திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Friday, June 2, 2017

ஒற்றைக்கலாச்சார தாக்குதலை உறுதியுடன் எதிர்த்தவர் கவிக்கோ!

தமுஎகச மாநிலக்குழு இன் இடுகையை Sundara Kannan பகிர்ந்துள்ளார்.
தமுஎகச மாநிலக்குழு

ஒற்றைக்கலாச்சார தாக்குதலை
உறுதியுடன் எதிர்த்தவர் கவிக்கோ!
தமுஎகச புகழஞ்சலி
தமிழ்க் கவிதையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை நிறுவிக்கொண்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான், இலக்கியத்தோடு நின்றுவிடாமல், சமூக வெளியில் பன்முகப் பண்பாட்டுத் தளத்திற்கு எதிரான தாக்குதல்களை உறுதியாக எதிர்த்துப் போராடியவர்,” என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
கவிக்கோ என்று கவிதை அன்பர்களால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அப்துல் ரகுமான் (70) வெள்ளியன்று (ஜூன் 2) காலை சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
‘வானம்பாடிகள்’ கவிதை இயக்கக் காலகட்டத்தில்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கினார். குறிப்பாகப் புதுக்கவிதை வடிவம், அதிலும் குறிப்பாகக் குறியீடுகள், உவமைகள், உருவகங்கள், படிமங்கள் வழியாகக் கவிதைக் கருத்துகளைக் கொண்டு சென்ற முன்னோடிகளில் ஒருவராகத் தடம் பதித்தார். இதில் அவரது முதல் புத்தகமான ‘பால்வீதி’ கவிதைத் தொகுதி ஒரு சோதனை ஆக்கமாக, கவி நேயர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கியது. அதே வேளையில், அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது மரபுத் தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும்தான். இலக்கணக் கட்டுகளை மீறிய அவரது கவிதைப் படைப்புகளுக்கு இலக்கண அறிவே அடிப்படையாக அமைந்தது எனலாம்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற அவர், தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி கவி வடிவங்கள் வேர்கொண்டதிலும் ஒரு சிறப்பான பங்கு வகித்தார். சிலேடை வரிகளால் கவியரங்க மேடைகளுக்கு மக்களை ஈர்த்தார். இலக்கிய வடிவங்கள் மட்டுமல்லாமல், சமூக அக்கறை கொண்ட கருத்துகளையும் தம் படைப்புகளால் பரிமாரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேயர் விருப்பம், பித்தன், மின்மினிகளால் ஒரு கடிதம், பறவையின் பாதை உள்ளிட்ட கவிதை நூல்கள் அவரிடமிருந்து தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்தன. ‘ஆலாபனை’ என்ற கவிதை நூலுக்காக அவரை சாகித்ய் அகடமி விருது சென்றடைந்தது. தாகூரின் ‘சித்ரா’ கவிதை நூலைத் தமிழில் தந்தார். கவிதைகள் மட்டுமல்லாமல் எம்மொழி செம்மொழி, கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை, மரணம் முற்றுப்புள்ளி அல்ல என்பன உள்ளிட்ட பல கட்டுரை நூல்களும் அவரது கொடையாக உள்ளன.
மதுரையில் பிறந்து, படித்து வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து பேராசிரியராக வளர்ந்த அவர் பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறி தமது இலக்கியப் பணிகளை ஓய்வின்றித் தொடர்ந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துடன் இணக்கமான உறவு கொண்டிருந்த கவிக்கோ, மதுரையில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்துடன் இணைந்து தமுஎகச நடத்திய 10 நாள் சங்க் இலக்கியப் பயிலரங்கில் ஒரு ஆசிரியராகப் பங்கேற்றார். இராக் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த மனிதக்கொலைப் போரை எதிர்த்து சென்னையில் நடத்திய கவியரங்கில் கலந்துகொண்டு எழுச்சியூட்டும் கவிதையை அளித்தார்.
மதுரை நகரில் தமுஎகச 40ம் ஆண்டுவிழா சிறப்பு மாநாட்டில் பங்கேற்று, மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்று சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பன்முகப் பண்பாட்டுத் தளத்தின் மீது தொடுக்கப்படும் வன்மம் மிக்க ஒற்றைக் கலாச்சாரத் தாக்குதலை உறுதியோடு எதிர்த்து நின்றார்.
இத்தகைய பணிகள் மிகவும் தேவைப்படுகிற இன்றைய சூழலில் அவரது மறைவு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக வந்துள்ளது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவரது இலக்கிய அன்பர்களுக்கும் தமுஎகச சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.