திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Saturday, May 1, 2010

த மு எ க சங்கம் திருப்பூர் செய்திகள்

செம்மொழி மாநாடும் உண்மையில் தமிழுக்குச் செய்ய வேண்டியதும்
----------------------------------------------------------------

--ச.தமிழ்ச்செல்வன் --

கடந்த ஒருமாத காலமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் செம்மொழித்தமிழுக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் கருத்தரங்குகள்,பொதுக்கூட்டங்கள்,கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முத்தமிழ்க்காவலர் டாக்டர் கலைஞர் அவர்களின் மெகா ஹிட் ப்ரொக்ராமாக வரும் ஜூன் 23 முதல் கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி முதல் மாநாடு நடைபெறுவதை ஒட்டி(இந்த நிகழ்வை ஒளி பரப்ப கலைஞர் டிவி தவிர பிற சேனல்களுக்கு அனுமதி உண்டா என்பது தெரியவில்லை) பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் இன்னும் 80 நாள் இன்னும் 79 நாள் என்று இனிவரும் நாட்களில் உணர்ச்சி அலைகள் கிளப்பப்படும் என்கிற பின்னணியில் இப்படி ஒரு இயக்கத்தைத் துவக்கி இருக்கிறோம்.
உண்மையிலேயே தமிழுக்குச் செய்ய வேண்டிய பல பணிகள் பல்லாண்டுகாலமாக நடைபெறவே இல்லை என்பது வருத்தமளிக்கும் ஓர் உண்மையாகும்.இந்த மாநாட்டை நடத்தும் நேரத்திலாவது அவற்றில் சிலவற்றையேனும் தமிழக அரசு செய்யலாம்.அதற்கான ஒரு அழுத்தத்தை-நெருக்கடியை-உருவாக்கவே இந்த இயக்கம்.இதை ஒட்டிச் செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன? என்கிற பிரசுரம் முதல் கட்டமாக ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு மக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இக்கூட்டங்களின் அடுத்த கட்டமாக ஏப்ரல் 25 அன்று கோவையில் மணடல அளவில் ஒரு கருத்தரங்கை நடத்துகிறோம்.மே மூன்றாவது வாரத்தில் சென்னையில் மாநில அளவிலான கருத்தரங்கை நடத்துகிறோம்.தமிழுக்கான கோரிக்கை சாசனம் ஒன்றை அக்கருத்தரங்கில் வெளியிடுகிறோம்.
இப்போது அப்பிரசுரம் கீழே.. ...
செம்மொழித்தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன?
“ எங்கள் தமிழ் உயர்வென்று
நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பல கழித்தோம்
குறை களைந்தோமில்லை ”
மனிதர்கள் தங்கள் கருத்துக்களை - சிந்தனையை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவிமட்டும்தான் மொழி என்கிற கருத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பதில்லை.மொழியின்றிச் சிந்தனை இல்லை.சிந்தனையின்றி மொழியில்லை.விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சமாக மொழி விளங்குகிறது. மொழியின் வாயிலாகவே சிந்தனை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது.உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளிகள் தங்கள் அறிவுத்திறனை-தொழில் திறனை மொழியின் வாயிலாகவே தங்களுக்கிடையே பரிமாறிக்கொள்கிறார்கள்.அவ்வகையில் மொழி உற்பத்திக்கருவியாகவும் ஒரு பங்காற்றுகிறது.மொழி என்பது வெறும் கடத்தி அல்ல.வாகனம் அல்ல.வெறும் சொற்களின் கூட்டம் அல்ல.சொற்கள் என்பவையும் வெறும் சொற்கள் அல்லவே? நம் மரபின் , பண்பாட்டின் ,அறிவுப்பாரம்பரியத்தின் அத்தனை அசைவுகளையும் உள்ளடக்கியதாக- நம் முன்னோர்களின் தலைமுறை தலைமுறையான உழைப்பின் -சிந்தனையின் விளைச்சலாகப் பிறந்த ஒன்றல்லவா சொல்-மொழி.
ஆகவேதான் எந்த ஒரு இனத்தின் முக்கியமான அடையாளமாக மொழி திகழ்கிறது.இந்தியாவில் 1956 இல் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அவை மொழிவழி மாநிலங்களாகத்தான் பிரிக்கப்பட வேண்டும் என்று நம் முன்னோடிகள் போராடினார்கள்.சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயரிடக்கோரி 64 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து , தான் இறந்த பிறகு தன் சடலத்தைக் கம்யூனிஸ்ட்டுகளிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி மறைந்த தியாகி சங்கரலிங்கனார் ஒரு முன்னோடி.சட்டமன்றத்தில் முதன் முதலாகத் தமிழில்தான் பேசுவோம் என்று போராடிப் பேசிய தலைவர்கள் பி.இராமமூர்த்தி,அமரர் ஜீவானந்தம்,விடுதலைப்போராளியும் நமது சங்கத்தைத் துவக்கிய 32 பேரில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா,தமிழில் தந்தி கொண்டுவந்த தோழர் ஏ.நல்லசிவன் ,பாராளுமன்றத்தில் தமிழுக்காகக் குரல் கொடுத்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் பி.மோகன் என உண்மையிலேயே தமிழுக்காகப் போராடி ஆனால் அதற்கான எந்தப் பெருமிதத்தையும் பட்டத்தையும் எதிர்பாராத இவர்கள் எல்லோருமே நமக்கு முன்னோடிகள்.
1975ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிறந்த நாள் முதல் தமிழ்வழிக்கல்விக்காகவும் நீதிமன்றத்தில் நிர்வாகத்தில் வழிபாட்டில் என எங்கும் தமிழே என்ற நிலை உருவாகிட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது.தமிழ் உயர்தனிச்செம்மொழி என அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் எல்லா மாவட்டங்களிலும் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தியது.மட்டுமின்றி 300க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை டெல்லிக்கு அழைத்துச்சென்று பாராளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்திப் பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைத்த இயக்கம் தமுஎகச.
1994இல் சென்னையில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டினை நடத்தி தமிழ் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டியது என்ன என்று பட்டியலிட்டது தமுஎகச.
இவ்விதம் காலந்தோறும் தமிழ் வளர்ச்சிக்காகச் செய்ய வேண்டியது என்ன என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கோரிக்கைகளை வடித்துப் போராடி வருகிறது.அக்கோரிக்கைகள் பலவும் இன்னும் கோரிக்கைகளாகவே நீடிக்கின்றன.இச்சூழலில் உலகச் செம்மொழித்தமிழ் மாநாட்டைத் தமிழக அரசு ஜூன் மாதத்தில் கோவையில் நடத்துகிறது.
உலகத்தமிழ் மாநாடுகள்
ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு கோயம்புத்தூரில் ஜனவரி 2009இல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தமிழக முதல்வர் அறிவித்தார்.இரண்டுமாத கால அவகாசத்தில் ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளைத் தயாரித்து வந்து வாசிப்பது சாத்தியமல்ல என்று சகல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்தது.இவ்வளவு அவசரமாக ஒரு மாநாட்டை ஏன் நடத்த வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்தது. தவிரவும் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவதற்கென்று ஒரு உலகளாவிய அமைப்பு இருக்கிறது.உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம்(International Association of Tamil Reasearch) என்பது அதன் பெயர்.அதன் தலைவராக ஜப்பானைச் சேர்ந்த மொழி அறிஞர் நொபாரு கராஷிமா இருக்கிறார்.இந்த அமைப்புத்தான் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவது பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.நடத்திக்கொடுக்கும் வரவேற்புக்குழுவாக தமிழக அரசு இருக்கலாம்.
ஆனால் இந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைக் கலந்தாலோசனை செய்யாமலே தமிழக அரசு மாநாட்டு அறிவிப்பை வெளியிட்டது.இது ஒரு மரபு மீறல்.அறிஞர் கராஷிமாவும் 2011 இல் வேண்டுமானால் மாநாட்டைத் தமிழகத்தில் நடத்தலாம் இப்போது வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்.தமிழக அரசுக்கோ அவசரமாக ஒரு தமிழ் மாநாடு நடத்த வேண்டும்.கலைஞர் முதல்வராக இருந்த காலத்திலும் ஒரு உலகத்தமிழ் மாநாடு நடந்ததாக வரலாறு பேச வேண்டும்.தவிர,கோவையில் இம்மாநாட்டை நடத்துவது என்பதிலும் ஆளும் கட்சி அரசியல் நோக்கமும் உண்டு.ஆகவே உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைக் கைகழுவி விட்டு முதல் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஜூ£ன் மாதத்தில் அதே கோவையில் நடாத்திட முடிவு செய்து விட்டது தமிழக அரசு.கலைஞரின் புகழ் பாட இன்னொரு மாநாடா என்று பரவலாக எழுகின்ற கேள்வியில் அர்த்தமுண்டு.
முதல் உலகச் செம்மொழி மாநாட்டுக்கான தலைமைக்குழு, ஆய்வரங்கக் குழு,வரவேற்புக்குழு, பேரணிக்குழு,மலர்க்குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் அனுப்பலாம் எனப் பத்திரிகை விளம்பரம் தரப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் இம்மாநாடு தொடர்பாக எதிரும் புதிருமான கருத்துக்கள் தமிழ்கூறு நல்லுலகில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் முகாம்கள் என்ற பெயரில் முள் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக்கிடக்கும் துயர்மிகு வேளையில் இம்மாநாடு தேவையா? என்பது முன்வைக்கப்படும் ஒரு கேள்வி. இரண்டாவதாக உலகத் தமிழ் மாநாடுகளால் தமிழுக்கு எந்தப்பயனும் விளைந்ததில்லை.ஆகவே இந்த மாநாடும் பயனற்றதுதான் என்பது இன்னொரு வாதம்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இவ்விரு கருத்துக்களையும் ஏற்கவில்லை.இலங்கைத்தமிழர் துயர் துடைக்க மக்கள் இயக்கங்களும் இந்திய அரசுக்கு நெருக்கடி தருவதும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகளைச் செய்வதும் போன்றவை இடையறாது தொடர வேண்டும்.அத்தகைய இயக்கங்களில் தமுஎகச உணர்வுப்பூர்வமாகவும் முழுமையாகவும் பங்கேற்கும். அதையும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையும் இணைக்க வேண்டியதில்லை என்பதே நமது நிலைப்பாடு.
இரண்டாவதாக இதுவரை நடைபெற்ற எல்லா உலகத் தமிழ் மாநாடுகளும் வீண் என்ற வாதம் சரியானதல்ல.சற்றே பின்னோக்கிப் பார்ப்பது அவசியம்.இதுவரை நடைபெற்ற மாநாடுகள்:-
1.முதல் மாநாடு- 1966- கோலாலம்பூர் (மலேசியா)
2.இரண்டாவது மாநாடு-1968 -சென்னை (இந்தியா)
3.மூன்றாவது மாநாடு-1970-பாரிஸ்( பிரான்ஸ்)
4.நான்காவது மாநாடு- 1974 - யாழ்ப்பாணம் (1974)
5.ஐந்தாவது மாநாடு- 1981- மதுரை (இந்தியா)
6.ஆறாவது மாநாடு-1987-கோலாலம்பூர்(மலேசியா)
7.ஏழாவது மாநாடு -1989 - மொரீசியஸ்
8.எட்டாவது மாநாடு- 1995-தஞ்சாவூர்(இந்தியா)
உயர்தனிச்செம்மொழியான நம் தமிழ் மொழியின் பெருமை உலகறிந்த ஒன்றுதான் என்றாலும் 1960களில் சில புதிய திறப்புகள் ஏற்பட்டன.1938இல் தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை உருவாக்கிய தமிழ் லெக்சிகன் மற்றும் 1964இல் எமனோ பரோ உருவாக்கிய திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி ஆகியவை தமிழ் மொழி குறித்த சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான குறியீடுகளாக அமைந்தன.இச்சூழலில் 1964 ஜனவரியில் டெல்லியில் அகில இந்தியக் கீழ்த்திசை மாநாடு ( Congress of orientalists )நடைபெற்றது.அதில் பெரும்பாலும் சமசுக்கிருதம் சார்ந்த ஆய்வுகளுக்கே வாய்ப்பளிக்கப்பட்டது.திராவிட மொழிகள் சார்பான ஆய்வுகள் அதில் இடம்பெற வில்லை. ஆகவே தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் போன்றோர் முன் முயற்சியில் தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளுக்காக 1964இல் உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம் தொடங்கப்பட்டது
இந்த உலகத்தமிழ் ஆராய்ச்சக்கழகத்தின் முதல் கூட்டத்தில் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரம்,மு.வரதராசனார்,பேராசிரியர் போலியசோ,கமில் சுவலபில்,ஏ.கே.ராமானுஜம்,சாலை இளந்திரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்வறிஞர்கள் இம்முதல் கூட்டத்தில் இரு பணிகளை ஏற்றுக்கொண்டனர்.
1. ஆண்டுதோறும் உலகில் எப்பகுதியில் தமிழ் அல்லது தென்னிந்தியப் பண்பாட்டில் எத்துறையில் ஆராய்ச்சி நடப்பினும் அதனைச் சேகரித்து ஆண்டறிக்கையொன்றினை வெளியிடுவது.முதல் அறிக்கை கடந்த (1964க்கு முந்திய 5 ஆண்டுகள்) ஐந்து ஆண்டுகளில் வெளியான ஆராய்ச்சிக் குறிப்புகளைத் திரட்டி வெளியிடுவது.அந்த அறிக்கை 1966க்குள் வெளியிடப்படும்.
2.இரண்டாவது பகுதித் திட்டமாக 1966இல் தமிழ் மாநாட்டுக்கருத்தரங்கை ( conference-seminar of Tamil studies) நடத்துவது.
இந்நிறுவனத்தின் தலைவராக போலியசோ (காலேஜ்-டி-பிரான்ஸ்,புதுச்சேரி)வும் துணைத்தலைவர்களாக தாமஸ் பர்ரோ (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்) எப்.பி.ஜே.கூப்பர் (லெய்டன் பல்கலைக்கழகம்)பேரா.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (அண்ணாமலைப்பல்கலைக்கழகம்)பேரா.மு.வரதராசனார்(சென்னைப் பல்கலைக் கழகம்)ஆகியோரும் செயலாளர்களாக சேவியர் தனிநாயக அடிகளாரும் கமீல் சுவலபில்லும்(செக்கோஸ்லோவிகியா) தேர்வு செய்யப்பட்டனர்.
1966 ஏப்ரல் 16 முதல் 23 வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது.உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் மலேசியாவின் இந்தியப்பள்ளிகளுக்கான தேசியக் கல்வி வளர்ச்சிக் கவுன்சிலும் மலேயாப் பல்கலைக்கழகமும் இணைந்து இம்மாநாட்டினை நடத்தின.132 பிரதிநிதிகளும் 40 பார்வையாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்று ஆய்வுகளை முன்வைத்தனர். அப்போதெல்லாம் இவை உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் என்றே அழைக்கப்பட்டன.ஆய்வுகள்தான் முக்கியம்.அப்போது மலேயப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தனிநாயகம் அடிகள் இம்மாநாட்டை முன்னின்று நடத்தினார்.
இம்மாநாட்டில் 150 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.தென்கிழக்கு ஆசியாவின் (குறிப்பாக தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகளை முன்வைத்த) வரலாறும் பண்பாடும்,தமிழிலக்கிய விமர்சனம்,சங்ககாலத் தமிழ்ச்சமூகம்,மேலைநாட்டு அறிஞர்களும் தமிழியல் ஆய்வுகளும்,இலக்கியமும் சமூகமும்,நவீன தமிழ் இலக்கியம்,கி.பி.1500க்குப் பிந்ததய தென் கிழக்கு ஆசியா,இசையும் நடனமும், கலையும் பாரம்பரியமும்,திராவிட ஒப்பீட்டு மொழியியல் மற்றும் நவீன காலத்தில் தமிழ்ச் சமூகம் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.
இம்முதல் மாநாட்டு வேளையில் இரண்டாவது மாநாட்டை நடத்திட அறிஞர் பெருமக்கள் அனைவரும் சென்னைக்கு வரவேண்டுமென அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு.பக்தவச்சலம் வேண்டுகோள் விடுத்தார்.அதனை அறிஞர்கள் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர்.
மலேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க சோசலிச நாடுகளின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை.மலேசிய அரசின் வர்க்க அரசியல் காரணமாக இக்குரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது.தமிழ்நாட்டிலிருந்து அழைக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலருடைய பெயர்களை நீக்கிவிட்டு ஆராய்ச்சிக்குத் தொடர்பற்ற ஆனால் செல்வாக்குப் பெற்ற பல தனிநபர்களை கோலாலம்பூர் மாநாடு அழைத்துக் கொண்டது. இவைபோன்ற குறைகளையும் முதல் மாநாடு கொண்டிருந்தது.
அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் 1968 ஜனவரி 4 முதல் 10 வரை உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடும் ஜனவரி 1 முதலே சிலைகள் திறக்கும் விழாக்களும் பொதுமக்கள் பங்கேற்கும் விதமான ஓர் உலகத்தமிழ் மாநாடும் சென்னையில் நடைபெற்றன. 500 பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வு மாநாடு தனியாகவும் மக்களுக்கான பண்பாட்டு விழாவாக ஓர் உலகத்தமிழ் மாநாடு தனியாகவும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
இம்மாநாட்டில் ஒன்பது ஆய்வரங்குகளும் 36 உபகுழு ஆய்வுக்கூட்டங்களும் நிகழ்த்தப்பட்டு முக்கியமான ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.சிந்து சமவெளிக்குறியீடுகள் ஆதிகாலத் திராவிடப் பண்பாட்டின் குறியீடுகளாக இருக்கலாம் என்பது பற்றிய தன் ஆய்வை அறிஞர் ஐராவதம் மகாதேவன் இம்மாநாட்டில்தான் முன்வைத்தார்.இன்று அத்திசையில் மேலும் பல குறிப்பிடத்தக்க ஆய்வுகள் வந்துள்ளன.
சென்னை மாநாட்டுக்காக நடந்த ஆடம்பரமான ஏற்பாடுகளைப் பார்த்து அன்று தந்தை பெரியார் இது வீண் செலவு என்று கண்டித்தார்.
அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகவில்லை.தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றமே இருந்தது.அதன் சார்பாக அதன் தலைவர் தோழர் ரகுநாதன் முன்னுரையோடு பேராசிரியர் நா.வானமாமலை எழுதிய ‘ இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு - இலக்கிய உலகம் எதிர்பார்பது என்ன?' என்கிற சிறுநூல் வெளியிடப்பட்டது.
இதுவரை நடைபெற்ற எட்டு மாநாடுகளில் யாழ்ப்பாணம்(1974) கோலாலம்பூர்(1987)மொரீசியஸ்(1989) மாநாடுகளில் முன்வைக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் இதுவரையிலும் தொகுத்து நூல்களாக வெளியிடப்பட வில்லை. அவை வெளியிடப்பட வேண்டும்.
1974இல் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடைபெற்றபோது பேரினவாத அரசியலை முன்னெடுக்கும் போக்கு அந்நாட்டில் வளர்ந்திருந்தது.அவசியமில்லாமல் அம்மாநாட்டுப் பொதுநிகழ்வின்போது மக்களைப் போலீசார் தாக்கி 9 பேர் கொல்லப்பட்ட துயரச்சம்பவம் நிகழ்ந்தது.அதன் தொடர்ச்சியாகப் பின்னர் ஆசியாவின் மிக முக்கியமான நூலகமாகத் திகழ்ந்த யாழ்நூலகம் இலங்கை ராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்டுத் தமிழரின் பண்பாட்டுப்பெரும் செல்வம் அழிக்கப்பட்டது.
1995இல் தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டில் பாதுகாப்புக் காரணம் என்று சொல்லி இலங்கையிலிருந்து வந்த தமிழறிஞர்கள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.தமிழறிஞர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாக அந்நிகழ்ச்சி அமைந்தது.
தஞ்சை மாநாடு அறிவிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று சென்னையில் தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.அம்மாநாட்டின் ஐந்தாவது தீர்மானம் கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது:-

உலகத்தமிழ் மாநாட்டினைப் பயனுள்ள முறையில் நடத்துக!
1995 ஜனவரித்திங்களில் உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தப் போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.இத்தகைய மாநாடுகள் தமிழகத்தில் நடப்பது என்பது ஆட்சிக்கு வரக்கூடியவர்களின் விருப்பத்தைப் பொறுத்த விஷயமாக உள்ளது.இந்த நிலையை மாற்றி உரிய கால இடைவெளியில் இந்த மாநாடுகள் நடத்தப்பெற வேண்டும்.அதே நேரத்தில் இவை வெறும் ‘திருவிழாக்களாக' நடத்தப்பெறாமல் ,தமிழ் வளர்ச்சிக்கான உருப்படியான திட்டங்களை உருவாக்கக்கூடிய - சர்வதேச ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய மாநாடுகளாக நடத்தப்படவேண்டுமென்று தமிழக அரசினை இம்மாநாடுவலியுறுத்துகிறது.உலகத்தமிழ் மாநாடு ஆலோசனைக்குழுவிலும் அதன் ஆய்வரங்கங்களிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகளுக்கும் இடம் தர வேண்டும் என்றும் இந்த மாநாடு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது ”
தமிழகத்தில் அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் சென்னையிலும் எம்.ஜி.ஆர் காலத்தில் மதுரையிலும் , ஜெயலலிதா காலத்தில் தஞ்சையிலும் நடைபெற்ற மாநாடுகளில் விளம்பர மற்றும் படாடோபத்தன்மைகள் மிகுந்திருந்தபடியால் இப்போது அதில் வல்லவரான கலைஞர் காலத்தில் அதைத்தவிர வேறு ஏதும் இல்லாமல் போகுமோ என்கிற அச்சம் நிலவுவது உண்மை.
தவிர இப்போது திட்டமிடப்படும் மாநாடு வழக்கமான (ஒன்பதாவது) உலகத்தமிழ் மாநாடும் இல்லை.ஆகவே இம்மாநாட்டில் என்னதான் நடக்கப்போகிறது என்பதை மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆய்வுக்கட்டுரைகள் எந்தத் தலைப்புகளில் அனுப்பலாம் என ஒரு பட்டியலை மட்டும் அரசு பத்திரிகை விளம்பரத்தில் வெளியிட்டுள்ளது.1968 மாநாட்டின்போது பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் எழுதி வெளியிட்ட நூலில் எழுப்பப்பட்ட சில கேள்விகள் இப்போது நடைபெறப்போகும் செம்மொழி மாநாட்டுக்கும் பொருந்துவதாக இருப்பதால் அக்கேள்விகளை அப்படியே கீழே தருகிறோம்:-
‘இம்மாநாட்டில் எத்துறைகளில் தமிழாராய்ச்சி நிகழும்?தமிழ் மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பண்பாட்டு முன்னேற்றத்துக்கும் எவ்வாறான வழிகளை இம்மாநாடு சுட்டிக்காட்டப்போகிறது? தமிழ்ப்பண்பாட்டின் எவ்வெத்துறைகளில் புதிய புதிய ஆராய்ச்சிகள் துவங்கப்படும்? தமிழின் பெருமையையும் தமிழிலக்கியச் செல்வங்களின் சிறப்பையும் உலகறியச்செய்ய எவ்வித முயற்சிகள் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்படும்?கேரளம்,கருநாடகம்,ஆந்திரம் முதலிய அண்டை ராஜ்யங்களின் வரலாறுகளெல்லாம் அண்மையில் எழுதப்பட்டிருக்கும்போது தமிழகத்தின் தொடர்ச்சியான வரலாறு வரையப்படவில்லையே அது குறித்து வரலாற்றறிஞர்கள் என்ன முயற்சிகளை மேற்கொள்ளப்போகிறார்கள்?தமிழை உயர்தனிச்செம்மொழி என்று வானளாவப் புகழும் நாம் அம்மொழியை அயல்நாட்டினர் கற்றுக்கொள்வதற்கு எவ்விதத்தில் உதவி செய்யப்போகின்றோம்? இம்மாநாடு இத்துறையில் வழிகாட்டுமா?அயல்நாட்டினரின் மொழிகளையும் இலக்கியங்களையும் தமிழ் மக்கள் அறிந்து சுவைப்பதற்கு ஏதேனும் ஏற்பாட்டை இம்மாநாடு செய்யுமா? தமிழர் பண்பாட்டை சகோதர மொழிகள் பேசுவோர் பண்பாடுகளோடு ஒப்பிட்டு இந்தியப்பண்பாட்டிற்குத் தமிழர் பண்பாடு அளிக்கும் சிறப்பான அம்சங்களை எடுத்துக் காட்டுமா?மானிடவியல் துறைகளில், சமூக வளர்ச்சி,சமயம்,தத்துவம், கலைகள் முதலியவற்றில் எல்லாம் எத்தகைய ஆராய்ச்சிகள் புதிதாகத் தொடங்கப்படும்?பண்டைக்காலம் முதல் கடல் கடந்து அயல்நாடுகளோடு தமிழர் கொண்டுள்ள தொடர்புகளின் மூலம் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்புகள் பற்றியும்
அவை இன்றிருக்கும் நிலைகள் பற்றியும் எத்தகைய ஆராய்ச்சிகள் நிகழும்?'
நா.வா அவர்கள் முன் வைத்த எதிர்பார்ப்புகள் ஏதும் நிறைவேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.நாம் இன்று மீண்டும் அதே கேள்விகளை இன்னும் பல புதிய கேள்விகளோடு சேர்த்தே முன் வைக்க வேண்டியுள்ளது.
செய்ய வேண்டியவை என்ன?
இயல்-இசை-நாடகம்-அறிவியல்-நாட்டுப்புறவியல் எனத் தமிழ் மொழியின் பரிமாணங்கள் ஒவ்வொன்றும் வளர்ச்சி பெற அரசியல் உறுதியோடு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பலவும் இன்னும் நிலுவையிலேயே உள்ளன.தமிழ் தமிழ் என்கிற முழக்கம் தமிழ் நிலத்தில் கேட்ட அளவுக்குத் தமிழுக்கான செயல்பாடுகள் கடந்த காலத்தில் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.இம்மாநாட்டை ஒட்டியும் பொதுவாகவும் செய்யப்பட வேண்டியவை பற்றித் தொகுத்துப் பார்க்கலாம்:-
இயற்றமிழ்
சங்க இலக்கியங்கள் ,காப்பியங்கள்,சிற்றிலக்கியங்கள்,நவீன இலக்கியங்கள் என மிகப்பெரும் பாரம்பரியமும் செழுமையும் மிக்க மொழி தமிழ் மொழி.நம் பாட்டன் முப்பாட்டன் காலத்துச் செல்வங்களான இவற்றை அனுபவிக்கும் திறன் அற்றவர்களாகவே தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.நீண்ட நெடுங்காலமாகவே இச்செல்வங்கள் யாவும் பண்டிதர்கைச் சரக்குகளாகவே நீடிப்பது கொடுமை.எளிய வாசகனும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் சந்தி பிரித்து அருஞ்சொற்பொருளுடன் உரிய விளக்கங்களுடன் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தொல்காப்பியமும் அரசின் செலவில் மிகமிகக் குறைந்த விலையில் நல்ல தாளில் அச்சிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இம்மாநாட்டுக்குள் அதைச் செய்து முடிக்க இயலாதெனினும் அதற்கான அறிவிப்பையும் நிதி ஒதுக்கீட்டையும் அப்பணிக்கான அறிஞர் குழுக்களை நியமிப்பதையும் இம் மாநாட்டில் செய்யலாம்.ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் இப்பணியை முடிக்கலாம்.உலகக் கன்னட மொழி மாநாட்டை ஒட்டி கன்னட செவ்வியல் இலக்கியங்கள் யாவும் மக்கள் பதிப்புகளாக வெளியிடப்பட்டதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்.
தமிழ் வளர்ச்சிக்குப் பல்வேறு இயக்கங்கள் ஆற்றியுள்ள பங்களிப்புக் குறித்த முழுமையான ஆவணப்படுத்தல் இன்னும் நடைபெறாமலே உள்ளது.தேசிய இயக்கம்,சுயமரியாதை இயக்கம்,திராவிட இயக்கம்,பொதுவுடமை இயக்கம்,தலித் இயக்கம்,பெண்ணிய இயக்கம் என இவை ஒவ்வொன்றும் தமிழுக்காற்றிய பங்கு பற்றிய விருப்பு வெறுப்பற்ற ஆய்வரங்குகள் இம்மாநாட்டில் இடம் பெற வேண்டும்.அவை தொகுக்கப்பட்டு நூல் வடிவில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
உலகத்தமிழ் மாநாடென்றாலே அது ஏதோ தமிழ்ப்பேராசிரியர்கள்/பண்டிதர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று என்கிற தோற்றம்தான் காலம் காலமாக இருந்து வருகிறது.நவீன இலக்கியப் படைப்பாளிகள் இல்லாமல் தமிழ் மொழி பற்றிப் பேசுவது அர்த்தமற்றது.நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் அத்தனை பேரும் இம்மாநாட்டில் பங்கேற்று விவாதிக்கும்படியாக கவிதை,சிறுகதை,நாவல் எனத் தனித்தனியாக ஆய்வரங்குகள் மற்றும் படைப்பரங்குகள் திட்டமிடப்பட வேண்டும்.மாநாட்டை ஒட்டிச் சிறந்த சமகாலப்படைப்புகளின் தொகுப்புகள் கொண்டுவரலாம்.
பெண்/தலித் படைப்பாளிகளிகளுக்கெனத் தனி அரங்குகள் இம்மாநாட்டில் இடம்பெற வேண்டும்.
இன்று தமிழில் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் குறைந்த பட்சம் நூறு பேராவது தொடர்ந்து இயங்கி வருகிறார்கள்.அவர்களின் பணி மகத்தானது.இம்மாநாட்டில் அவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டும். மொழிபெயர்ப்புக்கான ஆய்வரங்கு ஏற்கனவே திட்டத்தில் இருக்கும் என நம்புகிறோம்.
அரவாணிகள் குறித்த இலக்கியங்களும் அரவாணிகளே படைத்துவரும் ஆக்கங்களும் இன்று வளரத்துவங்கியுள்ளன.இதை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் செம்மொழி மாநாட்டில் அவர்களுக்குரிய இடம் தரப்பட வேண்டும்.
மாநாட்டு மலர் வழக்கமான வாழ்த்துச்செய்திகளும் விளம்பரங்களும் கொண்ட சலிப்பூட்டும் மொத்தையான தொகுப்பாக இல்லாமல் அறிஞர்களிடம் கேட்டுப்பெற்ற உருப்படியான ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் படைப்புகளோடு வெளிவர வேண்டும்.
இசைத்தமிழ்
முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் பற்றிய உணர்வு நம்மிடம் அறவே இல்லாத நிலையே நீடிக்கிறது.பள்ளி கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இசைத்தமிழ் என்பது அறவே இல்லை.
தொல்காப்பியம் தொடங்கி இடைக்கால இலக்கியங்கள் ஊடாக ஆய்வு மேற்கொண்டு தமிழிசை இயல் உருவாக்கப்பட வேண்டும்.இதன் தொடர்ச்சியாக முந்தைய முன்னோடி ஆய்வுகளை முன்வைத்தும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டும் இசைத்தமிழ் வரலாறு எழுதப்பட வேண்டும்.
கல்லூரி,பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளில் தமிழிசைக்கான பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.பாடத்திட்டத்தில் இசைப்பாடல்கள் (பாடும் பயிற்சியும் ) சேர்க்கப்பட வேண்டும்.
பாரதி கூறியது போல “ வித்வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிக¨ளைத் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற மொழிகளில் பழம்பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை.அதனால் நமது ஜாதி ஸங்கீத ரசனையை இழந்துபோகும்படி நேரிடும்” என்பது நடந்து விட்டது.தமிழிசையையும் இசைத்தமிழையும் மீட்டெடுப்பதற்கான -வளர்ப்பதற்கான - ஒரு செயல்திட்டம் உடனடித்தேவையாகும்.அரசு செய்யக்கூடியது-கவிவாணர்கள் செய்யக்கூடியது எனப் பிரித்துக்கொண்டு இத்துறையில் பணிகள் நடைபெற வேண்டும்.
அரசு நடத்தும் இசைப்பள்ளிகள்,இசைக்கல்லூரிகளில் அவ்வப்பகுதியைச்சேர்ந்த எல்லா நாட்டுப்புற இசை வடிவங்களும் சேர்க்கப்பட வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்கள் அங்கு வருகைதரு பேராசிரியர்களாகவேனும் நியமிக்கப்பட வேண்டும்.
நாடகத்தமிழ்
நீண்ட நெடிய கூத்து மரபுகொண்ட நம் தமிழ்மொழியில் முறையான ஒரு நாடகத்தமிழ் வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை.அதற்கான முயற்சிகளை அரசு துவக்க வேண்டும்.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தவிர தமிழகத்தில் வேறு எங்குமே நாடகத்துறை என்பது இல்லை.அங்கும் உருப்படியான பாடநூல்கள் இல்லை.நாடகப்பள்ளிகள் உருவாக்குவதும் எல்லாக்கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் நாடகம் இணைக்கப் படுவதும் அவசியம்.கூத்து மற்றும் நாடகப்பயிலரங்குகள் தமிழ்ப் பாடத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும்.
வீதி நாடகங்கள் என்னும் புதிய மக்கள் கலை வடிவம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவும் புதிய நாடகங்கள் தயாரிப்பதற்கான ஆதரவை வழங்குவதற்குமான நிரந்தர ஏற்பாடு ஒன்றினை அரசு உருவாக்க வேண்டும்.ஒரு நாடகக்கலைஞன் நாடகத்தின் மூலமே வாழ முடியும் என்பதற்கான சமூக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
நாட்டுப்புறத்தமிழ்
நாட்டுப்புற இலக்கியங்கள் உண்மையில் உழைக்கும் மக்களின் படைப்பிலக்கியமாகும். இழிசனர் வழக்கென்று பன்னெடுங்காலமாகப் புறக்கணிக்கப்பட்ட வாய்மொழி இலக்கியங்களாக உள்ள நாட்டுப்புற இலக்கியங்கள் பள்ளி மற்றும் கல்லூரித் தமிழ்ப்பாடத்திட்டத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும்.இதுவரை தொகுக்கப்படாத நிலப்பரப்புகளில் இவற்றைத் தொகுத்திட அரசின் செலவில் தமிழ் கற்ற ஆய்வாளர்கள்,களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுப் பணிகள் துவக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே நாட்டுப்புறவியலில் முதுகலை மற்றும் ஆய்வறிஞர் பட்டம் பெற்று எவ்வித வேலை வாய்ப்புமின்றி வாடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இப்பணிகளில் வாய்ப்பும் முன்னுரிமையும் தர வேண்டும்.
அரண்மனைகளும் ஆடலரங்குகளும் புறக்கணித்த நாட்டுப்புறக்கலைகள் காலம் காலமாக உழைப்பாளி மக்களால் ஆதரித்து வளர்க்கப்பட்டவை.ஆதரிப்பார் யாருமின்றி அழிந்துபோன நாட்டுப்புறக்கலைகள் எத்தனையோ.நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் ஒன்றைத்துவக்கி இக்கலைகளும் இலக்கியங்களும் அழியாமல் பாதுகாக்க இம்மாநாட்டை ஒட்டியேனும் அரசு சிந்திக்க வேண்டும்.
கல்வியில் தமிழ்
தமிழ்வழிக்கல்வி என்பது நமது நெடுங்காலக்கோரிக்கையாக நீள்கிறது. உயர்கல்வியில் குறிப்பாக மருத்துவம் பொறியியல் கல்வியைத் தமிழ்வழியில் கொண்டுவராமல் ஆரம்பக்கல்வியில் தமிழ்வழியை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் துவக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது.இது பற்றி 1994 இல் தமுஎகச நடத்திய தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுப்பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மானம் இவ்வாறு கூறுகிறது:-
“ 1960 களிலேயே கலைக்கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி துவக்கப்பட்டுவிட்ட போதிலும் அது இன்னும் முழு வீச்சோடு நடைமுறைக்கு வரவில்லை.அறிவியல்-தொழில்நுட்பத்துறையில் தமிழ்வழிப் படிப்பு வருவது தமிழ் வளர்ச்சிக்கு அடிப்படையானதொரு தேவையாகும்.தமிழ் வழிக்கல்வி வந்தால்தான் தமிழில் அறிவியல்-தொழில்நுட்பச் சிந்தனை வளரும்.புதிய சொற்கள் பிறக்கும்.தமிழ் செழிக்கும் ” அம்மாநாட்டை நாம் நடத்திய நாட்களில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் மருத்துவம்,பொறியியல் போன்றவற்றுக்குத் தமிழ்ப்பாட நூல்களை உருவாக்கியுள்ளதாகக் கூறப்பட்டது.அது என்னவாயிற்று என்று மக்களுக்குச் சொல்லப்படவில்லை.”
1967 இல் தமிழை ஓர் அரசியல் அணிதிரட்டலுக்கான உபாயமாகக் கைக்கொண்ட திராவிட இயக்கத்தார் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகுதான் ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் புற்றீசல்கள் போலப் புறப்பட்டு இடறி விழுந்தால் ஒரு இங்கிலீசுப் பள்ளியில் விழும் நிலை தமிழகத்தில் உருவானது என்பது வேதனையான வரலாறாக நம் முன்னே நிற்கிறது.ஆகவேதான் நாம் தமிழ் வழிக்கல்வியைப் போலவே சமச்சீர் கல்விக்காகவும் போராட்டங்கள் நடத்தினோம்.
சமச்சீர் கல்வியின் முதல் படியாக எல்லோருக்கும் ஒரே பாடப்புத்தகம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஒரு சிறிய முற்போக்கான தப்படி என்பதால் இதனை வரவேற்றுள்ளோம்.ஆனால் முழுமையான தமிழ்வழிக்கல்வி அதிலும் அருகமைப்பள்ளியில் என்பதை நோக்கியும் தமிழைத்தாய் மொழியாகக்கொண்ட குழந்தைகள் தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் கல்வியை முடிக்க இனி வாய்ப்பில்லை என்கிற நிலையை நோக்கியும் சென்றாக வேண்டும்.
பண்பாட்டுத் துறையில்
மொழி என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டு வேர்களை,விழுமியங்களை,பண்பாட்டுச் செல்வத்தைத் தனக்குள் பொதிந்துவைத்துக்கொண்டுள்ள- தலைமுறை தலைமுறைக்கு அவற்றைக் கடத்திச்செல்லுகின்ற வாழும் வளரும் உயிர்ச்சக்தியாகும்.ஒரு சொல்லிலிருந்து பலகாலத்துக்கு முன்னர் மறைந்துபோன ஒரு பண்பாட்டு அசைவினை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.பண்பாட்டு அசைவுகளின் வழி அச்சமூகம் வாழ்ந்த வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திடவும் முடிகிறது.
தமிழ்ச்சமூகம் மிக நீண்ட ஆழமான பண்பாட்டு வரலாறு உடையது.மானிடவியல் ஆய்வுகள் மூலம் அவற்றை வெளிக்கொணர வேண்டும்.தமிழகத்தில் இன்று இயங்கும் மானுடவியல் ஆய்வறிஞர்களை (anthropologists) விரல் விட்டு எண்ணி விடலாம்.இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட தமிழ்ச்சமூகத்தில் மானுடவியல் அறிஞர்கள் போதிய அளவில் இல்லை என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் மானுடவியல்துறை உடனடியாகத் துவங்கப்பட வேண்டும்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்துள்ள பூமியாக தமிழகம் இருக்கிறது.இன்னும் வாசிக்கப்படாமல் மைசூரில் மத்திய அரசு அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்-பிராமி கல்வெட்டுகளும் பட்டயங்களும் குவிந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது. ஆடம்பரமான விளம்பரங்களுக்குச் செய்யப்படும் செலவில் ஒரு பகுதியை ஒதுக்கினாலே இக்கல்வெட்டுக்களை வாசித்து அச்சாக்கும் பணியை முடித்து விடலாம்.
வழிபாட்டு மொழியாகத் தமிழ் வரவேண்டும் என்பது நம் எல்லோரின் நெடுங்கனவாகும்.வேண்டுகோள் அடிப்படையில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் நிலைதான் தமிழ் நாட்டில் தொடர்கிறது.அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதுவும் வெறும் அறிவிப்போடு நிற்கிறது.கோவில்களுக்கு வெளியே எங்கும் தமிழ் முழக்கம் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல தமிழ் நாட்டின் எல்லாக் கோவில்களுக்கு உள்ளேயும் நடைமுறையில் இன்னும் தமிழ் நீசபாஷையாகவே தொடர்கிறது என்பதை வெட்கத்தோடும் வேதனையோடும் நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு வரலாறு இதுவரையிலும் எழுதப்படவே இல்லை. அதுகுறித்து எந்தப்பல்கலைக்கழகமோ உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமோ கவலைப்படவும் இல்லை.பன்முகப்பட்ட-பல்வேறு பண்பாடுகளின் கலப்பாகத் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிற ( சிதைந்தும் கொண்டிருக்கிற)தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இப்போதுகூடச் செய்யவில்லையெனில் வரலாறு நம்மை மன்னிக்காது.நாம் சொல்லும் தமிழரின் பண்பாட்டு வரலாறு என்பது ஆரிய-திராவிடப் போராட்டமாக மட்டுமே தமிழக வரலாறைச் சித்தரிக்கும் கதையை அல்ல. சமூக வரலாற்றின் அடிப்படையில் அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் வாய்மொழி வரலாறுகளையும் இணைத்துக்கொண்ட ஒரு பண்பாட்டு வரலாறே நாம் கோருவது.
(அ)ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் உள்ளிட்ட அகராதிகளின் நிலை குறித்து இந்த நேரத்தில் நினைத்துப்பார்ப்பது அவசியம்.1960களில் பல்கலைக்கழக மான்யக்குழுவின் நிதி உதவியோடு சென்னைப்பல்கலைக்கழகம் முனைவர் ஏ.சிதம்பரநாத செட்டியாரை முதன்மை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட ஆங்கிலம்-தமிழ் அகராதிக்குப் பிறகு அரசு சார் நிறுவனரீதியாக எந்த முயற்சியும் இல்லை.அந்த ஒரு அகராதியும் இன்னும் தற்காலப்படுத்தப்படாமலே உள்ளது.தமிழக அரசு இது தொடர்பாக ஒரு அறிஞர் குழுவை போதிய நிதி ஆதாரத்துடன் நியமித்துப் பணிகளைத்துவக்க வேண்டும்.
(ஆ) வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தமிழின் மொழியியல் வளர்ச்சிக்கு மிக அடிப்படையான தேவையாகும்.கி.ராஜநாராயணன்,பெருமாள் முருகன்,கண்மணி குணசேகரன் போன்ற சில தனிப்பட்ட ஆளுமைகளின் கடும் உழைப்பால் சில வட்டார வழக்குச் சொல்லகராதிகள் வந்துள்ளன.அரசு சார் நிறுவனங்களோ பல்கலைக்கழகங்களோ இதுபற்றிக் கிஞ்சித்தும் கவலை கொண்டதில்லை.உலகத்தமிழ் மாநாடு போன்ற பெரும் செலவிலான நிகழ்வுகள் நடக்கும் போதேனும் இதுபற்றிக் கவலை கொண்டு தமிழகம் முழுவதும் வட்டார வழக்குகளை அகராதிகளாகத் தொகுக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி ஏற்பாடு செய்வது மிகமிக அவசியமாகும்.
அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் குறித்த பேச்சுக்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது ஆரோக்கியமான ஒன்று.மணவை முஸ்தபா போன்ற தனிப்பட்ட ஆளுமைகள் உருவாக்கியுள்ள கலைச்சொல் அகராதிகளைப்பார்க்கிலும் ஒருங்கிணைந்த அறிவியல் அகராதிகள் அல்லது துறைவாரியான கலைச்சொல் அகராதிகளை அரசு முன்னின்று முயன்று வெளிக்கொணர வேண்டும்.
1960இல் தமிழக அரசு வெளியிட்ட கலைக்களஞ்சியத்துக்குப் பிறகு எந்த முயற்சியும் இத்துறையில் செய்யப்படவில்லை.60க்குப்பிறகு அதிவேகப்பாய்ச்சலில் அறிவியல்,தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.ஆகவே தற்காலப்படுத்தப்பட்ட கலைக்களஞ்சியம் உடனடியான தேவையாகும்.
கணிணிக்கான பொதுவான எழுத்துரு என்பது இன்னும் கனவாகவே உள்ளது.கணிணிக்குப் பொருத்தமான மொழியாக நம் தமிழ் இருப்பது நமக்குப் பெருமைதான்.ஆனால் ஒரு பொதுவான தமிழ் விசைப்பலகையைத் தயாரித்து சில ஆயிரம் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாக மக்களுக்கு வழங்கும் பணியை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.ஆரம்ப முயற்சிகள் சிலவற்றை அரசு சில ஆண்டுகளுக்கு முன் செய்தது.பிறகு அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது.
மருத்துவம்,பொறியியல் போன்ற அறிவியல்துறை சார் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடமும் தமிழ் மொழியியல் பாடமும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.புதிய கலைச்சொல் ஆக்கங்களில் அவர்கள் ஈடுபட இது அவசியமல்லவா?இத்தகு கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியர்களை நியமிப்பதும் அவசியமாகும்.
வழக்குமொழியாக..
கீழமை நீதிமன்றங்களில் சாட்சிகள் தமிழில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.தீர்ப்பு தமிழிலோ ஆங்கிலத்திலோ வழங்கலாம் என்கிற விருப்பத்தேர்வு முறை இருக்கிறது.உயர்நீதி மன்றத்திலோ தமிழ் இல்லவே இல்லை.தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
தமிழக அரசு அரசியல் உறுதியுடன் மத்திய அரசோடு போராடி நீதித்து¨றையில் தமிழே ஆளும் நிலையை உருவாக்கிட வேண்டும்.
ஆட்சி மொழியாக..
1994 ஆம் ஆண்டு தமுஎச நடத்திய தமிழ் வலர்ச்சி மாநாட்டின் இரண்டாவது தீர்மானம் கீழ்க்கண்ட வாசகங்களைக்கொண்டுள்ளது:-
“ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் (பிரிவு 17இன் சரத்து 345) வகை செய்யப்பட்டுள்ளதற்கிணங்க தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக்கும் “தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம்” 1956இ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதனைச் செயல்படுத்துவதில் அரசுக்கு அறிவுரைகள் வழங்குவதற்கென ‘ஆட்சி மொழித்திட்ட நிரைவேற்றக் குழு' 1957இல் அமைக்கப்பட்டது.அதுவே 1968இல் தமிழ் வளர்ச்சித் துறை என உருமாறியது.தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் வந்ததிலிருந்து இன்றுவரை அரசு நிர்வாகத்தில் தமிழைப்பயன்படுத்த பல கட்டங்களில் பல ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.அரசு கடிதப்போக்குவரத்து (1958),அரசு ஊழியர் பணிப்பதிவேடு பதிவுகள்(1971)அரசு ஊழியர் கையெழுத்திடுதல்(1978),அரசு ஆனைகள்-விதிமுறைகள்(1989).
ஆனாலும் ஆட்சிமொழித்திட்ட நிறைவேற்ற நிலை குறித்து அவ்வப்போது அரசு ஆய்வு செய்து எதிர்பார்த்த அளவு இச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றே அறிவித்துள்ளது.”
இது அரசின் இயலாமையையும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் விருப்பமின்மையையுமே காட்டுகிறது.அரசின் உறுதியான உரிய நடவடிக்கை தேவை.
தமிழகத்தின் ஆட்சி மொழியாக- நிர்வாக மொழியாக -முழுமையாக தமிழ் இன்னும் ஆகிவிடவில்லை என்பது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.கணிணிக்குப் பொருத்தமான மொழியாகத் தமிழ் இருப்பதும் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் கணிணிப்பயன்பாடு வந்துவிட்ட சூழலும் ஆட்சியில் தமிழை அமர்த்திட நல்ல சூழலாகும்.அரசியல் உறுதியே இன்றைய தேவையாக உள்ளது.
ஊடகத்தமிழ்
ஏற்கனவே ஆங்கிலவழிக்கல்விக்கு வித்திட்டு மக்கள் மனங்களில் ஆங்கிலவழியே சிறந்தது- பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கான திறவுகோல் அதில்தான் இருக்கிறது என்கிற பொதுப்புத்தியை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். அது போதாதென்று இப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வாய்களில் தமிழ் நித்தம் செத்துக்கொண்டிருக்கிறது. உலகமயத்தின் தத்துப்பிள்ளைகளாகச் சேவகம் செய்துவரும் தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்களின் உள்ளடக்கத்திலும் பேச்சு மொழியிலும் தமிழ்ப் பண்பாடும் இல்லை நல்லதமிழ்ச் சொற்களும் இல்லை.
தமிழ்த் தொலைக்காட்சி உலகின் முடி சூடா மன்னர்களாக முத்தமிழ் வேந்தர் டாக்டர் கலைஞரின் குடும்பத்தாரே திகழ்வதை வரலாற்றின் நகைச்சுவை என்றுதான் கொள்ள வேண்டும்.திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் வைத்தால் சலுகை வழங்கும் தமிழக அரசு அன்றாடம் 24 மணி நேரமும் தமிழர்தம் மூளைகளைச் செதுக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களிடமிருந்து தமிழ் வாழ்வையும் மொழியையும் மீட்க என்ன செய்யப்போகிறது?
செம்மொழித் தமிழுக்கு..
தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்த பிறகு செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நிறுவப்பட்டுள்ளது.சமஸ்கிருதத்துக்குப் போல தமிழுக்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
பிற நாட்டார் சாத்திரங்கள் தமிழில் கொண்டு வருவதும் அதைப்பார்க்கிலும் தமிழின் பெருமைமிகு படைப்புகளை பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வதும் செம்மொழித்தமிழுக்கு நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான கடமையாகும்.ஆங்கில அறிவும் பிறமொழிகளில் புலமையும் உள்ள தமிழ் அறிஞர்களின் பணியே இத்தகைய முயற்சிக்கு அடிப்படை.ஆனால் அத்தகைய தகுதி வாய்ந்த அறிஞர்கள் போதிய அளவில் தமிழகத்தில் இல்லை என்பதும் வருத்தத்துடன் குறிக்கத்தக்க உண்மையாகும்.
குறைந்த பட்சமாக திராவிட மொழிகளிலாவது சங்க இலக்கியம்,தொல்காப்பியம் துவங்கி சித்தர் பாடல்கள்,பாரதி படைப்புகள் வரை மொழி பெயர்க்கும் பணியை திட்டமிட்ட முறையில் செய்திட ஒரு நிரந்தரமான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். மாணவர் சமூகம் புரிந்து கொள்ளும் விதத்தில் ஆறாவது வகுப்புக்கு மேல் கல்லூரிக்கல்வி வரை ஒவ்வொரு வகுப்பிலும் செம்மொழி என்று ஏன் சொல்கிறோம்? செம்மொழித்தமிழின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய ஒரு பாடம் அவசியம் இருக்க வேண்டும்.
இதுபோன்ற ஏராளமான கடமைகள் செம்மொழித்தமிழுக்குச் செய்ய வேண்டியிருக்க வெறும் விளம்பரமாகவும் கொண்டாட்டமாகவும் வெடிச்சத்தம்போல அந்த நேரத்தில் காதுகளைச் செவிடாக்கிப் பின் காற்றில் கரைந்து காணாமல் போகிற ஏற்பாடாக ஒரு செம்மொழிக்கான உலகமாநாடு போய்விடக்கூடாது என்கிற அக்கறையுடன் மேற்கண்ட பணிகளை நாம் நினைவு படுத்தியுள்ளோம்.
மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்து முடித்துவிட முடியாது என்பதையும் அரசு மட்டுமே எல்லாவற்றையும் செய்து முடித்திட முடியாது என்பதையும் நாம் அறிவோம்.ஆனால் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் கடந்தபின்னும் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 53 ஆண்டுகள் கழிந்த பின்னும் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தி மக்களை அணிதிரட்டிய திராவிட இயக்கத்தினர் ஆட்சிக்கு வந்து 42 ஆண்டுகள் கழிந்தபின்னும் இவையெல்லாம் இன்னும் நிறைவேற்றப்படவில்லையே என்பதுதான் நம் வேதனை.
எந்த ஒரு பெரிய மாற்றமும் மக்கள் பங்கேற்பில்லாமல் நடந்ததாக வரலாறில்லை.தமிழ் வளர்ச்சிக்கான பணிகள் இத்தனை மந்தமாகவும் நகர்வின்றியும் இருக்கும் நிலையில் ஓர் உடைப்பு ஏற்படவேண்டுமானால் அதில் மக்கள் பங்கேற்பு அவசியம்.தமிழின அடையாளத்தை முன்வைத்து உணர்ச்சிகரமான அரசியல் மட்டுமே தமிழகத்தில் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.அறிவியல்பூர்வமான பார்வையுடன் வரலாற்று நோக்கில் சிந்தித்து உண்மையிலேயே செம்மொழித்தமிழுக்குச் செய்ய வேண்டியவற்றை நாம் செய்ய வேண்டும்.அரசுக்கும் மக்களுக்கும் அவரவர் ஆற்ற வேண்டிய பங்கு உண்டு.
அத்தகைய பங்கேற்பைக்கோரி அனைத்துப்பகுதி மக்களையும் கல்வியாளர்களையும் தமிழ் அறிஞர் பெருமக்களையும் தமுஎகச அறைகூவி அழைக்கிறது.

-----------------ச.தமிழ்ச்செல்வன் --------------
த மு எ க ச



































உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருப்பூர்குமரன் சிலை முன்பாக சுமார் ஐந்தாயிரம் புத்தகங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது !
நிகழ்சியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாழர் கலைஞ்சர் சங்க கோவை மாவட்ட செயலர் ஈஸ்வரன்
ஏற்பாடு செய்திருந்தார் .
நிகழ்சியில் பி எஸ் என் எல்
ஊழியர் சங்க கோவை மாவட்ட செயலர் சுப்ரமணியம் ,தங்கராஜ் ,
அண்ணாதுரை ,ராமசாமி
விஸ்வநாதன் ,பழனிசாமி
ரோச்பால் நந்தகோபால்

குமார் ,செந்தீபன் ,மற்றும்
குழந்தைகள் ஜீவிதா ,
மிருதுளா , ஆகாஸ்







ஆகியோர் பங்கேற்றனர்



























































































No comments:

Post a Comment