமிய வாழ்க்கைப் பின்புலத்தோடு மனித வாழ்வை, நம்பிக்கைகளை , மனித மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் நாவல்களைத் தொடர்ந்து எழுதி வரும் ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களில் தனித்துவமான ஒன்றாக வடக்கே முறி அலிமாவை நான் மதிப்பிடுகிறேன்.ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புஷ்பராஜாவின் புத்தகமும் ராஜனி திரானகம எழுதிய முறிந்தபனை யும் காட்டிய ஈழப்போராட்ட்த்தின் மறுபக்கத்தையும் முழுமையான சித்திரத்தையும் வலி மிகுந்த வாழ்க்கையையும் துக்கத்தின் உச்சியில் பிறக்கும் பகடியாக யோ.கர்ணன் தன் சிறுகதைகளில் எழுதிச்செல்கிறார்.சேகுவேரா இருந்த வீடு ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் குறியீடாக அமைந்துவிட்ட்து.
கோ.ரகுபதியின் தலித்துகளும் தண்ணீரும் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகம்.பாவங்களைக் கழுவும் புனித வஸ்துவாகக் கருதப்படும் தண்ணீரைக் குடிப்பதற்காக தலித்துகள் நடத்தி வரும் போராட்டங்களை வரலாற்று ரீதியில் விளக்கும் இந்நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.சு.கி.ஜெயராமன் தொடர்ந்து எழுதிவரும் புவியியல் சார் புத்தகங்களான குமரி நில நீட்சி,மணல் மேல் கட்டிய பாலம் போன்றவை இன்றைய இந்துத்துவப் புரட்டுகளையும் புளுகுமூட்டைகளையும் எதிர்கொள்ள உதவும் முக்கியமான புத்தகங்கள்.
என் இலக்கிய வாசிப்பு குறித்துப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன்--500 புத்தகங்களுக்கு மேல் அது வளரும் என்பதால்.
.இவையெல்லாம்தான் என் புத்தகங்கள்.இவற்றை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டுதான் என் அன்றாடம் நகர்கிறது.இன்னும் கூட வாசிக்காத பல புத்தகங்கள் என் அலமாரிகளில் இருக்கின்றன.வாழ்வு முடிவதற்குள் நம்மிடம் இருக்கும் புத்தகங்களையாவது நாம் வாசித்து முடிப்போமா என்கிற சந்தேகம் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.என்றாலும் வாசிக்காமல் முடியாது.வாசித்தாலும் தீராது.
இப்படிச் சொல்ல உங்களுக்கும் நிறையவே இருக்கும்

Monday, January 23, 2012





















எழுதியது ச.தமிழ்ச்செல்வன்

மாற்றுத்திறனாளி விக்னேஷ்வர் படுகொலை
---------------------------------------------------------

நில மோசடிக்கென்று தனி காவல்துறை விசாரணையெல்லாம் நடப்பதாக சொல்லப்படுகிறது.திமுக முன்னாள் அமைச்சர்களெல்லாம் கைதாகவாதாக பத்திரிகைகளில் படங்கல் வருகின்றன.ஆனால் என்ன ஆட்சி மாறினாலும் இந்த மாஃபியா கும்பலின் ஆதிக்கம் தமிழகத்தை ஆக்டோபஸ் போல கவ்விக்கொண்டிருக்கிறது.
நேற்று தூத்துக்குடி மாவட்ட சிபிஎம் செயலாளர் கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.அவரது துணைவியார் தலைக்காயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார்,இன்று இதோ நம் அன்புத்தோழன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் செயல்வீரன் புவனேஷ்வரன் சென்னைக்கு அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது.
திரு.புவனேஷ்வரன் அவர்கள் ஆவடி அருகே மோரே கிராமத்தில் நில மோசடிக்கு எதிராகக் கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி வருபவர்.அப்பகுதியிலுள்ள வீராபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாலராகவும் பணியாற்றி வருபவர்.தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக கடந்த ஆண்டு சிலருக்கு மோசடியாளர்களிடமிருந்து நிலம் மீட்டுத்தரப்பட்டது.புவனேஷ்வரன் உள்ளிட்ட இன்னும் சிலருடைய அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படவில்லை.சட்டரீதியாகவும் ஜனநாயக அடிப்படையிலும் அவர் தொடர்ந்து போராடி வந்த சூழலில் நேற்று 10 ஆம் தேதி பட்டப்பகலில் அவர் நில மோசடிக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும்.உரிய தண்டனை பெற வேண்டும்.நில மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டுக் கைது செய்யப்பட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய நிலம் மீட்டுத்தரப்பட வேண்டும்.கொலை மிரட்டல் பற்றி அறிந்தும் மெத்தனமாக இருந்த காவல்துறையும் விசாரிக்கப்பட வேண்டும்.
அனைவரும் கண்டனக்குரல் எழுப்புவோம்.அவர் அனைத்துவகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டப்பொருளாளராகப் பணியாற்றியவர்.
தீரமிக்க ஒரு தோழனை இழந்து நிற்கும் அவருடைய இயக்கத்துக்கும் குடும்பத்துக்கும் தோள் கொடுப்போம்.

அலுவலகத்தின் மீது தாக்குதல் தமுஎகச கண்டனம்
============================================


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு
11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625011
421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018
நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல்
தமுஎகச கண்டனம்
முதல்வர் ஜெயல்லிதா அவர்கள் மீது அவதூறுச் செய்தி வெளியிட்ட்தாக்க் கூறி சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் 300 பேர் திரண்டு சென்று தாக்கி அங்குள்ள பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர்.ஒரு சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில் இந்த அராஜகம் நிகழ்ந்துள்ளது.பத்திரிகையில் செய்தி வெளியிட்டால் அதன் மீது கருத்து மாறுபாடு இருக்கும் பட்சத்தில் சட்டபூர்வமாக வழக்குத்தொடுத்தோ பிரஸ் கவுன்சிலில் முறையிட்டோ எதிர்ப்பைத் தெரிவிக்க ஜனநாயகப் பூர்வ வழிகள் பல இருக்க அதையெல்லாம் கைவிட்டு இப்படி நேரடித் தாக்குதலில் ஆளும் கட்சியினரே இறங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது.முதல்வர் அவர்களும் இச்செயலைக் கண்டனம் செய்யாத்து வருத்த்துக்குரியது. திருச்சியில் நக்கீரன் பத்திரிகையை எரித்தபோது அதிமுக தொண்டர் ஒருவர் தீக்காயத்துக்கு ஆளானதும் நடந்துள்ளது.இத்தகைய கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளை தமுஎகச வன்மையாக்க் கண்டனம் செய்கிறது.
அதே சமயத்தில் பரபரப்பான வியாபாரத்துக்காக செய்திகளை வெளியிடுவதில் எந்த எல்லைக்கும் செல்ல்லாம் என்கிற நக்கீரனின் போக்கை ‘பத்திரிகை சுதந்திரம்’ என வரவேற்க முடியாது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்
ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்
மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்
மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைத்தளத்தில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்
சு.வெங்கடேசன்

காவல் கோட்டம் –
===============
ஓர் அனுபவம்
=================
இந்த நேரத்தில் தமிழ்பேப்பர்.நெட் டில் வெளிவந்துள்ள இக்கட்டுரை முக்கியத்துவமும் சுவாரஸ்யமும் பெறுகிறபடியால் கீழே தந்துள்ளேன்.சி.சரவணகார்த்திகேயன்
“Good writers write the kind of history good historians can’t or don’t write.” – Daniel Aaron
சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலை நான் வாசித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும், அதற்கு 2011 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கும் இவ்வேளையில் அதைப் பற்றி எழுத முயல்வது பரிசுத்த‌மான‌ சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. ஆனாலும் இப்போதேனும் இந்த நாவல் குறித்த கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அமைந்ததே என்றே எடுத்துக்கொள்கிறேன்.
காவல் கோட்டம் என்கிற பிரம்மாண்டமான நாவல் வெளியாகியிருக்கிறது என்ற தகவல் டிசம்பர் 2008 வாக்கில் சிறுபத்திரிக்கைகள் வாயிலாக அறிந்திருந்தாலும் அது குறித்த முதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆண்டிறுதி ஆனந்த‌ விகடன் இதழில் வெளியிடப்பட்ட விகடன் அவார்ட்ஸ் 2008 தான். அதில் அவ்வாண்டின் சிறந்த நாவல் என்று காவல் கோட்டம் நாவலைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
பிப்ரவரி 2009 காலச்சுவடு இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி காவல் கோட்டம் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை (களவியல் காரிகை) வெளியாகி இருந்தது.
மார்ச் 2009 தீராநதி இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய விமர்சனக் கட்டுரையான ‘காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’ (பகுதி-1, பகுதி-2) தான் அடுத்த‌ தூண்டுகோல். அதில் விழுந்திருந்தது வெறுப்பின் சாயை மட்டுமே என்பது நாவலைப் படிக்காமல் கட்டுரையின் பாணியிலேயே தெரிந்து விட்டது.
ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ம.மணிமாறன் ஆகியோர் இதைக் கண்டித்து மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். மேலாண்மை பொன்னுச்சாமியும் ‘காவல் கோட்டம் : மீள் விசாரணை – ஆயிரம் பக்க அதிசயம்’ என்று நாவலைப் புகழ்ந்துரைத்து ஒரு விமர்சனம் எழுதினார். ஜெயமோகனும் சற்று நாசூக்காக இதைக் கடிந்து எழுதியிருந்தார் (“முன்நிலைபாடுகளும் கசப்புகளும் இல்லாமல் வாசிப்பதே”). எஸ்.ரா.வின் மொழியா இது என செல்வேந்திரன், ஹரன் ப்ரசன்னா, யாழிசை லேகா உள்ளிட்ட சில வலைப்பதிவர்களும் ஆச்சரியம் காட்டி இருந்தனர்.
ஜ.சிவகுமார் என்ற சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை ஆகிய நாவல்களுடன் காவல் கோட்டத்தை ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.
பிற்பாடு அக்டோபர் 2009ல் ஜெயமோகன் காவல் கோட்டம் பற்றி மிக விரிவாக தன் வலைப்பதிவில் எழுதினார் (பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4, பகுதி-5). அவர் இதுகாறும் வேறு ஏதேனும் நாவலுக்கு இது போன்றதொரு நீண்ட விமர்சனம் எழுதி இருக்கிறாரா என்பது சந்தேகமே. இந்தத் தனித்துவமே எனை வசீகரித்தது.
அதன் காரணமாகவே சு.வெங்கடேசனின் எந்தப் படைப்பையும் அதற்கு முன்பு படித்ததில்லை என்ற போதிலும் ஜனவரி 2010 சென்னைப் புத்தகக் காட்சியில் காவல் கோட்டம் நாவலை வாங்கினேன். கொஞ்சமும் மெருகு கலையாத புது மணப்பெண் மாதிரி காத்திருந்தது காவல் கோட்டம்.
பின் 2010ன் கோடையில் என்பதாக ஞாபகம் – காவல் கோட்டத்தை முதன் முதல் ஸ்பரிசித்தேன். கிட்டதட்ட ஒரு மாதம் போல் நீடித்த நீண்ட கூடல் அனுபவமது. கூடலை நீட்டிப்பதற்காக அல்லாமல் தொடர்வதற்காக Start and Stop Technique பயன்படுத்த வேண்டி இருந்தது. இடையில் சற்றே இளகிக் கொடுத்தாலும் இறுதி வரை மிகுந்த உழைப்பையும் பொறுமையையும் கோரும் ஓர் அடங்காப் புரவியாகவே இருந்தது காவல் கோட்டம். சமீபத்தைய மறுவாசிப்பிலும் கூட‌ அப்படியே தான்.
எந்த சந்தர்ப்பத்திலும் நாவலின் எந்தப் பகுதியையும் என்னால் தொடர்ச்சியாய் மூன்று மணி நேரத்திற்கு மேல் படிக்க இயலவில்லை. இடைவெளி எடுத்துக் கொண்டு அதுவரை படித்ததை கிரகித்து உள்வாங்கி ஜீரணித்த பின்பே அடுத்த பகுதியை மீண்டும் தொடர வேண்டி இருந்தது. இதன் அர்த்தம் காவல் கோட்டம் நாவல் சுவாரஸ்யமாய் இல்லை என்பதில்லை. இதன் அடர்த்தியும், செறிவும் அத்தகைய அக்கறையை, கவனத்தைக் கோருகிறது. இதை ஒரு வாசிப்பு என்று சொல்வதை விட ஓர் அனுபவம் என்பதே சரி. இதற்கு முன்பு இத்தகையதோர் அனுபவத்தைத் தந்த நாவல் என்றால் அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் தான்.
நாவல் இதுவரை மூவாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமற்றதொரு தகவல் வழி அறிகிறேன். அது உண்மையெனில் அதில் ஒரு சதவிகிதம் பேராவது (அதாவது முப்பது பேர்) இந்நாவலை முழுக்க ஊன்றிப் படித்திருப்பார்களா என்கிற என் அடிப்படைச் சந்தேகத்தை நேரடியாக‌வே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
*
நாவல் பற்றிப் பேசப்புகும்முன் தமிழில் என் வரலாற்று நாவல் வாசிப்புத்தகுதியை கொஞ்சம் எடை போட்டுக் கொள்வோம். இதுவரை கல்கி, சாண்டில்யன், அகிலன், கருணாநிதி, ர.சு.நல்லபெருமாள், ஜெகசிற்பியன், விக்கிரமன், அரு.ராமநாதன், ப.சிங்காரம், பிரபஞ்சன், சுஜாதா, பாலகுமாரன், ரா.கி.ரங்கராஜன், கௌதம நீலாம்பரன், கவிஞர் வைரமுத்து, விசாலி கண்ணதாசன் ஆகியோர் எழுதிய குறைந்தபட்சம் நூறு சரித்திரப் புதினங்களையேனும் வாசித்திருப்பேன்.
அண்ணாத்துரை, ந.பார்த்தசாரதி, கோவி. மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், கண்ணதாசன், மு.மேத்தா, இந்திரா சௌந்தர்ராஜன், பா.விஜய் ஆகியோர் எழுதிய சரித்திர நாவல்கள் எதையும் படித்ததில்லை. தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. பி. ஆர். இராஜமையர் எழுதிய முதல் தொடர்கதையான கமலாம்பாள் சரித்திரம் படித்தது இல்லை. தமிழின் முக்கிய சரித்திர நாவல் முயற்சிகளாகக் குறிப்பிடப்படும் சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம், பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் இரண்டையும் படித்ததில்லை. கள்ளர் பற்றிப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை இரண்டையும் கூட இதுவரை படித்ததில்லை.
வாசித்தவரையில் கீழ்க்காணும் நாவல்கள் முக்கியமானவையாகப் படுகின்றன: பொன்னியின் செல்வன் (கல்கி), ஜலதீபம் (சாண்டில்யன்), கல்லுக்குள் ஈரம் (ர.சு. நல்லபெருமாள்), புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்), வீரபாண்டியன் மனைவி (அரு.ராமநாதன்), பொன்னர் சங்கர் (கருணாநிதி), வானம் வசப்படும் (பிரபஞ்சன்), நான் கிருஷ்ணதேவராயன் (ரா.கி.ரங்கராஜன்) மற்றும் உடையார் (பாலகுமாரன்).
சு.வெங்கட்டேசனின் காவல் கோட்டம் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கிறது. அவ்வகையில் நான் வாசித்தவற்றில் மிகச்சிறந்த சரித்திர நாவல் இது தான்.
*
காவல் கோட்டம் என்கிற வரலாற்று நாவல் 2 பெரும் பாகங்களாக (முடி அரசு, குடி மக்கள்), 10 உட்பிரிவுகளாக (மதுரா விஜயம், பாளையப்பட்டு, யூனியன் ஜாக், இருளெனும் கருநாகம், தாதுப்பஞ்சத்திற்கு முன், மெஜுரா சிட்டி, பென்னிங்டன் ரோடு, ரயில் களவு, CT ACT, பட்ட சாமி), 115 அத்தியாயங்களில், 1048 பக்கங்களில் மிகப்பிரம்மாண்டமாக விரிகிறது. காவல் கோட்டம் நாவலின் வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கம் வரை ஊடுவி நிற்கிறது அந்த‌ மகா பிரம்மாண்டம்.
மதுரையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ச‌மணமலையின் அடிவாரத்திலிருக்கும் கீழக்குயில்குடி என்கிற கிராமத்தில் களவையும், காவலையும் தம் குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த‌ கள்ளர் இனத்தவரின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை, தொடர்புடைய ராஜாங்க நடவடிக்கைகள், அரசியல் நிகழ்வுகளுடன் வழங்குகிறது காவல் கோட்டம். புனைவுக்காக சமணமலை அமணமலை ஆகிவிட்டது; கீழக்குயில்குடி தாதனூர் ஆகிவிட்டது.
1310ல் மதுரையில் நடந்த மாலிக் கஃபூர் படையெடுப்பில் தொடங்கும் நாவல் 1910ல் பெருங்காமநல்லூரில் நடக்கும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைகிறது. கிட்டதட்ட தொடங்கிய நிலைமையிலேயே முடிகிறது கள்ளர்களின் வாழ்க்கை. வித்தியாசம் பார்த்தால் ஆரம்பத்தில் அகதிகள்; கடைசியில் அடிமைகள். அப்போது முகமதியன்; இப்போது ஆங்கிலேயன்.
இந்த நாவல் பிரதானமாய் கள்ளர் பற்றியது தான் என்றாலும், அதன் ஊடுபாவாய் மதுரையின் சரித்திரம் விளம்ப‌ப்படுகிறது. எப்படி காந்தியின் வரலாற்றை இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, ஹிட்லரின் வரலாற்றை இரண்டாம் உலகப்போரைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, அது போல் தான் கள்ளரின் வரலாற்றை மதுரை ந‌கரின் சரித்திரத்தைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. கள்ளர் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் மதுரையின் அரசியல் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போலவே மதுரையின் பல‌ முக்கிய நடவடிக்கைக‌ளை கள்ளர்களின் செயல்கள் தாம் தீர்மானிக்கின்றன.
நாவலின் மேலோட்டமான கதைச்சரடை சற்று அறிமுகம் செய்து கொள்வோம்.
மாலிக்கஃபூரின் மதுரைப் படையெடுப்பில் கோட்டைக்காவலனான கருப்பணன் இறந்து பட, அவன் கர்ப்பிணி மனைவி சடச்சி தப்பிப்பிழைத்து சிசு ஈனுகிறாள். அவளது ச‌ந்ததி கள்ளர் இனமாக தாதனூர் என்ற இடத்தில் நிலைகொள்கிறது. விஜயநகர அரசி கங்கா தேவி தன் இனமழித்த முகமதிய சுல்தானை பழிவாங்க மதுரை மீது போர் தொடுக்கிறாள். மதுரை விஜயநகர அரசின் வசமாகிறது. சிலபல வாரிசுச்சண்டைகளுக்குப்பின் கிருஷ்ணதேவராயர் விஜய நகர அரசராகிறார். அவர் திறமையான தளபதியான விஸ்வநாதரை மதுரையை ஆட்சிசெய்ய அனுப்புகிறார்.
மதுரையில் நாயக்கர் ஆட்சி உதயமாகிறது. மதுரைக் கோட்டை விஸ்தரிக்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் கட்டப்படுகிறது. மதுரையைச் சுற்றி பாளையங்கள் பிரிக்கப்படுகின்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தாதனூர்க்காரர்களுக்கு மதுரை கோட்டைக் காவல் உரிமை வழங்கப்படுகிறது. அவருக்குப் பின் நாயக்கர் அரசுகள் பல தலைமுறையாக‌ சதிகளிலும், துரோகங்களிலும் சிக்கி உழன்று தவிக்கிறது.
பின்னர் கிழக்கிந்திய கம்பெனி மதுரையை எடுத்துக் கொள்கிற‌து. தொடர்ந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ மதுரை வருகிறது. பிளாக்பர்ன் என்ற கலெக்டரின் காலத்தில் இட விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டை இடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசிலும் தன் மதுரை நகர காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீட்டுக் கொள்கிறார்கள். அரசு சார்பில் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) அமைக்கப்படுகிறது. மதுரைக்கு அருகே மிஷனரி பள்ளி, மியூசியம், காட்டன் மில், ரயில் நிலையம் ஆகியன வருகின்றன. மதுரை நவீனமாகிறது.
தாது வருஷத்தில் கடும் பஞ்சத்தையும் பின் தொடர்ந்து கொள்ளை நோயையும் மதுரை சந்திக்கிறது. நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அரசு தாதனூர்க்காரர்களின் காவல் உரிமையை ரத்து செய்கிறது. எதிர்த்தவர்கள் சிறைபடுகிறார்கள்; சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.
தாதனூர்க்காரர்கள் வேறுவழியின்றி வெளிகிராமங்களில் காவல் பிடிக்கிறார்கள்.
தாதனூருக்கு பென்னிங்டன் ரோடு அமைக்கப்படுகிறது, ஒரு சிறைச்சாலையும் அருகிலேயே கட்டுகிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன. தினசரி அந்த சிறைச்சாலையில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. நல்லூரிலிருக்கும் கள்ளர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸார் துப்பாக்கி ச் சூடு நடத்துவ‌தோடு முடிகிறது நாவல்.
இந்த நாவலின் 10 பக்கங்களிலிருந்து தான் வசந்தபாலனின் அரவான் திரைப்படக் கதை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். படத்தில் வருவதாய்ச் சொல்லப்படும் வரிப்புலி, கொம்பூதி, சிமிட்டி என்ற பெயரில் கதாபாத்திரங்கள் ஏதும் நாவலில் இல்லை. நாவலில் வரும் சின்னான், மாயாண்டி கதை (அத்தியாயங்கள் 37, 38 மற்றும் 40) சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்ப‌ட்டிருக்கலாம் என்பது contextual understanding அடிப்படையிலான என் ஊகக்கணக்கு. அத‌ல்லாதும் இருக்கலாம்.
இது தவிர கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் கதையும் (அத்தியாயம் 32) இதில் வருகிறது. ஆனால் நாயக வழிபாடாக அல்லாமல் சந்தர்ப்பங்களின் காரணமாக கும்பினியை எதிர்க்கும், இக்கட்டின் போது கேட்ட குத்தகையைத் தரத் தயாராகும், இறுதியில் உடல்துண்டாகி ஊருக்கூர் வீசப்படுமோர் அவலச்சித்திரமே மருதநாயகம் யூசுஃப் கான் பற்றி நாவலில் அளிக்கப்படுகிறது. மருதநாய‌மும், கட்டபொம்முவும் ஒரே நாளில் (அக்டோபர் 16) ஆனால் வெவ்வேறு ஆண்டுகளில் தூக்கிடப்பட்டிருக்கிறார்கள் – முன்னவர் 1764ம் ஆண்டு; பின்னவர் 1799ம் ஆண்டு.
*
களவு பற்றிய நான் சுவைத்த முதல் கலை அனுபவம் 1990களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான களவுக்கலை என்ற சுவாரஸ்யமான நாடகத்தொடர் தான். பின்னர் கல்கியின் கள்வனின் காதலி நாவல் முதல் பாலாவின் அவன் இவன் திரைப்படம் வரை எழு த்திலும், காட்சியிலும் பல கள்வர்கள் கடந்து போய் விட்டார்கள். கடைசியாய் இப்போது சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.
கோட்டம் என்ற சொல்லுக்கு இருவிதப் பொருள் கொள்ளலாம். நிர்வாகத்திற்காகப் பகுத்திருக்கும் பிரிவு ஒன்று (உதாரணம் வருவாய் கோட்டம்). மற்றது ஒருவருக்கு எழுப்பப்படும் நினைவிடம் (உதாரணம் வள்ளுவர் கோட்டம்). காவல் கோட்டம் என்ற தலைப்புக்கு இந்த இரு பொருளுமே பொருந்துகின்றன‌. மதுரையின் காவல் பிரிவைக் கவனித்துக் கொண்டவர்களின் கதை என்ற அர்த்தத்திலும். காவல் காரர்களின் நினைவாய் எழுப்பப்படும் ஒரு நினைவுப்புனைவு என்ற வகையிலும்.
ஆனால் நாவலின் உள்ளடக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தலைப்பு பொருத்திப் போகிறதா என்று பார்த்தால் ஆம் என்று சொல்வதில் தயக்கம் இருக்கிறது. களவு போவது என்பது காவல் பெறுவதற்கான உத்தி என்ற கருத்து நாவல் நெடுகிலும் மறுபடி மறுபடி வலியுறுத்தப்பட்டிருந்தாலும், நாவல் முழுக்க முழுக்க களவைப் பற்றியே பேசுகிறது, அதைக் கொண்டாடுகிறது, அதை மகத்துவப்படுத்துகிறது.
களவின் சம்பவங்களும், சாத்தியங்களும் மிக நுட்பமாய் விவரிக்கப்படுகிற‌து. மாறாக காவல் என்பது ஆங்காங்கே இடைவெளி நிரப்பும் சிறு செய்தியாய் மட்டுமே சொல்லப்படுகிறது. உண்மையில் இது களவுக் கோட்டம் தான்.
காவல் கோட்டம் நாவலின் இலக்கியரீதியான செவ்வியல் உச்சங்கள் என்றால் களவு பற்றிய விவரணைகளும், கோட்டை இடிக்கப்படும் நிகழ்வுகளும், பஞ்ச காலம் பற்றிய பகுதிகளுமே ஆகும். இது தவிர தாதனூரில் நடக்கும் திருமணம், மரியாதை, சடங்குகள், வரிகள், பலிகள் ஆகியவை பற்றிய பகுதிகள் கள்ளர் இன வரைவியல் ஆவணமாகக் கொள்ளத்தக்கவை. ஆனால் ஆவணம் என்பதைத் தாண்டி இவை யாவும் சுவாரஸ்யமான நடையில், பாந்தமான இடங்களில் உட்செருகப்பட்டிருக்கின்றன எனப்து தான் இந்நாவலை முக்கியமானதாக்குகிறது.
பாலகுமாரனின் உடையார், கடிகை போன்ற‌ நாவல்களிலும் இது போன்றதான‌ விவரணைகள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை ஒருவித வறட்டு நடையில் எழுதப்பெற்று வெறும் ஆவணமாகத் தேங்கி விடுகின்றன. அதாவது அவற்றில் கலை ஊக்கம் இல்லை; அல்லது குறைவாய் இருக்கிறது. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகிய நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அந்த நாவலுக்கு தேவையிற்ற துருத்தல்களாய் உருத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றில் கலை ஊக்கம் இருந்த போதிலும் நாவலை செம்மையுறப் பயன்படுவதில்லை.
எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவலில் வெக்கை குறித்து நிறைய இடங்களில் விவரித்திருப்பார். அதில் கணிசமானவை ஒரே மாதிரியானதாகவும் (monotonous), தட்டையானதாகவும் சில இடங்களில் எரிச்சலூட்டுவதாகவுமே அமைத்திருக்கும் (வெக்கை எரிச்சலூட்டத்தானே செய்யும்!). அதே போல் காவல் கோட்டம் நாவலில் பல இடங்களில் – குறைந்தபட்சம் நூறு இருக்கும் – இருள் குறித்த விவரணைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எவ்விடமும் அவை அலுப்பூட்டுவதில்லை. எல்லாமே கவித்துவத்துடன் தத்துவார்த்தமாக அமைத்துள்ளன. அதை நினைத்துப் பார்க்கும் போதே பிரம்மிப்பு ஏற்படுகிறது. இந்த இருள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து ஒரு சிறுநூலாக வெளியிடலாம் (கவிதை?) என்று கூட ஓரெண்ணம் ஏற்படுகிறது.
பனைமரத்தில் கட்டிவைத்து கள்ளர்கள் கல்லெறிந்து சிவானந்தய்யர் கொல்லப் படும் காட்சியே நாவலின் புறம் சார்ந்த ஆக‌ உக்கிரமான பகுதி. இது போக‌ அக எழுச்சி உக்கிரங்கள் ஆங்காங்கே மலரவிழ் மொட்டாய் சாத்தியப்பட்டிருக்கின்றன.
*
அறுநூறு வருட காலத்தை அடைத்து நிற்கிறது என்பதால் இந்நாவலில் எந்தப் கதாபாத்திரத்தையும் முதன்மைப் பிரதானமெனக் கொள்ளவியலாது. அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் கள்ளர்கள் தாம் இந்நாவலின் நாயக‌ர்கள். நாவல் முழுக்க மன்னர்களும் மக்களும் வருகிறார்கள், போகிறார்கள் – ஆனால் இடையில் தம்மை எழுதுமொழி வரலாற்றிலோ, வாய்ப்பாட்டு வரலாற்றிலோ அழுந்தப் பதித்துக் கொள்கிறார்கள். நாவலைப் படித்து முடிக்கையில் விசுவநாத நாயக்கரும், மாயாண்டிப் பெரியாம்பிளையும், ஆங்கிலக் கலெக்டர் பிளாக்பர்னும், சிவானந்தய்யரும், டேவிட் சாம்ராஜும் உச்சம் பெற்று மனதில் நிற்கிறார்கள்.
பொதுவாய் வரலாற்றுப் புதினங்களில் பெண் கதாபாத்திரங்கள் கவர்ச்சித் தாரகைகளாகவோ, மதிப்பிற்குரிய மங்கையராகவோ என்ற இரு எதிரெதிர் நிலைகளில்மட்டும் பதிவு பெற்றிருக்கின்றனர் (பொன்னியின் செல்வன், உடையார் மட்டும் விதிவிலக்கு). ஆனால் காவல் கோட்டம் நாவலில் வரும் பெண்களைப் பற்றிய பதிவுகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றது. பேரனுக்காக நாட்டை ஆளும் பொறுப்பேற்றுப் பின்னாளில் அவனாலேயே பலி வாங்கப்படும் ராணி, தன் இனத்தை வதைக்க முனையும் ஐரோப்பியக் காவலனின் கழுத்தைக் கடித்துக்குதறும் கிழவி, பஞ்சகாலத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி தன் செல்வத்தைக் கரைத்து ஊருக்கே கஞ்சி ஊற்றும் தாசி, தன் இனம் சிந்திய ரத்தத்திற்குப் பழிதீர்க்க நேரடியாக போரிலிறங்கி சுல்தானைக் கொல்லும் அரசி, தமக்குள் மட்டுமல்லாது ஆண்க‌ளுடனும் கூட‌ பாலியலை சர்வ சுதந்திரமாய் பேசித்திரியும் பெண்டிர் என்று பெண்களின் பன்முகங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. விஜயநகரப்பெண்கள், நாயக்கர் பெண்கள், கள்ளர் பெண்கள், அக்ரஹாரப் பெண்கள் என்று பரவி விரியும் நாவலில் ஆங்கிலேயப் பெண்களில் ஒருவரைப் பற்றிக் கூட பெரிய அளவிலான விவரணைகள் இல்லை.
திருமலை நாயக்கர் அரண்மனையிலேயே புகுந்து ராஜமுத்திரையைக் களவாடி விடும் கழுவன் என்ற தாதனூர்க்கள்வனைப் பாராட்டி கோட்டைக்காவல் உரிமை தருகிறார் மன்னன் என்றொரு செய்தி இடம் பெறுகிறது. ஆனால் இதே கதையில் களவாடியவனை வஞ்சகமாக வரவழைத்துக் கொன்றதாகவும் ஒரு வெர்ஷனை ஏற்கனவே வேறெங்கோ படித்திருக்கும் நினைவு. நாயக்கர் தந்த கோட்டைக்காவல் உரிமை தான் நாவலின் அச்சு. அதை மையமிட்டுத்தான் நாவலின் அத்தனை சம்பவங்களுமே சுழல்கின்றனை. இந்த உரிமையை விட்டுத்தராதிருக்கும் பொருட்டு தான் இறுதியில் கள்ளர் இனமே அழிய நேரும் சூழ்நிலை உருவாகிறது.
மனிதன் எழுத்தின் வழி, கதைகளின் வழி, அகழ்வுகளின் வழி வரலாற்றைத் தரிசிக்கிறான். அஃறிணை பொருட்களோ எத்தனை ஆண்டு கால வரலாறு என்றாலும் தாமே காத்திருந்து நேரிலேயே பார்த்துக் கொள்கின்றன‌! அப்படி சந்திரஹாச வாளும், சாளுவ கட்டாரியும் ஒரு கட்டம் வரை நாவல் முழுக்கவே புராதனக்குறியீடாய் சமயங்களில் மௌனசாட்சியமாய் உடன் பயணிக்கின்றன.
*
நாவலுக்கென்று பத்து ஆண்டு காலம் உழைத்ததாகச் சொல்கிறார் ஆசிரியர். நாவலில் அடங்காமல் பொங்கி வழியும் தகவல்களைப் பார்க்கும் போது அது எள்ளளவும் மிகையில்லை என்று தெரிகிறது. இந்த தகவல்கள் தாம் சாதனை.
நாவல் முழுக்க சு.வெங்கடேசனின் செறிவான மொழிநடை காணக்கிடைக்கிறது. கதையின் போக்கில் நிகழ்வுகளைத்தாண்டி அவரது நடை நம்மைக் கட்டியணைத்த படியே நகர்த்திச் செல்கிறது. இத்தகைய வசீகர‌ நடை சமகால எழுத்தாளர்களில் மூவருக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது – முதலில் எஸ்.ராமகிருஷ்ணன், அடுத்தது இரா.முருகன், அப்புறம் க.சீ.சிவக்குமார். இத்தனைக்கும் கதையின் கணிசமான பகுதிகள் கள்ளர்களின் பேச்சு மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் கூடப் புகுந்து பிரமாதப்படுத்தி இருக்கிறார் சு.வெங்கடேசன் (அது சரி, வசந்தபாலனின் அரவான் படத்துக்கு சு.வெங்கடேசன் தான் வசகர்த்தாவா?).
காவல் கோட்டம் நாவல் எதைப் பேசுகிறது என்பது தெளிவாய் இருக்கிறது – கள்ளர்களின் கதையினூடாய் மதுரை வரலாற்றின் ஒரு அபாரமான‌ குறுக்கு வெட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. ஆனால் அந்நாவல் முன்வைக்கும் அரசியல் என்ன என்ற கேள்விக்கு தெளிவாய் பதிலிறுக்க முடிவதில்லை. காவல் கோட்டம் களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றுகிற‌து. நமது சமூகத்தின் இன்றைய சிந்தனை முறையானது திருட்டு என்பதை அரசியல் சாசனப்படியான குற்றம் என்று புற‌ அளவில் வரையறுத்ததோடு மட்டுமல்லாது, அதன் அக நீட்சியாக திருட்டை ஓர் ஒழுக்கக்கேடான நடவடிக்கையாகவும் சித்தரித்து வைத்திருக்கிறது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் அச்சித்தாந்தம் சரியென்றே மனதுக்குப் படுகிற‌து. ஆனால் காவல் கோட்டம் நாவலோ அதற்கு நேரெதிராய் களவை வீரமெனச் சித்தரித்து, சமகால மனங்களில் திருட்டு பற்றி நிலவும் பொதுப்புத்திக் கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிற‌து. ஒரு கட்டத்தில் களவு தாம் அறமோ என்று கூட‌ எண்ண வைத்து விடுகிற‌து. என் பாட்டன் திறமான கள்வன் என்பது எவ்வகையில் எனக்குப் பெருமை தரும் என்பது விளங்கவில்லை. ஒருவகையில் அவமானம் ஏதுமில்லை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
நாவலின் பலவீனமான கட்டங்கள் என நாயக்கர் காலம் நேரடி வரலாறாய்ச் சொல்லப்படும் ஆரம்பப் பகுதியையும், உயிர்ப்பின்றிச் சொல்லப்பட்டிருக்கும் குற்றப்பரம்பரைச்சட்டம் வரும் இறுதிப்பகுதியையும் சொல்லலாம். அதிலும் நாவல் தன் முடிவை நெருங்கிச் செல்லும் உச்ச வேளையிலும் களவுக்கலை பற்றிய நுண்விவரணைகள் தொடர்ந்தபடியே இருப்பது (அத்தியாயங்கள் 110 மற்றும் 112) கவனம் கலைப்பதோடு ஒரு கட்டத்தில் ஆயாசமூட்டுகிறது.
தொடர்புடைய‌ வரலாற்றின் சில பகுதிகளை மட்டும் ஏன் தொடவில்லை என்பது புரியவில்லை. உதாரணமாக ஊமைத்துரை வரலாறு விரித்துச் சொல்லப்படுகிறது (அத்தியாயம் 33); ஆனால் கட்டபொம்மு வரலாற்றை ஒற்றை வரியில் கடந்து விட்டார். குஞ்சரம்மாள் கதை சொல்லப்படுகிறது (அத்தியாயம் 77); ஆனால் நல்லதங்காள் கதை சொல்லப்படுவதில்லை. சொல்லப்படாத பின்னதுகளுக்கும் கள்ளர்களுக்கும் தொடர்பில்லை என்று காரணம் சொன்னால் சொல்லப்பட்ட முன்னதுகளுக்கும் கள்ளர்களுக்குமே அதே அளவு சம்மந்தம் தான் இருக்கிறது.
கள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து பாதிரியாராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வளவு பெரிய வரலாற்று நாவலுக்கு அடிக்குறிப்புகள் இல்லை, விரிவான முன்னுரை மாதிரியான விஷயம் இல்லை (இறுதியில் ஆசிரியர் குறிப்பு என்று சொல்லி மூன்று பக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் அதில் பெரிதாய் எந்தத் தகவலும் இல்லை). இதன் காரணமாக நாவலில் எவை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலானவை, எவை உறுதிப்படுத்தப்படாத கேள்விப்பட்ட செய்திகள், எவை முற்றிலும் கற்பனை சார்ந்த‌ புனைவு என்பதில் வாசகன் குழம்புகிறான்.
நாவலின் இலக்கியத்தரம் ஒரு சைனுசாய்டல் அலை (Sinusoidal Wave) கணக்காய் அமைந்திருக்கிறது. விஸ்வநாதர் காலத்தில் சமநிலையில் தொடங்கும் நாவல், நாயக்கர் காலத்தில் எதிர்மறை நிலைக்குச் சென்று விட்டு, கும்பினியர் காலத்தில் சமநிலைக்குத்திரும்பி, பிரிட்டிஷ் அரசின் காலத்தில் உச்சமெய்தி, தாதுப்பஞ்சத்தில் சமநிலைக்கு வந்து, குற்றப்பரம்பரைச்சட்டத்தின் போது எதிர்மறைக்குப் போகிறது.
*
ஒரு பத்தாண்டுகளாக அப்துல் ரகுமான், வைரமுத்து, சிற்பி பாலசுப்ரமணியம், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, புவியரசு என்று அராஜக அட்டூழியம் செய்து வந்த சாகித்ய அகாதமி, கடந்த இரு வருடங்களாகத் தான் மறுபடி தகுதி வாய்ந்த‌ படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2010ல் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுதிக்கும், இப்போது 2011ல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலுக்கும் தரப்பட்டிருக்கிறது. இரண்டுமே தமிழினி வெளியீடுகள்.
சு.வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்ட விருது தொடர்பாய் இரண்டு பிழையான தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன. மிக இள‌ம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறுபவர் சு.வெங்கடேசன் என்பது ஒன்று. காரணம் 1972ல் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற போது ஜெயகாந்தனுக்கு வயது 38. இப்போது விருது பெறும் சு.வெங்கடேசனின் வயது 40. ஒருவேளை விருது பெறும் இரண்டாவது மிக இளையவராக வேண்டுமானால் இருக்கக்கூடும்.
இரண்டாவது ஒரே நாவல் எழுதிய படைப்பாளிக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்கிற கேள்வி. உண்மையில் சாகித்ய அகாதமி விருதானது ஒரு குறிப்பிட்ட படைப்புக்கு வழங்கப்படுகிறதே ஒழிய ஒரு படைப்பாளுமையின் ஒட்டுமொத்த எழுத்துச் சாதனையைக் கணக்கில் கொண்டு அளிக்கப்படுவதில்லை (ஞானபீட விருதுகள் வேண்டுமானால் இப்போபோதெல்லாம் அப்படி வழங்கப்படுகின்றன)‌. விருது பெற்றவர்களில் கணிசமானவர்கள் விருது பெறும் காலத்தில் இலக்கிய வாழ்வினின்று ரிட்டயர்ட் ஆகி விட்டிருந்தார்கள் என்பதால் (அதற்குத் தான் ஒருவேளை விருதோ!?) நம் பொதுப்புத்தியில் இது படைப்பாளிக்கான விருது; படைப்புக்கானது அல்ல என்ற எண்ணம் உறைந்திருக்கலாம். அது விருதுக் கமிட்டியின் பிழையல்லவே. அதனால் ஒரே படைப்பு தான் எழுதி இருக்கிறார் என்றாலும் அது தகுதியானது என்றால் சாகித்ய அகாதமி வழங்கப்படுவதே முறையானது. இம்முறை அந்த விதிமுறை சரியாகப் பின்பற்றிருக்கிறது.
இளம் வயதில் அதுவும் முதல் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது சமீப‌த்தைய சாதனை என்றால் அழகியலும், வரலாறும் ஒத்திசைத்து இயங்கும் ஒரு பிரம்மாண்டத்தைப் யாத்தளித்தது அவரது நீண்ட கால சாதனை என்பேன்.
சு.வெங்கடேசனுக்கு என் மனப்பூர்வமான‌ வாழ்த்துக்களும் வணக்கங்களும்.


நன்றி!!!


http://satamilselvan.blogspot.com/




Saturday, April 23, 2011

சிஐடியு, ஏஐடியுசி : மேதினச் சூளுரை

-
தமிழ்நாட்டில் மே தினத்தை சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டாட முடிவு செய்துள்ளன. மே தினத்தை சென்னை நகரிலும் மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் ஊர்வலங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் இரண்டு சங்கங்களின் சார்பில் பங்கேற்கும் தலைவர்கள் பட்டியல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள மேதினச் சூளுரை வருமாறு:

கடுமையான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியில் உலகம் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் சரியாகிவிடும் என்று சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்த்துப் போயின. சரிந்து விழும் நிறுவனங்களை காப்பாற்ற அமெரிக்க அரசும் இதர ஏகாதி பத்திய நாடுகளின் அரசாங்கங்களும் எடுத்த நடவடிக்கைகள் வெற்றிபெற வில்லை.

நெருக்கடி நோயின் மூலகாரணமே முதலாளித்துவ முறைமைதான். அதையே மருந்தாகக் கொடுத்தால், நோய் தீருவது எவ்வாறு சாத்தியம்?

உலகம் முழுவதும் 30 கோடிப்பேர் வேலையிழந்து விட்டனர். பிரிட்டனில் பள்ளிக்கூடத்துக்கு வரும் குழந்தை களில் மூன்றில் ஒருவர் பட்டினியாக வரு வதாகவும், வளர்ச்சிக்கு ஏற்ப காலணி களைப் புதிதாக வாங்க முடியாமல், சிறி தாகிவிட்ட காலணிகளில் கால்களை நுழைப்பதால் புண்ணாகிக் கிடப்பதாக வும், பிரிட்டனின் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

வளர்முக நாடுகளின் மக்களை தள்ளி யது மட்டுமல்ல; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் அவலநிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது.

தென்அமெரிக்க மக்கள் வாக்குச்சீட் டைப் பயன்படுத்தி, அராஜக ஆட்சி களைத் தூக்கி எறிந்ததை முந்தைய ஆண்டுகளில் பார்த்தோம். கடந்த ஆண்டில் அரபு உலகம் தீப்பற்றி எரிந்து கொண்டுள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாய்ச்சேர்ந்து நின்று வீதிகளில் இறங்கிப்போராடுகின்றனர். அவிழ்த்து விடப்படும் அனைத்து அடக்குமுறை களையும் எதிர்த்து நிற்கிறார்கள். டுனீ ஷியாவில் முதலில் எடுத்த போராட்டம் அரசுப்பொறுப்பில் இருந்தவர்களை அகற்றியது. பின்னர் எகிப்தில் 30 ஆண்டு களாகக் கொடூர ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடித்து வைக்கப் பட்டது. லிபியாவின் சர்வாதிகாரியான கடாபியை எதிர்த்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. யேமன், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுக ளிலும் தெருக்கிளர்ச்சிகள் நடக்கின்றன.

தமது பொம்மைகளாக இருந்த சர் வாதிகாரிகள் மக்களின் சுனாமி எழுச்சி யில் காணாமல் போன நிலையில், புதிய பொம்மைகளை நுழைக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிரமாக முயன்று வரு கிறது. இதற்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தருவது போல பச்சையாக நடித்து வருகிறது.

அத்தனை அதிகாரங்களையும் தனக் குள்ளேயே முடக்கிவைத்துக்கொள்வதா லும், ஜனநாயக சக்திகளை அடக்கு முறைகளால் ஒடுக்கி வைப்பதாலும், லஞ்ச ஊழல்களால் பெரும் செல்வத் தைக் குவித்து சேமித்து வைத்துக் கொள் வதாலும் ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள யாராலும் முடியாது என இந்தக் கிளர்ச்சிகள் மெய்ப்பித்து விட்டன.

ஒரு மாதத்திற்கு மேலாக பிரான்ஸை நிலைகுலையச்செய்த பிரெஞ்ச் தொழி லாளர் வேலைநிறுத்தம், ஓய்வூதியம் கோரி நடந்தது. ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா, கிரீஸ், போர்ச் சுக்கல், ஜெர்மனி, தென்கொரியா என அடுக்கடுக்காக வேலையின்மை, சம்ப ளம், வாழ்க்கை மேம்பாடு கோரி தொழி லாளர்கள் போராடினர். உலகத்தொழிற் சங்க சம்மேளனத்தின் 16வது மாநாடு ஏப்ரல் 6 முதல் 10வரை ஏதென்ஸில் நடைபெற்றது. 106நாடுகளிலிருந்து 881 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அளவில் தொழிலாளர் போராட்டமும், தொழிற்சங்க ஒற்றுமையும் அதிகரித்து வருகின்றன.

நம் பாரத தேசத்தில், இந்த ஆண் டுக்கு, ஊழல் ஆண்டு எனப் பெயர் சூட்டி விடலாம் என எண்ணும் வகையில் சிக ரத்தை தொட்ட ஊழல்கள் நடந்துள்ளன.

ஊழல் தடுப்பு ஆணையராக, ஊழல் செய்த பி.ஜே.தாமஸ் என்பவரை அரசு நிய மித்தது. உண்மை வெளிப்பட்டபின்பும், அவர் வெளியேறவில்லை ; கடைசியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுத்தான் அவர் பதவி பறிக்கப்பட்டது. கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை, அமைச்சர்களும், அதிகாரி களும், ராணுவ உயர் அதிகாரிகளும் சேர்த்து ஆக்கிரமித்துக்கொண்ட கொடு மையும் உச்சநீதிமன்றத் தலையீட்டா லேயே நடவடிக்கைக்கு ஆளானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற் பனையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல், அதை மறைக்க அமைச்சர்கள் பேசிய பேச்சுக்கள், அமைச்சர்களை நியமிப்பதில் இடைத்தரகர்களின் ஆதிக் கம் குறித்து வெளியான ஒலிநாடாக்கள், மத்தியஅமைச்சர் ஆ.ராசா வீட்டில் சோத னை, அவரது ராஜினாமா, கைது, சிறை யில் அடைத்தது. தமிழ்நாட்டில் முதல்வர் குடும்பத்தினரே மத்திய புலனாய்வுத் துறையால் விசாரணைக்கு ஆளானது, அவர்களது தொலைக்காட்சி நிறுவனம் சோதனைசெய்யப்பட்டது என பல அத்தி யாயங்கள் கொண்டதாக விரிந்து கொண்டே போகிறது.

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்ப பெற்றபின்பு, தனது ஆட்சியை நிலைக்கச் செய்ய கோடி கோடியாய் காங்கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங் களும் வெளியாகி இருக்கின்றன.

“இந்த நாட்டில் என்னதான் நடந்து கொண்டு இருக்கிறது” என்று உச்சநீதி மன்றமே திகைத்துக்கேட்கும் அளவுக்கு மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணி அரசும், அதற்குத்தலைமை ஏற்கும் காங் கிரஸ் கட்சியும் நாட்டை தரம் தாழ்த்தி இழுத்துக்கொண்டு சென்றன.

அதேநேரத்தில் மகளிர் 33சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற் றப்படவில்லை. உணவுப்பாதுகாப்பு மசோதாவைப் பற்றி ஏராளமாக விவாதித் தும் கூட, இதுவரை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தக்கூட இல்லை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. அடுத்தமாதம் சரியாகிவிடும் என்று அலுக்காமல் பொய் சொல்கிறது அரசாங்கம். பதுக்கல்காரர்களும், கள்ளச் சந்தையினரும் பகிரங்கமாகத் திரிகின்ற னர். வெங்காயவிலை 100 ரூபாயை தாண் டியபோது, ஒரு பதுக்கல்காரனைக்கூட இந்த அரசால் கைதுசெய்ய முடியவில் லை. அவ்வளவு பலவீனமாக இந்திய அரசுஇருக்கிறது.

அதே நேரத்தில் பன்னாட்டு கார்ப் பரேட் நிறுவனங்களுக்கும், உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் எண்ணிலடங் காத சலுகைகளை வாரி வழங்கி வருகி றது. ஆனால் ஏழை மக்களின் அவலங் களை நோக்கிக் கண்ணைத் திருப்ப மறுக்கிறது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோ தக்கொள்கைகளைக் கண்டித்து, ஐஎன் டியுசி உள்ளிட்ட இந்திய தொழிற்சங்கங் கள் இணைந்து போராடி வருகின்றன. இந்தியத் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கைகளை இந்த ஒற்றுமை தோற்று விக்கிறது. செப்டம்பர் 7ல் நடந்த வேலை நிறுத்தம் இந்தியாவில் மிகப்பெரிய வேலைநிறுத்தமாகும். மார்ச் 5ல் சிறை நிரப்பும் போராட்டத்தில்10லட்சம் தொழி லாளர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதன் முடிவு தெரிய ஒருமாதக்காலம் காத்தி ருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஓர் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை தந்து, எதிர்த்தரப்பினரை ஆள் பலம் கொண்டு அச்சுறுத்தி, அதிகாரி களைத் தனது விருப்பத்திற்கேற்ப வளைத்து கடந்த ஆண்டுகளில் இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற் றது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக் கும் இந்த நடைமுறைக்கு திருமங்கலம் பார்முலா என்று ஊடகங்கள் பெயர் வைத்தன. இந்தப் பொதுத்தேர்தலில் ஊழல் நடைமுறைகளை எதிர்த்து மக்கள் அணிதிரண்டுள்ளனர்.

இந்த பொதுத்தேர்தலிலும் அவ்வாறே நடத்த எத்தனித்ததை,தேர்தல் ஆணை யம் எதிர்த்து நின்றது பாராட்டுக்கு உரிய அம்சமாகும். முன்பு போல பணப்பரிவர்த் தனைகளை பகிரங்கமாக நடத்தமுடியா மல் ஆணையம் தடுத்தது. ஆனாலும் ரக சியமாக “ஓட்டுக்கு துட்டு” தரப்பட்டது. பல கோடி ரூபாய்களை ஆணையம் கைப்பற்றியது. அது ஒரு சிறிய பகுதியே. எனினும் “ஆட்சி கையில் இருந்தால் எதையும் செய்யலாம்; அதை தடுத்து நிறுத்துவதற்கு வழியே இல்லை” என்று ஏங்கி கிடந்த மக்களுக்கு, ஆணையத் தின் நடவடிக்கையால், ஜனநாயகத்தின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை காணாத அளவுக்குத் திரண்டு வந்து வாக்களித்தது இதனை நிரூபிக் கிறது.

தமிழகத்தில் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குஅதிக சலுகைகள் கொடுத்து கதவை திறந்துவிட்டது மாநில அரசு. அதே நேரத்தில் நடுத்தர, சிறு,குறு தொழில்கள் அழிக்கப்பட்டன. வரலாறு காணாத மின்வெட்டு, தொழில்களை நாசப்படுத்திவிட்டது. பாரம்பரியத் தொழில்களான கைத்தறி, பீடி, கயிறு தயா ரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நலிந்து, அதில் பணிபுரிந்தோர் நடுவீதிக்குத் தள் ளப்பட்டனர். நிரந்தரத்தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, எங்கும், எதிலும், ஒப்பந்தத் தொழிலாளர் முறை கொண்டுவரப்பட்டுவிட்டது.

தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான சட்டம், சுமங்கலித் திட்டம் என்ற நவீன பஞ்சாலைக்கொத்தடிமை முறைக்கு தீர்வு, ஒப்பந்தக்கூலிமுறை ஒழிப்பு, தொழிலாளர் சட்டங்களை அமலாக்கு தல், சமவேலைக்கு சம ஊதியம், குறைந் தபட்ச ஊதியத்தை அதிகரித்து கறாராக அமல் செய்தல், அமைப்புசாரா வாரியங் களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக் குத்தீர்வு, நல உதவிகளை அதிகரித்தல் என தமிழகத்தொழிற்சங்க இயக்கம் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற் றாமலேயே தனது ஆட்சியை முடித்து விட்டது தற்போதைய அரசு. புதிய அரசு இவற்றை நிறைவேற்ற வேண்டும். முடக்கி வைக்கப்பட்டு, செயலிழந்து விட்ட தொழிலாளர் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடின் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் தீவிரப்படும்.

ஐந்து மையமான கோரிக்கைகளை முன்வைத்து ஐஎன்டியுசி உட்பட இந்தி யாவின் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடத்தும் இயக்கம் மேலும் வலுப் பெற வேண்டும். இந்த ஒற்றுமையை மேலும் முயன்று கட்ட வேண்டும். தொடர்ந்து வரும் கூட்டு இயக்கங்களை அதிக சக்தியுடன் நடத்தவேண்டும். ஏதுமற்றவர்களாய் இருந்த தொழிலாளி வர்க்கம், போராடிப் போராடித்தான் புதிய உரிமைகளை வென்றெடுத்தது. தொழி லாளி வர்க்கத்திற்கு போராடுவதைத் தவிர உத்தரவாதமான வேறு வழிகள் இல்லை.

இந்த உரிமைப்போரில் உலகம் முழு வதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது உயிரை இழந்துள்ளனர். பல லட்சக் கணக்கானவர்கள் தமது உடமைகளை இழந்தனர். அவர்களின் மாபெரும் தியா கங்களைப் பெருமையோடு நினைவு கூர்ந்து, அந்தப்போராளிகளின் வாரிசுக ளாகப் புதிய போராட்டங்களை முன்னெ டுக்க இந்த மே நன்னானில் உறுதி யேற்போம்.




தீக்கதிர்

Thursday, February 3, 2011

(கோவிந்தசாமி) துரோகசாமி

நீ குடித்து முடித்த
டீ கிளாசை
இரு கையாலும்
ஏந்திக் கொண்ட தோழன்

உன் நாற்காலிக்காக
தன் நரம்புகளை
பின்னக் கொடுத்த தோழன்...

பட்டினி கிடந்தாலும்
உன் பசியாற்றி,
பயணப்படியோடு
வழியனுப்பிய தோழன்

உலகைக் குலுக்கும்
செங்கொடி உயர்த்தி,
உண்டியல் குலுக்கி உனை
வேட்பாளராக்கிய தோழன்....

கோடிகளை சுருட்டும்
கோமான்களை எதிர்க்க
உன்னை கோட்டைக்கு
அனுப்பிய தோழன்

எல்லாம் மறந்த
என் முன்னாள் தோழா!

முதலாளித்துவத்திற்கு
பரிவட்டம் கட்டி
பல்லக்கு தூக்க
முதுகு காட்டிவிட்டாய்!

இட்ட பெயர் உனக்கு
எதுவாகவும் இருக்கலாம்!

தொழிலாள் வர்க்கத்திற்கு
துரோகம் இழைத்த உன்னை
வரலாறு பதிவு செய்யும்
“துரோகசாமி”
என்றே!


-க.பாலபாரதி (நன்றி-தீக்கதிர்)