திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Saturday, April 23, 2011

சிஐடியு, ஏஐடியுசி : மேதினச் சூளுரை

-
தமிழ்நாட்டில் மே தினத்தை சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டாட முடிவு செய்துள்ளன. மே தினத்தை சென்னை நகரிலும் மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் ஊர்வலங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் இரண்டு சங்கங்களின் சார்பில் பங்கேற்கும் தலைவர்கள் பட்டியல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள மேதினச் சூளுரை வருமாறு:

கடுமையான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியில் உலகம் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் சரியாகிவிடும் என்று சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்த்துப் போயின. சரிந்து விழும் நிறுவனங்களை காப்பாற்ற அமெரிக்க அரசும் இதர ஏகாதி பத்திய நாடுகளின் அரசாங்கங்களும் எடுத்த நடவடிக்கைகள் வெற்றிபெற வில்லை.

நெருக்கடி நோயின் மூலகாரணமே முதலாளித்துவ முறைமைதான். அதையே மருந்தாகக் கொடுத்தால், நோய் தீருவது எவ்வாறு சாத்தியம்?

உலகம் முழுவதும் 30 கோடிப்பேர் வேலையிழந்து விட்டனர். பிரிட்டனில் பள்ளிக்கூடத்துக்கு வரும் குழந்தை களில் மூன்றில் ஒருவர் பட்டினியாக வரு வதாகவும், வளர்ச்சிக்கு ஏற்ப காலணி களைப் புதிதாக வாங்க முடியாமல், சிறி தாகிவிட்ட காலணிகளில் கால்களை நுழைப்பதால் புண்ணாகிக் கிடப்பதாக வும், பிரிட்டனின் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

வளர்முக நாடுகளின் மக்களை தள்ளி யது மட்டுமல்ல; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் அவலநிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது.

தென்அமெரிக்க மக்கள் வாக்குச்சீட் டைப் பயன்படுத்தி, அராஜக ஆட்சி களைத் தூக்கி எறிந்ததை முந்தைய ஆண்டுகளில் பார்த்தோம். கடந்த ஆண்டில் அரபு உலகம் தீப்பற்றி எரிந்து கொண்டுள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாய்ச்சேர்ந்து நின்று வீதிகளில் இறங்கிப்போராடுகின்றனர். அவிழ்த்து விடப்படும் அனைத்து அடக்குமுறை களையும் எதிர்த்து நிற்கிறார்கள். டுனீ ஷியாவில் முதலில் எடுத்த போராட்டம் அரசுப்பொறுப்பில் இருந்தவர்களை அகற்றியது. பின்னர் எகிப்தில் 30 ஆண்டு களாகக் கொடூர ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடித்து வைக்கப் பட்டது. லிபியாவின் சர்வாதிகாரியான கடாபியை எதிர்த்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. யேமன், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுக ளிலும் தெருக்கிளர்ச்சிகள் நடக்கின்றன.

தமது பொம்மைகளாக இருந்த சர் வாதிகாரிகள் மக்களின் சுனாமி எழுச்சி யில் காணாமல் போன நிலையில், புதிய பொம்மைகளை நுழைக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிரமாக முயன்று வரு கிறது. இதற்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தருவது போல பச்சையாக நடித்து வருகிறது.

அத்தனை அதிகாரங்களையும் தனக் குள்ளேயே முடக்கிவைத்துக்கொள்வதா லும், ஜனநாயக சக்திகளை அடக்கு முறைகளால் ஒடுக்கி வைப்பதாலும், லஞ்ச ஊழல்களால் பெரும் செல்வத் தைக் குவித்து சேமித்து வைத்துக் கொள் வதாலும் ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள யாராலும் முடியாது என இந்தக் கிளர்ச்சிகள் மெய்ப்பித்து விட்டன.

ஒரு மாதத்திற்கு மேலாக பிரான்ஸை நிலைகுலையச்செய்த பிரெஞ்ச் தொழி லாளர் வேலைநிறுத்தம், ஓய்வூதியம் கோரி நடந்தது. ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா, கிரீஸ், போர்ச் சுக்கல், ஜெர்மனி, தென்கொரியா என அடுக்கடுக்காக வேலையின்மை, சம்ப ளம், வாழ்க்கை மேம்பாடு கோரி தொழி லாளர்கள் போராடினர். உலகத்தொழிற் சங்க சம்மேளனத்தின் 16வது மாநாடு ஏப்ரல் 6 முதல் 10வரை ஏதென்ஸில் நடைபெற்றது. 106நாடுகளிலிருந்து 881 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அளவில் தொழிலாளர் போராட்டமும், தொழிற்சங்க ஒற்றுமையும் அதிகரித்து வருகின்றன.

நம் பாரத தேசத்தில், இந்த ஆண் டுக்கு, ஊழல் ஆண்டு எனப் பெயர் சூட்டி விடலாம் என எண்ணும் வகையில் சிக ரத்தை தொட்ட ஊழல்கள் நடந்துள்ளன.

ஊழல் தடுப்பு ஆணையராக, ஊழல் செய்த பி.ஜே.தாமஸ் என்பவரை அரசு நிய மித்தது. உண்மை வெளிப்பட்டபின்பும், அவர் வெளியேறவில்லை ; கடைசியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுத்தான் அவர் பதவி பறிக்கப்பட்டது. கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை, அமைச்சர்களும், அதிகாரி களும், ராணுவ உயர் அதிகாரிகளும் சேர்த்து ஆக்கிரமித்துக்கொண்ட கொடு மையும் உச்சநீதிமன்றத் தலையீட்டா லேயே நடவடிக்கைக்கு ஆளானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற் பனையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல், அதை மறைக்க அமைச்சர்கள் பேசிய பேச்சுக்கள், அமைச்சர்களை நியமிப்பதில் இடைத்தரகர்களின் ஆதிக் கம் குறித்து வெளியான ஒலிநாடாக்கள், மத்தியஅமைச்சர் ஆ.ராசா வீட்டில் சோத னை, அவரது ராஜினாமா, கைது, சிறை யில் அடைத்தது. தமிழ்நாட்டில் முதல்வர் குடும்பத்தினரே மத்திய புலனாய்வுத் துறையால் விசாரணைக்கு ஆளானது, அவர்களது தொலைக்காட்சி நிறுவனம் சோதனைசெய்யப்பட்டது என பல அத்தி யாயங்கள் கொண்டதாக விரிந்து கொண்டே போகிறது.

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்ப பெற்றபின்பு, தனது ஆட்சியை நிலைக்கச் செய்ய கோடி கோடியாய் காங்கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங் களும் வெளியாகி இருக்கின்றன.

“இந்த நாட்டில் என்னதான் நடந்து கொண்டு இருக்கிறது” என்று உச்சநீதி மன்றமே திகைத்துக்கேட்கும் அளவுக்கு மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணி அரசும், அதற்குத்தலைமை ஏற்கும் காங் கிரஸ் கட்சியும் நாட்டை தரம் தாழ்த்தி இழுத்துக்கொண்டு சென்றன.

அதேநேரத்தில் மகளிர் 33சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற் றப்படவில்லை. உணவுப்பாதுகாப்பு மசோதாவைப் பற்றி ஏராளமாக விவாதித் தும் கூட, இதுவரை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தக்கூட இல்லை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. அடுத்தமாதம் சரியாகிவிடும் என்று அலுக்காமல் பொய் சொல்கிறது அரசாங்கம். பதுக்கல்காரர்களும், கள்ளச் சந்தையினரும் பகிரங்கமாகத் திரிகின்ற னர். வெங்காயவிலை 100 ரூபாயை தாண் டியபோது, ஒரு பதுக்கல்காரனைக்கூட இந்த அரசால் கைதுசெய்ய முடியவில் லை. அவ்வளவு பலவீனமாக இந்திய அரசுஇருக்கிறது.

அதே நேரத்தில் பன்னாட்டு கார்ப் பரேட் நிறுவனங்களுக்கும், உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் எண்ணிலடங் காத சலுகைகளை வாரி வழங்கி வருகி றது. ஆனால் ஏழை மக்களின் அவலங் களை நோக்கிக் கண்ணைத் திருப்ப மறுக்கிறது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோ தக்கொள்கைகளைக் கண்டித்து, ஐஎன் டியுசி உள்ளிட்ட இந்திய தொழிற்சங்கங் கள் இணைந்து போராடி வருகின்றன. இந்தியத் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கைகளை இந்த ஒற்றுமை தோற்று விக்கிறது. செப்டம்பர் 7ல் நடந்த வேலை நிறுத்தம் இந்தியாவில் மிகப்பெரிய வேலைநிறுத்தமாகும். மார்ச் 5ல் சிறை நிரப்பும் போராட்டத்தில்10லட்சம் தொழி லாளர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதன் முடிவு தெரிய ஒருமாதக்காலம் காத்தி ருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஓர் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை தந்து, எதிர்த்தரப்பினரை ஆள் பலம் கொண்டு அச்சுறுத்தி, அதிகாரி களைத் தனது விருப்பத்திற்கேற்ப வளைத்து கடந்த ஆண்டுகளில் இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற் றது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக் கும் இந்த நடைமுறைக்கு திருமங்கலம் பார்முலா என்று ஊடகங்கள் பெயர் வைத்தன. இந்தப் பொதுத்தேர்தலில் ஊழல் நடைமுறைகளை எதிர்த்து மக்கள் அணிதிரண்டுள்ளனர்.

இந்த பொதுத்தேர்தலிலும் அவ்வாறே நடத்த எத்தனித்ததை,தேர்தல் ஆணை யம் எதிர்த்து நின்றது பாராட்டுக்கு உரிய அம்சமாகும். முன்பு போல பணப்பரிவர்த் தனைகளை பகிரங்கமாக நடத்தமுடியா மல் ஆணையம் தடுத்தது. ஆனாலும் ரக சியமாக “ஓட்டுக்கு துட்டு” தரப்பட்டது. பல கோடி ரூபாய்களை ஆணையம் கைப்பற்றியது. அது ஒரு சிறிய பகுதியே. எனினும் “ஆட்சி கையில் இருந்தால் எதையும் செய்யலாம்; அதை தடுத்து நிறுத்துவதற்கு வழியே இல்லை” என்று ஏங்கி கிடந்த மக்களுக்கு, ஆணையத் தின் நடவடிக்கையால், ஜனநாயகத்தின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை காணாத அளவுக்குத் திரண்டு வந்து வாக்களித்தது இதனை நிரூபிக் கிறது.

தமிழகத்தில் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குஅதிக சலுகைகள் கொடுத்து கதவை திறந்துவிட்டது மாநில அரசு. அதே நேரத்தில் நடுத்தர, சிறு,குறு தொழில்கள் அழிக்கப்பட்டன. வரலாறு காணாத மின்வெட்டு, தொழில்களை நாசப்படுத்திவிட்டது. பாரம்பரியத் தொழில்களான கைத்தறி, பீடி, கயிறு தயா ரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நலிந்து, அதில் பணிபுரிந்தோர் நடுவீதிக்குத் தள் ளப்பட்டனர். நிரந்தரத்தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, எங்கும், எதிலும், ஒப்பந்தத் தொழிலாளர் முறை கொண்டுவரப்பட்டுவிட்டது.

தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான சட்டம், சுமங்கலித் திட்டம் என்ற நவீன பஞ்சாலைக்கொத்தடிமை முறைக்கு தீர்வு, ஒப்பந்தக்கூலிமுறை ஒழிப்பு, தொழிலாளர் சட்டங்களை அமலாக்கு தல், சமவேலைக்கு சம ஊதியம், குறைந் தபட்ச ஊதியத்தை அதிகரித்து கறாராக அமல் செய்தல், அமைப்புசாரா வாரியங் களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக் குத்தீர்வு, நல உதவிகளை அதிகரித்தல் என தமிழகத்தொழிற்சங்க இயக்கம் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற் றாமலேயே தனது ஆட்சியை முடித்து விட்டது தற்போதைய அரசு. புதிய அரசு இவற்றை நிறைவேற்ற வேண்டும். முடக்கி வைக்கப்பட்டு, செயலிழந்து விட்ட தொழிலாளர் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடின் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் தீவிரப்படும்.

ஐந்து மையமான கோரிக்கைகளை முன்வைத்து ஐஎன்டியுசி உட்பட இந்தி யாவின் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடத்தும் இயக்கம் மேலும் வலுப் பெற வேண்டும். இந்த ஒற்றுமையை மேலும் முயன்று கட்ட வேண்டும். தொடர்ந்து வரும் கூட்டு இயக்கங்களை அதிக சக்தியுடன் நடத்தவேண்டும். ஏதுமற்றவர்களாய் இருந்த தொழிலாளி வர்க்கம், போராடிப் போராடித்தான் புதிய உரிமைகளை வென்றெடுத்தது. தொழி லாளி வர்க்கத்திற்கு போராடுவதைத் தவிர உத்தரவாதமான வேறு வழிகள் இல்லை.

இந்த உரிமைப்போரில் உலகம் முழு வதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது உயிரை இழந்துள்ளனர். பல லட்சக் கணக்கானவர்கள் தமது உடமைகளை இழந்தனர். அவர்களின் மாபெரும் தியா கங்களைப் பெருமையோடு நினைவு கூர்ந்து, அந்தப்போராளிகளின் வாரிசுக ளாகப் புதிய போராட்டங்களை முன்னெ டுக்க இந்த மே நன்னானில் உறுதி யேற்போம்.
தீக்கதிர்

Thursday, February 3, 2011

(கோவிந்தசாமி) துரோகசாமி

நீ குடித்து முடித்த
டீ கிளாசை
இரு கையாலும்
ஏந்திக் கொண்ட தோழன்

உன் நாற்காலிக்காக
தன் நரம்புகளை
பின்னக் கொடுத்த தோழன்...

பட்டினி கிடந்தாலும்
உன் பசியாற்றி,
பயணப்படியோடு
வழியனுப்பிய தோழன்

உலகைக் குலுக்கும்
செங்கொடி உயர்த்தி,
உண்டியல் குலுக்கி உனை
வேட்பாளராக்கிய தோழன்....

கோடிகளை சுருட்டும்
கோமான்களை எதிர்க்க
உன்னை கோட்டைக்கு
அனுப்பிய தோழன்

எல்லாம் மறந்த
என் முன்னாள் தோழா!

முதலாளித்துவத்திற்கு
பரிவட்டம் கட்டி
பல்லக்கு தூக்க
முதுகு காட்டிவிட்டாய்!

இட்ட பெயர் உனக்கு
எதுவாகவும் இருக்கலாம்!

தொழிலாள் வர்க்கத்திற்கு
துரோகம் இழைத்த உன்னை
வரலாறு பதிவு செய்யும்
“துரோகசாமி”
என்றே!


-க.பாலபாரதி (நன்றி-தீக்கதிர்)

பார்த்த படங்கள் சில

நவம்பர் மாத இறுதியிலிருந்து டிசம்பர் இறுதி வரை வெளிவந்துள்ள படங்களின் எண்ணிக்கை மலைப்பூட்டுகிறது.நந்தலாலா,மந்திரப்புன்னகை,சிக்கு புக்கு,மகிழ்ச்சி,அரிது அரிது,சித்து +2,அதிசய மணல் மாதா,கோட்டி,நெல்லு,ஈசன்,மன்மதன் அம்பு,தென்மேற்குப் பருவக்காற்று,விருதகிரி, அய்யனார்,நில் கவனி செல்லாதே,ரத்த சரித்திரம்,காந்திபுரம்,ஆட்டநாயகன்,சுட்டி சாத்தான் 3-டி,சிந்தாமணி கொலை வழக்கு என்று பட்டியல் நீளுகிறது.பாபா சாகிப் அம்பேத்கர் தமிழ்ப்பதிப்பும் இம்மாதமே வெளிவந்தது.20க்கு மேற்பட்ட படங்கள் டிசம்பரில் வெளியானதில் படத்தயாரிப்பாளர்களின் அச்சமிகுந்த உளவியல்தான் வெளிப்படுகிறது.தீபாவளிக்கு நாலே படங்கள்தாம் வந்தன.தீபாவளிப்படங்களோடு போட்டி போட முடியுமா என்கிற பயமும் பொங்கல் படங்கள் வந்து சேருவதற்கு முந்தி விடுவோமே என்கிற அவசரமும் சேர்ந்துதான் இந்தக் கொடுமை.ஏகபோகமாகி வரும் தமிழ்த் திரைப்படத்துறை சந்திக்கும் நெருக்கடிகளில் இதுவும் ஒன்று.

மாதம் 25 படம் வெளியானால் தமிழ் ரசிகன் என்ன ஆவான்? பத்திரிகைகளில் சினிமா விமர்சனம் எழுதுகிறவர்களும் எல்லாப்படங்களையும் பார்த்து ஒரு கணிப்புக்கு வருவதும் மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாகும்.எழுதும் தகுதியும் இந்த எல்லாப்படங்களுக்கும் இருப்பதுமில்லை.இந்த நீண்ட பட்டியலில் குறிப்பிட்டுப் பேசத்தக்க படமாக நந்தலாலா மட்டுமே நிற்கிறது.வேறு சில காரணங்களுக்காக சில படங்கள் பற்றி மட்டும் இங்கே பேசலாம்.

மன்மதன் அம்பு


உலகநாயகன் என்று போற்றப்படும் கமலஹாசன் கதை,திரைக்கதை வசனம் எழுதிக் கதாநாயகனாக நடித்துள்ள படம் மன்மதன் அம்பு.உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு.ஆகவே கலைஞர் டிவி ஆதரவுள்ள படம். 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட (ஸ்மால் பட்ஜெட் !) படம்தான்.கமல் எப்போதும் ஒரு சீரியஸ் படம் கொடுத்தால் அடுத்து ஒரு காமெடி படம் கொடுப்பார்.அந்த விதி பிசகாமல் உன்னைப்போல் ஒருவனுக்குப் பிறகு வந்துள்ள படம் இது.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம் என்பதால் கமலும் அவரும் இணைந்து கொடுத்த அவ்வை சண்முகி,பம்மல் கே.சம்பந்தம்,பஞ்ச தந்திரம் ,தெனாலி போல வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு படத்தை எதிர்பார்த்து (நல்லா சிரிச்சு ரொம்ப நாளாச்சய்யா) கமல் ரசிகர்கள் காத்திருக்க,மன்மதன் அம்பு அதை நோக்கிப் பாயவில்லை. ஏமாற்றம்தான்.

மன்மதனின் அம்பு முதலில் தப்பிப் பாய்ந்து விடுகிறது.கடைசியில் சரியாகக் கதாநாயகனின் மீதே பாய்ந்து படம் முடிகிறது.கதை அவ்வளவுதான்.த்ரிஷா நடிகையாக நடித்துள்ளார்.அவரை வெறிகொண்டு காதலிக்கும் தொழிலதிபராக மாதவன்.சந்தேகப்பிராணியான அவரிடம் சண்டை போட்டு மனநிம்மதி தேடி ஐரோப்பியச் சுற்றுப்பயணம் செல்லும் த்ரிஷாவைப் பின் தொடர்ந்து அவர் வேறு ஆண்களோடு பழகுகிறாரா என்பதைக் கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்ப மாதவன் அனுப்பிய டிடெக்டிவ் (துப்பறிபவர்) ஆக மேஜர் மன்னார் வேடத்தில் கமல்.கடைசியில் த்ரிஷா மாதவனைக் கைகழுவி விட்டு கமலைக் கைப்பிடிக்கிறார்.இந்தக்கதைக்காக கேமராவைத்தூக்கிக்கொண்டு ஐரோப்பா பூராவும் சுத்திச் சுத்திப் படம் எடுத்திருக்கிறார்கள்.2 கோடி ரூபாயில் மைனா,களவாணி மாதிரி படங்கள் வந்து தமிழ் நாட்டைக் கலக்கிக்கொண்டிருக்கும் உண்மையை இவர்கள் எப்போதும் கவனிப்பதே இல்லை.

படத்தில் கமல் ரொம்ப வயசாகி அலுத்துப்போனவர் மாதிரி வருகிறார்.ரிடையர்டு மேஜர் என்றால் அப்படி இருப்பது சரிதான்.ஆனால் த்ரிஷா மாதிரி சின்னப்பிள்ளைக்கு ஜோடி என்னும் போது பொருந்தவில்லை.நல்ல வேளையாக படத்தில் டூயட் பாட்டெல்லாம் போட்டு நம்மைக் கொல்லவில்லை.குத்துப்பாட்டு ,சண்டை போன்ற கூத்துகளும் இல்லை.திரைக்கதை இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் வழக்கமாக கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் காணப்படும் வர்த்தக வேகம் இப்படத்தில் இல்லாமல் இழுவையாகப் போய்க்கொண்டே இருக்கிறது.இறுதிக்காட்சி சுத்த சொதப்பல்.உலகநாயகன் படம் என்பதால் அவரே படம் முழுக்க தலையைக் காட்டிக்கொண்டிராமல் மாதவன் த்ரிஷாவுக்கு முக்கிய இடம் கொடுத்திருப்பதைப் பாராட்டலாம்தான்.ஆனால் படம் இதோ வேகமெடுக்கப் போகிறது வேகமெடுக்கப்போகிறது என்று 152 நிமிடமும் ஆவலோடு காத்திருந்து அலுப்போடு எழுந்து வரவேண்டியதாயிற்று.

இப்படத்தில் அறிமுகமாகியுள்ள இரண்டு இளைஞர்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியுள்ள மனுஷ் நந்தன் (ஞாநி-பத்மா இவர்களின் புதல்வர் இவர் என்பது ஒரு தகவல்) சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். படத்தொகுப்புச் செய்துள்ள ஷான் முகம்மது வரவேற்கப்படவேண்டிய இளைஞர்.கப்பல் காட்சிகளில் மனுஷ் நந்தனின் கேமரா நம்மை அங்கேயே கொண்டு நிறுத்துகிறது.நீல வானம் பாடல் காட்சி படமக்கப்பட்டுள்ள விதம் தமிழ் சினிமாவுக்குப் புதிது.கே.எஸ்.ரவிக்குமார் தன் வழக்கமான பாதையிலிருந்து விலகியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனாலும் இந்தக்கதைக்காக 50 கோடி செலவழிப்பது என்ன நியாயம் என்று நமக்குப் புரியவில்லை. ரொம்ப சுமாரான படம்.

விருதகிரி

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் புரட்சிக்கலைஞர் விஜய்காந்த் இயக்கியுள்ள முதல் படம்.அவர் நடித்து வெளிவரும் 153ஆவது படம்.2011 சட்டமன்றத்தேர்தலை மனதிற்கொண்டு தன்னுடைய விருத்தாச்சலம் தொகுதியில் புகழ்பெற்ற சாமி பெயரான விருதகிரீஷ்வரர் பெயரைச் சுருக்கிப் படத்துக்கு விருதகிரி என்று பெயர் வைத்துள்ளார்.விஜய்காந்த் என்றாலே திறமை மிக்க பொறுப்புள்ள ஒரு போலீஸ் அதிகாரி என்பது தமிழ்நாட்டில் பேசத்தெரியாத பச்சைப்பிள்ளைக்குக் கூடத் தெரியும்.ஆனால் போலீசிலேயே உயர்ந்த போலீஸ்கள் வாழும் ஸ்காட்லாண்ட் யார்டுக்குத் தெரியுமா?அங்கே பயிற்சிக்குப் போன இடத்தில் ஸ்காட்லாண்ட் நகரில் ஊடுறுவும் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியாமல் ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் திணறிக்கொண்டிருக்க நம்ம பொறுப்புள்ள போலீஸ் அதிகாரி விஜய்காந்த் நுழைந்து தீவிரவாதிகளை துவம்சம் செய்து பிடித்துக் கொடுக்கிறார்.ஸ்காட்லாண்ட் யார்டே வியந்து தன்னை மறந்து மெய்சிலிர்த்து நிற்கிறது.இப்படி ஒரு போலீஸ் அதிகாரியா? ( எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிச்சுக் கதை எழுதியிருக்காங்க என்று நமக்குப் புல்லரிக்கிறது)கட். அடுத்த காட்சி இந்தியா.பத்திரிகையாளர்கள் அவரை மொய்த்து விடுகிறார்கள்.25 மைக்குகளுக்கு முன்னால் கையைக் கையை ஆட்டி விஜய்காந்த் பேசும் அதே அரசியல் மேடை பாணியில் பிரஸ்மீட்டிலும் முழங்குகிறார்.படம் முழுக்கவே இதே கையை ஆட்டிப் பேசும் வசனம் மட்டும்தான் அவருக்கு-அரசியல் படமாச்சே.ஒரு அரசாங்க அதிகாரியாக இருக்கும்போதே இவ்வளவு நல்லது செய்றீங்களே இந்த அரசாங்கமே உங்க கட்டுப்பாட்டுக்குள்ளே வந்துட்டா எப்படி இருக்கும் என்று திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப யாராவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.யாரும் சொல்லவில்லையென்றால் விஜய்காந்த்தே இந்த வசனத்தைச் சொல்லி விடுகிறார்.படத்தின் ஒரே செய்தியும் அதுதான்.படத்தில் கதை என்றும் ஒன்று சொல்கிறார்கள்.தேசிய திராவிடக்கட்சி என்பதால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி விஜய்காந்த் மிகவும் கவலைப்பட்டுள்ளார்.அது ஒரு தேசியப் பிரச்னை அல்லவா? அடுத்த விமானத்தில் ஏறி விஜய்காந்த் ஆஸ்திரேலியா செல்கிறார்.அப்புறமென்ன? அங்குள்ள இந்திய எதிரிகளைத் துவம்சம் செய்து மாணவிகளைக் காப்பாற்றி நாடு திரும்புகிறார்.

நமக்கு வடிவேலு காமெடிக்காட்சி ஒன்றில் வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. “இன்னுமாடா நம்ம சனங்க நாம சொல்றதையெல்லாம் நம்புறாங்க..?..” ஆனால் தேமுதிக கட்சியின் அரசியல் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அதே ’தெளிவு’ இப்படத்திலும் இருக்கிறது.கலைஞர் குடும்ப அரசியல் மற்றும் திமுக ஆட்சி மீதான சில்லறை விமர்சனங்களை பன்ச் டயலாக்காகப் பேசுவதே அரசியல் என்று நம்பிப் படத்தை எடுத்திருக்கிறார் விஜய்காந்த்.முந்தைய படங்களைவிட இதில் பெருத்த உடலுடன் வசனம் பேசினால் மூச்சிறைக்கும் உடல் மொழியுடன் சிரமப்பட்டுச் சிரமப்படுத்தியிருக்கிறார் விஜய்காந்த். பல பத்திரிகைகளில் விஜய்காந்த் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் படம் இது என்று எழுதியிருந்தார்கள்.ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் விஜய்காந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களைத் தவிர வேற மனுச மக்க யாரும் உட்கார்ந்து பார்க்க முடியாத படம் இது.இதை வச்சிக்கிட்டு 2011 இல் ஆட்சியைப்பிடித்து விடலாம் என்று சீரியஸ்ஸாக நம்புகிறார்கள் என்பதுதான் படத்தைவிடப் பெரிய நகைச்சுவை.படத்தின் ஒரே ஆறுதல் வழக்கம்போல் தனக்கு ஒரு ஜோடியைப்போட்டு மழையில் நனைய நனைய ஒரு டூயட் பாடலை சேர்க்காமல் விட்ட பெருந்தன்மைதான்.

ஈசன்

சுப்பிரமணியபுரம்,நாடோடிகள் போன்ற வெற்றிப்படங்களைத் தந்த எம்.சசிகுமார்,சமுத்திரக்கனி கூட்டணியில் வந்துள்ள ஈசன் முந்தைய படங்களைப்போல நம்மைக் கட்டிப்போட்டு வைக்க முடியாமல் தொய்ந்து தொங்குகிறது.வழக்கமான பழிவாங்கும் கதைதான்.மாறுதலாக கொலையாளி ஒரு ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதெல்லாம் படிக்கிற மாணவ மனங்களில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்கிற அச்சம் நமக்கு வருகிறது.மீண்டும் மீண்டும் சலிப்பூட்டும் அளவுக்குக் காட்டப்படும் பப் மற்றும் டிஸ்கொதே கிளப் ஆட்டங்களும் ஒளிக்கற்றைகளும்(கண்ணு வலிக்கு சாமிகளா) சென்னை நகரின் இரவு வாழ்க்கையைச் சொல்கிறார்கள் என்று புரிய வைக்கின்றன.ஆனாலும் வீடற்ற பிளாட்பார வாசிகளான மக்களின் இரவுகள்தான் உண்மையான சென்னை இரவு வாழ்க்கை என்பதை யாராவது எப்போதாவது சொல்வார்களா என்கிற ஏக்கம் மீண்டும் நமக்கு வருகிறது.அங்காடித்தெருவில் சில காட்சிகள் வந்தது நினைவுக்கு வருகிறது.

ஒருவித சஸ்பென்ஸ் படம் முழுக்க நிரவியிருப்பது பாராட்டத்தக்கது என்றாலும் நீளமான ப்ளாஷ்பேக் வந்து படத்தை பெரும் இழுவையாக மாற்றியிருகிறது.முற்பகுதியில் ஈவ் டீசிங்கில் பலியாகும் மாணவியைக் காட்டி வித்தியாசமாக ஏதோ சொல்லப்போகிறார் சசிகுமார் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உடனே ஏமாற்றி விடுகிறார்.

எம்.சசிகுமார் என்றாலே த்ரில்-வெட்டு,குத்து,தூக்கிருவம்டா என்று அடையாளப்படும் அளவுக்கு கொலைகாரப்படமாகவே தந்துகொண்டிருக்கிறார். பொதுவாக கிராம வாழ்க்கையை முன்வைத்து வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்கள் அப்படியே சினிமாத்துறை தனக்குப் பட்டிக்காட்டு முத்திரை குத்திவிடக்கூடாதே என்கிற பதட்டத்தில் அடுத்த படத்தில் பயங்கர மாநகர வாழ்க்கையை முன்வைத்துப் படம் பண்ணிவிடுவது தமிழ்ச்சினிமா உலகில் பாரதிராஜா காலம் தொட்டு நான் மகான் அல்ல சுசீந்திரன் வரை நடந்து வருகிற ஒன்றுதான்.அதே பாட்டையில் எம்.சசிகுமாரும் ஒரு படம் பண்ணி விட்டார் அவ்வளவுதான்.வாழ்க்கையின் மீது ஒரு பயமும் அவநம்பிக்கையும் உண்டாக்கும் படம் ஈசன்.

நந்தலாலா


ஆழமான வாழ்வனுபவத்தைத் திரையில் கொண்டுவந்து நம்மைத் திக்குமுக்காடச்செய்திருக்கும் படம் நந்தலாலா.ஜப்பானியப்படமான கிக்குஜிரோவிலிருந்து உந்துதல் பெற்று (சில காட்சிகள் கூட அதே பணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது) எடுக்கப்பட்ட படம் என்கிற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும் அதெல்லாம் இந்தப்படம் கொடுக்கும் அனுபவத்தின் முன்னால் கால்தூசு பெறாத விமர்சனமாகிப் போகிறது.மிஷ்கின், அஷ்வத்ராம் , இளையராஜாவின் இசை ஆகிய மூவர் கூட்டணியில் மகேஷ் முத்துச்சாமியின் கேமிராவின் உதவியோடு இப்படம் நம்மை ஏதேதோ உயரங்களுக்கு அழைத்துச்செல்கிறது.மனநிலைப் பிறழ்வுக்காளாகி மனநலச் சிறைக்கூடத்திலிருந்து தப்பிய ஒருவரும் எட்டு வயதுப் பள்ளி மாணவன் ஒருவனும் தத்தமது தாயைத் தேடிச் செல்வதுதான் கதை.தாயைத்தேடிய பயணம் என்கிற தத்துவவிசாரம் அழகான காட்சிகளோடு நம் கண்முன்னே விரிகிறது.இது யதார்த்த சினிமாவா வர்த்தக சினிமாவா என்கிற கேள்விகளெல்லாம் தவிடுபொடியாகிட இது உலக சினிமாவாக உயர்ந்து நிற்கிறது.

அன்பும் கருணையும் வாஞ்சையும் சக மனிதர்கள்பால் அக்கறையும் அற்றுப்போன ஒரு உலகத்தில் பொய்யும் புனைசுருட்டும் துரோகமும் கழுத்தறுப்பும் லஞ்சமும் ஊழமும் பிராடு பித்தலாட்டமும் அன்றாடமாகிப்போன ஒரு உலகத்தில் வாழும் நாம் திரையரங்கில் பார்வையாளர்களாக உட்கார்ந்திருக்க இது பற்றியெல்லாம் ஏதுமறியாத கள்ளம் கபடில்லாத இரண்டு பச்சை உள்ளங்கள் காட்சிரூபமாக நம் முன்னே திரையில் நடந்துகொண்டே இருக்கிறார்கள் .பரந்து விரிந்த இயற்கையின் ஊடே ஆளரவம் அதிகமில்லாத நெடுஞ்சாலையில் அவர்கள் நடந்துகொண்டே இருக்க நாம் நமக்குள்ளே ஒரு பயணத்தைத் துவங்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.ஒரு கலைப்படைப்பு இதைத்தானே செய்ய வேண்டும்.

நிறுவனமாகிவிட்ட குடும்ப மற்று சமூக அமைப்புசார் மனிதர்களெல்லாம் இப்படத்தில் மோசமானவர்களாகவும் விளிம்புநிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள்,பாலியல் தொழிலாளி, குறவரின மக்கள் என நம் சமூகம் கீழ்நிலையில் வைத்திருக்கும் மனிதர்கள் எல்லாம் உன்னதமானவர்களாவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.இப்படம் முன்வைக்கும் முக்கியமான அரசியல் இது.மைனா படத்திலும் இதை நாம் பார்த்தோம்.இத்தகைய முன்வைப்புகள் தமிழ் சினிமாவில் எப்போதேனும் நிகழும் அபூர்வமான ஒன்றாகும்.

மனப்பிறழ்வுக்காளான ஒருவரை தமிழ் சினிமா இத்தனை அற்புதமாக இதற்குமுன் காட்டியதில்லை.மிஷ்கின் நம் மனங்களை அலைக்கழித்துவிட்டார். இக்கதாபாத்திரத்தில் நடித்தால் இமேஜ் போய்விடும் என்றஞ்சி கேட்ட நடிகர்களெல்லாம் நடிக்க மறுத்துவிட்டதால் மிஷ்கின் தானே நடிக்க நேர்ந்ததாகக் கூறுகிறார்.தமிழ் சினிமா நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த உருப்படியான காரியம் இப்படத்தில் நடிக்க மறுத்ததுதான்.

அம்மாவைச் சந்திக்கும் கடைசிக்காட்சி எல்லாவிதத்திலும் உச்சம்.இளையராஜாவின் பாடல்தான் அந்த இடத்தில் சற்றுத் தொந்தரவாக அமைகிறது.ரெண்டு வரி மட்டும் பாடி முடித்திருந்தால் இன்னும் கனமாக இருந்திருக்கும்.கடைசி முடிப்பின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

காட்சிகளின் மூலம் பல கேள்விகளை எழுப்பி ஒரு தத்துவ தளத்தில் நுட்பமாக இயங்கியிருக்கும் நந்தலாலா மீண்டும் மீண்டும் பார்த்து(ஒரு புத்தக வாசிப்பைப்போல) கூடி விவாதிக்கத்தக்க அபூர்வமான படம்.பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்.

இப்படம் எடுக்கத் தயாரிப்பாளர் கிடைக்காது பட்ட மிஷ்கின் பட்ட கஷ்டங்களும் எடுத்து முடித்து இரண்டாண்டுகளாக விநியோகஸ்தர் கிடைக்காமல் படம் முடங்கிக் கிடந்ததும் நடிக்க ஆள் கிடைக்காததும் போன்ற உண்மைகளை தமிழ்ச் சினிமா உலகின் அழுகிய வியாதியின் கூறுகளாக நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.ஆகவே தயாரிப்பாளர் ஐங்கரன் இண்டர்நேஷனல் அருண்பாண்டியனுக்கு சிறப்பான பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

(செம்மலருக்காக எழுதியது ச.தமிழ்ச்செல்வன் )