திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Saturday, August 21, 2010

துக்கத்தின் சிலுவையில் மாட்டப்பட்ட கதைகள்

- தேன்மொழியின் ‘நெற்குஞ்சம்’

எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Friday, August 13, 2010


கவிஞர் தேன்மொழியின் முதல் சிறுகதைத் தொகுப்பான ’நெற்குஞ்சம்’ வாசித்தது முற்றிலும் புதிய உணர்வைத் தந்தது.ரவிக்குமாரின் 10 பக்க முன்னுரையை வாசித்துவிடக் கூடாது என்று கறாராக மனதில் முடிவுசெய்துகொண்டு முதலில் கதைகளை வாசித்தேன்..அப்புறமாகத்தான் ரவிக்குமாரின் முன்னுரையை வாசித்தேன்.இரண்டைப்பற்றியும் சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும்.

முதலில் கதைகளைப்பற்றி.

10 கதைகள் தொகுப்பில் இருக்கின்றன.இரண்டு கதைகள் என்னை வெகுவாகத் தாக்கின அல்லது புரட்டிப்போட்டன அல்லது சமீப காலத்தில் வாசிப்பில் அடைந்திராத அதிர்வுகளைத் தந்தன என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கடல்கோள் மற்றும் நாகதாளி ஆகிய இரு கதைகள்.கடல்கோள் கதையில் அவள் மரணத்தின் வாசலில் கிடக்கிறாள்.அவனோடு வாழ்ந்த காலத்திலெல்லாம் பேசாத/ பேச முடியாத ஒற்றைவரியைச் சொல்லிவிடத் துடிக்கிறாள்.அவன் இப்போதும் அதே சாராய நெடியுடனும் வெறித்த பார்வையுடனும் அவள் உடலருகே அமர்ந்திருக்கிறான்...

.....’ஒரே வீட்டிற்குள் உன் வாசனை என்னாலும் என் வாசனை உன்னாலும் நுகரப்படாமல் திட்டுத் திட்டாய் உறைந்திருந்தது.உன் வாசனையை முதன்முதலில் ஒரு சாராய நெடியோடுதான் நுகர்ந்தேன். ... அன்று அந்த நெடிதான் உன்னை உந்தி உந்தித் தள்ளி என்னோடு உன்னைக் கூட வைத்தது.மறுப்பற்று ஏற்பற்றுக் கிடந்த எனக்கு அந்த சாராய நெடி மூன்றாமவனின் கண்ணாய் உறுத்தியது.எதிர் எதிரே உன்னை நானும் என்னை நீயும் வெறுமையோடு கடந்த தருணங்கள் நிறைய உண்டு.....’

ஐந்து வரிகளுக்குள் ஒரு மணவாழ்க்கை சொல்லி முடிக்கப்பட்டுவிட்டது.எனக்கு சாராயப்பழக்கமோ புகைப்பழக்கமோ இல்லை என்றாலும் அவளருகே அமர்ந்திருந்தது நான்தான் என்று பட்டது.உண்மையில் ஒருமுறை உடம்போடு அதிர்ந்தேன்.சாராயம் இல்லை என்றால் இன்னும் ஏதோ ஒன்று.ஏதோ ஒரு வாசனை ஒவ்வொரு ஆணிடமும் உண்டென்று பட்டது.மூன்றாவது கண் என்று அவள் சாராயத்தைக் குறிப்பிட்டது வாசிக்கும்போது சிலீரென்றது எனக்கு.அவனுக்கு சாராயம் எனில் எனக்கு எது என்று மனம் என் வாழ்வின் கடந்துபோன பக்கங்களை அவசரமாய்ப் புரட்டிக்கொண்டது.

ஒரு கலைப்படைப்பின் வெற்றி இதுதான் என்று சொல்லலாம்.

நாகதாளி கதையில் அவன் சடலம் கிடத்தப்பட்டிருக்க அவள் அதன் அருகே அமர்ந்திருக்கிறாள். .

...இன்று வரப்போகும் இரவுக்காய்க் காத்திருக்கிறேன்.அது எனக்கான உறக்கத்தைக் கொண்டுவரும் என்ற உணர்வு என்னுள் விழுந்தோடிக்கிடக்கிறது.கண்டிப்பாய் உறங்குவேன்.பதினைந்து வருட உறக்கத்தைக் கூவி அழைக்காமலே அது என்னை வந்து சேரும்.....


....இரவுகள் என்னை உறங்க வைக்க நீ அனுமதித்ததில்லை.அது ரகசிய ஆயுதங்களைச் சுமந்து வந்து என்னைத் தாக்கியது.தட்டித்தட்டி என்னை எழுப்புவதற்காகவே இரவு வருவதாய்த் தோன்றியது..


.... உறவுக்காய்ப் பிணைக்கப்பட்டவர்கள் நீயும் நானும் . உன் சக இணை நான்.அடிமையாகவும் எதிரியாகவும் உன் வக்ரங்களையும் குரூரங்களையும் கொட்டித்தீர்க்கும் நிலமாகவும் என்னௌ உனக்கு அடையாளப்படுத்திய இச்சமூகத்தைக் காறி உமிழ்கிறேன்.உன் இணைப்பறவை நான்.கண்கள் தாண்டிய வானத்தில் உன்னோடு பறக்கக் கனவு கண்டவள்.என் மரத்தின் இலைகளை உதிர்த்து விட்டாய்.என் சருகுகளின் இசையைத் தொலைத்து விட்டாய்.என் மரத்தின் குருவிகளைக் கொத்திப்போய் விட்டாய்.....


புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கைகளால் என் முகத்தை மூடிக்கொள்கிறேன்.அவள் காறி உமிழ்ந்தது என் புறங்கைகளில் வழிய ஒருமுறை விசும்பி அடங்குகிறது என் உடல்.

இக்கதைகள் இரண்டும் ஒவ்வொரு ஆண் வாசகரையும் ஆழச்சென்று வேர்வரை தாக்கும் வல்லமை கொண்டுள்ளன. நம் வீட்டுப் பெண்களுக்கு இவ்விதம் நம்மோடு வசனம் பேசத் தெரியாமல் இருக்கலாம்.ஆனாலும் இவை அவர்களின் வார்த்தைகள்தாம்.என் அம்மாவின் –என் தங்கையின் –என் துணைவியின் -என் மகளின்.......

இந்த இரண்டு கதைகளுக்குப் பின் மிக முக்கியமெனப்பட்டது நாகாபரணம் என்கிற கதை.ஒரு கோவிலில் அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள்....

...... உனக்கு இரண்டு மகன்கள் இருப்பதையும் அவவர்களில் ஒருவருக்காவது என் பெயர் வைக்க விரும்பியதையும் இயலாமல் போனதையும் கூறுகிறாய்.என் மீதான நேசம் உனக்குள்ளிருந்ததை இதன் மூலம் தெளிவு படுத்துகிறாய்.நான் எனக்கு ஒரு மகன் இருப்பதையும் அவன் உன் ஜாடையில் இருக்கக் கொடுத்து வைக்காததையும் நினைத்து உன்னிடம் வருந்துகிறேன்....

.... நேரமாகுது....இருவருமே கிளம்ப வேண்டும் என்கிறாய்.கண்களால் மறுத்தபடி குனிந்துகொள்கிறேன்....சமூகத்தின் மீதான எரிச்சல் கசப்பாய் என்னுள் பரவிக்கிடக்கிறது...இங்கே விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள்..கேள்விகளுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்படுவதில்லை.முரணான கட்டுப்பாடுகளால் அடைக்கப்பட்டுக் கிடக்கிறோம்.நம் வாழ்க்கையைப் பரிசளிக்க இவர்கள் யார்? நான் குலுங்கிக் கதற ஆரம்பிக்கிறேன்.ஏதாவது கேளு என்னை அமைதிப்படுத்திக்கொள்கிறேன் என்கிறாய்....எதைக்கொண்டும் நிரப்ப முடியாத நேச்த்தின் பள்ளத்தாக்கில் நாம் வீழந்து கிடக்கிறோம்....

.....எனக்கு நீ வேண்டும்.எனக்கும் உனக்குமான வாழ்க்கை திரும்ப வேண்டும் என்னைப் பொய்களின் கைகளிலிருந்து அள்ளிக்கொள்.என் வாழ்க்கையை எனக்குத் தா....

சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மதயானைபோல் நகர்ந்து செல்கிறாய்...

அவன் ஆண் அப்படித்தானே செல்வான் என்று வாசிப்பினூடே நான் பெருமூச்செரிகிறேன்.

ஆணைப்பொறுத்தவரை அவள் நினைவாக பிள்ளைக்குப் பேர் வைத்தால் போதும்..ஆனால் அதையும் செய்ய ஏலாதவன்.ஆனால் அவளுக்கோ அவனே வேண்டும்.இதுதான் உண்மை.அன்பும் நேசமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறாகத்தான் அர்த்தமமாகின்றன.இதுதான் வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது.அதன் ஒரு துளியாக இக்கதை நமக்குள் இறங்குகிறது.

இது தேன்மொழியின் முதல் தொகுப்பு. முதல் தொகுப்பில் ஐந்து கதைகள் நல்ல கதையாக அமைந்தால் அது மிகச்சிறந்த தொகுப்பு என்மனார் புலவர்.ஆகவே இது மிக நல்ல தொகுப்பு.நுடபமான கதைகள்.செறிவான மொழி.என்ன கூர்மையான வார்த்தைகள்! நமக்கு இப்படியெல்லாம் எழுத முடியுமா? உண்மையை பெண்கள் சொல்வதுபோல ஆண்களால் சொல்லிவிடத்தான் முடியுமா? எத்தனை நூற்றாண்டுப் பொய்யும் பூச்சும் நம் முகங்களில் அப்பிக்கிடக்கிறது.இவைபோன்ற கதைகள் அவ்வப்போது அதில் சிறு வழிப்பை ஏற்பத்தி வலிகொள்ளச் செய்கின்றன.

இனி ரவிக்குமாரின் முன்னுரை...

கொஞ்சம் ஓவராகத்தான் எழுதியிருக்கிறார்.என்றாலும் முதல் தொகுப்பை இப்படிக் கொண்டாட ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு ஆளுமை கிடைக்க வேண்டும்தான்.அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.ஆனால் நிலக்கொடை கதையைப் பற்றிப் பேச வந்த ரவிக்குமார் இவ்வாறு எழுதுகிறார்....

...நமது ‘முற்போக்கு எழுத்தாளர்கள்’ அதன் சூக்குமத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.புரட்சியாளனாய் மாறுவதற்கான எளிய வழி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.எங்கிருந்தாவது ஒரு பண்ணையாரைக் கூட்டி வர வேண்டும்.அந்தப் பண்ணையாரின் கொடுமைகளால் வாசகரின் ரத்தத்தைச் சூடாக்கி விட்டால் போதும்.அதற்கு சாகித்ய அகாடமி விருதுகூடக் கிடைத்துவிடும்....

என்று எழுதிச்செல்கிறார்.

தோழர் ரவிக்குமாரும் இந்த அறுதப்பழைய வியாதிக்குள்தான் சிக்கிக் கிடக்கிறார் என்பது வருத்தமளிக்கிறது. மற்ற அமைப்புகளைச் சேர்க்காமல் நான் சார்ந்திருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களாக உள்ள சிறுகதை/நாவல் படைப்பாளிகளின் படைப்புகள் மட்டுமே ஆண்டுக்கு 100 தொகுப்புகளேனும் வருகின்றன. (விரும்பினால் பட்டியல் தருகிறேன்)அவற்றில் ஒன்றைக்கூடக் கண்ணால் கூடப் பார்த்திருக்க மாட்டார் ரவிக்குமார் என்பது நிச்சயம்.1950-60 களில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த பண்ணையார்- அடிமை பற்றி எழுதுகிறவர்கள்தான் முற்போக்கு எழுத்தாளர்கள் என்கிற மனவியாதிக்குள் 2010லும் ரவிக்குமார் விழுந்து கிடப்பது எவ்வளவு பழைய ஆட்களாக இருக்கிறார்கள் நம் நண்பர்கள் என்கிற வருத்தத்தை ஆழமாக ஏற்படுத்துகிறது.பண்ணையார் என்பதில் ‘ண்’ க்கு எத்தனை சுழி என்று கேட்கிற ஏராளமான இளம்படைப்பாளிகள் எங்களோடு இருக்கிறார்கள் தோழரே. நவீன வாழ்வின் நெருக்கடிகளை விதவிதமாக எழுதிக்கொண்டிருக்கும் அவர்களை வாசிக்க நேரமில்லாவிட்டாலும் வாசிக்காமலே இன்னும் நாங்கள் பண்ணையார் கதைகளைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று பத்தாம் பசலித்தனமாக எதையேனும் பரப்பி அந்த இளம் படைப்பாளிகளைக் காயப்படுத்தாமலேனும் இருக்கலாம் அல்லவா? தவிர பண்ணையார்த்தனத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதுவதுதானே சரி.அதில் வேறு யாரும் முரண்பட்டாலும் தோழர் ரவிக்குமார் எப்படி முரண்பட முடியும்? முற்போக்கு எழுத்தாளர்களை நக்கல் செய்தால்தான் தான் எப்போக்கும் இல்லாத நவீன எழுத்தாளன் என்று தான் இனம் காணப்படுவோம் என்கிற அச்சம் பலருக்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம். ரவிக்குமார் போன்ற மூத்த/நாங்கள் மிகவும் மதிக்கிற படைப்பாளிக்கும் இருக்கிறது என்பது அறிய மிகுந்த வேதனை உண்டாகிறது.

பி.கு.


தோழர் ரவிக்குமாரின் முன்னுரையும் அதற்கு என் வருத்தமும் முக்கியமல்ல.தேன் மொழியின் கதைகள் மிக மிக முக்கியம்.சமயங்களில் கதைகளை முன்னுரை பற்றிய விவாதங்கள் மறைத்து விடும்.அது இவ்விளம் படைப்பாளிக்கு நேர்ந்துவிடக்கூடாது.

No comments:

Post a Comment