வழியெங்கும் புத்தகங்கள்
நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பாயில் தினசரிகள்,வார,மாத இதழ்கள் கிடக்கும்.பெரிய ஆட்கள் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பார்கள்.அப்போது பொடியன்களான நாங்கள் சிலர் அவ்வப்போது உள்ளே நுழைந்து எதையாவது வாசிப்போம்.பிறகு மணியடிக்கவும் ஓடிவிடுவோம்.அப்படி ஒருநாள் ஒரு வார இதழில் வாசித்த பெட்டிச்செய்தியில் , பகத்சிங்கைத் தூக்கு மேடைக்கு அழைத்த போது அவர் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார் என்றும் அதை முழுதாகப் படித்து முடிக்கும்வரை கால அவகாசம் கேட்டார் என்றும் படித்து முடித்ததும் மகிழ்ச்சியோடு தூக்கு மேடைக்குப் போனார் என்றும் எழுதியிருந்தது.பாருய்யா சாகப்போற நேரத்திலே கூடப் படிச்சிருக்கான்...அவன் மனுசனா.. நாம மனுசங்களா என்று பெரியவர்கள் ரெண்டுபேர் பேசிக்கொண்டதையும் கேட்டேன்.அந்த செய்தியும் பேச்சும் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
பின்னர் பெரியவனாகிக் கோவில்பட்டியில் கல்லூரியில் படித்த காலத்தில்(1970-71) பஸ் நிலையத்துக்கு எதிரே என்சிபிஹெச் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.சிவப்புப் புத்தகங்களின் அணிவகுப்பில் லெனின் எழுதிய புத்தகங்களைத் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.மேசை அருகே சேர் போட்டு அமர்ந்திருந்த வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மனிதர் ஒருவர் என்ன புத்தகம் தேடுறே தம்பி என்று கேட்டார்.’பகத்சிங் சாவதற்கு முன்னால் படித்த லெனின் புத்தகம்’ என்று சொன்னேன்.உடனே அவர் ‘அரசும் புரட்சியும் ‘என்ற நூலை எடுத்துக்கொடுத்தார்.என்னை இன்றும் செதுக்கிக் கொண்டிருக்கும் புத்தகமாக அது இருக்கிறது.இதையும் சேர்த்துப்படி என்று அந்தச் சிவந்த மனிதர் ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம் ,தனிச்சொத்து,அரசு ஆகியற்றின் தோற்றம் என்கிற புத்தகத்தையும் அன்பளிப்பாக எனக்கு வழங்கினார்.அந்த இரண்டு புத்தகங்களும் நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு பைண்டிங் கிழிந்து தாள் தாளாக ஆகிவிட்டாலும் பொக்கிஷம் போலக் கையில் வைத்திருக்கிறேன்.அதே நூல்களின் வேறு இரு பிரதிகள் அப்புறம் வாங்கிவிட்டாலும் அந்தப் பெரியவர் கொடுத்ததுதான் என் புத்தகமாக என் வாசிப்புக்கான சொந்தப் பிரதியாக பிரியத்துடன் வைத்திருக்கிறேன்.அந்தப்பிரதி பேசுவது போல வேறு பிரதிகள் என்னோடு நெருங்கிப் பேச முடிவதில்லை.அந்தப் புத்தகங்களை எனக்கு எடுத்துக் கொடுத்த பெரியவர் பெயர் எஸ்.எஸ்.தியாகராஜன் என்பதும் அவர் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும் அவர் என் சித்தப்பாவின் நண்பர் என்பதும் பின்னர் அறிய நேர்ந்த கூடுதல் தகவல்கள்.
அரசு என்பது காலம் காலமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒன்று- அது எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டும்தான் என்கிற என் பொதுப்புத்தியை வெடிகொண்டு தகர்த்தன இவ்விரு புத்தகங்களும்.தீர்க்க முடியாத வர்க்கப்பகைமையின் விளவுதான் அரசு.தனிச்சொத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் பெயர்தான் அரசு என்பதும் வரலாற்றில் தனிச்சொத்து தோன்றுவதற்கு முன்னால் அரசு என்கிற வன்முறைக்கருவி இருந்திருக்கவில்லை என்பதும் இவ்விரு புத்தகங்களால் தெளிவானது.அப்போது இலக்கிய வாசிப்பில் நான் நா.பார்த்தசாரதியிடமிருந்து விடைபெற்று ஜெயகாந்தனின் ஆளுகைக்குள் வந்துகொண்டிருந்த காலமாகவும் இருந்தது.பொன்விலங்கும் குறிஞ்சிமலரும் அந்த நாட்களில் என் மனதுக்கு நெருக்கமான நாவல்களாக இருந்தன.அரவிந்தனைப்போல சத்தியமூர்த்தியைப்போல தேசம் பற்றிய பொங்கும் பெருமிதத்தோடும் ஒருவித கற்பிதமான சத்திய ஆவேசத்தோடும் சிலபல நா.பா. கொட்டேசன்களோடும் ஒரு பூரணியை அல்லது பாரதி-கல்யாணியைத் தேடும் இளைஞனாக இருந்துகொண்டிருந்தேன்.கோகிலா என்ன செய்துவிட்டாள் என்கிற குறுநாவல்தான் ஜெயகாந்தனில் நான் முதலில் வாசித்தது.அப்படியே அவர் இழுத்துக்கொண்டு போய்விட்டார்.பாரீசுக்குப் போவின் கலை சார்ந்த தத்துவ விவாதங்களில் பிரமித்து அக்கினிப்பிரவேசத்தில் குளித்தெழுந்த கங்காவைப் பின்தொடர்ந்து சிலநேரங்களில் சில மனிதர்களைச் சந்தித்துச் சினிமாவுக்குப் போன சித்தாளுவுடன் ரிக்ஷாவில் ஏறி எம்.ஜி.ஆரின் பட வால் போஸ்டரை உடம்பில் சுற்றிக்கொண்டு அலைந்தேன்.விகடனில் அவர் எழுதிய வசீகரமான தொடர்களை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் வெகு சீக்கிரமாக நான் ஜெயகாந்தனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள நேர்ந்தது. புதுக்கவிதை பொங்குமாங்கடல்போலப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்த நாட்களாக அவை இருந்தன.பழைய தடைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு மொழி புதிய எல்லைகளில் பிரவேசித்த அனுபவத்தில் நின்று ஜெயகாந்தனின் சத்தமான குரலை முன்போலக் கேட்க முடியவில்லை.வண்ணநிலவன்,வண்ணதாசனிடம் மிக இயல்பாக வந்து சேர்ந்தேன்.வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலையும் தோழர் பால்வண்ணம் கொடுத்த ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக்குறிப்புகளையும் ஒரே சமயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.இந்தப்பிரியங்களும் பாசங்களும்தான் வாழ்க்கை என்று கடல்புரத்துப் பிலோமிக்குட்டி சொன்னதையும் சிறைக்குள்ளே உலகத்தொழிலாளர் மீதான பாசத்துடன் ஜூலியஸ் பூசிக் மேதினம் கொண்டாடியதையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசித்துக்கொண்டிருந்தேன்.’உன் அடிச்சுவட்டில் நான்’ புத்தகத்தையும் அதே நேரம் வாசித்து அந்த ட்ராயைப்போல உலகத்தின் மக்கள் எல்லோருக்காகவும் சாகத் தயாராகிக்கொண்டிருந்தேன்.வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதைத்தொகுப்பின் அகல விரித்த வார்த்தைப் பரப்பில் தீட்டப்பட்ட நுட்பமான ஓவியங்களைக் கண்டு மனம் நடுங்கி ’எச்சங்கள்’ சிறுவர்களின் எச்சிற்சோடாக் குடிக்கும் காட்சியைக்கண்டு மனம் பதறி அச்சிறுவர்களுக்காகப் போராட உறுதிகொண்டேன்- கண்ணீரைத்துடைத்துக்கொண்டு.
இப்படியான மனநிலையோடு பாலியல் சார்ந்த குழப்பங்களும் கூடவே ஓடிவந்து கொண்டிருந்த ஒரு வயதில் –அப்போதுதான் ராணுவத்திலிருந்தும் திரும்பியிருந்தேன் –ராணுவமுகாம்களில் வாசிக்கக் கிடைத்த கமலாதாஸ் அக்காவும் சஸ்தி பிரதாவும் பாரதி முகர்ஜியும் இன்னும் என்னோடு இருந்துகொண்டிருந்தார்கள்.குறிப்பாக சஸ்தி பிரதாவின் HE AND SHE, MY GOD DIED YOUNG போன்ற நாவல்களும் கமலாதாசின் என் கதையும் கவிதைகளும் கதைகளும் இருட்டுக்குள் என்னை இழுத்துக்கொண்டே இருந்தன.இருட்டு எப்போதும் மயக்கம் தரவல்ல வசீகரத்தோடு கூடியதுதானே.
கல்லூரிநாட்களின் இறுதியில் அறிமுகமான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ உரையாடல்களையும் இன்னும் விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய COMMENTARIEES ON LIVING இரண்டு தொகுதிகளும் BEYOND VIOLENCE மற்றும் THE AWAKENING YEARS ,அவருடைய கிருஷ்ணமூர்த்தி நோட் புக் போன்ற நூல்கள் என்னோடு இருந்தன.அப்போதைய என்னுடைய பட்ஜெட்டில் அவற்றை வாங்கியது பெரிய செலவுதான்.என்றாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அப்படி ஈர்த்தார்.கேள்வி பதில் பாணியிலான அவருடைய உரைகள் அன்று என்னை ஆட்டி வைத்தன.
நீங்கள் ஒரு குழுவோடு உங்களை ஏன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்? ஒரு இனத்தோடு-ஒரு மதத்தோடு- ஒரு இயக்கத்தோடு?ஒரு கூட்டத்தோடு உங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் கணத்தில் உங்கள் படைப்பாற்றல் (CREATIVITY) மறும் கேள்வி கேட்கும் சுரணை முற்றுப்பெற்று விடுகிறது.என்கிற ஜே.கே யின் முன்வைப்பு நீண்ட காலம் என்னை அலைக்கழித்தது.
ஆனால் ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்ப்பில் வாசித்த ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சீய மெய்ஞ்ஞானம் நூல் என்னைப் பிடித்திழுத்துப் பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தில் தள்ளிவிட்டது.இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பச்சைக்குழந்தைகளுக்குச் சொல்வதுபோலச் சொன்ன புத்தகம் அது.அதைத்தொடர்ந்து ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை நூலையும் பொதுவுடமைதான் என்ன என்கிற புத்தகத்தையும் வாசித்ததில் மனம் மேலும் துலக்கமானது.வரலாற்று ரீதியாக ஒரு கதை வடிவில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் மனித குல வரலாற்றின் முக்கியமான பக்கங்களையும் பேசிய வால்கா முதல் கங்கை வரை வாசித்து அதில் வரும் ஒரு கதாபாத்திரமான ரேக்காபகத் என்கிற பெயரைப் புனைபெயராகக் கொண்டு சில கதைகளைச் செம்மலரில் எழுதினேன்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்தும் சஸ்தி பிரதாவிடமிருந்தும் கமலாதாசிடமிருந்தும் முறையாக விடைபெற்று வர மாரீசு கான்போர்த்தின் இயக்கவியல் பொருள் முதல்வாதம் நூலும் சோவியத் வெளியீடாக அன்று வந்த Marxist Ideology என்கிற அட்டவணைகள் நிறைந்த எளிய புத்தகமும்தாம் கை கொடுத்தன.மனம் என்பதின் செயல்பாடுகள் பற்றியும் உள்மனம்-வெளி மனம்-ஆழ் மனம் மற்றும் அறிவு-உணர்வு என்பவற்றின் அடிப்படை அறிவியல் உண்மைகளோடும் இயக்கவியலைப் புரிய வைத்த இப்புத்தகங்கள் என் வாழ்க்கையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டன.
என் பசிக்குத் தீனியாக அப்போது சென்னை புக்ஸ் பாலாஜி பல நல்ல நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.போல்ஷ்விக் கட்சியின் வரலாறு அப்போது வெளியாகியிருந்தது.அந்தக் கறுப்பு ஞாயிறு பற்றிய பக்கங்கள் என் மனதைப் பாதித்தன.பின்னர் பேட்டில்ஷிப் பொடெம்கின் திரைப்படத்தைப் பார்த்தபோது ஒடெஸ்ஸா படிக்கட்டுகள் காட்சி மீண்டும் என்னைப் போல்ஷ்விக் கட்சியின் வரலாற்றைப் படிக்க வைத்தது.சோவியத்யூனியனைப்போலவே அன்று கிழக்கு ஜெர்மனியிலிருந்தும் ஏராளமான மார்க்சிய அடிப்படை நூல்கள் வந்து கொண்டிருந்தன.அப்புத்தகங்கள் சோவியத் புத்தகங்களைப்போல சிவப்பு வண்ணத்தில் அல்லாமல் நீல வண்ன அட்டைகளுடன் இருக்கும்.ப்ளூ மார்க்சிஸ்ட்ஸ் என்று அவற்றைப்பற்றிய ஒரு கேலியான சிரிப்பு கோவில்பட்டித் தோழர்களிடம் இருக்கும்.
பிளெக்கனோவின் இரு புத்தகங்கள் அந்தத் தருணத்தில் தெளிவான பார்வையைத் தந்தன.வரலாற்றில் தனி நபர் பாத்திரம் என்கிற நூலும் கலையும் வாழ்க்கையும் என்ற நூலும்.அப்போது கு.சின்னப்ப்பாரதியின் தாகம் நாவலும் டி.செல்வராஜின் மலரும் சருகும் நாவலும் வந்துவிட்டிருந்தன.இதுதான் எனது பாதை எனத் தீர்மானிக்க இவ்விரு நாவல்களும் பிளெக்கனோவின் நூல்களும் வழிகாட்டின என்பேன்.
இவ்வளவு புத்தகங்களுக்குப் பிறகுதான் நான் 1848இல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தேன்.ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது என்று துவங்கி எத்தனை இலக்கியப்பூர்வமான மொழிநடையில் உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேர அறைகூவி அழைத்த புத்தகம் அது.இன்றுவரை அப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு புதிய தெளிவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.எதைப்பற்றி எழுதப்போனாலும் பேசப்போனாலும் கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒருமுறை பார்த்துக்கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.அப்போது Radical review பத்திரிகையில் இ.எம்.எஸ். அவர்களின் நேர்காணல் ஒன்று வெளியாகி இருந்தது.CPI-CPM-CPI-ML என்பது அந்நேர்கணலின் தலைப்பு அதைப்படிச்சிட்டு அப்புறம் இதைப்படி என்று தோழர் பால்வண்ணம் என்னிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் என்கிற நூலையும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை என்கிற சிறு நூலையும் கொடுத்தார். கட்சித்திட்டம் என்றால் ஏதோ அது அவர்கள் கட்சியைப்பற்றியும் அவர்களின் வழியைப் புகழ்ந்தும் எழுதியிருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு அது ஓர் ஆழமான வரலாற்று ஆவணம்போல பல உண்மைகளை அடுக்கி மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கு மக்களை அழைக்கும் புத்தகமாக இருந்து என்னை ஆச்சர்யப்படுத்தியது.
சோவியத் நூல்களைச் சரளமாக வாசிக்கும் பழக்கம் இதற்குள் வந்துவிட்டிருந்தது.கார்க்கியைவிட அன்று என்னை மிகவும் ஈர்ப்பவராக தஸ்தாவ்ஸ்கியே இருந்துகொண்டிருந்தார்.வெண்ணிற இரவுகளின் பனி பொழியும் பாதைகளில் காதல்வயப்பட்ட இளைஞனாக நான் நடந்துகொண்டிருந்தேன்.சிங்கிஸ் ஐத்மாத்தோவின் ஜமீலாவைக் காதலிக்கும் பலகோடி உலக இளைஞர்களில் நானும் ஒருவனாக நிலவொளியில் நீந்திக்கொண்டிருந்தேன்.கோகோலின் ’மேல்கோட்’டை அணிந்து இருமிக்கொண்டு அந்தோன் செகாவின் கதைகளுக்குள் ஆறாவது வார்டில் ஒரு பாத்திரமாக மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருந்தேன்.இவான் துர்கனேவின் முதற்காதல் என்கிற குறுநாவல் என்னை அந்நாவலில் வரும் சிறுபையனாகவே மாற்றியது.டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில் வரும் ஏமாற்றுக்காரப் பெண்ணும் அவள்மீது காதல் கொண்டு வாழ்நாள் முழுக்க அவள் பின்னாலேயே ஏமாந்து அலையும் அந்த இளைஞனும் அந்தக்காதலின் புனிதமும் மனதைத் தாக்கினாலும் இது ஒரு கிறித்துவப்பார்வையுடன் எழுதப்பட்ட நாவல் என்று டால்ஸ்டாயையே விமர்சிக்கும் அளவுக்கு அப்போது வளர்ந்துவிட்டிருந்தேன்.
உண்மையில் அன்றைய பல இளைஞர்களைப்போலவே நானும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்னும் பெரும் கடலில் விழுந்து கிடந்தேன்.நட் ஹாம்சனின் நிலவளம் நாவல் மனித வாழ்க்கையை ஆதியிலிருந்து புரிந்து கொள்ள உதவிய வரலாற்று ஆவணம் போல வந்து சேர்ந்த்து.அந்நாவலில் வரும் மேல் உதடு பிளந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த அவளைப்போலவே மேல் உதடு பிளந்த குழந்தையை அவள் யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைக்கும் காட்சியில் இன்னும் மனம் உறைந்துபோய்க் கிடக்கிறேன்.நிலவளம் போலத் தமிழில் வந்த ஒரு புத்தகமாக அப்போது சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை இயற்கையை வெல்லும் மனிதக்கதையாகப் புரிந்து கொண்டேன்.இன்று அதே கதையை இயற்கையை அழித்த மனிதன் சீரழியும் கதையாகப் புரிந்துகொள்கிறேன். வி.ஸ.காண்டேகரின் எரிநட்சத்திரம் நாவலில் வரும் புரட்சிகர இளைஞனாக என் ஆசிரியர்களுடன் வாதம் செய்திருக்கிறேன்..வங்கத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் ஏராளம்.விபூதிபூஷனின் இலட்சிய இந்து ஓட்டல், பங்கிம் சந்திரரரின் விவசாய எழுச்சியை மையமாக்க் கொண்ட வந்தேமாதரம் பாடலைத் தந்த ஆனந்த மடம் நாவல் ,வெளிநாட்டுக்குப் பிழைக்கப்போகும் உயர்சாதி இளைஞன் பற்றிய பாரதி நாவல் எனப்பல நாவல்கள். தாகூரின் கீதாஞ்சலி வாசித்துத் தலை நிமிர்த்தி நடந்திருக்கிறேன்.வங்க நாவல்களின் தத்துவப் பார்வையை விட என்னோடு எளிமையாகவும் நெருக்கத்துடனும் பேசிய கதைகளாக மலையாள எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும் குறுநாவல்களும் பஷீரின் சிறுகதைகளும் கேசவ்தேவின் நடிகையும் ஓர் அழகியின் சுயசரிதையும் என் திருமணத்துக்கு அன்பளிப்பாக வந்த என்.பி.டி.யின் சமீபத்திய மலையாளச்சிறுகதைகள் தொகுப்பும் என ஒரு வளமான பங்கு கேரளத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.அந்த அளவுக்குத் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு ஏதும் செல்லவில்லை என்பது இன்றுவரை தீராத ஒரு சோகம்தான்.
இந்த சந்தர்ப்பத்தில் நான் தொழிற்சங்க இயக்கத்தில் கூட்டங்களில் பேசுகிற ஆளாக மாறிப்போனதால் தேவையை ஒட்டித் தேடிப்படிக்கும் பழக்கமும் வந்து விட்டது.அப்படி வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் என தோழர் இ.எம்.எஸ். அவர்கள் எழுதிய INDIAN PLANNING IN CRISIS என்கிற நூலையும் அதன் தொடர்ச்சியாக வந்த CRISIS INTO CHAOS என்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பொருளாதார அமைப்பு குறித்து எழுந்த விவாதங்கள் 1948இல் திட்டக்கமிஷன் உருவாக்கப்பட்ட பின்னணி அதன் பின் இயங்கிய வர்க்க அரசியல் பற்றியெல்லாம் தெளிவாக விளக்கிய நூல்கள் இவை.இ.எம்.எஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவர் எழுதிய எல்லா நூல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது.அவரது இந்திய வரலாறு-ஒரு சுருக்கமான வரலாறும், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன் என்கிற நூலும் அப்போது தமிழில் கிடைத்தன.பின்னர் அவரது A HISTORY OF INDIAS FREEDOM STRUGGLE என்கிற புத்தகம் வந்ததும் ஓடிப்போய் வாங்கிப்படித்தேன்.இப்போது அது தமிழிலேயே கிடைக்கிறது.நம் நாட்டின் கடந்த கால வரலாற்றை ஒரு மார்க்சிய நோக்கில் பயில இதைவிடச் சிறந்த புத்தகம் வேறொன்றும் இல்லை.பின்னர் வேதங்களின் நாடு வந்தது.இந்தியாவில் சாதிகளின் தோற்ரம் பற்றிய ஒரு புதிய விளக்கத்தை இந்நூல் தந்த்து.
அங்கிருந்து என் வாசிப்பு வரலாற்று நூல்களின் மீது ஆவலுடன் தாவியது.குறிப்பாக இந்திய வரலாறு,தமிழக வரலாறு குறித்து என்ன துண்டுத்தாள் கிடைத்தாலும் வாங்கி வாசித்துத் தீவிரமாக்க் குறிப்புகளும் எடுத்துக்கொண்டிருந்தேன்.இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் நூல்கள் பலவற்றை அப்போது என்.சி.பி.எச் வெளியிட்டுக்கொண்டிருந்தது.என்சிபிஎச் கிளை பொறுப்பாளர் ஒருவரிடம் ரகசியமாக்க் கணக்கு வைத்துக்கொண்டு மாத்த் தவனையில் அந்த எல்லா வரலாறு நூல்களையும் வாங்கிக் குவித்து வெறிகொண்டு படித்துக்கொண்டிருந்தேன்.டி.டி.கோசாம்பியின் பண்டைய இந்திய வரலாறு,ராகுல்ஜியின் ரிக் வேத கால ஆரியர்கள்,ரோமிலா தாப்பரின் வரலாறும் வக்கிரங்களும்,சுவீரா ஜைஸ்வாலின் வைஷ்ணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,ஆர்.பி.ஷர்மாவின் பண்டைய இந்தியாவில் அரசு நிர்வாகத்தின் தோற்றம்,விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்கள்,பி.சி.ஜோசியின் 1857 புரட்சி ,சுசோபன் சர்க்காரின் வங்காள மறுமலர்ச்சி என எண்ணற்ற புத்தகங்கள்.படித்த நூல்களை நோட்டுப்போட்டுக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டிருந்தேன் –எதற்கென்று தெரியாமலே.இவ்வாசிப்பில் 1857 புரட்சியை ஒரு தனித்த சிறப்பு வாய்ந்த நூலாக உணர்ந்தேன்.ஒரு வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான நூலாக இது அமைந்தது.ஏற்கனவே 1857 சிப்பாய்ப் புரட்சி பற்றி வேறு சில நூல்களையும் நான் வாசித்திருந்தேன்.மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் முயற்சியில் 1957இல் அரசு வெளியிட்ட 1857 என்கிற விரிவான ஆங்கில நூலையும் பட்டாபி சீத்தாராமையா எழுதிய 1857 கலகம் என்கிற நூலையும் சவர்க்காரின் இந்தியப்புரட்சி நூலையும் வாசித்திருந்தாலும் அவை எதுவும் பி.சி.ஜோஷியின் நூலுக்கு ஈடாக நிற்கவில்லை.1857 புரட்சி பற்றிய வரலாறுக் காரணங்கள்,அன்றைய பத்திரிகைகளில் அது பற்றி வந்த செய்திகள்,நாட்டுப்புறப்பாடல்கள் ,பிற நாட்டு அறிஞர்கள் அப்புரட்சி பற்றி எழுதிய குறிப்புகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நூலாக அது வந்திருந்தது.என்னைப்போன்ற அன்றைய இளம் வாசகர்களுக்குச் சரியான தீனியாக அது அமைந்தது.கோ.கேசவனின் எழுத்துக்களை நான் இந்த சமயத்தில்தான் வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது.அவரது சமூகமும் கதைப்பாடல்களும் என்கிற சின்னஞ் சிறிய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை இருக்கிறது.பாளையக்காரர்களின் காலத்தைப்புரிந்துகொள்ள தமிழில் இதைவிடச் சிறந்த நூல் ஏதும் இல்லை என்பேன்.அவரது மண்ணும் மனித உறவுகளும், இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் இயக்கமும் இலக்கியப்போக்குகளும் போன்ற நூல்களையெல்லாம் ஒருசேரத் தேடித் தேடி வாசித்தேன்.இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களுக்குக் கல்வி புகட்டும் மொழியில் அவர் எழுதினார்.அவரது மறைவு இட்து சிந்தனை உலகுக்குப் பேரிழப்பாகும்.
இப்போது கதைகள் எழுதவும் துவங்கியிருந்தேன்.ஒரு திட்டமிட்ட பாடத்திட்ட அடிப்படையில் இலக்கியங்களைக் கற்பது என்று முடிவு செய்து கால வாரியாக நூல்களைப் பட்டியலிட்டு நூலகங்களிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் நிறைய சொந்தமாகவும் வாங்கிப் படிக்கலானேன்.(இந்த வைராக்கியம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது எனக்கு ஆச்சரியமே-அவ்வளவு நீண்ட காலத்துக்கு என் புத்தி ஒரு நிலையில் நிற்பது –வாசிப்பைப் பொறுத்து-அபூர்வம்தான்)
1920களின் முக்கிய உரைநடை இலக்கிய எழுத்துக்கள் என பாரதியின் சிறுகதைகளையும் அவரது சந்திரிகையின் கதை என்னும் நாவலையும் அ.மாதவய்யாவின் குட்டிக்கதைகளையும் வ.வே.சு.அய்யரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பையும் படித்தேன்.சமூகத்துக்கு ஏதேனும் சொல்லத்துடித்த கதைகளாக அவற்றை உணர்ந்தேன்.மாதவய்யா கதைகளின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நான் எதிர்பாராதவை.சிறுகதை என்னும் வடிவம் பூரணமாகக் கைவராத படைப்புகளாக இம்மூவரின் கதைகள் இருந்தன.ஆனாலும் சிறுகதையின் துவக்கம் சமூக அக்கறை கொண்ட்தாகவே இருந்தது-உள்மனப் பயணம் பற்றியதாக இல்லை என்பது குறிக்கத்தக்கது.
1925இல் இம்மூவரும் மறைந்து விட்ட பின் புதுமைப்பித்தனும் கு.ப.ராஜகோபாலனும் மௌனியும் முன்னுக்கு வந்தனர்.இப்போதுபோல ஒட்டுமொத்தத் தொகுப்புகள் அக்காலத்தில் இல்லை.மௌனியின் அழியாச்சுடர் ஒரு தொகுப்புதான் வந்திருந்தது.என்னைப்போலவே(!) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கதை எழுதியவர் அவர் என்பதாலும் சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் அவரைப்பற்றிச் சொன்னதாலும் அவரை ஆவலுடன் வாசித்து ஏமாந்தேன்.அன்றுமுதல் இன்றுவரை மௌனி என்னை வசீகரிக்கவில்லை.புதுமைப்பித்தனின் காஞ்சனை,புதுமைப்பித்தன் கதைகள் ,துன்பக்கேணி போன்ற பத்துத்தொகுப்புகள் என் கையில் இருந்தன.ஒவ்வொரு கதையும் எனக்குப் பாடம் சொன்ன கதைதான்.இலங்கைக்குப் போய் பரங்கிப்புண் பெற்ற மருதாயியின் சோகமும் கடவுளோடு ஒருநாள் கழித்த கந்தசாமிப் பிள்ளையின் எள்ளலும் மகாமசானம் என்று சென்னைப்பட்டணத்தை மயானம் என்று சொல்லி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்த கோபமும் அவருக்கன்றி யாருக்கு வரும்? கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் தொகுப்பின் கதைகள் இன்றைக்கும் மனதை ஈர்ப்பவையாக இருக்கின்றன.சிறிது வெளிச்சம்,ஆற்றாமை,மெகருன்னிசா போன்றவை இறவாப்புகழ் பெற்ற கதைகள்தாம்.
40களின் படைப்பாளிகளில் நான் தடுமாறி விழுந்தது கு.அழகிரிசாமியின் மடியில்தான்.இன்றைக்குவரை எனக்கு ஆதர்சம் அவர்தான்.நான் கதை எழுதிய ஒவ்வொரு நாளும் அவரது மடியில் உட்கார்ந்து கதை எழுதுவதான உணர்வே எனக்கு இருக்கும்.எளிய வார்த்தைகளில் எங்கள் கரிசல் மனிதர்களின் கள்ளமில்லாத உள்ளத்துடன் கதை சொன்ன அவர்தான் எமக்கு அப்பா.அவரது சிரிக்கவில்லை,தவப்பயன்,அன்பளிப்பு,கற்பக விருட்சம் போன்ற 11 தொகுப்புகள் அன்று என் கைவசம் இருந்தன. அது பற்றிய அளவற்ற கர்வமும் எனக்கு இருத்து.அவற்றை மொத்தமாக வாங்கிப்போன ஜோதிவிநாயகம் திருப்பித்தராமலே போய்விட்டது ஒரு சோகம்தான்.இன்று மொத்தக்கதைகளின் தொகுப்பு வந்துவிட்டாலும் அந்த என் புத்தகங்கள் போன சோகத்தை அது ஈடு செய்யவில்லை.
50-60 களின் இலக்கிய ஆளுமைகளாக அசோகமித்திரனும் கி.ராஜநாராயணனும் சி.சு.செல்லப்பாவும் ஜி.நாகராஜனும் சுந்தரராமசாமியும் லா.ச.ராமாமிர்தமும் என் வாழ்வில் வந்து சேர்ந்தார்கள்.சென்னை வாழ்வின் கீழ் மத்தியதர வாழ்வைக்களனாக்க் கொண்ட அசோகமித்திரனின் சிறுகதைகளைப்(காலமும் ஐந்து குழந்தைகளும் ) பார்க்கிலும் என்னைப் பாதித்தவை அவரது அற்புதமான நாவல்களான கரைந்த நிழல்கள்,தண்ணீர்,பதினெட்டாவது அட்சக்கோடு போன்றவைதாம்.தண்ணீரில் வரும் ஜமுனாவின் துக்கம் நம்முடையதாகிவிடும்.அதை ஒரு குறியீட்டு நாவல் என்று அப்போது பேசிக்கொள்வார்கள்.பத்னெட்டாவது அட்சக்கோடு ஹைதராபாத்தைக் கதைக் களனாகக் கொண்டு இந்து முஸ்லீம் கலவரத்தில் சிதையும் மனித மாண்புகள் பற்றி நுட்பமாகப் பேசிய நாவல்.கி.ரா எங்க காட்டுப் பெரியவர். வேட்டி,கிடை,கன்னிமை போன்ற சிறுகதைத் தொகுப்புகளாலும் கோபல்லபுரம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் ஆகிய நாவல்களாலும் கரிசல் வாழ்வின் பல பரிமாணங்கலை எளிய பேச்சுவழக்கில் கதைகளாக்ச் சொன்னவர் கி.ரா.பிரசாதம் சிறுகதைத் தொகுப்புத்தான் சுந்தரராமசாமியின் எழுத்துக்களில் நான் முதலில் வாசித்தது.புளியமரத்தின் கதையை ரொம்ப்ப் பின்னாளில்தான் வாசித்தேன்.அவருடைய எழுத்தின் மீது ஏற்பட்ட ஒரு வசீகரமும் மோகமும் இன்றுவரை தீரவில்லை.ஜே.ஜே.சில குறிப்புகள்தான் அவருடைய மாஸ்டர்பீஸ்.கருத்துரீதியாக அந்நாவலில் விமர்சனம் எனக்குண்டெனிலும் மொழி மற்றும் உத்தி ரீதியில் அது வந்த காலத்தில் மிக முன்னதாகப் பாய்ந்த படைப்பு அது.லா.ச.ராவை அன்று வாசித்தபோது பிரமிப்பாக இருந்தது.மொழியின் எல்லைகளை இவ்வளவு தூரம் விரிக்க முடியுமா என்று வியந்ததுண்டு.பின்னர் 90களில் அபிதாவை எடுத்து வாசித்தபோது என்னால் வாசிக்கவே முடியாத அயர்ச்சி ஏற்பட்டது.ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு குறுநாவலும் நாளை மற்றொரு நாளே நாவலும் தமிழ் நவீன இலக்கியம் அதிகம் பேசாத பக்கங்களைப் பேசின.எல்லோரும் வாழ்க்கையை முன்வாசல் வழியாகப் பார்க்கும்போது ஜி.நாகராஜன் புழக்கடை வழியே அதைப் பார்க்கிறார் என்ற சு.ரா.வின் கருத்து முற்றிலும் சரிதான்.இன்றும் என்னை ஈர்க்கும் ஒரு எழுத்து ஜி.நாகராஜனுடையது.
70-80 களில் நானும் மைதானத்தில் இறங்கியிருந்தேன்.எனக்கு முன்னால் பிரபஞ்சனும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும்,பூமணியும்,பா.செயப்பிரகாசமும் ,கந்தர்வனும் மேலாண்மை பொன்னுச்சாமியும் போய்க்கொண்டிருந்தார்கள்.
தொழிற்சங்க மற்றும் இலக்கிய உலகத்தோடு நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து சில வேலைகளைச் செய்தபோது என் அறிவுலகின் வாசல்கள் இன்னும் அகலத் திறந்தன.கே.கிருஷ்ணகுமாரின் இயற்கை,சமுதாயம்,மனிதன் என்ற புத்தகம் எளிமையாக மனித குலவரலாற்றினூடாக அறிவியல் செய்த பயணம் பற்றிப் பேசியது. அறிவியல் இயக்கம் எனக்குச் செய்த மாபெரும் உதவி சில தலை சிறந்த மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்ததுதான். ச.மாடசாமி,டாக்டர் சுந்தரராமன்,டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்,டாக்டர் ராமானுஜம்,டாக்டர் (?) செந்தில்பாபு போன்ற அறிஞர்கள் எனக்கு முற்றிலும் புதியதோர் உலகத்துப் புத்தகங்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களாக அமைந்தனர்.
எளிய மக்களின் மனதோடு பேசும் கலையைக் கற்றுத்தந்த பேராசிரியர் ச.மாடசாமியின் எனக்குரிய இடம் எங்கே? அவரவர் கிணறு,சொலவடைகளும் சொன்னவர்களும் ஆகிய மூன்று நூல்களும் வாசிப்பவரின் மனங்களை விசாலமாக்கும் தன்மையுடையவை..சொலவடைகள் புத்தகம் கடுமையான உழைப்பையும் ஈடுபாட்டையும் கோரிய புத்தகம்.டாக்டர் சுந்தரராமன் தான் எமக்கு அந்தோனியோ கிராம்ஷியையும் மிஷேல் பூக்கோவையும் அறிமுகம் செய்து வைத்தவர்.அவருடைய அறிமுகத்தால் உந்தப்பெற்றுத் தேடிப் பிடித்து வாசிக்க முயன்ற புத்தகங்களென கிராம்ஷியின் PRISON NOTE BOOK மற்றும் CULTURAL WRITINGS ஆகிய இரு நூல்களையும் குறிப்பிட வேண்டும்.தோழர் தொ.மு.சி.ரகுநாதனின் கடைசி நாட்களில் இப்புத்தகங்களை அவர் கேட்கக் கொண்டுபோய்க் கொடுத்த சந்தோஷமும் எனக்குக் கிட்டியது.சவுத் விஷன் பாலாஜி வெளியிட்ட (எஸ்.வி.ஆர்-கீதா) அந்தோனியோ கிராம்ஷி-வாழ்வும் சிந்தனையும் அக்காலத்தில் முதல் அறிமுக முயற்சி.இப்போது விடியலில் அதைவிட நல்ல புத்தகங்கள் வந்துவிட்டன.
செந்தில்பாபு வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்வாம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.இப்போது அவரை விடவே முடியவில்லை.நான் முதலில் வாசித்த்து அவரது AGE OF EXTREMES தான் .நான் வாசித்த வரலாற்று நூல்களில் CLASSIC என்று இந்நூலைத்தான் சொல்வேன்.20ஆம் நூற்றாண்டைப்பற்றிய ஒரு முழுமையான பார்வையை இந்நூல்தான் வழங்கியது.அவருடைய Nations and Nationalism,Age of Empires,Age of Capitalism, சமீபத்திய Globalisation,Democracy and Terrorism போன்ற நூல்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரிந்துகொள்ள உதவிய நூல்கள்.ஒவ்வொரு நூற்றாண்டும் நமக்குச் சில வார்த்தகளை விட்டுச்செல்கின்றன என்கிற அவருடைய வரியும் மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு-நினைவு படுத்திக்கொண்டே இருப்பது வரலாற்றாளனின் கடமை என்கிற வரியும் மறக்க முடியாதவை.
த.வி.வெங்கடேஸ்வரன் திருவனந்தபுரத்தில் இருந்தபோதும் இப்போது டெல்லியில் இருக்கும்போதும் அவ்வப்போது அறிய புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்பவராக இருக்கிறார்.முக்கியமாக புவியியல் நூல்களின் அரசியலை எனக்குப்புரிய வைத்து Jared Diamond என்கிற அற்புதமான புவியியல் எழுத்தாளரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.Jared Diamond இன் Why Geography என்கிற நூல் புவியியல் கற்பதன் அவசியத்தையும் உன்னதத்தையும் எனக்கு உணர்த்தின.அவருடைய இன்னொரு புத்தகமான GUNS,GERMS AND STEEL இதுவரையிலும் பார்க்காத ஒரு புதிய புவியியல் கோணத்தில் உலக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவியது.வரைபடங்களின் அரசியலையும் வரைபடங்களின் வழியே வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் SUSAN GOLE அவர்களின் நூல்கள் சில உதவின.குறிப்பாக INDIA WITHIN GANGES- இண்டியா இந்த்ரகேஞ்சம் என்கிற அவரது நூல் ஐரோப்பியர்களின் பார்வையில் ஆதி காலந்தொட்டு இந்தியா பற்றிய சித்திரங்கள் எவ்விதம் மாறி மாறி வடிவம் கொண்டன என்பதை விளக்குகிறது.- இப்பாதையில் புத்தகங்களோடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு ஆளுமை சேலம் சகஸ்ரநாமம்.நானும் அவரும் சேர்ந்து மனிதகுல வரலாறு,சமூக வரலாறு, கட்சித்திட்டம் போன்றவற்றை நழுவுபடக்காட்சிகளாகத் தயாரிக்கப் பெரும் திட்டங்கள் தீட்டினோம்.(நடக்கிறதோ இல்லையோ கனவுகளை விரித்துக்கொண்டே இருப்பதுதான் வாழ்வின் ஆதாரம் இல்லையா).மனித குல வரலாறு தொடர்பான சமீபத்திய பல நூல்களை அவர் பல ஊர்களிலிருந்து தருவித்தார்.ஒரு மேப் பாணியிலான கண்காட்சியைத் தயாரித்து ஆளுக்கு ஒரு செட் வைத்துக்கோண்டோம். சில ஊர்களுக்குக் கொண்டு சென்றோம்.அதற்குள் பவர் பாயிண்ட் என்கிற இன்னும் சிறப்பான வடிவம் வந்துவிட்டது.அவர் மூலம் வாசிக்க்க் கிடைத்த புத்தகங்களில் முக்கியமானவையாக JaredJared Diamond எழுதிய DioThe Rise anf Fall of Third Chimpanzee யையும் by Robert Wright எழுதிய The Moral Animal என்கிற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.மரபணு ஆராய்ச்சிகளின் விளைவாக மனித குலம் பிறந்தது ஆப்பிரிக்கா கண்ட்த்தில்தான் என்பது நிரூபணமான பிறகு இந்நூல்களை வாசித்தது நம் வேர்களை இன்னும் நெருக்கமாக அடையாளம் காண உதவியது. நமது ஆதி விலங்கினத் தொடர்பு எவ்விதம் இன்றுவரை நம் பண்பாட்டு வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் நாம் ஏன் இவ்விதமாக வாழ்கிறோம் என்பதற்கான டார்வினிய அடிப்படையிலான விளக்கத்தை இந்நூல்கள் அளிக்கின்றன.
90களில் சோவியத் யூனியன் சிதறுண்டதும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் வீழ்ச்சியடைந்ததும் பண்பாட்டுத்தளத்தில் நாம் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. எனது பார்வையும் இயக்கத்தின் பார்வையோடு சேர்ந்து மாற்றம் பெற்றது.அம்பேத்கரின் நூற்றாண்டு அவரது சிந்தனைகளின் மீது கவனத்தைத்திருப்பியது எனலாம்.அவரது நூல்கள் தமிழில் வெளியாகத் துவங்கியதும் ஈர்ப்புக்கு ஒரு வடிவம் கொடுத்தது.அவருடைய இந்தியாவில் சாதிகள் என்கிற கொலம்பியா பல்கலைக்கழக உரையும் புத்தரும் அவரது தம்மமும் என்கிற நூலும் காந்தியும் காங்கிரசும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன என்கிற நூலும் முதல் வாசிப்பிலேயே வாசகனின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன.அவரைப்பற்றிய புத்தகங்களில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் அம்பேத்கர் ஆய்வு மையம் வெளியிட்ட அம்பேத்கர்-ஒரு பன்முகப்பார்வை ஒரு நல்ல எளிமையான அறிமுக நூலாகவும் DR.AMBEDKAR AND UNTOUCHABILITY- என்கிற CHRISTOPHER JAFFRELOT அவர்களின் நூல் அவரது சிந்தனைகளின் அறிமுகமாகவும் எனக்கு வாசிக்கக் கிடைத்தன.மராட்டிய அரசு வெளியிட்டுள்ள 40க்கு மேற்பட்ட அம்பேத்கர் நூல்வரிசையில் 20க்கு மேற்பட்டவற்றை வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். முழு தொகுதிகளையும் வாங்கியாக வேண்டும்.அவருடைய ஆய்வு முறையும் ஆழ்ந்தகன்ற வாசிப்பும் ஒவ்வொரு வார்த்தையிலும் குமுறும் அவரது கோபாவேசமும் அம்பேத்கரை என் மனதின் உச்சத்தில் கொண்டு வைத்துள்ளது-மிகத் தாமதமாக அவரிடம் வந்து சேர்ந்தோமே என்கிற குற்ற உணர்ச்சியுடன்.
தந்தை பெரியாரின் நூல்களில் பெண் ஏன் அடிமையானாள்? மற்றும் திராவிடர் கழக வெளியீடுகளான பெரியார் களஞ்சியம் பத்துத் தொகுதிகள் (பெண்ணியம்,சாதி மட்டும்)வாங்கி வாசித்திருந்தாலும் வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டு பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் வெளியிட்ட பெரியாரின் குடி அரசு எழுத்துக்களின் 27 தொகுதிகளை வாங்கி பரீட்சைக்குப் படிப்பது போல (ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டி இருந்ததால்)படித்த அனுபவம் அலாதியானது.பெரியாரின் எழுத்துக்களில் மிளிரும் கிண்டலும் கேலியும் நாட்டுப்புறக் கதைகளும் சொலவடைகளும் தனியே விவரித்து எழுதத்தக்கவை. காதல் பற்றிய அவரது கிண்டலான கருத்துக்கள் முதல் வாசிப்பில் எனக்கு வியப்பூட்டின. மக்கள் மொழியில் மக்களிடம் பேசிய மகத்தான தலைவராக அவர் மனதில் உயர்ந்து நிற்கிறார்.கிராம்ஷி சொல்லும் Organic Intellectual இவர்தான் என்று தோன்றியது.
பெண்களின் நிலை குறித்துத் தொடர்ந்து பேசி வந்தாலும் வலுவான புத்தகங்கள் வாசிக்க்க் கிடைக்காத சூழலில் எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஏ.எஸ்.பத்மாவதி அவர்கள் வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது அரிய பல நூல்களை அப்படியே எனக்கே எனக்கு என அள்ளிக்கொடுத்து விட்டார்.அவற்றில் – SIMON DE BEUOVA எழுதிய நான் ரொம்ப காலமாகத் தேடிக்கொண்டிருந்த THE SECOND SEX என்கிற புத்தகமும் இருந்தது.பிரான்ஸ் நாட்டையும் ஐரோப்பாவையும் குலுக்கிய அப்புத்தகம் பெண்நிலையில் நின்று இவ்வுலகைக் காணப் புதிய சாளரங்களைத் திறந்து விட்டது.The Beauty Myth மற்றும் Sacrificing Ourselves ஆகிய இரு புத்தகங்களும் வ.கீதா எழுதிய Gender மற்றும் Patriarchy ஆகிய இரு நூல்களும் பெண்ணியம் தொடர்பான என் பல குழப்பங்களுக்கும் விடையளிப்பதாக அமைந்தன.
நெல்லைக்குப் பணியாற்ற வந்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தமிழறிஞர் தொ.பரமசிவமும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனும் எனக்குச் செய்துள்ள உதவிகள் சொல்லாலே விளக்கிவிட முடியாதவை.இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த சில முக்கியமான புத்தகங்களை சலபதிதான் எனக்கு வாங்கித்தந்தார்.ஊர்வசி புட்டாலியாவின் The Otherside of Silence கமலா பாஷின் எழுதிய Borders and Boundaries ஆகிய இரு நூல்களும் எந்த வரலாற்று நூலும் இதுவரை சொல்லியிராத தேசப்பிரிவினையின் காயங்களைத் திறந்து காட்டின.இந்தியாவின் விடுதலை என்பது பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட ஒரு வரலாறுதான் என்பதை இவ்விரு நூல்களும் நம் முகத்திலறைந்து சொல்கின்றன.கண்ணீரில் கரைந்தபடி வாசித்த நூல்கள் இவை.எஸ்.ராமானுஜம் மொழி பெயர்ப்பில் வெளியான மண்ட்டோ படைப்புகள் இவ்வரிசையில் ஓர் மகத்தான நூலாகும்.
தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் என்கிற நூல் தமிழகப்பண்பாட்டு வரலாற்றில் உண்மையிலேயே அறியப்படாத ஒரு தமிழகத்தை அறிமுகம் செய்து பலத்த அதிர்வுகளை உண்டாக்கிய நூல்.அந்நூலை நாங்கள் எம் தோள்களில் சுமந்து சென்று விற்பனை செய்தோம்.இன்று அவருடைய எல்லாக் கட்டுரைகளும் பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலாக வந்துள்ளது.நாட்டார் தெய்வங்களி வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டுவந்த வாழும் நா.வானமாமலை என நான் மதிக்கிற தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் அடித்தள மக்கள் வரலாறு, கொலையில் உதித்த தெய்வங்கள்,கிறித்துவமும் சாதியும் ,மந்திரங்கள் சடங்குகள் என அவரது ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு எழுத்தும் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அடிப்படையான நூல்களாக அமைந்துள்ளன.சின்ன வயதிலேயே பெரும் சாதனைகள் புரிந்தவராக நான் மதிக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் அந்தக்காலத்தில் காப்பி இல்லை,நாவலும் வாசிப்பும்,திராவிட இயக்கமும் வேளாளரும்,முச்சந்தி இலக்கியம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழில் வரலாற்று நூல்களின் வரிசையில் மிக முக்கிய இடம் பிடிப்பவை.
தமிழகத்தில் நானறிந்த ஒரே பொருளாதார வரலாற்றாய்வாளரான முனைவர் கே.ஏ.மணிக்குமாரின் 1930களில் தமிழகம் என்கிற நூலும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த அவரது 1957 RIOTS என்கிற நூலும்(அச்சில்) தமிழக வரலாற்றுக்கு அரிய பங்களிப்புகளாகும்.முத்துராமலிங்கத்தேவர் பற்றிய ஒரு விருப்பு வெறுப்பற்ற கணிப்பை மணிக்குமார் அவர்களின் இந்நூல் செய்துள்ளது குறிப்பிட்த்தக்கது.1930களில் தமிழகம் நூலை முன் வைத்து புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றை ஆய்வு செய்து பார்ப்பது அவசியம்.30களின் பொருளாதார மந்தம் பற்றி பல கதைகளில் புதுமைப்பித்தன் அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.
நான் சந்தித்த மனிதர்கள் எல்லோருடைய முகங்களுமே எனக்குச் சில புத்தகங்களாகவே மனதில் தோன்றுகின்றன.புத்தகம் சுமந்த (புத்தகங்களை நானும் என்னைப் புத்தகங்களும் ) வரலாறுதான் என் கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமுமாக இருக்க முடியும்.என் மனப்போக்கின் ஒவ்வொரு திருப்பத்தையும் நடப்புகளும் நிகழ்வுகளும் தீர்மானித்ததை விட மேலே குறிப்பிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களே தீர்மானித்தன என்று உறுதியாகச் சொல்லுவேன்.
சமீபத்திய வாசிப்பில் இளம்பிறை,குட்டி ரேவதி, சுகிர்தராணி,சல்மா,மாலதி மைத்ரி போன்ற பெண் படைப்பாளிகளின் கவிதைகளும் கதைகளும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் தன் வரலாறும் ப்ரியாபாபுவின் எழுத்துக்களும் என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன என்பேன்.இவர்களைப்பற்றி இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு வரியில் எழுதுவது நியாயமில்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வாழ்வை முன்வைத்துப் பேசுகிறார்கள்.பொதுவான அம்சம் ஒன்றுண்டு என்பதால் பொதுவாக்க் குறிப்பிட்டேன்.வாசிக்கும் ஆண் மனதைக் குற்ற உணர்வு கொள்ளச்செய்யும் படைப்புகளாக இவை யாவும் உள்ளன என்பதே அது.
கீரனூர் ஜாகிர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா,யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி மற்றும் சேகுவேரா இருந்த வீடு போன்ற படைப்புக்கள் சமீபத்தில் நான் வாசித்து அதிர்வுக்குள்ளான உயிர்த்துடிப்புள்ள படைப்புக்கள்.இஸ்லாமிய வாழ்க்கைப் பின்புலத்தோடு மனித வாழ்வை, நம்பிக்கைகளை , மனித மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் நாவல்களைத் தொடர்ந்து எழுதி வரும் ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களில் தனித்துவமான ஒன்றாக வடக்கே முறி அலிமாவை நான் மதிப்பிடுகிறேன்.ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புஷ்பராஜாவின் புத்தகமும் ராஜனி திரானகம எழுதிய முறிந்தபனை யும் காட்டிய ஈழப்போராட்ட்த்தின் மறுபக்கத்தையும் முழுமையான சித்திரத்தையும் வலி மிகுந்த வாழ்க்கையையும் துக்கத்தின் உச்சியில் பிறக்கும் பகடியாக யோ.கர்ணன் தன் சிறுகதைகளில் எழுதிச்செல்கிறார்.சேகுவேரா இருந்த வீடு ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் குறியீடாக அமைந்துவிட்ட்து.
கோ.ரகுபதியின் தலித்துகளும் தண்ணீரும் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகம்.பாவங்களைக் கழுவும் புனித வஸ்துவாகக் கருதப்படும் தண்ணீரைக் குடிப்பதற்காக தலித்துகள் நடத்தி வரும் போராட்டங்களை வரலாற்று ரீதியில் விளக்கும் இந்நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.சு.கி.ஜெயராமன் தொடர்ந்து எழுதிவரும் புவியியல் சார் புத்தகங்களான குமரி நில நீட்சி,மணல் மேல் கட்டிய பாலம் போன்றவை இன்றைய இந்துத்துவப் புரட்டுகளையும் புளுகுமூட்டைகளையும் எதிர்கொள்ள உதவும் முக்கியமான புத்தகங்கள்.
என் இலக்கிய வாசிப்பு குறித்துப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன்--500 புத்தகங்களுக்கு மேல் அது வளரும் என்பதால்.
.இவையெல்லாம்தான் என் புத்தகங்கள்.இவற்றை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டுதான் என் அன்றாடம் நகர்கிறது.இன்னும் கூட வாசிக்காத பல புத்தகங்கள் என் அலமாரிகளில் இருக்கின்றன.வாழ்வு முடிவதற்குள் நம்மிடம் இருக்கும் புத்தகங்களையாவது நாம் வாசித்து முடிப்போமா என்கிற சந்தேகம் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.என்றாலும் வாசிக்காமல் முடியாது.வாசித்தாலும் தீராது.
இப்படிச் சொல்ல உங்களுக்கும் நிறையவே இருக்கும்

No comments:
Post a Comment