திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Sunday, July 23, 2017

கடவுளை தொழுவதைவிட மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள் புத்தக கண்காட்சியில் நடிகர் சிவக்குமார் பேச்சு



கோயம்புத்தூர், ஜூலை 21-கடவுள்களை தொழுகிற நேரத்தில் மற்றவர்களிடம்அன்பு காட்டினாலே போதுமானது என நடிகர் சிவக்குமார் வாசகர்கள் மத்தியில் உரையாற்றினார்.கோவையில் விஜயா பதிப்பகத்தின் வாசகர் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பங்கேற்று பேசியதாவது, ஒரு நடிகரான எனக்கு இலக்கியவாதி என்றதனித்த அடையாளம் எதுவும்இல்லை. இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று வருவதால் நூல் ஆர்வலர்கள்தான் அப்படிச் சொல்கின்றனர். எனது வாசிப்பு என்பது பெருங்கடலில் சிறு துளியைப் போன்றது. ஆனால்,நான் வாசித்ததை மற்றவர்களுக்குச் சொல்லி வருவதாலோ என்னவோ என்னை இலக்கியவாதி என்று அழைக்கின்றனர். பேராசிரியர் சாலமன் பாப்பையா கம்ப ராமாயணம் பற்றி பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், சில பாடல்களை மனப்பாடம் செய்து பேசினேன். பின்னர், ராமாயணம், மகாபாரதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இருப்பினும் இந்த காப்பியங்களை புரிந்து கொள்வதற்கு அதிக காலம் பிடிக்கும். இந்த புராணக் கதைகள் ஒருகாலத்தில் மிகச் சிறிய கதைகளாக இருந்தன. அடுத்தடுத்து வந்த எழுத்தாளர்கள் இவற்றை பெரும் காப்பியங்களாக்கிவிட்டனர். இவற்றை நான் பேசி வருவதால் கடவுளைக் கும்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. கடவுளைத் தொழுவதற்கு ஒதுக்கும் நேரத்தில், அனைவரிடமும் அன்பு காட்டி, அனைவரையும் சமமாக மதித்து, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த காப்பியங்களில் இருந்து மக்களுக்குஎவையெல்லாம் தேவையோ அவற்றையே நான் பயன்படுத்துகின்றேன். மக்களும் தங்களது வாழ்க்கைக்கு எவை பயன்படுமோ அவற்றை மட்டுமே தேடிப்பிடித்து படிக்க வேண்டும்.பாரதியாரும் இந்த காப்பியங்களை நல்ல கதைகள் என்றும்ஆனால் அவை நமது வாழ்க்கைக்கு உதவக் கூடிய கதைகள்என்றும் கூறியிருக்கிறார்.வடநாட்டு, தென்னாட்டு நூல்களில் ஒழுக்க நெறிகள் குறித்துமுரண்பாடுகள் இருந்தாலும், நமக்குத் தேவையானவற்றை மட்டும் அவற்றில் இருந்து எடுத்துக் கொண்டால் பிரந்சனைகள் எதுவுமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, July 8, 2017

பாய்ச்சல் வேகத்தில் பாசிசம் – செங்கொடி பிடித்து களமிரங்குவோம் – ச.தமிழ்ச்செல்வன்

தீக்கதிர் செய்தி 

கோவை, ஜூலை. 7 –
பாய்ச்சல் வேகத்தில் பாசிசம் தெருமுனைக்கு வந்துவிட்ட நிலையில் அறிவின் அடிப்படையில் பெருவாரியான மக்களை திரட்டி பாசிச சக்திகளை விரட்டியடிக்க வேண்டிய வரலாற்று கடமை கம்யூனிஸ்டுகளின் முன்னால் இருக்கிறது என்று தியாகி முத்து நினைவுதின பொதுக்கூட்டத்தில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.
கோவையில் பஞ்சாலை தொழிலாளியாய் உரிமைக்கான போர்க்களத்தில் பஞ்சாலை முதலாளிகளின் குண்டர்களாள் படுகொலை செய்யப்பட்டார் தியாகி உப்பிலியபாளையம் முத்து. இவரது 64 ஆவது நினைவுதின பொதுக்கூட்டம் கோவை உப்பிலியபாளையம் பூங்கா திடலில் வெள்ளியன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இனைந்து நடத்திய கூட்டத்திற்கு எம்.தங்கவேல் தலைமை தாங்கினார். என்.வாசுதேவன் முன்னிலையில் ஆர்.பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக தமிழ்ச்செல்வன் பேசுகையில், தமிழக அரசு இடைவிடாது டாஸ்மாக் கடைகளை திறந்து கொண்டிருக்கிறது. குடிப்பது என்பது நாகரிகத்தின் அடையாளமாக மாற்றப்படுகிறது. எதிர்த்து குரல் கொடுப்பவர்களை அடக்குகிறது, ஒடுக்குகிறது, தாக்குதல் நடத்துகிறது, வழக்கு போட்டு அச்சுறுத்துகிறது. ஆனால் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என கம்யூனிஸ்டுகள் இடையிராது பாடுபடுகிறோம் தியாகம் செய்கிறோம். குடிகாரர்களை உருவாக்குகிறது ஒரு கட்சி, தியாகிகளை உருவாக்குகிறது இன்னொரு கட்சி. எங்கள் மேடைகளில் தியாகிகளை நாங்கள் போற்றுகிறோம். மறுபுறம் ஓபிஎஸ்,இபிஎஸ் என ஆளுக்கொரு நாடகம் நடத்தியும் தியாகத்தலைவி எப்படி மரணம் அடைந்தார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இயற்கையாக இறந்தாரா செயற்கையாக இறந்தார என்கிற விவாதம் இன்றுவரை நடந்து கொண்டே இருக்கிறது.   இதுதான் மற்ற கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உள்ள அடையாளம்.
இந்தியா பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று நம்பி இந்திய மக்கள் தேசவிரோதிகளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டார்கள். நாட்டின் அடிப்படை என்பது மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிச, குடியரசு என்கிற நான்கு வார்த்தைகளுக்குள் இந்தியா நிற்கிறது. இந்த நான்கு வார்த்தையும் அரசியல் சட்டத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்கிற கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பது மிக அபாகயரமானது. இந்த எச்சரிக்கையை இன்னும் மக்கள் உணரவில்லை. இந்த உணர்த்த வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக் உள்ளது. இன்று நிலவும் சுதந்திரம் நீடிக்குமா என தெரியவில்லை. இவர்கள் வைக்கிற ஒவ்வொரு தப்படியும்  திட்டமிடப்பட்டவை. பத்து அமைப்புகள் பத்துவிதமாக பேசுவார்கள் மக்களை குழப்புவார்கள். இது அனைத்தும் திட்டமிடப்பட்டவையே. இந்தியாவை இந்தியும், சமஸ்கிருதம் மட்டுமே ஆளவேண்டும் என நினைக்கிறார்கள்.
கும்பிட்டு பழகியவர்கள் அம்மா மரணத்திற்கு பிறகு யாரை கும்பிடுவது எனத்தெரியாமல் தற்போது மோடியை கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களின் அடிப்படையான வாழ்வாதரப்பிரச்சனையில் இருந்து திசைதிருப்ப மாட்டிறைச்சி உண்ணக்கூடாது உள்ளிட்டு வாரம் ஒரு பிரச்சனையை தேசிய அளவில் கிளப்பி விடுகிறார்கள் பாஜகவினர். இவை அனைத்தும் பண்பாட்டுத்தளத்தின் மீதான தாக்குதல். இத்தகைய நிலையில் இருந்து நமது மொழியுரிமையை பண்பாட்டு உரிமையை பாசிச சக்திகளிடம் இருந்து பாதுகாக்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைவரும் ஒன்றினைந்து போராட்டக்களத்திற்கு வரவேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். ஆர்எஸ்எஸின் வழிகாட்டுதலில் ஆட்சிசெய்யும் பாஜக தனது பாசிச கொள்கையை ஜானதிபதி தேர்தலுக்கு பிறகு முழுவீச்சில் அமலாக்குமா அல்லது அடுத்த ஐந்து வருடத்தில் அமலாக்க போகிறதா என்கிற அபாயம் தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் இருந்துதான் இந்த தேசத்தை பாதுகாக்க கம்யூனிஸ்டுகள் களம்காண்கிறோம். அறிவியலுக்கு விரோதமாக கருத்துக்களை பாஜக முன்வைக்கிறது, அறிவியல் பூர்வமான கருத்துக்களை நாம் முன்வைத்து அறிவார்ந்த மக்களை, கற்றரிந்த மக்களை திரட்டுகிற வரலாற்று கடமை நமக்கு இருக்கிறது. முன்னைக்காட்டிலும் முனைப்போடு செயல்பட வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. சாதி, சமயங்களற்ற சமூகமாக தமிழ்ச்சமுகம் இருந்தற்கான ஆய்வு கீழடியில் கிடைத்திருக்கிறது. இதுபோன்ற அறிவியல் பூர்வமான, வரலாற்று பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று கற்றரிந்த பெருவாரியான மக்களை திரட்டி தெருமுனைக்கு வந்துவிட்ட பாசிச சக்திகளை உயர்த்திப்பிடித்த செங்கொடியோடு முஷ்டியை உயர்த்தி முழக்கமிட்டு விரட்டியடிப்போம் என்று ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.

Friday, June 2, 2017

ஒற்றைக்கலாச்சார தாக்குதலை உறுதியுடன் எதிர்த்தவர் கவிக்கோ!

தமுஎகச மாநிலக்குழு இன் இடுகையை Sundara Kannan பகிர்ந்துள்ளார்.
தமுஎகச மாநிலக்குழு

ஒற்றைக்கலாச்சார தாக்குதலை
உறுதியுடன் எதிர்த்தவர் கவிக்கோ!
தமுஎகச புகழஞ்சலி
தமிழ்க் கவிதையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை நிறுவிக்கொண்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான், இலக்கியத்தோடு நின்றுவிடாமல், சமூக வெளியில் பன்முகப் பண்பாட்டுத் தளத்திற்கு எதிரான தாக்குதல்களை உறுதியாக எதிர்த்துப் போராடியவர்,” என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
கவிக்கோ என்று கவிதை அன்பர்களால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அப்துல் ரகுமான் (70) வெள்ளியன்று (ஜூன் 2) காலை சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
‘வானம்பாடிகள்’ கவிதை இயக்கக் காலகட்டத்தில்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கினார். குறிப்பாகப் புதுக்கவிதை வடிவம், அதிலும் குறிப்பாகக் குறியீடுகள், உவமைகள், உருவகங்கள், படிமங்கள் வழியாகக் கவிதைக் கருத்துகளைக் கொண்டு சென்ற முன்னோடிகளில் ஒருவராகத் தடம் பதித்தார். இதில் அவரது முதல் புத்தகமான ‘பால்வீதி’ கவிதைத் தொகுதி ஒரு சோதனை ஆக்கமாக, கவி நேயர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கியது. அதே வேளையில், அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது மரபுத் தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும்தான். இலக்கணக் கட்டுகளை மீறிய அவரது கவிதைப் படைப்புகளுக்கு இலக்கண அறிவே அடிப்படையாக அமைந்தது எனலாம்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற அவர், தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி கவி வடிவங்கள் வேர்கொண்டதிலும் ஒரு சிறப்பான பங்கு வகித்தார். சிலேடை வரிகளால் கவியரங்க மேடைகளுக்கு மக்களை ஈர்த்தார். இலக்கிய வடிவங்கள் மட்டுமல்லாமல், சமூக அக்கறை கொண்ட கருத்துகளையும் தம் படைப்புகளால் பரிமாரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேயர் விருப்பம், பித்தன், மின்மினிகளால் ஒரு கடிதம், பறவையின் பாதை உள்ளிட்ட கவிதை நூல்கள் அவரிடமிருந்து தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்தன. ‘ஆலாபனை’ என்ற கவிதை நூலுக்காக அவரை சாகித்ய் அகடமி விருது சென்றடைந்தது. தாகூரின் ‘சித்ரா’ கவிதை நூலைத் தமிழில் தந்தார். கவிதைகள் மட்டுமல்லாமல் எம்மொழி செம்மொழி, கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை, மரணம் முற்றுப்புள்ளி அல்ல என்பன உள்ளிட்ட பல கட்டுரை நூல்களும் அவரது கொடையாக உள்ளன.
மதுரையில் பிறந்து, படித்து வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து பேராசிரியராக வளர்ந்த அவர் பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறி தமது இலக்கியப் பணிகளை ஓய்வின்றித் தொடர்ந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துடன் இணக்கமான உறவு கொண்டிருந்த கவிக்கோ, மதுரையில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்துடன் இணைந்து தமுஎகச நடத்திய 10 நாள் சங்க் இலக்கியப் பயிலரங்கில் ஒரு ஆசிரியராகப் பங்கேற்றார். இராக் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த மனிதக்கொலைப் போரை எதிர்த்து சென்னையில் நடத்திய கவியரங்கில் கலந்துகொண்டு எழுச்சியூட்டும் கவிதையை அளித்தார்.
மதுரை நகரில் தமுஎகச 40ம் ஆண்டுவிழா சிறப்பு மாநாட்டில் பங்கேற்று, மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்று சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பன்முகப் பண்பாட்டுத் தளத்தின் மீது தொடுக்கப்படும் வன்மம் மிக்க ஒற்றைக் கலாச்சாரத் தாக்குதலை உறுதியோடு எதிர்த்து நின்றார்.
இத்தகைய பணிகள் மிகவும் தேவைப்படுகிற இன்றைய சூழலில் அவரது மறைவு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக வந்துள்ளது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவரது இலக்கிய அன்பர்களுக்கும் தமுஎகச சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, March 10, 2015

குறிஞ்சி மலராக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிய திருப்பூர் புத்தகத் திருவிழா

திருப்பூர், மார்ச் 10-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை மலர வைத்துள்ளது என்று வரவேற்புக்குழு நிர்வாகிகள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்,பாரதி புத்தகாலயம் இணைந்துநடத்திய 12வது புத்தகத் திருவிழாவின் நன்றி அறிவிப்புக் கூட்டம் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் திங்களன்று வரவேற்புக்குழுத் தலைவர் கே.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது.
இதில் வரவேற்புக்குழு துணைச் செயலாளர் எஸ்.சுந்தரம் வரவேற்றார்.இதில் திருப்பூர் தெற்குதொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல், வரவேற்புக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் புத்தகத் திருவிழாவின் சிறப்புகளை குறிப்பிட்டுப் பேசினர். இந்த நகரத்து மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதிலும், குழந்தைகள், பெண்களை ஈர்ப்பதிலும் புத்தகத் திருவிழா சிறப்பாக முத்திரை பதித்திருக்கிறது என்றும், இன்னும் விரிவாகவும், சிறப்பாகவும் இந்த புத்தகத் திருவிழாவை தொடர்ச்சியாக நடத்தவும், அனைத்துத் தரப்பினர், அமைப்பினர் சேர்ந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதில் வீனஸ் பழனிச்சாமி, லிங்க்ஸ் சௌகத் அலி, பிரிண்டிங் குமாரசாமி, வி.டி.சுப்பிரமணியம், கேரவன் ஆறுமுகம், ஆடிட்டர் லோகநாதன், கே.காமராஜ் உள்பட வரவேற்புக்குழு நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர் நிறைவாக பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறி னார்.
தமுஎகச சார்பில் தோழர் ஐ.மா.பா. நினைவஞ்சலி கூட்டம்

மதுரை, மார்ச் 10-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மறைந்த சுதந்திரப்போராட்ட வீரரும் பொதுவுடைமை இயக்கப் போராளியுமான தோழர் ஐ.மாயாண்டி பாரதி நினைவஞ்சலிக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.மூட்டா அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரசா தலைமை வகித்தார்.தோழர் ஐ.மாயாண்டிபாரதி குறித்து மூத்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.இதில் மாநிலதுணைத்தலைவர்கள் என்.நன்மாறன், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ந.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கவிதாகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். மதுரை ராயப்பன், தோழர் ஜ.மா.பா.குறித்து பாடல் பாடினார். மாவட்டச் செயலாளர் சாந்தாராம் நன்றி கூறினார்.

நன்றி தீக்கதிர்

Thursday, August 15, 2013

பண்பாட்டுச் சூழலை ஆய்வு செய்யக் கூடுவோம்!






பண்பாட்டுச் சூழலை ஆய்வு செய்யக் கூடுவோம்!
ச.தமிழ்ச்செல்வன்















 
இனக்குழுக்களாக வாழ்ந்த காலம் தொட்டு மனித இனம் வாழ்ந்த வாழ் முறையே பண்பாடாகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் எனத் தனித்த பண்பாட்டு அசைவுகள் உண்டு.பண்பாட்டு அடை யாளங்கள் உண்டு.மனிதர் பேசத்துவங்கி, தமக்கான மொழியை உருவாக்கிக் கொண் டது பண்பாட்டு வரலாற்றில் ஒரு பாய்ச் சலாக அமைந்தது.சிறு சிறு கணக் குழுக்கள் இப்போது ‘ஒரு மொழி பேசும்’ குழுக்களாக விரிந்தன.மொழியின் வரு கை சிந்தனைப்பரிமாற்றத்தில் ஆழ அகலமான வேகத்தை ஏற்படுத்தியது.
மனித இனம் என்கிற பொதுமை அம்சங் களோடு கூடவே ஒவ்வொரு இனக்குழு வின் தனித்த அடையாளங்களும் அழுத்தமாக வரலாறு நெடுகிலும் கூடவே வந்தன.வந்துகொண்டே இருக்கின்றன.முற்போக்கும் பிற்போக்குமான வாழ்க்கை நடைமுறைகள், நடை, உடை, பாவனைகள், நம்பிக்கைகள், சடங்கு கள், உணவு முறைகள் எனப் பண்பாட்டுத் தளத்தில் எல்லாமே இருக்கின்றன. அறி வியல் வளர்ச்சியும் புதிய கண்டுபிடிப்பு களும் பண்பாட்டால் தொடர்ந்து எதிர் கொள்ளப்பட்டும் உள்வாங்கப்பட்டும் நகர்ந்துள்ளது. ஜனநாயக யுகத்தில் உலகம் நுழைந்துவிட்ட பின்பு உலகத் துக்குப் பொதுவான மனித மாண்புகள்-உலகப்பண்பாடு பற்றி உலக மன்றங்க ளில் மனிதர்கள் பேசத்துவங்கினர்.இந்தியாவின் சிறப்பு அசிங்கமான சாதியக்கட்டமைப்பு இந்தியாவின் வர்க்க வடிவமாகவும் இருக்கும் அதே நேரத்தில் பண்பாட்டு நிறுவனமாகவும் இருந்து மனித மனங்களைக் கட்டமைக்கும் பணியைச் செய்கிறது.
அரசியல் அரங்கில் புதிய திறப்பாக அமைந்த இந்திய அரசி யலமைப்புச் சட்டம் இந்த தேசம் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசு எனப் பகிரங்கமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. எனினும் பண்பாட்டுத் தளத்தில் மதச் சார்பின்மையை ஜனநாய கத்தைக் கொண்டுவர இன்றுவரை இயல வில்லை.பண்பாட்டை ஜனநாயகப்படுத் திடப் பல இயக்கங்கள் இந்த மண்ணில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளன. தமிழகத் தில் வள்ளலார்,வைகுண்டர் போன்றோ ரின் நம்பிக்கை சார்ந்த இயக்கங்களும் சுய மரியாதை இயக்கம், பொதுவுடமை இயக் கம், திராவிட இயக்கம்,தலித் இயக்கம், பெண் விடுதலை இயக்கம் போன்ற பகுத் தறிவு சார்ந்த அறிவியல்பார்வையோடு கூடிய இயக்கங்களும் முற்போக்கான பண்பாட்டை வளர்த்திடப் பெரும் பங் காற்றியுள்ளன.ஆற்றி வருகின்றன.ஆனாலும் இன்று வரலாற்றைப் பின் னோக்கி இழுக்கும் சக்திகள் பண்பாட்டு மேடையில் நின்று அரசியல் நடவடிக் கைகளை எளிதாக மேற்கொள்ள முடி கிறது. அது ஓரளவு மக்கள் செல்வாக்கை யும் பெற முடிகிறது.
இதை எப்படிப் புரிந்து கொள்வது?பன்னாட்டு நிதி மூலதனம் தன் சக்தி மிக்க ஊடக வலைப்பின்னலின் உதவி யோடு மக்களை சொந்த அடையாளங்கள் அழித்து நுகர்வோர் என்னும் கழுத்துப் பட்டியை மாட்டித் தன் பின்னால் இழுத்துச்செல்லும் அதே நேரத்தில் நம்பிக்கையின் பெயரால் சேது சமுத்திரம் போன்ற வளர்ச்சித்திட்டங்கள் நிறுத்தப் படுவதும் சாதியச் சிமிழுக்குள் தமிழ் மக்களின் வாழ்க்கையை அடைக்க முயலும் சக்திகள் அணி திரட்டி அலை வதும் நடந்துகொண்டே இருக்கிறது. பொது வெளியில் பெண்கள் நடமாட்டம் பாராட்டத்தக்க அளவுக்கு வளர்ந்திருக் கும் அதே நேரத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட தாக்குதல் கள் அளவற்றுப் பெருகிக்கொண்டே செல்கின்றன. பெண்கள் வாழத்தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்கா வது இடத்தைப் பிடித்துள்ளது.ஊழலுக்கு எதிராக ஒரு பெரியவரை முன்னிறுத்தி பல்லாயிரம் பேர் நாடெங்கும் தேசக்கொடி யசைத்துப் போராடினார்கள்.பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து ஏன் போராட்டம் இல்லை.இளவரசன் கொ லையைத் தமிழகக் குடிமைச்சமூகம் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டது எவ்வாறு?மனித மனங்களைத் தகவமைத்து ஆளும் வர்க்கத்தின் தேவைக்கேற்ற மனிதர்களாக மாற்ற பண்பாட்டு நிறு வனங்கள் இரவுபகலாகப் பாடுபடுகின் றன.
குடும்பம், சாதி, மதம், கல்விச் சாலைகள், ஊடகங்கள் எனப் பல பண் பாட்டு நிறுவனங்கள் நம் ஒப்புதல் இல் லாமலேயே நம்மை ஆளும் வர்க்க சித்தாந்தப் பிடிக்குள் தள்ளி விடுகின் றன. உடம்பால் தொழிலாளி வர்க்கமாகவும் உள்ளத்தால் ஆளும் வர்க்க சிந்தனை யோடும் வாழும் இரட்டை நிலையில் நம்மைத் தள்ளுகின்றன.உடம்பால் பெண் ணாகவும் உள்ளத்தால் ஆணாதிக்க சிந்தனையாளராகவும் வாழப்பழக்கப் படுத்துகிறார்கள்சிவில் சமூகம் எனப்படும் குடிமைச் சமூகமும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கமும் வேறு வேறென்று மக்கள் மனதில் பதிய வைத்தது யார்? எவ்விதம்? இரண்டும் ஒன்றுதான் ஒரே அமைப்பின் இரண்டு அங்கங்கள்தாம் என்பதை விளக்குவது எவ்வாறு?இவற்றையெல்லாம் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?இவற்றுக்குப் பின் னால் இயங்கும் பண்பாட்டு அரசியல் என்ன? இன்று தமிழகப்பண்பாட்டுச் சூழலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்,முன்னுக்கு வந்துள்ள முக்கியமான சவால்கள் -இவற்றைப்பற்றி , அவற்றின் வரலாற்றுப் பின்னணியோடு, விரிவாக ஆய்வு செய்து, தமுஎகசவின் எதிர்காலச் செயல்பாட் டுக்கான திட்டங்களை வடிவமைப்பதற் காகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மாநில அள விலான ஒரு சிறப்பு மாநாட்டினை ஆகஸ்ட் 17,18 (சனி, ஞாயிறு) தேதிகளில் தூத்துக்குடியில் பானு பிருந்தாவன் திருமண மண்டபத்தில் நடத்துகிறது.
மாநி லம் முழுவதுமிருந்து 300 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கிறார்கள். தமுஎகச தலைவர்களும் தி ‘இந்து நாளிதழின் வாசகப்பகுதி ஆசிரியரும் புகழ்பெற்ற பத்திரிகையாளருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வம் மாநாட்டில் இருநாட்களும் பங்கேற்கிறார். நமக்குள் பொங்கி எழுகின்ற பண்பாடு குறித்த நூறு நூறு கேள்விகளுக்கு விடை தேடி தூத்துக்குடியில் மாநாடு கூடு கிறது. கீழ்க்கண்ட ஏழு தலைப்புகளில் கட்டு ரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற உள்ளது.
1. தாய் மொழி வழிக்கல்வியை மீட் டெடுப்போம்2. மதவெறி அரசியலும் சேது சமுத் திரத் திட்டமும்3. சாதியப்பாகுபாடும் வன்கொடுமை களும்4. பாலினப்பாகுபாடும் பெண்கள் மீதான வன்கொடுமையும்..5. ஊடகங்களின் அரசியல்6. சமகாலப் படைப்பிலக்கியம் முன் வைக்கும் அரசியல்7.மாற்றுப்பண்பாடு சில முன் வைப்புகள்
ஒவ்வொரு கட்டுரையும் மூன்று பகுதி களைக் கொண்டதாக அமைந்துள்ளன. பிரச்னையின் வரலாறு, இன்று அதில் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் சவால், இப்பிரச்சனையின்பால் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறை மற்றும் எதிர் கால வேலைத்திட்டம் என்பதான மூன்று பகுதிகளாக எல்லாக் கட்டுரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் 150 பக்க புத்தகமாக தொகுக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிரதிநிதிகள் முன்கூட்டியே வாசித்து விட்டு வந்து மாநாட்டில் விவாதித்து இறுதிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.பண்பாட்டுத்தளத்தில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வாக –தமிழக முற் போக்குப் பண்பாட்டு இயக்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தப்படியாக-பண் பாட்டுப் போராட்டங்களுக்குப் படைப்பா ளிகளின் அர்த்தமுள்ள செறிவான பங்க ளிப்பாக இம்மாநாடு மலரவிருக்கிறது. தமிழ் கூறு நல்லுலகிற்கு தமுஎகச-வின் பண்பாட்டு கொடையான கலை இரவு 18ஆம் தேதி தூத்துக்குடி நகரில் பால விநாயகர் கோவில் தெருவில் நடை பெறவுள்ளது. மாநாட்டில் விவாதிக்கப் பட்ட பொருள் குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் தமுஎகச தலை வர்கள் இந்த கலை இரவின் வழியாக மக்களுக்கு தெரிவிக்கவுள்ளனர். தமிழகப் படைப்பாளிகளின் கவனம் தூத்துக்குடி நோக்கித் திரும்பட்டும். கட்டுரையாளர், தமுஎகசவின் மாநிலத் தலைவர்

 

Sunday, July 7, 2013

வழியெங்கும் புத்தகங்கள்


வழியெங்கும் புத்தகங்கள்
bk reading நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பாயில் தினசரிகள்,வார,மாத இதழ்கள் கிடக்கும்.பெரிய ஆட்கள் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பார்கள்.அப்போது பொடியன்களான நாங்கள் சிலர் அவ்வப்போது உள்ளே நுழைந்து எதையாவது வாசிப்போம்.பிறகு மணியடிக்கவும் ஓடிவிடுவோம்.அப்படி ஒருநாள் ஒரு வார இதழில் வாசித்த பெட்டிச்செய்தியில் , பகத்சிங்கைத் தூக்கு மேடைக்கு அழைத்த போது அவர் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார் என்றும் அதை முழுதாகப் படித்து முடிக்கும்வரை கால அவகாசம் கேட்டார் என்றும் படித்து முடித்ததும் மகிழ்ச்சியோடு தூக்கு மேடைக்குப் போனார் என்றும் எழுதியிருந்தது.பாருய்யா சாகப்போற நேரத்திலே கூடப் படிச்சிருக்கான்...அவன் மனுசனா.. நாம மனுசங்களா என்று பெரியவர்கள் ரெண்டுபேர் பேசிக்கொண்டதையும் கேட்டேன்.அந்த செய்தியும் பேச்சும் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
பின்னர் பெரியவனாகிக் கோவில்பட்டியில் கல்லூரியில் படித்த காலத்தில்(1970-71) பஸ் நிலையத்துக்கு எதிரே என்சிபிஹெச் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.சிவப்புப் புத்தகங்களின் அணிவகுப்பில் லெனின் எழுதிய புத்தகங்களைத் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.மேசை அருகே சேர் போட்டு அமர்ந்திருந்த வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மனிதர் ஒருவர் என்ன புத்தகம் தேடுறே தம்பி என்று கேட்டார்.’பகத்சிங் சாவதற்கு முன்னால் படித்த லெனின் புத்தகம்’ என்று சொன்னேன்.உடனே அவர் அரசும் புரட்சியும் ‘என்ற நூலை எடுத்துக்கொடுத்தார்.என்னை இன்றும் செதுக்கிக் கொண்டிருக்கும் புத்தகமாக அது இருக்கிறது.இதையும் சேர்த்துப்படி என்று அந்தச் சிவந்த மனிதர் ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம் ,தனிச்சொத்து,அரசு ஆகியற்றின் தோற்றம் என்கிற புத்தகத்தையும் அன்பளிப்பாக எனக்கு வழங்கினார்.அந்த இரண்டு புத்தகங்களும் நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு பைண்டிங் கிழிந்து தாள் தாளாக ஆகிவிட்டாலும் பொக்கிஷம் போலக் கையில் வைத்திருக்கிறேன்.அதே நூல்களின் வேறு இரு பிரதிகள் அப்புறம் வாங்கிவிட்டாலும் அந்தப் பெரியவர் கொடுத்ததுதான் என் புத்தகமாக என் வாசிப்புக்கான சொந்தப் பிரதியாக பிரியத்துடன் வைத்திருக்கிறேன்.அந்தப்பிரதி பேசுவது போல வேறு பிரதிகள் என்னோடு நெருங்கிப் பேச முடிவதில்லை.அந்தப் புத்தகங்களை எனக்கு எடுத்துக் கொடுத்த பெரியவர் பெயர் எஸ்.எஸ்.தியாகராஜன் என்பதும் அவர் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும் அவர் என் சித்தப்பாவின் நண்பர் என்பதும் பின்னர் அறிய நேர்ந்த கூடுதல் தகவல்கள்.
அரசு என்பது காலம் காலமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒன்று- அது எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டும்தான் என்கிற என் பொதுப்புத்தியை வெடிகொண்டு தகர்த்தன இவ்விரு புத்தகங்களும்.தீர்க்க முடியாத வர்க்கப்பகைமையின் விளவுதான் அரசு.தனிச்சொத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் பெயர்தான் அரசு என்பதும் வரலாற்றில் தனிச்சொத்து தோன்றுவதற்கு முன்னால் அரசு என்கிற வன்முறைக்கருவி இருந்திருக்கவில்லை என்பதும் இவ்விரு புத்தகங்களால் தெளிவானது.அப்போது இலக்கிய வாசிப்பில் நான் நா.பார்த்தசாரதியிடமிருந்து விடைபெற்று ஜெயகாந்தனின் ஆளுகைக்குள் வந்துகொண்டிருந்த காலமாகவும் இருந்தது.பொன்விலங்கும் குறிஞ்சிமலரும் அந்த நாட்களில் என் மனதுக்கு நெருக்கமான நாவல்களாக இருந்தன.அரவிந்தனைப்போல சத்தியமூர்த்தியைப்போல தேசம் பற்றிய பொங்கும் பெருமிதத்தோடும் ஒருவித கற்பிதமான சத்திய ஆவேசத்தோடும் சிலபல நா.பா. கொட்டேசன்களோடும் ஒரு பூரணியை அல்லது பாரதி-கல்யாணியைத் தேடும் இளைஞனாக இருந்துகொண்டிருந்தேன்.கோகிலா என்ன செய்துவிட்டாள் என்கிற குறுநாவல்தான் ஜெயகாந்தனில் நான் முதலில் வாசித்தது.அப்படியே அவர் இழுத்துக்கொண்டு போய்விட்டார்.பாரீசுக்குப் போவின் கலை சார்ந்த தத்துவ விவாதங்களில் பிரமித்து அக்கினிப்பிரவேசத்தில் குளித்தெழுந்த கங்காவைப் பின்தொடர்ந்து சிலநேரங்களில் சில மனிதர்களைச் சந்தித்துச் சினிமாவுக்குப் போன சித்தாளுவுடன் ரிக்‌ஷாவில் ஏறி எம்.ஜி.ஆரின் பட வால் போஸ்டரை உடம்பில் சுற்றிக்கொண்டு அலைந்தேன்.விகடனில் அவர் எழுதிய வசீகரமான தொடர்களை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் வெகு சீக்கிரமாக நான் ஜெயகாந்தனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள நேர்ந்தது. புதுக்கவிதை பொங்குமாங்கடல்போலப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்த நாட்களாக அவை இருந்தன.பழைய தடைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு மொழி புதிய எல்லைகளில் பிரவேசித்த அனுபவத்தில் நின்று ஜெயகாந்தனின் சத்தமான குரலை முன்போலக் கேட்க முடியவில்லை.வண்ணநிலவன்,வண்ணதாசனிடம் மிக இயல்பாக வந்து சேர்ந்தேன்.வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலையும் தோழர் பால்வண்ணம் கொடுத்த ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக்குறிப்புகளையும் ஒரே சமயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.இந்தப்பிரியங்களும் பாசங்களும்தான் வாழ்க்கை என்று கடல்புரத்துப் பிலோமிக்குட்டி சொன்னதையும் சிறைக்குள்ளே உலகத்தொழிலாளர் மீதான பாசத்துடன் ஜூலியஸ் பூசிக் மேதினம் கொண்டாடியதையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசித்துக்கொண்டிருந்தேன்.உன் அடிச்சுவட்டில் நான் புத்தகத்தையும் அதே நேரம் வாசித்து அந்த ட்ராயைப்போல உலகத்தின் மக்கள் எல்லோருக்காகவும் சாகத் தயாராகிக்கொண்டிருந்தேன்.வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதைத்தொகுப்பின் அகல விரித்த வார்த்தைப் பரப்பில் தீட்டப்பட்ட நுட்பமான ஓவியங்களைக் கண்டு மனம் நடுங்கி ’எச்சங்கள்’ சிறுவர்களின் எச்சிற்சோடாக் குடிக்கும் காட்சியைக்கண்டு மனம் பதறி அச்சிறுவர்களுக்காகப் போராட உறுதிகொண்டேன்- கண்ணீரைத்துடைத்துக்கொண்டு.
இப்படியான மனநிலையோடு பாலியல் சார்ந்த குழப்பங்களும் கூடவே ஓடிவந்து கொண்டிருந்த ஒரு வயதில் –அப்போதுதான் ராணுவத்திலிருந்தும் திரும்பியிருந்தேன் –ராணுவமுகாம்களில் வாசிக்கக் கிடைத்த கமலாதாஸ் அக்காவும் சஸ்தி பிரதாவும் பாரதி முகர்ஜியும் இன்னும் என்னோடு இருந்துகொண்டிருந்தார்கள்.குறிப்பாக சஸ்தி பிரதாவின் HE AND SHE, MY GOD DIED YOUNG போன்ற நாவல்களும் கமலாதாசின் என் கதையும் கவிதைகளும் கதைகளும் இருட்டுக்குள் என்னை இழுத்துக்கொண்டே இருந்தன.இருட்டு எப்போதும் மயக்கம் தரவல்ல வசீகரத்தோடு கூடியதுதானே.
கல்லூரிநாட்களின் இறுதியில் அறிமுகமான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ உரையாடல்களையும் இன்னும் விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய COMMENTARIEES ON LIVING இரண்டு தொகுதிகளும் BEYOND VIOLENCE மற்றும் THE AWAKENING YEARS ,அவருடைய கிருஷ்ணமூர்த்தி நோட் புக் போன்ற நூல்கள் என்னோடு இருந்தன.அப்போதைய என்னுடைய பட்ஜெட்டில் அவற்றை வாங்கியது பெரிய செலவுதான்.என்றாலும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அப்படி ஈர்த்தார்.கேள்வி பதில் பாணியிலான அவருடைய உரைகள் அன்று என்னை ஆட்டி வைத்தன.
நீங்கள் ஒரு குழுவோடு உங்களை ஏன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்? ஒரு இனத்தோடு-ஒரு மதத்தோடு- ஒரு இயக்கத்தோடு?ஒரு கூட்டத்தோடு உங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் கணத்தில் உங்கள் படைப்பாற்றல் (CREATIVITY) மறும் கேள்வி கேட்கும் சுரணை முற்றுப்பெற்று விடுகிறது.என்கிற ஜே.கே யின் முன்வைப்பு நீண்ட காலம் என்னை அலைக்கழித்தது.
ஆனால் ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்ப்பில் வாசித்த ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சீய மெய்ஞ்ஞானம் நூல் என்னைப் பிடித்திழுத்துப் பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தில் தள்ளிவிட்டது.இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பச்சைக்குழந்தைகளுக்குச் சொல்வதுபோலச் சொன்ன புத்தகம் அது.அதைத்தொடர்ந்து ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை நூலையும் பொதுவுடமைதான் என்ன என்கிற புத்தகத்தையும் வாசித்ததில் மனம் மேலும் துலக்கமானது.வரலாற்று ரீதியாக ஒரு கதை வடிவில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் மனித குல வரலாற்றின் முக்கியமான பக்கங்களையும் பேசிய வால்கா முதல் கங்கை வரை வாசித்து அதில் வரும் ஒரு கதாபாத்திரமான ரேக்காபகத் என்கிற பெயரைப் புனைபெயராகக் கொண்டு சில கதைகளைச் செம்மலரில் எழுதினேன்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்தும் சஸ்தி பிரதாவிடமிருந்தும் கமலாதாசிடமிருந்தும் முறையாக விடைபெற்று வர மாரீசு கான்போர்த்தின் இயக்கவியல் பொருள் முதல்வாதம் நூலும் சோவியத் வெளியீடாக அன்று வந்த Marxist Ideology என்கிற அட்டவணைகள் நிறைந்த எளிய புத்தகமும்தாம் கை கொடுத்தன.மனம் என்பதின் செயல்பாடுகள் பற்றியும் உள்மனம்-வெளி மனம்-ஆழ் மனம் மற்றும் அறிவு-உணர்வு என்பவற்றின் அடிப்படை அறிவியல் உண்மைகளோடும் இயக்கவியலைப் புரிய வைத்த இப்புத்தகங்கள் என் வாழ்க்கையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டன.
என் பசிக்குத் தீனியாக அப்போது சென்னை புக்ஸ் பாலாஜி பல நல்ல நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.போல்ஷ்விக் கட்சியின் வரலாறு அப்போது வெளியாகியிருந்தது.அந்தக் கறுப்பு ஞாயிறு பற்றிய பக்கங்கள் என் மனதைப் பாதித்தன.பின்னர் பேட்டில்ஷிப் பொடெம்கின் திரைப்படத்தைப் பார்த்தபோது ஒடெஸ்ஸா படிக்கட்டுகள் காட்சி மீண்டும் என்னைப் போல்ஷ்விக் கட்சியின் வரலாற்றைப் படிக்க வைத்தது.சோவியத்யூனியனைப்போலவே அன்று கிழக்கு ஜெர்மனியிலிருந்தும் ஏராளமான மார்க்சிய அடிப்படை நூல்கள் வந்து கொண்டிருந்தன.அப்புத்தகங்கள் சோவியத் புத்தகங்களைப்போல சிவப்பு வண்ணத்தில் அல்லாமல் நீல வண்ன அட்டைகளுடன் இருக்கும்.ப்ளூ மார்க்சிஸ்ட்ஸ் என்று அவற்றைப்பற்றிய ஒரு கேலியான சிரிப்பு கோவில்பட்டித் தோழர்களிடம் இருக்கும்.
பிளெக்கனோவின் இரு புத்தகங்கள் அந்தத் தருணத்தில் தெளிவான பார்வையைத் தந்தன.வரலாற்றில் தனி நபர் பாத்திரம் என்கிற நூலும் கலையும் வாழ்க்கையும் என்ற நூலும்.அப்போது கு.சின்னப்ப்பாரதியின் தாகம் நாவலும் டி.செல்வராஜின் மலரும் சருகும் நாவலும் வந்துவிட்டிருந்தன.இதுதான் எனது பாதை எனத் தீர்மானிக்க இவ்விரு நாவல்களும் பிளெக்கனோவின் நூல்களும் வழிகாட்டின என்பேன்.
இவ்வளவு புத்தகங்களுக்குப் பிறகுதான் நான் 1848இல் மார்க்சும் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தேன்.ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது என்று துவங்கி எத்தனை இலக்கியப்பூர்வமான மொழிநடையில் உலகத்தொழிலாளர்களை ஒன்றுசேர அறைகூவி அழைத்த புத்தகம் அது.இன்றுவரை அப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு புதிய தெளிவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.எதைப்பற்றி எழுதப்போனாலும் பேசப்போனாலும் கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒருமுறை பார்த்துக்கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.அப்போது Radical review பத்திரிகையில் இ.எம்.எஸ். அவர்களின் நேர்காணல் ஒன்று வெளியாகி இருந்தது.CPI-CPM-CPI-ML என்பது அந்நேர்கணலின் தலைப்பு அதைப்படிச்சிட்டு அப்புறம் இதைப்படி என்று தோழர் பால்வண்ணம் என்னிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் என்கிற நூலையும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கை என்கிற சிறு நூலையும் கொடுத்தார். கட்சித்திட்டம் என்றால் ஏதோ அது அவர்கள் கட்சியைப்பற்றியும் அவர்களின் வழியைப் புகழ்ந்தும் எழுதியிருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு அது ஓர் ஆழமான வரலாற்று ஆவணம்போல பல உண்மைகளை அடுக்கி மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கு மக்களை அழைக்கும் புத்தகமாக இருந்து என்னை ஆச்சர்யப்படுத்தியது.
சோவியத் நூல்களைச் சரளமாக வாசிக்கும் பழக்கம் இதற்குள் வந்துவிட்டிருந்தது.கார்க்கியைவிட அன்று என்னை மிகவும் ஈர்ப்பவராக தஸ்தாவ்ஸ்கியே இருந்துகொண்டிருந்தார்.வெண்ணிற இரவுகளின் பனி பொழியும் பாதைகளில் காதல்வயப்பட்ட இளைஞனாக நான் நடந்துகொண்டிருந்தேன்.சிங்கிஸ் ஐத்மாத்தோவின் ஜமீலாவைக் காதலிக்கும் பலகோடி உலக இளைஞர்களில் நானும் ஒருவனாக நிலவொளியில் நீந்திக்கொண்டிருந்தேன்.கோகோலின் மேல்கோட்டை அணிந்து இருமிக்கொண்டு அந்தோன் செகாவின் கதைகளுக்குள் ஆறாவது வார்டில் ஒரு பாத்திரமாக மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருந்தேன்.இவான் துர்கனேவின் முதற்காதல் என்கிற குறுநாவல் என்னை அந்நாவலில் வரும் சிறுபையனாகவே மாற்றியது.டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில் வரும் ஏமாற்றுக்காரப் பெண்ணும் அவள்மீது காதல் கொண்டு வாழ்நாள் முழுக்க அவள் பின்னாலேயே ஏமாந்து அலையும் அந்த இளைஞனும் அந்தக்காதலின் புனிதமும் மனதைத் தாக்கினாலும் இது ஒரு கிறித்துவப்பார்வையுடன் எழுதப்பட்ட நாவல் என்று டால்ஸ்டாயையே விமர்சிக்கும் அளவுக்கு அப்போது வளர்ந்துவிட்டிருந்தேன்.
உண்மையில் அன்றைய பல இளைஞர்களைப்போலவே நானும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்னும் பெரும் கடலில் விழுந்து கிடந்தேன்.நட் ஹாம்சனின் நிலவளம் நாவல் மனித வாழ்க்கையை ஆதியிலிருந்து புரிந்து கொள்ள உதவிய வரலாற்று ஆவணம் போல வந்து சேர்ந்த்து.அந்நாவலில் வரும் மேல் உதடு பிளந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த அவளைப்போலவே மேல் உதடு பிளந்த குழந்தையை அவள் யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைக்கும் காட்சியில் இன்னும் மனம் உறைந்துபோய்க் கிடக்கிறேன்.நிலவளம் போலத் தமிழில் வந்த ஒரு புத்தகமாக அப்போது சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை இயற்கையை வெல்லும் மனிதக்கதையாகப் புரிந்து கொண்டேன்.இன்று அதே கதையை இயற்கையை அழித்த மனிதன் சீரழியும் கதையாகப் புரிந்துகொள்கிறேன். வி.ஸ.காண்டேகரின் எரிநட்சத்திரம் நாவலில் வரும் புரட்சிகர இளைஞனாக என் ஆசிரியர்களுடன் வாதம் செய்திருக்கிறேன்..வங்கத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் ஏராளம்.விபூதிபூஷனின் இலட்சிய இந்து ஓட்டல், பங்கிம் சந்திரரரின் விவசாய எழுச்சியை மையமாக்க் கொண்ட வந்தேமாதரம் பாடலைத் தந்த ஆனந்த மடம் நாவல் ,வெளிநாட்டுக்குப் பிழைக்கப்போகும் உயர்சாதி இளைஞன் பற்றிய பாரதி நாவல் எனப்பல நாவல்கள். தாகூரின் கீதாஞ்சலி வாசித்துத் தலை நிமிர்த்தி நடந்திருக்கிறேன்.வங்க நாவல்களின் தத்துவப் பார்வையை விட என்னோடு எளிமையாகவும் நெருக்கத்துடனும் பேசிய கதைகளாக மலையாள எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும் குறுநாவல்களும் பஷீரின் சிறுகதைகளும் கேசவ்தேவின் நடிகையும் ஓர் அழகியின் சுயசரிதையும் என் திருமணத்துக்கு அன்பளிப்பாக வந்த என்.பி.டி.யின் சமீபத்திய மலையாளச்சிறுகதைகள் தொகுப்பும் என ஒரு வளமான பங்கு கேரளத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.அந்த அளவுக்குத் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு ஏதும் செல்லவில்லை என்பது இன்றுவரை தீராத ஒரு சோகம்தான்.
இந்த சந்தர்ப்பத்தில் நான் தொழிற்சங்க இயக்கத்தில் கூட்டங்களில் பேசுகிற ஆளாக மாறிப்போனதால் தேவையை ஒட்டித் தேடிப்படிக்கும் பழக்கமும் வந்து விட்டது.அப்படி வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் என தோழர் இ.எம்.எஸ். அவர்கள் எழுதிய INDIAN PLANNING IN CRISIS என்கிற நூலையும் அதன் தொடர்ச்சியாக வந்த CRISIS INTO CHAOS என்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பொருளாதார அமைப்பு குறித்து எழுந்த விவாதங்கள் 1948இல் திட்டக்கமிஷன் உருவாக்கப்பட்ட பின்னணி அதன் பின் இயங்கிய வர்க்க அரசியல் பற்றியெல்லாம் தெளிவாக விளக்கிய நூல்கள் இவை.இ.எம்.எஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவர் எழுதிய எல்லா நூல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது.அவரது இந்திய வரலாறு-ஒரு சுருக்கமான வரலாறும், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன் என்கிற நூலும் அப்போது தமிழில் கிடைத்தன.பின்னர் அவரது A HISTORY OF INDIAS FREEDOM STRUGGLE என்கிற புத்தகம் வந்ததும் ஓடிப்போய் வாங்கிப்படித்தேன்.இப்போது அது தமிழிலேயே கிடைக்கிறது.நம் நாட்டின் கடந்த கால வரலாற்றை ஒரு மார்க்சிய நோக்கில் பயில இதைவிடச் சிறந்த புத்தகம் வேறொன்றும் இல்லை.பின்னர் வேதங்களின் நாடு வந்தது.இந்தியாவில் சாதிகளின் தோற்ரம் பற்றிய ஒரு புதிய விளக்கத்தை இந்நூல் தந்த்து.
அங்கிருந்து என் வாசிப்பு வரலாற்று நூல்களின் மீது ஆவலுடன் தாவியது.குறிப்பாக இந்திய வரலாறு,தமிழக வரலாறு குறித்து என்ன துண்டுத்தாள் கிடைத்தாலும் வாங்கி வாசித்துத் தீவிரமாக்க் குறிப்புகளும் எடுத்துக்கொண்டிருந்தேன்.இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் நூல்கள் பலவற்றை அப்போது என்.சி.பி.எச் வெளியிட்டுக்கொண்டிருந்தது.என்சிபிஎச் கிளை பொறுப்பாளர் ஒருவரிடம் ரகசியமாக்க் கணக்கு வைத்துக்கொண்டு மாத்த் தவனையில் அந்த எல்லா வரலாறு நூல்களையும் வாங்கிக் குவித்து வெறிகொண்டு படித்துக்கொண்டிருந்தேன்.டி.டி.கோசாம்பியின் பண்டைய இந்திய வரலாறு,ராகுல்ஜியின் ரிக் வேத கால ஆரியர்கள்,ரோமிலா தாப்பரின் வரலாறும் வக்கிரங்களும்,சுவீரா ஜைஸ்வாலின் வைஷ்ணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,ஆர்.பி.ஷர்மாவின் பண்டைய இந்தியாவில் அரசு நிர்வாகத்தின் தோற்றம்,விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்கள்,பி.சி.ஜோசியின் 1857 புரட்சி ,சுசோபன் சர்க்காரின் வங்காள மறுமலர்ச்சி என எண்ணற்ற புத்தகங்கள்.படித்த நூல்களை நோட்டுப்போட்டுக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டிருந்தேன் –எதற்கென்று தெரியாமலே.இவ்வாசிப்பில் 1857 புரட்சியை ஒரு தனித்த சிறப்பு வாய்ந்த நூலாக உணர்ந்தேன்.ஒரு வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான நூலாக இது அமைந்தது.ஏற்கனவே 1857 சிப்பாய்ப் புரட்சி பற்றி வேறு சில நூல்களையும் நான் வாசித்திருந்தேன்.மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் முயற்சியில் 1957இல் அரசு வெளியிட்ட 1857 என்கிற விரிவான ஆங்கில நூலையும் பட்டாபி சீத்தாராமையா எழுதிய 1857 கலகம் என்கிற நூலையும் சவர்க்காரின் இந்தியப்புரட்சி நூலையும் வாசித்திருந்தாலும் அவை எதுவும் பி.சி.ஜோஷியின் நூலுக்கு ஈடாக நிற்கவில்லை.1857 புரட்சி பற்றிய வரலாறுக் காரணங்கள்,அன்றைய பத்திரிகைகளில் அது பற்றி வந்த செய்திகள்,நாட்டுப்புறப்பாடல்கள் ,பிற நாட்டு அறிஞர்கள் அப்புரட்சி பற்றி எழுதிய குறிப்புகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நூலாக அது வந்திருந்தது.என்னைப்போன்ற அன்றைய இளம் வாசகர்களுக்குச் சரியான தீனியாக அது அமைந்தது.கோ.கேசவனின் எழுத்துக்களை நான் இந்த சமயத்தில்தான் வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது.அவரது சமூகமும் கதைப்பாடல்களும் என்கிற சின்னஞ் சிறிய புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை இருக்கிறது.பாளையக்காரர்களின் காலத்தைப்புரிந்துகொள்ள தமிழில் இதைவிடச் சிறந்த நூல் ஏதும் இல்லை என்பேன்.அவரது மண்ணும் மனித உறவுகளும், இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் இயக்கமும் இலக்கியப்போக்குகளும் போன்ற நூல்களையெல்லாம் ஒருசேரத் தேடித் தேடி வாசித்தேன்.இயக்கங்களில் பணியாற்றும் தோழர்களுக்குக் கல்வி புகட்டும் மொழியில் அவர் எழுதினார்.அவரது மறைவு இட்து சிந்தனை உலகுக்குப் பேரிழப்பாகும்.
இப்போது கதைகள் எழுதவும் துவங்கியிருந்தேன்.ஒரு திட்டமிட்ட பாடத்திட்ட அடிப்படையில் இலக்கியங்களைக் கற்பது என்று முடிவு செய்து கால வாரியாக நூல்களைப் பட்டியலிட்டு நூலகங்களிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் நிறைய சொந்தமாகவும் வாங்கிப் படிக்கலானேன்.(இந்த வைராக்கியம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது எனக்கு ஆச்சரியமே-அவ்வளவு நீண்ட காலத்துக்கு என் புத்தி ஒரு நிலையில் நிற்பது –வாசிப்பைப் பொறுத்து-அபூர்வம்தான்)
1920களின் முக்கிய உரைநடை இலக்கிய எழுத்துக்கள் என பாரதியின் சிறுகதைகளையும் அவரது சந்திரிகையின் கதை என்னும் நாவலையும் அ.மாதவய்யாவின் குட்டிக்கதைகளையும் வ.வே.சு.அய்யரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பையும் படித்தேன்.சமூகத்துக்கு ஏதேனும் சொல்லத்துடித்த கதைகளாக அவற்றை உணர்ந்தேன்.மாதவய்யா கதைகளின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நான் எதிர்பாராதவை.சிறுகதை என்னும் வடிவம் பூரணமாகக் கைவராத படைப்புகளாக இம்மூவரின் கதைகள் இருந்தன.ஆனாலும் சிறுகதையின் துவக்கம் சமூக அக்கறை கொண்ட்தாகவே இருந்தது-உள்மனப் பயணம் பற்றியதாக இல்லை என்பது குறிக்கத்தக்கது.
1925இல் இம்மூவரும் மறைந்து விட்ட பின் புதுமைப்பித்தனும் கு.ப.ராஜகோபாலனும் மௌனியும் முன்னுக்கு வந்தனர்.இப்போதுபோல ஒட்டுமொத்தத் தொகுப்புகள் அக்காலத்தில் இல்லை.மௌனியின் அழியாச்சுடர் ஒரு தொகுப்புதான் வந்திருந்தது.என்னைப்போலவே(!) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கதை எழுதியவர் அவர் என்பதாலும் சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் அவரைப்பற்றிச் சொன்னதாலும் அவரை ஆவலுடன் வாசித்து ஏமாந்தேன்.அன்றுமுதல் இன்றுவரை மௌனி என்னை வசீகரிக்கவில்லை.புதுமைப்பித்தனின் காஞ்சனை,புதுமைப்பித்தன் கதைகள் ,துன்பக்கேணி போன்ற பத்துத்தொகுப்புகள் என் கையில் இருந்தன.ஒவ்வொரு கதையும் எனக்குப் பாடம் சொன்ன கதைதான்.இலங்கைக்குப் போய் பரங்கிப்புண் பெற்ற மருதாயியின் சோகமும் கடவுளோடு ஒருநாள் கழித்த கந்தசாமிப் பிள்ளையின் எள்ளலும் மகாமசானம் என்று சென்னைப்பட்டணத்தை மயானம் என்று சொல்லி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்த கோபமும் அவருக்கன்றி யாருக்கு வரும்? கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் தொகுப்பின் கதைகள் இன்றைக்கும் மனதை ஈர்ப்பவையாக இருக்கின்றன.சிறிது வெளிச்சம்,ஆற்றாமை,மெகருன்னிசா போன்றவை இறவாப்புகழ் பெற்ற கதைகள்தாம்.
40களின் படைப்பாளிகளில் நான் தடுமாறி விழுந்தது கு.அழகிரிசாமியின் மடியில்தான்.இன்றைக்குவரை எனக்கு ஆதர்சம் அவர்தான்.நான் கதை எழுதிய ஒவ்வொரு நாளும் அவரது மடியில் உட்கார்ந்து கதை எழுதுவதான உணர்வே எனக்கு இருக்கும்.எளிய வார்த்தைகளில் எங்கள் கரிசல் மனிதர்களின் கள்ளமில்லாத உள்ளத்துடன் கதை சொன்ன அவர்தான் எமக்கு அப்பா.அவரது சிரிக்கவில்லை,தவப்பயன்,அன்பளிப்பு,கற்பக விருட்சம் போன்ற 11 தொகுப்புகள் அன்று என் கைவசம் இருந்தன. அது பற்றிய அளவற்ற கர்வமும் எனக்கு இருத்து.அவற்றை மொத்தமாக வாங்கிப்போன ஜோதிவிநாயகம் திருப்பித்தராமலே போய்விட்டது ஒரு சோகம்தான்.இன்று மொத்தக்கதைகளின் தொகுப்பு வந்துவிட்டாலும் அந்த என் புத்தகங்கள் போன சோகத்தை அது ஈடு செய்யவில்லை.
50-60 களின் இலக்கிய ஆளுமைகளாக அசோகமித்திரனும் கி.ராஜநாராயணனும் சி.சு.செல்லப்பாவும் ஜி.நாகராஜனும் சுந்தரராமசாமியும் லா.ச.ராமாமிர்தமும் என் வாழ்வில் வந்து சேர்ந்தார்கள்.சென்னை வாழ்வின் கீழ் மத்தியதர வாழ்வைக்களனாக்க் கொண்ட அசோகமித்திரனின் சிறுகதைகளைப்(காலமும் ஐந்து குழந்தைகளும் ) பார்க்கிலும் என்னைப் பாதித்தவை அவரது அற்புதமான நாவல்களான கரைந்த நிழல்கள்,தண்ணீர்,பதினெட்டாவது அட்சக்கோடு போன்றவைதாம்.தண்ணீரில் வரும் ஜமுனாவின் துக்கம் நம்முடையதாகிவிடும்.அதை ஒரு குறியீட்டு நாவல் என்று அப்போது பேசிக்கொள்வார்கள்.பத்னெட்டாவது அட்சக்கோடு ஹைதராபாத்தைக் கதைக் களனாகக் கொண்டு இந்து முஸ்லீம் கலவரத்தில் சிதையும் மனித மாண்புகள் பற்றி நுட்பமாகப் பேசிய நாவல்.கி.ரா எங்க காட்டுப் பெரியவர். வேட்டி,கிடை,கன்னிமை போன்ற சிறுகதைத் தொகுப்புகளாலும் கோபல்லபுரம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் ஆகிய நாவல்களாலும் கரிசல் வாழ்வின் பல பரிமாணங்கலை எளிய பேச்சுவழக்கில் கதைகளாக்ச் சொன்னவர் கி.ரா.பிரசாதம் சிறுகதைத் தொகுப்புத்தான் சுந்தரராமசாமியின் எழுத்துக்களில் நான் முதலில் வாசித்தது.புளியமரத்தின் கதையை ரொம்ப்ப் பின்னாளில்தான் வாசித்தேன்.அவருடைய எழுத்தின் மீது ஏற்பட்ட ஒரு வசீகரமும் மோகமும் இன்றுவரை தீரவில்லை.ஜே.ஜே.சில குறிப்புகள்தான் அவருடைய மாஸ்டர்பீஸ்.கருத்துரீதியாக அந்நாவலில் விமர்சனம் எனக்குண்டெனிலும் மொழி மற்றும் உத்தி ரீதியில் அது வந்த காலத்தில் மிக முன்னதாகப் பாய்ந்த படைப்பு அது.லா.ச.ராவை அன்று வாசித்தபோது பிரமிப்பாக இருந்தது.மொழியின் எல்லைகளை இவ்வளவு தூரம் விரிக்க முடியுமா என்று வியந்ததுண்டு.பின்னர் 90களில் அபிதாவை எடுத்து வாசித்தபோது என்னால் வாசிக்கவே முடியாத அயர்ச்சி ஏற்பட்டது.ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு குறுநாவலும் நாளை மற்றொரு நாளே நாவலும் தமிழ் நவீன இலக்கியம் அதிகம் பேசாத பக்கங்களைப் பேசின.எல்லோரும் வாழ்க்கையை முன்வாசல் வழியாகப் பார்க்கும்போது ஜி.நாகராஜன் புழக்கடை வழியே அதைப் பார்க்கிறார் என்ற சு.ரா.வின் கருத்து முற்றிலும் சரிதான்.இன்றும் என்னை ஈர்க்கும் ஒரு எழுத்து ஜி.நாகராஜனுடையது.
70-80 களில் நானும் மைதானத்தில் இறங்கியிருந்தேன்.எனக்கு முன்னால் பிரபஞ்சனும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும்,பூமணியும்,பா.செயப்பிரகாசமும் ,கந்தர்வனும் மேலாண்மை பொன்னுச்சாமியும் போய்க்கொண்டிருந்தார்கள்.
தொழிற்சங்க மற்றும் இலக்கிய உலகத்தோடு நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து சில வேலைகளைச் செய்தபோது என் அறிவுலகின் வாசல்கள் இன்னும் அகலத் திறந்தன.கே.கிருஷ்ணகுமாரின் இயற்கை,சமுதாயம்,மனிதன் என்ற புத்தகம் எளிமையாக மனித குலவரலாற்றினூடாக அறிவியல் செய்த பயணம் பற்றிப் பேசியது. அறிவியல் இயக்கம் எனக்குச் செய்த மாபெரும் உதவி சில தலை சிறந்த மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்ததுதான். ச.மாடசாமி,டாக்டர் சுந்தரராமன்,டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன்,டாக்டர் ராமானுஜம்,டாக்டர் (?) செந்தில்பாபு போன்ற அறிஞர்கள் எனக்கு முற்றிலும் புதியதோர் உலகத்துப் புத்தகங்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களாக அமைந்தனர்.
எளிய மக்களின் மனதோடு பேசும் கலையைக் கற்றுத்தந்த பேராசிரியர் ச.மாடசாமியின் எனக்குரிய இடம் எங்கே? அவரவர் கிணறு,சொலவடைகளும் சொன்னவர்களும் ஆகிய மூன்று நூல்களும் வாசிப்பவரின் மனங்களை விசாலமாக்கும் தன்மையுடையவை..சொலவடைகள் புத்தகம் கடுமையான உழைப்பையும் ஈடுபாட்டையும் கோரிய புத்தகம்.டாக்டர் சுந்தரராமன் தான் எமக்கு அந்தோனியோ கிராம்ஷியையும் மிஷேல் பூக்கோவையும் அறிமுகம் செய்து வைத்தவர்.அவருடைய அறிமுகத்தால் உந்தப்பெற்றுத் தேடிப் பிடித்து வாசிக்க முயன்ற புத்தகங்களென கிராம்ஷியின் PRISON NOTE BOOK மற்றும் CULTURAL WRITINGS ஆகிய இரு நூல்களையும் குறிப்பிட வேண்டும்.தோழர் தொ.மு.சி.ரகுநாதனின் கடைசி நாட்களில் இப்புத்தகங்களை அவர் கேட்கக் கொண்டுபோய்க் கொடுத்த சந்தோஷமும் எனக்குக் கிட்டியது.சவுத் விஷன் பாலாஜி வெளியிட்ட (எஸ்.வி.ஆர்-கீதா) அந்தோனியோ கிராம்ஷி-வாழ்வும் சிந்தனையும் அக்காலத்தில் முதல் அறிமுக முயற்சி.இப்போது விடியலில் அதைவிட நல்ல புத்தகங்கள் வந்துவிட்டன.
செந்தில்பாபு வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்வாம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.இப்போது அவரை விடவே முடியவில்லை.நான் முதலில் வாசித்த்து அவரது AGE OF EXTREMES தான் .நான் வாசித்த வரலாற்று நூல்களில் CLASSIC என்று இந்நூலைத்தான் சொல்வேன்.20ஆம் நூற்றாண்டைப்பற்றிய ஒரு முழுமையான பார்வையை இந்நூல்தான் வழங்கியது.அவருடைய Nations and Nationalism,Age of Empires,Age of Capitalism, சமீபத்திய Globalisation,Democracy and Terrorism போன்ற நூல்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரிந்துகொள்ள உதவிய நூல்கள்.ஒவ்வொரு நூற்றாண்டும் நமக்குச் சில வார்த்தகளை விட்டுச்செல்கின்றன என்கிற அவருடைய வரியும் மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு-நினைவு படுத்திக்கொண்டே இருப்பது வரலாற்றாளனின் கடமை என்கிற வரியும் மறக்க முடியாதவை.
த.வி.வெங்கடேஸ்வரன் திருவனந்தபுரத்தில் இருந்தபோதும் இப்போது டெல்லியில் இருக்கும்போதும் அவ்வப்போது அறிய புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்பவராக இருக்கிறார்.முக்கியமாக புவியியல் நூல்களின் அரசியலை எனக்குப்புரிய வைத்து Jared Diamond என்கிற அற்புதமான புவியியல் எழுத்தாளரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.Jared Diamond இன் Why Geography என்கிற நூல் புவியியல் கற்பதன் அவசியத்தையும் உன்னதத்தையும் எனக்கு உணர்த்தின.அவருடைய இன்னொரு புத்தகமான GUNS,GERMS AND STEEL இதுவரையிலும் பார்க்காத ஒரு புதிய புவியியல் கோணத்தில் உலக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவியது.வரைபடங்களின் அரசியலையும் வரைபடங்களின் வழியே வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் SUSAN GOLE அவர்களின் நூல்கள் சில உதவின.குறிப்பாக INDIA WITHIN GANGES- இண்டியா இந்த்ரகேஞ்சம் என்கிற அவரது நூல் ஐரோப்பியர்களின் பார்வையில் ஆதி காலந்தொட்டு இந்தியா பற்றிய சித்திரங்கள் எவ்விதம் மாறி மாறி வடிவம் கொண்டன என்பதை விளக்குகிறது.- இப்பாதையில் புத்தகங்களோடு என் வாழ்வில் குறுக்கிட்ட இன்னொரு ஆளுமை சேலம் சகஸ்ரநாமம்.நானும் அவரும் சேர்ந்து மனிதகுல வரலாறு,சமூக வரலாறு, கட்சித்திட்டம் போன்றவற்றை நழுவுபடக்காட்சிகளாகத் தயாரிக்கப் பெரும் திட்டங்கள் தீட்டினோம்.(நடக்கிறதோ இல்லையோ கனவுகளை விரித்துக்கொண்டே இருப்பதுதான் வாழ்வின் ஆதாரம் இல்லையா).மனித குல வரலாறு தொடர்பான சமீபத்திய பல நூல்களை அவர் பல ஊர்களிலிருந்து தருவித்தார்.ஒரு மேப் பாணியிலான கண்காட்சியைத் தயாரித்து ஆளுக்கு ஒரு செட் வைத்துக்கோண்டோம். சில ஊர்களுக்குக் கொண்டு சென்றோம்.அதற்குள் பவர் பாயிண்ட் என்கிற இன்னும் சிறப்பான வடிவம் வந்துவிட்டது.அவர் மூலம் வாசிக்க்க் கிடைத்த புத்தகங்களில் முக்கியமானவையாக JaredJared Diamond எழுதிய DioThe Rise anf Fall of Third Chimpanzee யையும் by Robert Wright எழுதிய The Moral Animal என்கிற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.மரபணு ஆராய்ச்சிகளின் விளைவாக மனித குலம் பிறந்தது ஆப்பிரிக்கா கண்ட்த்தில்தான் என்பது நிரூபணமான பிறகு இந்நூல்களை வாசித்தது நம் வேர்களை இன்னும் நெருக்கமாக அடையாளம் காண உதவியது. நமது ஆதி விலங்கினத் தொடர்பு எவ்விதம் இன்றுவரை நம் பண்பாட்டு வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் நாம் ஏன் இவ்விதமாக வாழ்கிறோம் என்பதற்கான டார்வினிய அடிப்படையிலான விளக்கத்தை இந்நூல்கள் அளிக்கின்றன.
90களில் சோவியத் யூனியன் சிதறுண்டதும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் வீழ்ச்சியடைந்ததும் பண்பாட்டுத்தளத்தில் நாம் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. எனது பார்வையும் இயக்கத்தின் பார்வையோடு சேர்ந்து மாற்றம் பெற்றது.அம்பேத்கரின் நூற்றாண்டு அவரது சிந்தனைகளின் மீது கவனத்தைத்திருப்பியது எனலாம்.அவரது நூல்கள் தமிழில் வெளியாகத் துவங்கியதும் ஈர்ப்புக்கு ஒரு வடிவம் கொடுத்தது.அவருடைய இந்தியாவில் சாதிகள் என்கிற கொலம்பியா பல்கலைக்கழக உரையும் புத்தரும் அவரது தம்மமும் என்கிற நூலும் காந்தியும் காங்கிரசும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன என்கிற நூலும் முதல் வாசிப்பிலேயே வாசகனின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன.அவரைப்பற்றிய புத்தகங்களில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் அம்பேத்கர் ஆய்வு மையம் வெளியிட்ட அம்பேத்கர்-ஒரு பன்முகப்பார்வை ஒரு நல்ல எளிமையான அறிமுக நூலாகவும் DR.AMBEDKAR AND UNTOUCHABILITY- என்கிற CHRISTOPHER JAFFRELOT அவர்களின் நூல் அவரது சிந்தனைகளின் அறிமுகமாகவும் எனக்கு வாசிக்கக் கிடைத்தன.மராட்டிய அரசு வெளியிட்டுள்ள 40க்கு மேற்பட்ட அம்பேத்கர் நூல்வரிசையில் 20க்கு மேற்பட்டவற்றை வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். முழு தொகுதிகளையும் வாங்கியாக வேண்டும்.அவருடைய ஆய்வு முறையும் ஆழ்ந்தகன்ற வாசிப்பும் ஒவ்வொரு வார்த்தையிலும் குமுறும் அவரது கோபாவேசமும் அம்பேத்கரை என் மனதின் உச்சத்தில் கொண்டு வைத்துள்ளது-மிகத் தாமதமாக அவரிடம் வந்து சேர்ந்தோமே என்கிற குற்ற உணர்ச்சியுடன்.
தந்தை பெரியாரின் நூல்களில் பெண் ஏன் அடிமையானாள்? மற்றும் திராவிடர் கழக வெளியீடுகளான பெரியார் களஞ்சியம் பத்துத் தொகுதிகள் (பெண்ணியம்,சாதி மட்டும்)வாங்கி வாசித்திருந்தாலும் வழக்குகளைச் சந்தித்து வெற்றி கண்டு பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் வெளியிட்ட பெரியாரின் குடி அரசு எழுத்துக்களின் 27 தொகுதிகளை வாங்கி பரீட்சைக்குப் படிப்பது போல (ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டி இருந்ததால்)படித்த அனுபவம் அலாதியானது.பெரியாரின் எழுத்துக்களில் மிளிரும் கிண்டலும் கேலியும் நாட்டுப்புறக் கதைகளும் சொலவடைகளும் தனியே விவரித்து எழுதத்தக்கவை. காதல் பற்றிய அவரது கிண்டலான கருத்துக்கள் முதல் வாசிப்பில் எனக்கு வியப்பூட்டின. மக்கள் மொழியில் மக்களிடம் பேசிய மகத்தான தலைவராக அவர் மனதில் உயர்ந்து நிற்கிறார்.கிராம்ஷி சொல்லும் Organic Intellectual இவர்தான் என்று தோன்றியது.
பெண்களின் நிலை குறித்துத் தொடர்ந்து பேசி வந்தாலும் வலுவான புத்தகங்கள் வாசிக்க்க் கிடைக்காத சூழலில் எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஏ.எஸ்.பத்மாவதி அவர்கள் வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது அரிய பல நூல்களை அப்படியே எனக்கே எனக்கு என அள்ளிக்கொடுத்து விட்டார்.அவற்றில் – SIMON DE BEUOVA எழுதிய நான் ரொம்ப காலமாகத் தேடிக்கொண்டிருந்த THE SECOND SEX என்கிற புத்தகமும் இருந்தது.பிரான்ஸ் நாட்டையும் ஐரோப்பாவையும் குலுக்கிய அப்புத்தகம் பெண்நிலையில் நின்று இவ்வுலகைக் காணப் புதிய சாளரங்களைத் திறந்து விட்டது.The Beauty Myth மற்றும் Sacrificing Ourselves ஆகிய இரு புத்தகங்களும் வ.கீதா எழுதிய Gender மற்றும் Patriarchy ஆகிய இரு நூல்களும் பெண்ணியம் தொடர்பான என் பல குழப்பங்களுக்கும் விடையளிப்பதாக அமைந்தன.
நெல்லைக்குப் பணியாற்ற வந்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தமிழறிஞர் தொ.பரமசிவமும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனும் எனக்குச் செய்துள்ள உதவிகள் சொல்லாலே விளக்கிவிட முடியாதவை.இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த சில முக்கியமான புத்தகங்களை சலபதிதான் எனக்கு வாங்கித்தந்தார்.ஊர்வசி புட்டாலியாவின் The Otherside of Silence கமலா பாஷின் எழுதிய Borders and Boundaries ஆகிய இரு நூல்களும் எந்த வரலாற்று நூலும் இதுவரை சொல்லியிராத தேசப்பிரிவினையின் காயங்களைத் திறந்து காட்டின.இந்தியாவின் விடுதலை என்பது பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட ஒரு வரலாறுதான் என்பதை இவ்விரு நூல்களும் நம் முகத்திலறைந்து சொல்கின்றன.கண்ணீரில் கரைந்தபடி வாசித்த நூல்கள் இவை.எஸ்.ராமானுஜம் மொழி பெயர்ப்பில் வெளியான மண்ட்டோ படைப்புகள் இவ்வரிசையில் ஓர் மகத்தான நூலாகும்.
தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் என்கிற நூல் தமிழகப்பண்பாட்டு வரலாற்றில் உண்மையிலேயே அறியப்படாத ஒரு தமிழகத்தை அறிமுகம் செய்து பலத்த அதிர்வுகளை உண்டாக்கிய நூல்.அந்நூலை நாங்கள் எம் தோள்களில் சுமந்து சென்று விற்பனை செய்தோம்.இன்று அவருடைய எல்லாக் கட்டுரைகளும் பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலாக வந்துள்ளது.நாட்டார் தெய்வங்களி வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டுவந்த வாழும் நா.வானமாமலை என நான் மதிக்கிற தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் அடித்தள மக்கள் வரலாறு, கொலையில் உதித்த தெய்வங்கள்,கிறித்துவமும் சாதியும் ,மந்திரங்கள் சடங்குகள் என அவரது ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு எழுத்தும் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்க உதவும் அடிப்படையான நூல்களாக அமைந்துள்ளன.சின்ன வயதிலேயே பெரும் சாதனைகள் புரிந்தவராக நான் மதிக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் அந்தக்காலத்தில் காப்பி இல்லை,நாவலும் வாசிப்பும்,திராவிட இயக்கமும் வேளாளரும்,முச்சந்தி இலக்கியம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழில் வரலாற்று நூல்களின் வரிசையில் மிக முக்கிய இடம் பிடிப்பவை.
தமிழகத்தில் நானறிந்த ஒரே பொருளாதார வரலாற்றாய்வாளரான முனைவர் கே.ஏ.மணிக்குமாரின் 1930களில் தமிழகம் என்கிற நூலும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த அவரது 1957 RIOTS என்கிற நூலும்(அச்சில்) தமிழக வரலாற்றுக்கு அரிய பங்களிப்புகளாகும்.முத்துராமலிங்கத்தேவர் பற்றிய ஒரு விருப்பு வெறுப்பற்ற கணிப்பை மணிக்குமார் அவர்களின் இந்நூல் செய்துள்ளது குறிப்பிட்த்தக்கது.1930களில் தமிழகம் நூலை முன் வைத்து புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றை ஆய்வு செய்து பார்ப்பது அவசியம்.30களின் பொருளாதார மந்தம் பற்றி பல கதைகளில் புதுமைப்பித்தன் அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.
நான் சந்தித்த மனிதர்கள் எல்லோருடைய முகங்களுமே எனக்குச் சில புத்தகங்களாகவே மனதில் தோன்றுகின்றன.புத்தகம் சுமந்த (புத்தகங்களை நானும் என்னைப் புத்தகங்களும் ) வரலாறுதான் என் கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமுமாக இருக்க முடியும்.என் மனப்போக்கின் ஒவ்வொரு திருப்பத்தையும் நடப்புகளும் நிகழ்வுகளும் தீர்மானித்ததை விட மேலே குறிப்பிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களே தீர்மானித்தன என்று உறுதியாகச் சொல்லுவேன்.
சமீபத்திய வாசிப்பில் இளம்பிறை,குட்டி ரேவதி, சுகிர்தராணி,சல்மா,மாலதி மைத்ரி போன்ற பெண் படைப்பாளிகளின் கவிதைகளும் கதைகளும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் தன் வரலாறும் ப்ரியாபாபுவின் எழுத்துக்களும் என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன என்பேன்.இவர்களைப்பற்றி இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு வரியில் எழுதுவது நியாயமில்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வாழ்வை முன்வைத்துப் பேசுகிறார்கள்.பொதுவான அம்சம் ஒன்றுண்டு என்பதால் பொதுவாக்க் குறிப்பிட்டேன்.வாசிக்கும் ஆண் மனதைக் குற்ற உணர்வு கொள்ளச்செய்யும் படைப்புகளாக இவை யாவும் உள்ளன என்பதே அது.
கீரனூர் ஜாகிர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா,யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி மற்றும் சேகுவேரா இருந்த வீடு போன்ற படைப்புக்கள் சமீபத்தில் நான் வாசித்து அதிர்வுக்குள்ளான உயிர்த்துடிப்புள்ள படைப்புக்கள்.இஸ்லாமிய வாழ்க்கைப் பின்புலத்தோடு மனித வாழ்வை, நம்பிக்கைகளை , மனித மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் நாவல்களைத் தொடர்ந்து எழுதி வரும் ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களில் தனித்துவமான ஒன்றாக வடக்கே முறி அலிமாவை நான் மதிப்பிடுகிறேன்.ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புஷ்பராஜாவின் புத்தகமும் ராஜனி திரானகம எழுதிய முறிந்தபனை யும் காட்டிய ஈழப்போராட்ட்த்தின் மறுபக்கத்தையும் முழுமையான சித்திரத்தையும் வலி மிகுந்த வாழ்க்கையையும் துக்கத்தின் உச்சியில் பிறக்கும் பகடியாக யோ.கர்ணன் தன் சிறுகதைகளில் எழுதிச்செல்கிறார்.சேகுவேரா இருந்த வீடு ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் குறியீடாக அமைந்துவிட்ட்து.
கோ.ரகுபதியின் தலித்துகளும் தண்ணீரும் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகம்.பாவங்களைக் கழுவும் புனித வஸ்துவாகக் கருதப்படும் தண்ணீரைக் குடிப்பதற்காக தலித்துகள் நடத்தி வரும் போராட்டங்களை வரலாற்று ரீதியில் விளக்கும் இந்நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.சு.கி.ஜெயராமன் தொடர்ந்து எழுதிவரும் புவியியல் சார் புத்தகங்களான குமரி நில நீட்சி,மணல் மேல் கட்டிய பாலம் போன்றவை இன்றைய இந்துத்துவப் புரட்டுகளையும் புளுகுமூட்டைகளையும் எதிர்கொள்ள உதவும் முக்கியமான புத்தகங்கள்.
என் இலக்கிய வாசிப்பு குறித்துப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன்--500 புத்தகங்களுக்கு மேல் அது வளரும் என்பதால்.
.இவையெல்லாம்தான் என் புத்தகங்கள்.இவற்றை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டுதான் என் அன்றாடம் நகர்கிறது.இன்னும் கூட வாசிக்காத பல புத்தகங்கள் என் அலமாரிகளில் இருக்கின்றன.வாழ்வு முடிவதற்குள் நம்மிடம் இருக்கும் புத்தகங்களையாவது நாம் வாசித்து முடிப்போமா என்கிற சந்தேகம் அவ்வப்போது வரத்தான் செய்கிறது.என்றாலும் வாசிக்காமல் முடியாது.வாசித்தாலும் தீராது.
இப்படிச் சொல்ல உங்களுக்கும் நிறையவே இருக்கும்

Monday, January 23, 2012





















எழுதியது ச.தமிழ்ச்செல்வன்

மாற்றுத்திறனாளி விக்னேஷ்வர் படுகொலை
---------------------------------------------------------

நில மோசடிக்கென்று தனி காவல்துறை விசாரணையெல்லாம் நடப்பதாக சொல்லப்படுகிறது.திமுக முன்னாள் அமைச்சர்களெல்லாம் கைதாகவாதாக பத்திரிகைகளில் படங்கல் வருகின்றன.ஆனால் என்ன ஆட்சி மாறினாலும் இந்த மாஃபியா கும்பலின் ஆதிக்கம் தமிழகத்தை ஆக்டோபஸ் போல கவ்விக்கொண்டிருக்கிறது.
நேற்று தூத்துக்குடி மாவட்ட சிபிஎம் செயலாளர் கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.அவரது துணைவியார் தலைக்காயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார்,இன்று இதோ நம் அன்புத்தோழன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் செயல்வீரன் புவனேஷ்வரன் சென்னைக்கு அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது.
திரு.புவனேஷ்வரன் அவர்கள் ஆவடி அருகே மோரே கிராமத்தில் நில மோசடிக்கு எதிராகக் கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி வருபவர்.அப்பகுதியிலுள்ள வீராபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாலராகவும் பணியாற்றி வருபவர்.தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக கடந்த ஆண்டு சிலருக்கு மோசடியாளர்களிடமிருந்து நிலம் மீட்டுத்தரப்பட்டது.புவனேஷ்வரன் உள்ளிட்ட இன்னும் சிலருடைய அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படவில்லை.சட்டரீதியாகவும் ஜனநாயக அடிப்படையிலும் அவர் தொடர்ந்து போராடி வந்த சூழலில் நேற்று 10 ஆம் தேதி பட்டப்பகலில் அவர் நில மோசடிக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும்.உரிய தண்டனை பெற வேண்டும்.நில மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டுக் கைது செய்யப்பட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய நிலம் மீட்டுத்தரப்பட வேண்டும்.கொலை மிரட்டல் பற்றி அறிந்தும் மெத்தனமாக இருந்த காவல்துறையும் விசாரிக்கப்பட வேண்டும்.
அனைவரும் கண்டனக்குரல் எழுப்புவோம்.அவர் அனைத்துவகை மாற்றுத்திரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டப்பொருளாளராகப் பணியாற்றியவர்.
தீரமிக்க ஒரு தோழனை இழந்து நிற்கும் அவருடைய இயக்கத்துக்கும் குடும்பத்துக்கும் தோள் கொடுப்போம்.

அலுவலகத்தின் மீது தாக்குதல் தமுஎகச கண்டனம்
============================================


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு
11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625011
421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018
நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல்
தமுஎகச கண்டனம்
முதல்வர் ஜெயல்லிதா அவர்கள் மீது அவதூறுச் செய்தி வெளியிட்ட்தாக்க் கூறி சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் 300 பேர் திரண்டு சென்று தாக்கி அங்குள்ள பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர்.ஒரு சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில் இந்த அராஜகம் நிகழ்ந்துள்ளது.பத்திரிகையில் செய்தி வெளியிட்டால் அதன் மீது கருத்து மாறுபாடு இருக்கும் பட்சத்தில் சட்டபூர்வமாக வழக்குத்தொடுத்தோ பிரஸ் கவுன்சிலில் முறையிட்டோ எதிர்ப்பைத் தெரிவிக்க ஜனநாயகப் பூர்வ வழிகள் பல இருக்க அதையெல்லாம் கைவிட்டு இப்படி நேரடித் தாக்குதலில் ஆளும் கட்சியினரே இறங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது.முதல்வர் அவர்களும் இச்செயலைக் கண்டனம் செய்யாத்து வருத்த்துக்குரியது. திருச்சியில் நக்கீரன் பத்திரிகையை எரித்தபோது அதிமுக தொண்டர் ஒருவர் தீக்காயத்துக்கு ஆளானதும் நடந்துள்ளது.இத்தகைய கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளை தமுஎகச வன்மையாக்க் கண்டனம் செய்கிறது.
அதே சமயத்தில் பரபரப்பான வியாபாரத்துக்காக செய்திகளை வெளியிடுவதில் எந்த எல்லைக்கும் செல்ல்லாம் என்கிற நக்கீரனின் போக்கை ‘பத்திரிகை சுதந்திரம்’ என வரவேற்க முடியாது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்
ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்
மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்
மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைத்தளத்தில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்
சு.வெங்கடேசன்

காவல் கோட்டம் –
===============
ஓர் அனுபவம்
=================
இந்த நேரத்தில் தமிழ்பேப்பர்.நெட் டில் வெளிவந்துள்ள இக்கட்டுரை முக்கியத்துவமும் சுவாரஸ்யமும் பெறுகிறபடியால் கீழே தந்துள்ளேன்.சி.சரவணகார்த்திகேயன்
“Good writers write the kind of history good historians can’t or don’t write.” – Daniel Aaron
சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலை நான் வாசித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும், அதற்கு 2011 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கும் இவ்வேளையில் அதைப் பற்றி எழுத முயல்வது பரிசுத்த‌மான‌ சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. ஆனாலும் இப்போதேனும் இந்த நாவல் குறித்த கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அமைந்ததே என்றே எடுத்துக்கொள்கிறேன்.
காவல் கோட்டம் என்கிற பிரம்மாண்டமான நாவல் வெளியாகியிருக்கிறது என்ற தகவல் டிசம்பர் 2008 வாக்கில் சிறுபத்திரிக்கைகள் வாயிலாக அறிந்திருந்தாலும் அது குறித்த முதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆண்டிறுதி ஆனந்த‌ விகடன் இதழில் வெளியிடப்பட்ட விகடன் அவார்ட்ஸ் 2008 தான். அதில் அவ்வாண்டின் சிறந்த நாவல் என்று காவல் கோட்டம் நாவலைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
பிப்ரவரி 2009 காலச்சுவடு இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி காவல் கோட்டம் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை (களவியல் காரிகை) வெளியாகி இருந்தது.
மார்ச் 2009 தீராநதி இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய விமர்சனக் கட்டுரையான ‘காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’ (பகுதி-1, பகுதி-2) தான் அடுத்த‌ தூண்டுகோல். அதில் விழுந்திருந்தது வெறுப்பின் சாயை மட்டுமே என்பது நாவலைப் படிக்காமல் கட்டுரையின் பாணியிலேயே தெரிந்து விட்டது.
ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ம.மணிமாறன் ஆகியோர் இதைக் கண்டித்து மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். மேலாண்மை பொன்னுச்சாமியும் ‘காவல் கோட்டம் : மீள் விசாரணை – ஆயிரம் பக்க அதிசயம்’ என்று நாவலைப் புகழ்ந்துரைத்து ஒரு விமர்சனம் எழுதினார். ஜெயமோகனும் சற்று நாசூக்காக இதைக் கடிந்து எழுதியிருந்தார் (“முன்நிலைபாடுகளும் கசப்புகளும் இல்லாமல் வாசிப்பதே”). எஸ்.ரா.வின் மொழியா இது என செல்வேந்திரன், ஹரன் ப்ரசன்னா, யாழிசை லேகா உள்ளிட்ட சில வலைப்பதிவர்களும் ஆச்சரியம் காட்டி இருந்தனர்.
ஜ.சிவகுமார் என்ற சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை ஆகிய நாவல்களுடன் காவல் கோட்டத்தை ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.
பிற்பாடு அக்டோபர் 2009ல் ஜெயமோகன் காவல் கோட்டம் பற்றி மிக விரிவாக தன் வலைப்பதிவில் எழுதினார் (பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4, பகுதி-5). அவர் இதுகாறும் வேறு ஏதேனும் நாவலுக்கு இது போன்றதொரு நீண்ட விமர்சனம் எழுதி இருக்கிறாரா என்பது சந்தேகமே. இந்தத் தனித்துவமே எனை வசீகரித்தது.
அதன் காரணமாகவே சு.வெங்கடேசனின் எந்தப் படைப்பையும் அதற்கு முன்பு படித்ததில்லை என்ற போதிலும் ஜனவரி 2010 சென்னைப் புத்தகக் காட்சியில் காவல் கோட்டம் நாவலை வாங்கினேன். கொஞ்சமும் மெருகு கலையாத புது மணப்பெண் மாதிரி காத்திருந்தது காவல் கோட்டம்.
பின் 2010ன் கோடையில் என்பதாக ஞாபகம் – காவல் கோட்டத்தை முதன் முதல் ஸ்பரிசித்தேன். கிட்டதட்ட ஒரு மாதம் போல் நீடித்த நீண்ட கூடல் அனுபவமது. கூடலை நீட்டிப்பதற்காக அல்லாமல் தொடர்வதற்காக Start and Stop Technique பயன்படுத்த வேண்டி இருந்தது. இடையில் சற்றே இளகிக் கொடுத்தாலும் இறுதி வரை மிகுந்த உழைப்பையும் பொறுமையையும் கோரும் ஓர் அடங்காப் புரவியாகவே இருந்தது காவல் கோட்டம். சமீபத்தைய மறுவாசிப்பிலும் கூட‌ அப்படியே தான்.
எந்த சந்தர்ப்பத்திலும் நாவலின் எந்தப் பகுதியையும் என்னால் தொடர்ச்சியாய் மூன்று மணி நேரத்திற்கு மேல் படிக்க இயலவில்லை. இடைவெளி எடுத்துக் கொண்டு அதுவரை படித்ததை கிரகித்து உள்வாங்கி ஜீரணித்த பின்பே அடுத்த பகுதியை மீண்டும் தொடர வேண்டி இருந்தது. இதன் அர்த்தம் காவல் கோட்டம் நாவல் சுவாரஸ்யமாய் இல்லை என்பதில்லை. இதன் அடர்த்தியும், செறிவும் அத்தகைய அக்கறையை, கவனத்தைக் கோருகிறது. இதை ஒரு வாசிப்பு என்று சொல்வதை விட ஓர் அனுபவம் என்பதே சரி. இதற்கு முன்பு இத்தகையதோர் அனுபவத்தைத் தந்த நாவல் என்றால் அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் தான்.
நாவல் இதுவரை மூவாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமற்றதொரு தகவல் வழி அறிகிறேன். அது உண்மையெனில் அதில் ஒரு சதவிகிதம் பேராவது (அதாவது முப்பது பேர்) இந்நாவலை முழுக்க ஊன்றிப் படித்திருப்பார்களா என்கிற என் அடிப்படைச் சந்தேகத்தை நேரடியாக‌வே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
*
நாவல் பற்றிப் பேசப்புகும்முன் தமிழில் என் வரலாற்று நாவல் வாசிப்புத்தகுதியை கொஞ்சம் எடை போட்டுக் கொள்வோம். இதுவரை கல்கி, சாண்டில்யன், அகிலன், கருணாநிதி, ர.சு.நல்லபெருமாள், ஜெகசிற்பியன், விக்கிரமன், அரு.ராமநாதன், ப.சிங்காரம், பிரபஞ்சன், சுஜாதா, பாலகுமாரன், ரா.கி.ரங்கராஜன், கௌதம நீலாம்பரன், கவிஞர் வைரமுத்து, விசாலி கண்ணதாசன் ஆகியோர் எழுதிய குறைந்தபட்சம் நூறு சரித்திரப் புதினங்களையேனும் வாசித்திருப்பேன்.
அண்ணாத்துரை, ந.பார்த்தசாரதி, கோவி. மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், கண்ணதாசன், மு.மேத்தா, இந்திரா சௌந்தர்ராஜன், பா.விஜய் ஆகியோர் எழுதிய சரித்திர நாவல்கள் எதையும் படித்ததில்லை. தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. பி. ஆர். இராஜமையர் எழுதிய முதல் தொடர்கதையான கமலாம்பாள் சரித்திரம் படித்தது இல்லை. தமிழின் முக்கிய சரித்திர நாவல் முயற்சிகளாகக் குறிப்பிடப்படும் சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம், பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் இரண்டையும் படித்ததில்லை. கள்ளர் பற்றிப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை இரண்டையும் கூட இதுவரை படித்ததில்லை.
வாசித்தவரையில் கீழ்க்காணும் நாவல்கள் முக்கியமானவையாகப் படுகின்றன: பொன்னியின் செல்வன் (கல்கி), ஜலதீபம் (சாண்டில்யன்), கல்லுக்குள் ஈரம் (ர.சு. நல்லபெருமாள்), புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்), வீரபாண்டியன் மனைவி (அரு.ராமநாதன்), பொன்னர் சங்கர் (கருணாநிதி), வானம் வசப்படும் (பிரபஞ்சன்), நான் கிருஷ்ணதேவராயன் (ரா.கி.ரங்கராஜன்) மற்றும் உடையார் (பாலகுமாரன்).
சு.வெங்கட்டேசனின் காவல் கோட்டம் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கிறது. அவ்வகையில் நான் வாசித்தவற்றில் மிகச்சிறந்த சரித்திர நாவல் இது தான்.
*
காவல் கோட்டம் என்கிற வரலாற்று நாவல் 2 பெரும் பாகங்களாக (முடி அரசு, குடி மக்கள்), 10 உட்பிரிவுகளாக (மதுரா விஜயம், பாளையப்பட்டு, யூனியன் ஜாக், இருளெனும் கருநாகம், தாதுப்பஞ்சத்திற்கு முன், மெஜுரா சிட்டி, பென்னிங்டன் ரோடு, ரயில் களவு, CT ACT, பட்ட சாமி), 115 அத்தியாயங்களில், 1048 பக்கங்களில் மிகப்பிரம்மாண்டமாக விரிகிறது. காவல் கோட்டம் நாவலின் வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கம் வரை ஊடுவி நிற்கிறது அந்த‌ மகா பிரம்மாண்டம்.
மதுரையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ச‌மணமலையின் அடிவாரத்திலிருக்கும் கீழக்குயில்குடி என்கிற கிராமத்தில் களவையும், காவலையும் தம் குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த‌ கள்ளர் இனத்தவரின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை, தொடர்புடைய ராஜாங்க நடவடிக்கைகள், அரசியல் நிகழ்வுகளுடன் வழங்குகிறது காவல் கோட்டம். புனைவுக்காக சமணமலை அமணமலை ஆகிவிட்டது; கீழக்குயில்குடி தாதனூர் ஆகிவிட்டது.
1310ல் மதுரையில் நடந்த மாலிக் கஃபூர் படையெடுப்பில் தொடங்கும் நாவல் 1910ல் பெருங்காமநல்லூரில் நடக்கும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைகிறது. கிட்டதட்ட தொடங்கிய நிலைமையிலேயே முடிகிறது கள்ளர்களின் வாழ்க்கை. வித்தியாசம் பார்த்தால் ஆரம்பத்தில் அகதிகள்; கடைசியில் அடிமைகள். அப்போது முகமதியன்; இப்போது ஆங்கிலேயன்.
இந்த நாவல் பிரதானமாய் கள்ளர் பற்றியது தான் என்றாலும், அதன் ஊடுபாவாய் மதுரையின் சரித்திரம் விளம்ப‌ப்படுகிறது. எப்படி காந்தியின் வரலாற்றை இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, ஹிட்லரின் வரலாற்றை இரண்டாம் உலகப்போரைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, அது போல் தான் கள்ளரின் வரலாற்றை மதுரை ந‌கரின் சரித்திரத்தைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. கள்ளர் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் மதுரையின் அரசியல் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போலவே மதுரையின் பல‌ முக்கிய நடவடிக்கைக‌ளை கள்ளர்களின் செயல்கள் தாம் தீர்மானிக்கின்றன.
நாவலின் மேலோட்டமான கதைச்சரடை சற்று அறிமுகம் செய்து கொள்வோம்.
மாலிக்கஃபூரின் மதுரைப் படையெடுப்பில் கோட்டைக்காவலனான கருப்பணன் இறந்து பட, அவன் கர்ப்பிணி மனைவி சடச்சி தப்பிப்பிழைத்து சிசு ஈனுகிறாள். அவளது ச‌ந்ததி கள்ளர் இனமாக தாதனூர் என்ற இடத்தில் நிலைகொள்கிறது. விஜயநகர அரசி கங்கா தேவி தன் இனமழித்த முகமதிய சுல்தானை பழிவாங்க மதுரை மீது போர் தொடுக்கிறாள். மதுரை விஜயநகர அரசின் வசமாகிறது. சிலபல வாரிசுச்சண்டைகளுக்குப்பின் கிருஷ்ணதேவராயர் விஜய நகர அரசராகிறார். அவர் திறமையான தளபதியான விஸ்வநாதரை மதுரையை ஆட்சிசெய்ய அனுப்புகிறார்.
மதுரையில் நாயக்கர் ஆட்சி உதயமாகிறது. மதுரைக் கோட்டை விஸ்தரிக்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் கட்டப்படுகிறது. மதுரையைச் சுற்றி பாளையங்கள் பிரிக்கப்படுகின்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தாதனூர்க்காரர்களுக்கு மதுரை கோட்டைக் காவல் உரிமை வழங்கப்படுகிறது. அவருக்குப் பின் நாயக்கர் அரசுகள் பல தலைமுறையாக‌ சதிகளிலும், துரோகங்களிலும் சிக்கி உழன்று தவிக்கிறது.
பின்னர் கிழக்கிந்திய கம்பெனி மதுரையை எடுத்துக் கொள்கிற‌து. தொடர்ந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ மதுரை வருகிறது. பிளாக்பர்ன் என்ற கலெக்டரின் காலத்தில் இட விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டை இடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசிலும் தன் மதுரை நகர காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீட்டுக் கொள்கிறார்கள். அரசு சார்பில் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) அமைக்கப்படுகிறது. மதுரைக்கு அருகே மிஷனரி பள்ளி, மியூசியம், காட்டன் மில், ரயில் நிலையம் ஆகியன வருகின்றன. மதுரை நவீனமாகிறது.
தாது வருஷத்தில் கடும் பஞ்சத்தையும் பின் தொடர்ந்து கொள்ளை நோயையும் மதுரை சந்திக்கிறது. நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அரசு தாதனூர்க்காரர்களின் காவல் உரிமையை ரத்து செய்கிறது. எதிர்த்தவர்கள் சிறைபடுகிறார்கள்; சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.
தாதனூர்க்காரர்கள் வேறுவழியின்றி வெளிகிராமங்களில் காவல் பிடிக்கிறார்கள்.
தாதனூருக்கு பென்னிங்டன் ரோடு அமைக்கப்படுகிறது, ஒரு சிறைச்சாலையும் அருகிலேயே கட்டுகிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன. தினசரி அந்த சிறைச்சாலையில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. நல்லூரிலிருக்கும் கள்ளர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸார் துப்பாக்கி ச் சூடு நடத்துவ‌தோடு முடிகிறது நாவல்.
இந்த நாவலின் 10 பக்கங்களிலிருந்து தான் வசந்தபாலனின் அரவான் திரைப்படக் கதை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். படத்தில் வருவதாய்ச் சொல்லப்படும் வரிப்புலி, கொம்பூதி, சிமிட்டி என்ற பெயரில் கதாபாத்திரங்கள் ஏதும் நாவலில் இல்லை. நாவலில் வரும் சின்னான், மாயாண்டி கதை (அத்தியாயங்கள் 37, 38 மற்றும் 40) சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்ப‌ட்டிருக்கலாம் என்பது contextual understanding அடிப்படையிலான என் ஊகக்கணக்கு. அத‌ல்லாதும் இருக்கலாம்.
இது தவிர கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் கதையும் (அத்தியாயம் 32) இதில் வருகிறது. ஆனால் நாயக வழிபாடாக அல்லாமல் சந்தர்ப்பங்களின் காரணமாக கும்பினியை எதிர்க்கும், இக்கட்டின் போது கேட்ட குத்தகையைத் தரத் தயாராகும், இறுதியில் உடல்துண்டாகி ஊருக்கூர் வீசப்படுமோர் அவலச்சித்திரமே மருதநாயகம் யூசுஃப் கான் பற்றி நாவலில் அளிக்கப்படுகிறது. மருதநாய‌மும், கட்டபொம்முவும் ஒரே நாளில் (அக்டோபர் 16) ஆனால் வெவ்வேறு ஆண்டுகளில் தூக்கிடப்பட்டிருக்கிறார்கள் – முன்னவர் 1764ம் ஆண்டு; பின்னவர் 1799ம் ஆண்டு.
*
களவு பற்றிய நான் சுவைத்த முதல் கலை அனுபவம் 1990களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான களவுக்கலை என்ற சுவாரஸ்யமான நாடகத்தொடர் தான். பின்னர் கல்கியின் கள்வனின் காதலி நாவல் முதல் பாலாவின் அவன் இவன் திரைப்படம் வரை எழு த்திலும், காட்சியிலும் பல கள்வர்கள் கடந்து போய் விட்டார்கள். கடைசியாய் இப்போது சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.
கோட்டம் என்ற சொல்லுக்கு இருவிதப் பொருள் கொள்ளலாம். நிர்வாகத்திற்காகப் பகுத்திருக்கும் பிரிவு ஒன்று (உதாரணம் வருவாய் கோட்டம்). மற்றது ஒருவருக்கு எழுப்பப்படும் நினைவிடம் (உதாரணம் வள்ளுவர் கோட்டம்). காவல் கோட்டம் என்ற தலைப்புக்கு இந்த இரு பொருளுமே பொருந்துகின்றன‌. மதுரையின் காவல் பிரிவைக் கவனித்துக் கொண்டவர்களின் கதை என்ற அர்த்தத்திலும். காவல் காரர்களின் நினைவாய் எழுப்பப்படும் ஒரு நினைவுப்புனைவு என்ற வகையிலும்.
ஆனால் நாவலின் உள்ளடக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தலைப்பு பொருத்திப் போகிறதா என்று பார்த்தால் ஆம் என்று சொல்வதில் தயக்கம் இருக்கிறது. களவு போவது என்பது காவல் பெறுவதற்கான உத்தி என்ற கருத்து நாவல் நெடுகிலும் மறுபடி மறுபடி வலியுறுத்தப்பட்டிருந்தாலும், நாவல் முழுக்க முழுக்க களவைப் பற்றியே பேசுகிறது, அதைக் கொண்டாடுகிறது, அதை மகத்துவப்படுத்துகிறது.
களவின் சம்பவங்களும், சாத்தியங்களும் மிக நுட்பமாய் விவரிக்கப்படுகிற‌து. மாறாக காவல் என்பது ஆங்காங்கே இடைவெளி நிரப்பும் சிறு செய்தியாய் மட்டுமே சொல்லப்படுகிறது. உண்மையில் இது களவுக் கோட்டம் தான்.
காவல் கோட்டம் நாவலின் இலக்கியரீதியான செவ்வியல் உச்சங்கள் என்றால் களவு பற்றிய விவரணைகளும், கோட்டை இடிக்கப்படும் நிகழ்வுகளும், பஞ்ச காலம் பற்றிய பகுதிகளுமே ஆகும். இது தவிர தாதனூரில் நடக்கும் திருமணம், மரியாதை, சடங்குகள், வரிகள், பலிகள் ஆகியவை பற்றிய பகுதிகள் கள்ளர் இன வரைவியல் ஆவணமாகக் கொள்ளத்தக்கவை. ஆனால் ஆவணம் என்பதைத் தாண்டி இவை யாவும் சுவாரஸ்யமான நடையில், பாந்தமான இடங்களில் உட்செருகப்பட்டிருக்கின்றன எனப்து தான் இந்நாவலை முக்கியமானதாக்குகிறது.
பாலகுமாரனின் உடையார், கடிகை போன்ற‌ நாவல்களிலும் இது போன்றதான‌ விவரணைகள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை ஒருவித வறட்டு நடையில் எழுதப்பெற்று வெறும் ஆவணமாகத் தேங்கி விடுகின்றன. அதாவது அவற்றில் கலை ஊக்கம் இல்லை; அல்லது குறைவாய் இருக்கிறது. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகிய நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அந்த நாவலுக்கு தேவையிற்ற துருத்தல்களாய் உருத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றில் கலை ஊக்கம் இருந்த போதிலும் நாவலை செம்மையுறப் பயன்படுவதில்லை.
எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவலில் வெக்கை குறித்து நிறைய இடங்களில் விவரித்திருப்பார். அதில் கணிசமானவை ஒரே மாதிரியானதாகவும் (monotonous), தட்டையானதாகவும் சில இடங்களில் எரிச்சலூட்டுவதாகவுமே அமைத்திருக்கும் (வெக்கை எரிச்சலூட்டத்தானே செய்யும்!). அதே போல் காவல் கோட்டம் நாவலில் பல இடங்களில் – குறைந்தபட்சம் நூறு இருக்கும் – இருள் குறித்த விவரணைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எவ்விடமும் அவை அலுப்பூட்டுவதில்லை. எல்லாமே கவித்துவத்துடன் தத்துவார்த்தமாக அமைத்துள்ளன. அதை நினைத்துப் பார்க்கும் போதே பிரம்மிப்பு ஏற்படுகிறது. இந்த இருள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து ஒரு சிறுநூலாக வெளியிடலாம் (கவிதை?) என்று கூட ஓரெண்ணம் ஏற்படுகிறது.
பனைமரத்தில் கட்டிவைத்து கள்ளர்கள் கல்லெறிந்து சிவானந்தய்யர் கொல்லப் படும் காட்சியே நாவலின் புறம் சார்ந்த ஆக‌ உக்கிரமான பகுதி. இது போக‌ அக எழுச்சி உக்கிரங்கள் ஆங்காங்கே மலரவிழ் மொட்டாய் சாத்தியப்பட்டிருக்கின்றன.
*
அறுநூறு வருட காலத்தை அடைத்து நிற்கிறது என்பதால் இந்நாவலில் எந்தப் கதாபாத்திரத்தையும் முதன்மைப் பிரதானமெனக் கொள்ளவியலாது. அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் கள்ளர்கள் தாம் இந்நாவலின் நாயக‌ர்கள். நாவல் முழுக்க மன்னர்களும் மக்களும் வருகிறார்கள், போகிறார்கள் – ஆனால் இடையில் தம்மை எழுதுமொழி வரலாற்றிலோ, வாய்ப்பாட்டு வரலாற்றிலோ அழுந்தப் பதித்துக் கொள்கிறார்கள். நாவலைப் படித்து முடிக்கையில் விசுவநாத நாயக்கரும், மாயாண்டிப் பெரியாம்பிளையும், ஆங்கிலக் கலெக்டர் பிளாக்பர்னும், சிவானந்தய்யரும், டேவிட் சாம்ராஜும் உச்சம் பெற்று மனதில் நிற்கிறார்கள்.
பொதுவாய் வரலாற்றுப் புதினங்களில் பெண் கதாபாத்திரங்கள் கவர்ச்சித் தாரகைகளாகவோ, மதிப்பிற்குரிய மங்கையராகவோ என்ற இரு எதிரெதிர் நிலைகளில்மட்டும் பதிவு பெற்றிருக்கின்றனர் (பொன்னியின் செல்வன், உடையார் மட்டும் விதிவிலக்கு). ஆனால் காவல் கோட்டம் நாவலில் வரும் பெண்களைப் பற்றிய பதிவுகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றது. பேரனுக்காக நாட்டை ஆளும் பொறுப்பேற்றுப் பின்னாளில் அவனாலேயே பலி வாங்கப்படும் ராணி, தன் இனத்தை வதைக்க முனையும் ஐரோப்பியக் காவலனின் கழுத்தைக் கடித்துக்குதறும் கிழவி, பஞ்சகாலத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி தன் செல்வத்தைக் கரைத்து ஊருக்கே கஞ்சி ஊற்றும் தாசி, தன் இனம் சிந்திய ரத்தத்திற்குப் பழிதீர்க்க நேரடியாக போரிலிறங்கி சுல்தானைக் கொல்லும் அரசி, தமக்குள் மட்டுமல்லாது ஆண்க‌ளுடனும் கூட‌ பாலியலை சர்வ சுதந்திரமாய் பேசித்திரியும் பெண்டிர் என்று பெண்களின் பன்முகங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. விஜயநகரப்பெண்கள், நாயக்கர் பெண்கள், கள்ளர் பெண்கள், அக்ரஹாரப் பெண்கள் என்று பரவி விரியும் நாவலில் ஆங்கிலேயப் பெண்களில் ஒருவரைப் பற்றிக் கூட பெரிய அளவிலான விவரணைகள் இல்லை.
திருமலை நாயக்கர் அரண்மனையிலேயே புகுந்து ராஜமுத்திரையைக் களவாடி விடும் கழுவன் என்ற தாதனூர்க்கள்வனைப் பாராட்டி கோட்டைக்காவல் உரிமை தருகிறார் மன்னன் என்றொரு செய்தி இடம் பெறுகிறது. ஆனால் இதே கதையில் களவாடியவனை வஞ்சகமாக வரவழைத்துக் கொன்றதாகவும் ஒரு வெர்ஷனை ஏற்கனவே வேறெங்கோ படித்திருக்கும் நினைவு. நாயக்கர் தந்த கோட்டைக்காவல் உரிமை தான் நாவலின் அச்சு. அதை மையமிட்டுத்தான் நாவலின் அத்தனை சம்பவங்களுமே சுழல்கின்றனை. இந்த உரிமையை விட்டுத்தராதிருக்கும் பொருட்டு தான் இறுதியில் கள்ளர் இனமே அழிய நேரும் சூழ்நிலை உருவாகிறது.
மனிதன் எழுத்தின் வழி, கதைகளின் வழி, அகழ்வுகளின் வழி வரலாற்றைத் தரிசிக்கிறான். அஃறிணை பொருட்களோ எத்தனை ஆண்டு கால வரலாறு என்றாலும் தாமே காத்திருந்து நேரிலேயே பார்த்துக் கொள்கின்றன‌! அப்படி சந்திரஹாச வாளும், சாளுவ கட்டாரியும் ஒரு கட்டம் வரை நாவல் முழுக்கவே புராதனக்குறியீடாய் சமயங்களில் மௌனசாட்சியமாய் உடன் பயணிக்கின்றன.
*
நாவலுக்கென்று பத்து ஆண்டு காலம் உழைத்ததாகச் சொல்கிறார் ஆசிரியர். நாவலில் அடங்காமல் பொங்கி வழியும் தகவல்களைப் பார்க்கும் போது அது எள்ளளவும் மிகையில்லை என்று தெரிகிறது. இந்த தகவல்கள் தாம் சாதனை.
நாவல் முழுக்க சு.வெங்கடேசனின் செறிவான மொழிநடை காணக்கிடைக்கிறது. கதையின் போக்கில் நிகழ்வுகளைத்தாண்டி அவரது நடை நம்மைக் கட்டியணைத்த படியே நகர்த்திச் செல்கிறது. இத்தகைய வசீகர‌ நடை சமகால எழுத்தாளர்களில் மூவருக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது – முதலில் எஸ்.ராமகிருஷ்ணன், அடுத்தது இரா.முருகன், அப்புறம் க.சீ.சிவக்குமார். இத்தனைக்கும் கதையின் கணிசமான பகுதிகள் கள்ளர்களின் பேச்சு மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் கூடப் புகுந்து பிரமாதப்படுத்தி இருக்கிறார் சு.வெங்கடேசன் (அது சரி, வசந்தபாலனின் அரவான் படத்துக்கு சு.வெங்கடேசன் தான் வசகர்த்தாவா?).
காவல் கோட்டம் நாவல் எதைப் பேசுகிறது என்பது தெளிவாய் இருக்கிறது – கள்ளர்களின் கதையினூடாய் மதுரை வரலாற்றின் ஒரு அபாரமான‌ குறுக்கு வெட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. ஆனால் அந்நாவல் முன்வைக்கும் அரசியல் என்ன என்ற கேள்விக்கு தெளிவாய் பதிலிறுக்க முடிவதில்லை. காவல் கோட்டம் களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றுகிற‌து. நமது சமூகத்தின் இன்றைய சிந்தனை முறையானது திருட்டு என்பதை அரசியல் சாசனப்படியான குற்றம் என்று புற‌ அளவில் வரையறுத்ததோடு மட்டுமல்லாது, அதன் அக நீட்சியாக திருட்டை ஓர் ஒழுக்கக்கேடான நடவடிக்கையாகவும் சித்தரித்து வைத்திருக்கிறது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் அச்சித்தாந்தம் சரியென்றே மனதுக்குப் படுகிற‌து. ஆனால் காவல் கோட்டம் நாவலோ அதற்கு நேரெதிராய் களவை வீரமெனச் சித்தரித்து, சமகால மனங்களில் திருட்டு பற்றி நிலவும் பொதுப்புத்திக் கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிற‌து. ஒரு கட்டத்தில் களவு தாம் அறமோ என்று கூட‌ எண்ண வைத்து விடுகிற‌து. என் பாட்டன் திறமான கள்வன் என்பது எவ்வகையில் எனக்குப் பெருமை தரும் என்பது விளங்கவில்லை. ஒருவகையில் அவமானம் ஏதுமில்லை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
நாவலின் பலவீனமான கட்டங்கள் என நாயக்கர் காலம் நேரடி வரலாறாய்ச் சொல்லப்படும் ஆரம்பப் பகுதியையும், உயிர்ப்பின்றிச் சொல்லப்பட்டிருக்கும் குற்றப்பரம்பரைச்சட்டம் வரும் இறுதிப்பகுதியையும் சொல்லலாம். அதிலும் நாவல் தன் முடிவை நெருங்கிச் செல்லும் உச்ச வேளையிலும் களவுக்கலை பற்றிய நுண்விவரணைகள் தொடர்ந்தபடியே இருப்பது (அத்தியாயங்கள் 110 மற்றும் 112) கவனம் கலைப்பதோடு ஒரு கட்டத்தில் ஆயாசமூட்டுகிறது.
தொடர்புடைய‌ வரலாற்றின் சில பகுதிகளை மட்டும் ஏன் தொடவில்லை என்பது புரியவில்லை. உதாரணமாக ஊமைத்துரை வரலாறு விரித்துச் சொல்லப்படுகிறது (அத்தியாயம் 33); ஆனால் கட்டபொம்மு வரலாற்றை ஒற்றை வரியில் கடந்து விட்டார். குஞ்சரம்மாள் கதை சொல்லப்படுகிறது (அத்தியாயம் 77); ஆனால் நல்லதங்காள் கதை சொல்லப்படுவதில்லை. சொல்லப்படாத பின்னதுகளுக்கும் கள்ளர்களுக்கும் தொடர்பில்லை என்று காரணம் சொன்னால் சொல்லப்பட்ட முன்னதுகளுக்கும் கள்ளர்களுக்குமே அதே அளவு சம்மந்தம் தான் இருக்கிறது.
கள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து பாதிரியாராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வளவு பெரிய வரலாற்று நாவலுக்கு அடிக்குறிப்புகள் இல்லை, விரிவான முன்னுரை மாதிரியான விஷயம் இல்லை (இறுதியில் ஆசிரியர் குறிப்பு என்று சொல்லி மூன்று பக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் அதில் பெரிதாய் எந்தத் தகவலும் இல்லை). இதன் காரணமாக நாவலில் எவை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலானவை, எவை உறுதிப்படுத்தப்படாத கேள்விப்பட்ட செய்திகள், எவை முற்றிலும் கற்பனை சார்ந்த‌ புனைவு என்பதில் வாசகன் குழம்புகிறான்.
நாவலின் இலக்கியத்தரம் ஒரு சைனுசாய்டல் அலை (Sinusoidal Wave) கணக்காய் அமைந்திருக்கிறது. விஸ்வநாதர் காலத்தில் சமநிலையில் தொடங்கும் நாவல், நாயக்கர் காலத்தில் எதிர்மறை நிலைக்குச் சென்று விட்டு, கும்பினியர் காலத்தில் சமநிலைக்குத்திரும்பி, பிரிட்டிஷ் அரசின் காலத்தில் உச்சமெய்தி, தாதுப்பஞ்சத்தில் சமநிலைக்கு வந்து, குற்றப்பரம்பரைச்சட்டத்தின் போது எதிர்மறைக்குப் போகிறது.
*
ஒரு பத்தாண்டுகளாக அப்துல் ரகுமான், வைரமுத்து, சிற்பி பாலசுப்ரமணியம், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, புவியரசு என்று அராஜக அட்டூழியம் செய்து வந்த சாகித்ய அகாதமி, கடந்த இரு வருடங்களாகத் தான் மறுபடி தகுதி வாய்ந்த‌ படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2010ல் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுதிக்கும், இப்போது 2011ல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலுக்கும் தரப்பட்டிருக்கிறது. இரண்டுமே தமிழினி வெளியீடுகள்.
சு.வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்ட விருது தொடர்பாய் இரண்டு பிழையான தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன. மிக இள‌ம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறுபவர் சு.வெங்கடேசன் என்பது ஒன்று. காரணம் 1972ல் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற போது ஜெயகாந்தனுக்கு வயது 38. இப்போது விருது பெறும் சு.வெங்கடேசனின் வயது 40. ஒருவேளை விருது பெறும் இரண்டாவது மிக இளையவராக வேண்டுமானால் இருக்கக்கூடும்.
இரண்டாவது ஒரே நாவல் எழுதிய படைப்பாளிக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்கிற கேள்வி. உண்மையில் சாகித்ய அகாதமி விருதானது ஒரு குறிப்பிட்ட படைப்புக்கு வழங்கப்படுகிறதே ஒழிய ஒரு படைப்பாளுமையின் ஒட்டுமொத்த எழுத்துச் சாதனையைக் கணக்கில் கொண்டு அளிக்கப்படுவதில்லை (ஞானபீட விருதுகள் வேண்டுமானால் இப்போபோதெல்லாம் அப்படி வழங்கப்படுகின்றன)‌. விருது பெற்றவர்களில் கணிசமானவர்கள் விருது பெறும் காலத்தில் இலக்கிய வாழ்வினின்று ரிட்டயர்ட் ஆகி விட்டிருந்தார்கள் என்பதால் (அதற்குத் தான் ஒருவேளை விருதோ!?) நம் பொதுப்புத்தியில் இது படைப்பாளிக்கான விருது; படைப்புக்கானது அல்ல என்ற எண்ணம் உறைந்திருக்கலாம். அது விருதுக் கமிட்டியின் பிழையல்லவே. அதனால் ஒரே படைப்பு தான் எழுதி இருக்கிறார் என்றாலும் அது தகுதியானது என்றால் சாகித்ய அகாதமி வழங்கப்படுவதே முறையானது. இம்முறை அந்த விதிமுறை சரியாகப் பின்பற்றிருக்கிறது.
இளம் வயதில் அதுவும் முதல் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது சமீப‌த்தைய சாதனை என்றால் அழகியலும், வரலாறும் ஒத்திசைத்து இயங்கும் ஒரு பிரம்மாண்டத்தைப் யாத்தளித்தது அவரது நீண்ட கால சாதனை என்பேன்.
சு.வெங்கடேசனுக்கு என் மனப்பூர்வமான‌ வாழ்த்துக்களும் வணக்கங்களும்.


நன்றி!!!


http://satamilselvan.blogspot.com/