திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Sunday, November 28, 2010

சமுதாய லட்சியத்தோடு படைத்திட எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்

சமுதாய ஏற்றத்தாழ்வு களுக்கு முடிவு கட்டும் லட்சி யத்தோடு எழுத்தாளர்கள் தொடர்ந்து படைப்புகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கியப் பரிசுகள் (2009) வழங்கும் விழா சனிக்கிழமை அன்று (நவ. 27) சென்னையில் நடை பெற்றது. சங்கத்தின் தென் சென்னை மாவட்டக்குழு ஏற் பாடு செய்திருந்த இந்த விழா வில் உரையாற்றிய மாநிலப் பொதுச் செயலாளர் ச. தமிழ்ச் செல்வன் படைப்பாளிகளின் சமுதாய நோக்கம் என்றென் றும் தொடர வேண்டும் என்றார்.

“ஒவ்வொருவருக்கும் எழுத் தாற்றல் இருக்கிறது. கிராமங் களில் சாமி ஆடுவார்கள். சாதா ரணமாக சாமி வந்துவிடாது. அருகிலிருந்து மேளக்காரர் கள் கொட்டடிப்பார்கள். அப் போது தானாக ஆட்டம் வரும். அவ்வாறு ஒவ்வொருக்கும் இருக்கிற படைப்பாற்றல் என்ற சாமியை வெளியே கொண்டு வர கொட்டடிக்கும் பணியைத் தான் தமுஎகச செய்து வரு கிறது,” என்றார் அவர்.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ. பெருமாள் பேசுகையில், உயர்ந்த அதிகாரியாக இருந்த போதிலும் மறைந்த எழுத்தா ளர் சு. சமுத்திரம் எளிய மக்க ளோடு கலந்து நின்றதை நினைவு கூர்ந்தார். மாநிலப் பொருளாளர் இரா.தெ. முத்து, வடசென்னை மாவட்டச் செய லாளர் நா.வே. அருள் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.

எழுத்தாளர் சு. சமுத்திரம் நினைவு விளிம்புநிலை மக் கள் - இலக்கியப் பரிசு ‘யார் அந்த பஞ்சமர்? ஒரு தொலைந்த உலகு’ நூலை எழுதிய கே. கங்காதரனுக்கு வழங்கப்பட் டது. பெருமாயி குப்பண்ணன் நினைவு நாவல் - இலக்கியப் பரிசு ‘அறுபடும் விலங்கு’ எழு திய கரன்கார்க்கி, தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூல் - இலக்கியப் பரிசு ‘தமிழி சையும் இசைத்தமிழும்’ எழு திய முனைவர் அரிமளம் சு. பத்ம நாபன், எழுத்தாளர் புதுமைப் பித்தன் நினைவு சிறுகதை இலக்கியப் பரிசு ‘பிறிதொரு மரணம்’ புத்தகத்தை எழுதிய உதய சங்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

அகிலா - சேதுராமன் நினைவு குழந்தை - இலக்கியப் பரிசு, செல்வன் கார்க்கி நினைவு கவிதை - இலக்கியப் பரிசு ஆகிய இரண்டும் ‘அமே சான் காடுகளும் சகாரா பாலை வனமும் எப்படித் தோன்றின’, ‘குளம்பொலி ஞானங்கள்’ ஆகிய இரு புத்தகங்களையும் எழுதிய பெ. கருணாகரன், தமி ழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவு மொழிபெயர்ப்பு - இலக்கியப் பரிசு ‘அமினா’ என்ற நைஜீரியாவைச் சேர்ந்த முக மது உமர் எழுதிய நூலை மொழி பெயர்த்த பேராசிரியர் தருமி ஆகியோருக்கு வழங்கப்பட் டன.

பரிசுக்குரிய நூல்கள் குறித்து தேர்வுக் குழுக்களின் தலைவர்களாகச் செயல்பட்ட எஸ்.ஏ. பெருமாள், சோலை சுந் தர பெருமாள், திருப்பூர் ஈஸ் வரன், அ. குமரேசன், மயிலை பாலு, நாகை காவியன் ஆகி யோர் உரையாற்றினர்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் சைதை ஜெ. தலை மையில் நடந்த இந்த விழா வில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கி. அன்பரசன் வர வேற்றார். சிவசெந்தில் நன்றி கூறினார். சு. சமுத்திரத்தின் புதல்வி அமுதா ரமேஷ் உள் ளிட்டோர் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டனர். முன்னதாக இப்புத்தகங் களைக் குறித்து அறிமுகப் படுத்தும் குறும்படம் திரை யிடப்பட்டது . இதனை தயா ரித்த ரகுநாத், விஜயன், குரல் வழங்கிய சிறுமி சிநேகா ஆகி யோர் கவுரவிக்கப்பட்டனர்.

செய்தி தீக்கதிர்
29/11/2010

Tuesday, October 5, 2010

விளையாட்டென்பது சும்மா விளையாட்டல்ல….

எழுதியது ச.தமிழ்ச்செல்வன்
--------------------------


டெல்லியில் நடைபெற உள்ள 19-ஆவது காமன்வெல்த் விளையாட்டிலும் கைவைத்து ’விளையாடிவிட்ட’ இந்திய அதிகாரிகள்,துணைபோகும் அமைச்சர்கள் பற்றி நாள்தோறும் ஒரு செய்தியை நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.போபர்ஸ் பீரங்கியிலிருந்து ,மாட்டுத்தீவனம், சுடுகாட்டுக்கொட்டகை என எல்லாவற்றிலும் விளையாடிய நம் மகானுபாவர்கள் விளையாட்டில் மட்டும் எப்படி விளையாடாமல் இருப்பார்கள்.நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா? அது பற்றி ஏராளமான கட்டுரைகள் தினசரி பத்திரிகைகளில் வந்து கொண்டே இருக்கின்றன.ஆகவே இக்கட்டுரை அதுபற்றிப் பேசாமல் இன்னும் அதிகம் பேசப்படாத விளையாட்டைப்பற்றிய சில விடயங்களைப் பற்றிப் பேசவிருக்கிறது.

* * *

வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்ட 1911 ஆம் ஆண்டுதான் காமன்வெல்த் விளையாட்டுக்களுக்கான மூல விதை நடப்பட்டது.அந்த ஆண்டில் இங்கிலாந்தின் மன்னனாக ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிக் கொண்டதை ஒட்டி அவன் இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தே- அந்த எதிர்ப்பை உலகுக்காட்டவே -வாஞ்சி ஆஷைச் சுட்டுக்கொன்றார்.(வாஞ்சியைப் பற்றிய கணிப்புகள் இன்று மாறி வந்தாலும் அவர் சுட்டது ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் வருகையை ஒட்டியே என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை). நேர்மாறாக அதே ஐந்தாம் ஜார்ஜ் பதவியேற்றதைக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்காக அதே 1911இல் இங்கிலாந்தில் ஒரு விளையாட்டுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.ஆஸ்திரேலியா,கனடா,தென் ஆப்பிரிக்கா,இன்கிலாந்து போன்ற நாடுகள் அப்போட்டியில் பங்கேற்று மன்னர் முடிசூட்டிக்கொண்டதை விளையாடிக் களித்தன.அதற்கு சாம்ராஜ்ஜிய விளையாட்டு விழா என்று பேர் வைத்தார்கள்.1930இல் அவ்விளையாட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய விளையாட்டு எனப்பேர் பெற்று 1954இல் அது கனடா நாட்டில் விளையாடப்பட்டபோது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்று பேர் பெற்று 1970 இங்கிலாந்தில் விளையாடப்பட்டபோது பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்றாகி மீண்டும் 1978இல் கனடாவில் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்கிற இன்றைய நாமத்தைப் பெற்றது.

காமன்வெல்த் என்பது 54 நாட்டு அரசுகளின் ஒரு கூட்டமைப்பு.அந்த 54இல் 52 நாடுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரிட்டனுக்கு அடிமைப்பட்டிருந்த முன்னாள் காலனி நாடுகள்.ஆகவே காமன்வெல்த் என்பது பழைய ராஜவிசுவாசிகளின் சங்கம் என்பதாக ஆரம்பத்தில் தோற்றம் கொண்டிருந்தது.இந்நாடுகளின் மீது அரசியல்,பொருளாதார நிர்ப்பந்தம் செலுத்த இவ்வமைப்பை இங்கிலாந்து பயன்படுத்தும் சாத்தியமும் அப்போது இருந்தது.ஆகவே காமன்வெல்த்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது (தற்காலப்படுத்தப்படுவதற்கு முந்திய )கட்சித்திட்டத்திலேயே குறிப்பிட்டது.

1971 சிங்கப்பூர் பிரகடனம் காமன்வெல்த்தில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் சுயாதிபத்திய உரிமை பெற்ற சமமான மதிப்புள்ள உறுப்பினர்கள் என்றும் இவ்வமைப்பின் லட்சியம் ஜனநாயகம்,மனித உரிமைகள்,நல்லாட்சி,சட்டத்தின் ஆட்சி,உலகசமாதானம் போன்றவைதான் என அறிவித்தது.இந்த காமன்வெல்த் விளயாட்டுகள் ஒன்றுதான் அப்படி ஒரு அமைப்பு இருப்பதை ஞாபகப்படுத்தும் நிகழ்வாக இருக்கிறது.இது தவிர வேறுசில அமைப்புகளும் காமன்வெல்த்தில் இருக்கின்றன.காமன்வெல்த் இடுகாட்டுக் கமிசன் என்பது உலகெங்கும் பரவிக்கிடக்கும் 2500 போர்வீரர் கல்லறைத்தொகுதிகளைப் பராமரிக்கிறது.உலகப்போர்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்காகப் போரிட்டு மடிந்த போர்வீரர்களின் கல்லறைகளாகும்.இதுபோல பண்பாடு,கலை இலக்கியம் போன்றவற்றுக்கான சில அமைப்புகளும் இயங்குகின்றன.ஆகவே 1950களில் இருந்த காமன்வெல்த் பற்றிய கணிப்புகள் இன்று மாறியுள்ளன.

எனினும் அதன் தலைவராக இப்போதும் எலிசபெத் ராணியே இருக்கிறார்: தலைமையகம் நிரந்தரமாக லண்டனின் மல்பரோ மாளிகையிலேயே இருக்கிறது:என்பது போன்ற உண்மைகளால்

ராஜவிசுவாச சங்கம் என்கிற அதன் தோற்றம் முற்றிலும் மறையாமல் தொடரத்தான் செய்கிறது-அதன் செயலாளர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறார் –அவர் ஐ.நா.பொதுக்குழுவில் ஒரு பார்வையாளராக அனுமதிக்கப்படுகிறார் என்றாலும் கூட.

இப்படியான ஒரு அமைப்பின் ஒரு பகுதியான விளையாட்டுத்தான் காமன்வெல்த் விளையாட்டு 2010 ம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டின் முக்கிய நகரம் ஒன்றில் நடத்தப்படுகிறது.சென்ற காமன்வெல்த் போட்டிகள் 2006இல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.2014 இல் ஸ்காட்லாண்டிலும் 2018இல் இலங்கை அல்லது ஆஸ்திரேலியாவிலும் நடைபெற இருக்கிறது.

இந்த விளையாட்டுக்களை பல உறுப்பு நாடுகள் புறக்கணித்த வரலாறும் உண்டு.பெரும்பாலும் தெனாப்பிரிக்காவில் பன்னெடுங்காலமாக அமலில் இருந்த (இன்றும் தொடரும்) நிறவெறிக்கொள்கைக்கு எதிரான உணர்வுடன் 1978இல் நைஜீரியா புறக்கணித்தது.1986இல் தாட்சரின் தெனாப்பிரிக்காவுக்கு ஆதரவான விளையாட்டுக் கொள்கை காரணமாக 32 நாடுகள் காமன்வெல்த் விளையாட்டைப் புறக்கணித்தன.

* * *

இவ்விதம் விளையாட்டில் அரசியல் ஊடாடுவது என்பதைத் துவக்கி வைத்தவன் ஜெர்மானிய பாசிஸ்ட் ஹிட்லர்தான்.1931இல் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடத்த ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்தது.முதல் உலகப்போருக்குப் பின் சர்வதேச சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருந்த ஜெர்மனி(ஒவ்வொரு உலகப்போருக்குப் பின்னும் தோற்ற நாடுகள் ஒலிம்பிக்கிற்கு அழைக்கப்படவில்லை) மீண்டும் உலக நிகழ்வு ஒன்றை நடத்தும் வாய்ப்பைப்பெற்றது.ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனியில் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்புகள் ஹிட்லரை 1933இல் ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தின.ஜெர்மானிய ஆரிய இனமே உலகின் ஈடு இணையற்ற தலைமை இனம் என்கிற முழக்கத்தோடு இனச்சுத்திகரிப்புக் கொடும் செயல்களைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த ஹிட்லரின் கையில் கிடைத்த இந்த வாய்ப்பை அவன் தன் ஆரியக்கொள்கைகளை – ஆரிய ஜெர்மனியின் சிறப்பை- அதன் மீது உலகம் வைத்துவந்த விமர்சனங்களைப் புறந்தள்ளி -உலகுக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டான்.

அதற்கு முன்வரை ஜெர்மனியில் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாக இருந்த பலர் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு தேசிய விளையாட்டு அமைப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்- அவர்கள் யூதர்கள் என்கிற காரணத்துக்காக.ஆரியர்களைத்தவிர வேறு யாராலும் விளையாட்டிலும் ஜெர்மானிய தேசியத்தின் பெருமையை உயர்த்திப்பிடித்திட முடியாது என்று வாதிடப்பட்டது.ஜெர்மானிய பாக்சிங் அசோசியேசன் அந்நாட்டின் மிகச்சிறந்த பாக்சிங் வீரரான எரிக் சீலிக்கை அவர் யூதர் என்பதற்காக வெளியேற்றியது.டேனியல் ப்ரென் என்கிற உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ஜெர்மனியின் டேவிஸ் கோப்பை க்ளப்பிலிருந்து தூக்கி எறியப்பட்டார்-யூதர் என்பதற்காக.இப்படிப் பல அற்புதமான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் ஒன்றுகூடி யூத விளையாட்டு வீரர்களுக்கான அமைப்புகளைத் துவக்க முற்பட்டுக்கொண்டிருந்த வேளையில் 1936 ஒலிம்பிக் வந்து சேர்ந்தது.

ஆரம்பத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதில் அவ்வளவு ஆர்வம் காட்டாதிருந்த ஹிட்லர் அதில் உள்ள விளம்பர அம்சத்தை அவருடைய கொள்கை பரப்பு அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ் (’ஒரு பொய்யை நூறு முறை திரும்பத் திரும்பச்சொன்னால் அது உண்மையாகிவிடும் ’ என்கிற தத்துவத்தை உலகுக்கு வழங்கியவர்) எடுத்துக்கூறியபின் பிரம்மாண்டமாக ஒலிம்பிக் நிகழ்வை நடத்தினான் ஹிட்லர்.உலகில் இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே பிரம்மாண்டமான நிகழ்வு 1936இல் ஹிட்லர் நடத்தியதுதான் என்று கூறப்படுகிறது.லட்சோபலட்சம் மக்கள் பேரணிகளாகவும் அலையலையான கூட்டங்களாகவும் அந்நிகழ்வில் ஆரிய முழக்கங்களோடு பங்கேற்றனர்.ஜெர்மானிய வீரர்கள் பதக்கம் பெற மேடையேறியபோதெல்லாம் லட்சோபலட்சம் மக்கள் எழுந்து நின்று ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்து முழக்கமிட்டனர்.அன்று தொலைக்காட்சி வந்திருக்கவில்லை.வானொலி மட்டுமே இருந்தது.வானொலியை முழுமையாகக் கைக்கொண்டு ஜெர்மனியின் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் உள்ள மக்கள் வானொலி மூலம் ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் கேட்டு மேலும் தேசியப்பெருமிதமும் ஆரிய உணர்வும் கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.வெளி உலகுக்கு நாங்கள் ஒன்றும் இனவெறியர்கள் அல்ல என்று காட்டிக்கொள்ளவும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஹிட்லரின் ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் வலுவாக எழுந்தது.தலைமறைவு வாழ்க்கையில் இருந்த ஜெர்மானிய சோசலிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட்டுகளும் பெர்லின் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு உலக மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.ஆனால் ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டில் அரசியலைப் புகுத்த அனுமதிக்க மாட்டோம்.ஹிட்லர் பாசிஸ்ட் என்றால் அது உங்கள் பிரச்னை.ஒலிம்பிக் கமிட்டி சொல்லும் தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்தால் போதும் பெர்லினில் நடத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று கமிட்டி கூறிவிட்டது.விளையாட்டின் அடிப்படை சமத்துவம்.நாஜிக்களின் அடிப்படை இனச்சார்பு.ஆகவே அடிப்படையிலேயே கோளாறு இருப்பதை கமிட்டி பார்க்கத் தவறிவிட்டது.

* * *

அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் பல நாடுகள்/வீரர்கள் புறக்கணித்த சம்பவங்கள் பல உண்டு.ஒலிம்பிக் மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளாகக் கருதப்படும் ஒலிம்பிக்,ஆசியன் கேம்ஸ்,காமன்வெல்த் போட்டிகள் இம்மூன்றுக்குமே இது நேர்ந்துள்ளது.

சமாதானம்,நல்லெண்ணம்,விளையாட்டின் மகத்துவம் இவற்றையே தன் லட்சியமாக ஒலிம்பிக் கொண்டிருந்தபோதும் நீண்ட காலம் சோவியத் யூனியனும்,மக்கள் சீனமும் அழைக்கப்படாமலிருந்தது அரசியல் காரணங்களுக்காகத்தான்.அரசியலுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு என்று திரும்பத்திரும்ப ஒலிம்பிக்,ஆசிய விளையாட்டு,காமன்வெல்த் போன்ற அமைப்பினர் சொல்லிக்கொண்டிருந்தாலும் இம்மூன்று மெகா விளையாட்டுக்களும் பிறந்த காலத்திலிருந்தே அரசியலோடுதான் நகர்ந்துகொண்டிருக்கின்றன.அரசியலுக்கு அப்பால் எதுவும் இல்லை.அரசியலற்றது என்று எதுவும் இருக்க முடியாது-விளையாட்டு உட்பட என்பதே நமது கருத்து.அது எந்த அரசியலாக இருக்க வேண்டும் என்பதே இக்களத்தில் நடக்கும் போராட்டம்.

விளையாட்டல்லாத கீழ்க்கண்ட விசயங்கள் விளையாட்டுக்குள் இருப்பதை நாம் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டியுள்ளது :-

1. இவ்விளையாட்டுக்கள் வெறும் விளையாட்டுக்களாகப் பார்க்கப்படுவதில்லை.ஒரு வீரர் வெற்றி பெற்றால் அது அந்த வீரரின் திறனாகப் பார்க்கப்படுவதில்லை.மாறாக அவரது நாடு வென்றதாகக் கருதப்படுகிறது.தேசியக்கொடிகள் ஆட்டப்படுகின்றன.அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஒரு போர் வெற்றி போல ஆக்கப்படுகிறது.தேசியப்பெருமிதம் ஊதி வளர்க்கப்பட( நன்றி-ஹிட்லர்) இவ்விளையாட்டுக்கள் பயன்படுகின்றன.இந்திய பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை இந்துத்வா சக்திகள் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவது ஒரு உதாரணம்.

2. விளையாட்டுக்கள் பணமுதலைகளான கார்ப்பொரேட்டுகளின் ஆதிக்கத்துக்குள் வந்து விட்டன.விளையாட்டுக்களை வழங்குவது(ஸ்பான்சர்) ,வீரர்களை தத்தெடுத்து தங்கள் கம்பெனி தயாரிப்புக்களுக்கான விளம்பரங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்துவது ,ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தையே கம்பெனி விலம்பரத்துக்குப் பயன்படுத்துவது என்று தொடங்கி விளையாட்டின் ஒவ்வொரு அம்சமும் வியாபாரமாகிக் கிடக்கிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரமாகவும் பயன்படுகிறது.ஆசியன்,ஒலிம்பிக் மற்றும் பல கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நிறுவனங்கள் தாங்களே பெரும் பணம் படைத்த கார்ப்பொரேட்டுகளாகி அக்கமிட்டிகளுக்கான தேர்தல் போன்றவை பணமும் வன்முறையும் ஊடாடும் நிலை வந்துள்ளது. விளையாட்டு மொத்தத்தில் பணம் தொடர்பான ஒன்றாக ஆகிவிட்டது.

3. விளையாட்டென்பது எல்லோரும் பங்கேற்கும் நிகழ்வு என்பதற்காகவும் கூடி விளையாடும் சமூக அனுபவத்துக்காகவுமே நம் எல்லோராலும் காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.ஆனால் அது இப்போது வெற்றி வெற்றி என்பதையே இலக்காகக் கொண்டதாக மாறிவிட்டது.அதிலும் தங்கப்பதக்கம் பெற்றவரே கொண்டாடப் படும்போது. மீடியாக்களில் கவனம் பெறும்போது தோற்ற வீரர்களின் உழைப்பும் ஈடுபாடும் மனநிலையும் கேலிக்குரியதாகிரது.பெருவாரியான வீரர்கள் தோற்பதற்காகவே இத்தனை காலம் உழைத்தது போல ஆகிவிடுகிறது.எப்படியாவது வெற்றி ஈட்ட வேண்டும் என்பதால் வீரர்கள் ஊக்க மருந்துகள் போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற சிதைவுகளும் அரங்கேறுகின்றன.

4. விளையாட்டுக்களிலும் ஆணாதிக்கமே நிலவுவது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.பெண் வீரர்களுக்கு பயிற்சியாளர்களோ நிதி அளித்து உதவுபவர்களோ கிடைப்பதில்லை.நாடுகளும் பெண்களை அனுப்புவதில் பெரிய முயற்சிகள் செய்வதில்லை.பெண்கள் விளையாடும் விளையாட்டிலும் பாலியல் வக்கிரம் எங்கும் பரவிக்கிடக்கிரது.டென்னிஸ் வீராங்கனைகளின் உடை,நீச்சல் உடை போன்றவை விவாதத்துக்குள்ளாகின்றன.புதுக்கோட்டை சாந்திக்கு ஏற்பட்ட அவமானம் ஒரு ஆண் வீரருக்கு ஏற்பட்டதுண்டா?

5. எல்லா சர்வதேச விளையாட்டுக்களும் ஐரோப்பிய விளையாட்டுக்களாகவே உள்ளன.ஹாக்கி ஏதோ ஒரு ஓரத்தில் இடம் பிடித்துள்ளது.மேற்கத்திய நாடுகள் அல்லாத நிலப்பரப்புகளின் பல்லாயிரம் விளையாட்டுக்களுக்கு சர்வதேச விளையாட்டரங்குகளில் எந்த இடமும் இல்லை.

6. வன்முறைக்கு மரியாதை செய்யும் பாக்சிங்,மல்லுக்கட்டு போன்ற விளையாட்டுக்கள் மட்டுமின்றி ரசிகர்களை வெறி கொள்ள வைத்துத் தோற வீரர்களை மைதானத்துக்குள் புகுந்து அடிப்பது, வெற்றி தோல்வி சார்ந்து கலகம் மற்றும் ரகளையில் ஈடுபடுவது மற்றும் சில சந்தர்ப்பங்களில் நாடுகளுக்கிடையேயான போருக்குக்கூடக் காரணமாக அமையும் அளவுக்கு –விளயாட்டுகளில் இன்று வன்முறைக்கான வித்து புதைந்து கிடக்கிறது.சர்வதேச விளயாட்டுக்களின் கொள்கை முழக்கங்களுக்கு நேர் முரணானதல்லவா இது.

7. பெரும் கூட்டம் கூடுவதால் தீவிரவாதம் இவ்விளையாட்டுக்களை தம் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.மூனிச் ஒலிம்பிக்கில் நடந்த படுகொலைகள் ஓர் உதாரணம்.ஆகவே அதைத்தடுக்க ராணுவம் போலீஸ் என்று குவித்து வைக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.

8. ஒவ்வொரு ஒலிம்பிக்,ஆசியன் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடந்த நாடுகளிலும் அதற்கான இடம்,விளையாட்டுக் கிராமம் போன்றவற்றை உருவாக்கும்போது அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் துரத்தப்பட்ட –மாற்று வாழ்விடம் கொடுக்கப்படாத கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பல்லாயிரக்கணக்கான அல்ல பல லட்சம் மக்கள் இவ்விளையாட்டுக்களால் வீடிழந்து நிற்கிறார்கள்.வீடுகள் மட்டுமல்ல சாலையோர வியாபாரம் செய்து பிழைத்தவர்கள் போல பல தொழில்கள் அழிந்து வாழ்விழந்தவர் எண்ணிக்கையும் வளர்ந்து விரிகிறது.இவர்களின் கண்ணீரின் மீதுதான் தேசியப் பெருமிதம் வளர்க்கும் இவ்விளையாட்டுக்கள் எழும்பி நிற்கின்றன என்பது எவ்வளவு வேதனையான உண்மை.

9. விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள்,அமைப்புகளில் எந்த ஜனநாயகமும் இல்லை.

இவ்வாறான எதிர்மறை அம்சங்களாக நாம் பட்டியலிடுவது விளையாட்டுக்கள் கூடாது என்பதற்காக அல்ல விளையாட்டு கொடியவர்களின் கூடாரமாகவும் ஊழல் பெருச்சாளிகளின் கைப்பாவையாகவும் கார்ப்பொரேட்டுகளின் சொத்தாகவும் ஏழைகளுக்கும் உண்மையான விளையாட்டுத்திறன்களுக்கும் எட்டாக்கனியாகவும் மாறிவிடக்கூடாதே என்பதற்காகத்தான்.இன்னும் பேச நிறைய உண்டு.விளையாட்டை விளையாட்டாக நாம் எடுத்துக்கொண்டுவிட முடியாது என்பதை மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கலாம்.

பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

sa thamilselvan

Saturday, August 21, 2010

துக்கத்தின் சிலுவையில் மாட்டப்பட்ட கதைகள்

- தேன்மொழியின் ‘நெற்குஞ்சம்’

எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Friday, August 13, 2010


கவிஞர் தேன்மொழியின் முதல் சிறுகதைத் தொகுப்பான ’நெற்குஞ்சம்’ வாசித்தது முற்றிலும் புதிய உணர்வைத் தந்தது.ரவிக்குமாரின் 10 பக்க முன்னுரையை வாசித்துவிடக் கூடாது என்று கறாராக மனதில் முடிவுசெய்துகொண்டு முதலில் கதைகளை வாசித்தேன்..அப்புறமாகத்தான் ரவிக்குமாரின் முன்னுரையை வாசித்தேன்.இரண்டைப்பற்றியும் சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும்.

முதலில் கதைகளைப்பற்றி.

10 கதைகள் தொகுப்பில் இருக்கின்றன.இரண்டு கதைகள் என்னை வெகுவாகத் தாக்கின அல்லது புரட்டிப்போட்டன அல்லது சமீப காலத்தில் வாசிப்பில் அடைந்திராத அதிர்வுகளைத் தந்தன என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கடல்கோள் மற்றும் நாகதாளி ஆகிய இரு கதைகள்.கடல்கோள் கதையில் அவள் மரணத்தின் வாசலில் கிடக்கிறாள்.அவனோடு வாழ்ந்த காலத்திலெல்லாம் பேசாத/ பேச முடியாத ஒற்றைவரியைச் சொல்லிவிடத் துடிக்கிறாள்.அவன் இப்போதும் அதே சாராய நெடியுடனும் வெறித்த பார்வையுடனும் அவள் உடலருகே அமர்ந்திருக்கிறான்...

.....’ஒரே வீட்டிற்குள் உன் வாசனை என்னாலும் என் வாசனை உன்னாலும் நுகரப்படாமல் திட்டுத் திட்டாய் உறைந்திருந்தது.உன் வாசனையை முதன்முதலில் ஒரு சாராய நெடியோடுதான் நுகர்ந்தேன். ... அன்று அந்த நெடிதான் உன்னை உந்தி உந்தித் தள்ளி என்னோடு உன்னைக் கூட வைத்தது.மறுப்பற்று ஏற்பற்றுக் கிடந்த எனக்கு அந்த சாராய நெடி மூன்றாமவனின் கண்ணாய் உறுத்தியது.எதிர் எதிரே உன்னை நானும் என்னை நீயும் வெறுமையோடு கடந்த தருணங்கள் நிறைய உண்டு.....’

ஐந்து வரிகளுக்குள் ஒரு மணவாழ்க்கை சொல்லி முடிக்கப்பட்டுவிட்டது.எனக்கு சாராயப்பழக்கமோ புகைப்பழக்கமோ இல்லை என்றாலும் அவளருகே அமர்ந்திருந்தது நான்தான் என்று பட்டது.உண்மையில் ஒருமுறை உடம்போடு அதிர்ந்தேன்.சாராயம் இல்லை என்றால் இன்னும் ஏதோ ஒன்று.ஏதோ ஒரு வாசனை ஒவ்வொரு ஆணிடமும் உண்டென்று பட்டது.மூன்றாவது கண் என்று அவள் சாராயத்தைக் குறிப்பிட்டது வாசிக்கும்போது சிலீரென்றது எனக்கு.அவனுக்கு சாராயம் எனில் எனக்கு எது என்று மனம் என் வாழ்வின் கடந்துபோன பக்கங்களை அவசரமாய்ப் புரட்டிக்கொண்டது.

ஒரு கலைப்படைப்பின் வெற்றி இதுதான் என்று சொல்லலாம்.

நாகதாளி கதையில் அவன் சடலம் கிடத்தப்பட்டிருக்க அவள் அதன் அருகே அமர்ந்திருக்கிறாள். .

...இன்று வரப்போகும் இரவுக்காய்க் காத்திருக்கிறேன்.அது எனக்கான உறக்கத்தைக் கொண்டுவரும் என்ற உணர்வு என்னுள் விழுந்தோடிக்கிடக்கிறது.கண்டிப்பாய் உறங்குவேன்.பதினைந்து வருட உறக்கத்தைக் கூவி அழைக்காமலே அது என்னை வந்து சேரும்.....


....இரவுகள் என்னை உறங்க வைக்க நீ அனுமதித்ததில்லை.அது ரகசிய ஆயுதங்களைச் சுமந்து வந்து என்னைத் தாக்கியது.தட்டித்தட்டி என்னை எழுப்புவதற்காகவே இரவு வருவதாய்த் தோன்றியது..


.... உறவுக்காய்ப் பிணைக்கப்பட்டவர்கள் நீயும் நானும் . உன் சக இணை நான்.அடிமையாகவும் எதிரியாகவும் உன் வக்ரங்களையும் குரூரங்களையும் கொட்டித்தீர்க்கும் நிலமாகவும் என்னௌ உனக்கு அடையாளப்படுத்திய இச்சமூகத்தைக் காறி உமிழ்கிறேன்.உன் இணைப்பறவை நான்.கண்கள் தாண்டிய வானத்தில் உன்னோடு பறக்கக் கனவு கண்டவள்.என் மரத்தின் இலைகளை உதிர்த்து விட்டாய்.என் சருகுகளின் இசையைத் தொலைத்து விட்டாய்.என் மரத்தின் குருவிகளைக் கொத்திப்போய் விட்டாய்.....


புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கைகளால் என் முகத்தை மூடிக்கொள்கிறேன்.அவள் காறி உமிழ்ந்தது என் புறங்கைகளில் வழிய ஒருமுறை விசும்பி அடங்குகிறது என் உடல்.

இக்கதைகள் இரண்டும் ஒவ்வொரு ஆண் வாசகரையும் ஆழச்சென்று வேர்வரை தாக்கும் வல்லமை கொண்டுள்ளன. நம் வீட்டுப் பெண்களுக்கு இவ்விதம் நம்மோடு வசனம் பேசத் தெரியாமல் இருக்கலாம்.ஆனாலும் இவை அவர்களின் வார்த்தைகள்தாம்.என் அம்மாவின் –என் தங்கையின் –என் துணைவியின் -என் மகளின்.......

இந்த இரண்டு கதைகளுக்குப் பின் மிக முக்கியமெனப்பட்டது நாகாபரணம் என்கிற கதை.ஒரு கோவிலில் அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள்....

...... உனக்கு இரண்டு மகன்கள் இருப்பதையும் அவவர்களில் ஒருவருக்காவது என் பெயர் வைக்க விரும்பியதையும் இயலாமல் போனதையும் கூறுகிறாய்.என் மீதான நேசம் உனக்குள்ளிருந்ததை இதன் மூலம் தெளிவு படுத்துகிறாய்.நான் எனக்கு ஒரு மகன் இருப்பதையும் அவன் உன் ஜாடையில் இருக்கக் கொடுத்து வைக்காததையும் நினைத்து உன்னிடம் வருந்துகிறேன்....

.... நேரமாகுது....இருவருமே கிளம்ப வேண்டும் என்கிறாய்.கண்களால் மறுத்தபடி குனிந்துகொள்கிறேன்....சமூகத்தின் மீதான எரிச்சல் கசப்பாய் என்னுள் பரவிக்கிடக்கிறது...இங்கே விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள்..கேள்விகளுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்படுவதில்லை.முரணான கட்டுப்பாடுகளால் அடைக்கப்பட்டுக் கிடக்கிறோம்.நம் வாழ்க்கையைப் பரிசளிக்க இவர்கள் யார்? நான் குலுங்கிக் கதற ஆரம்பிக்கிறேன்.ஏதாவது கேளு என்னை அமைதிப்படுத்திக்கொள்கிறேன் என்கிறாய்....எதைக்கொண்டும் நிரப்ப முடியாத நேச்த்தின் பள்ளத்தாக்கில் நாம் வீழந்து கிடக்கிறோம்....

.....எனக்கு நீ வேண்டும்.எனக்கும் உனக்குமான வாழ்க்கை திரும்ப வேண்டும் என்னைப் பொய்களின் கைகளிலிருந்து அள்ளிக்கொள்.என் வாழ்க்கையை எனக்குத் தா....

சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மதயானைபோல் நகர்ந்து செல்கிறாய்...

அவன் ஆண் அப்படித்தானே செல்வான் என்று வாசிப்பினூடே நான் பெருமூச்செரிகிறேன்.

ஆணைப்பொறுத்தவரை அவள் நினைவாக பிள்ளைக்குப் பேர் வைத்தால் போதும்..ஆனால் அதையும் செய்ய ஏலாதவன்.ஆனால் அவளுக்கோ அவனே வேண்டும்.இதுதான் உண்மை.அன்பும் நேசமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறாகத்தான் அர்த்தமமாகின்றன.இதுதான் வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது.அதன் ஒரு துளியாக இக்கதை நமக்குள் இறங்குகிறது.

இது தேன்மொழியின் முதல் தொகுப்பு. முதல் தொகுப்பில் ஐந்து கதைகள் நல்ல கதையாக அமைந்தால் அது மிகச்சிறந்த தொகுப்பு என்மனார் புலவர்.ஆகவே இது மிக நல்ல தொகுப்பு.நுடபமான கதைகள்.செறிவான மொழி.என்ன கூர்மையான வார்த்தைகள்! நமக்கு இப்படியெல்லாம் எழுத முடியுமா? உண்மையை பெண்கள் சொல்வதுபோல ஆண்களால் சொல்லிவிடத்தான் முடியுமா? எத்தனை நூற்றாண்டுப் பொய்யும் பூச்சும் நம் முகங்களில் அப்பிக்கிடக்கிறது.இவைபோன்ற கதைகள் அவ்வப்போது அதில் சிறு வழிப்பை ஏற்பத்தி வலிகொள்ளச் செய்கின்றன.

இனி ரவிக்குமாரின் முன்னுரை...

கொஞ்சம் ஓவராகத்தான் எழுதியிருக்கிறார்.என்றாலும் முதல் தொகுப்பை இப்படிக் கொண்டாட ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு ஆளுமை கிடைக்க வேண்டும்தான்.அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.ஆனால் நிலக்கொடை கதையைப் பற்றிப் பேச வந்த ரவிக்குமார் இவ்வாறு எழுதுகிறார்....

...நமது ‘முற்போக்கு எழுத்தாளர்கள்’ அதன் சூக்குமத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.புரட்சியாளனாய் மாறுவதற்கான எளிய வழி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.எங்கிருந்தாவது ஒரு பண்ணையாரைக் கூட்டி வர வேண்டும்.அந்தப் பண்ணையாரின் கொடுமைகளால் வாசகரின் ரத்தத்தைச் சூடாக்கி விட்டால் போதும்.அதற்கு சாகித்ய அகாடமி விருதுகூடக் கிடைத்துவிடும்....

என்று எழுதிச்செல்கிறார்.

தோழர் ரவிக்குமாரும் இந்த அறுதப்பழைய வியாதிக்குள்தான் சிக்கிக் கிடக்கிறார் என்பது வருத்தமளிக்கிறது. மற்ற அமைப்புகளைச் சேர்க்காமல் நான் சார்ந்திருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களாக உள்ள சிறுகதை/நாவல் படைப்பாளிகளின் படைப்புகள் மட்டுமே ஆண்டுக்கு 100 தொகுப்புகளேனும் வருகின்றன. (விரும்பினால் பட்டியல் தருகிறேன்)அவற்றில் ஒன்றைக்கூடக் கண்ணால் கூடப் பார்த்திருக்க மாட்டார் ரவிக்குமார் என்பது நிச்சயம்.1950-60 களில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த பண்ணையார்- அடிமை பற்றி எழுதுகிறவர்கள்தான் முற்போக்கு எழுத்தாளர்கள் என்கிற மனவியாதிக்குள் 2010லும் ரவிக்குமார் விழுந்து கிடப்பது எவ்வளவு பழைய ஆட்களாக இருக்கிறார்கள் நம் நண்பர்கள் என்கிற வருத்தத்தை ஆழமாக ஏற்படுத்துகிறது.பண்ணையார் என்பதில் ‘ண்’ க்கு எத்தனை சுழி என்று கேட்கிற ஏராளமான இளம்படைப்பாளிகள் எங்களோடு இருக்கிறார்கள் தோழரே. நவீன வாழ்வின் நெருக்கடிகளை விதவிதமாக எழுதிக்கொண்டிருக்கும் அவர்களை வாசிக்க நேரமில்லாவிட்டாலும் வாசிக்காமலே இன்னும் நாங்கள் பண்ணையார் கதைகளைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று பத்தாம் பசலித்தனமாக எதையேனும் பரப்பி அந்த இளம் படைப்பாளிகளைக் காயப்படுத்தாமலேனும் இருக்கலாம் அல்லவா? தவிர பண்ணையார்த்தனத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதுவதுதானே சரி.அதில் வேறு யாரும் முரண்பட்டாலும் தோழர் ரவிக்குமார் எப்படி முரண்பட முடியும்? முற்போக்கு எழுத்தாளர்களை நக்கல் செய்தால்தான் தான் எப்போக்கும் இல்லாத நவீன எழுத்தாளன் என்று தான் இனம் காணப்படுவோம் என்கிற அச்சம் பலருக்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம். ரவிக்குமார் போன்ற மூத்த/நாங்கள் மிகவும் மதிக்கிற படைப்பாளிக்கும் இருக்கிறது என்பது அறிய மிகுந்த வேதனை உண்டாகிறது.

பி.கு.


தோழர் ரவிக்குமாரின் முன்னுரையும் அதற்கு என் வருத்தமும் முக்கியமல்ல.தேன் மொழியின் கதைகள் மிக மிக முக்கியம்.சமயங்களில் கதைகளை முன்னுரை பற்றிய விவாதங்கள் மறைத்து விடும்.அது இவ்விளம் படைப்பாளிக்கு நேர்ந்துவிடக்கூடாது.

Thursday, July 29, 2010

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்-அழைக்கிறோம்

நாடாளுமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும்

தமிழைப்

பயன்பாட்டு மொழியாக்கக் கோரிப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட்-6,2010

மாலை-4 மணி : மெமோரியல் ஹால் எதிரே,சென்னை-சென்ட்ரல் அருகே




தலைமை

சிகரம் ச.செந்தில்நாதன், வழக்கறிஞர்

பங்கேற்போர்

டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்

எஸ்.கே. மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்

ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

விடுதலை இராஜேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்

சு.வெங்கடேசன், துணைப்பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

என்.ஜி.ஆர். பிரசாத், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

ஆர்.வைகை, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

பால் கனகராஜ், தலைவர், சென்னை பார் கவுன்சில்

பிரசன்னா, தலைவர், பெண்வழக்கறிஞர்கள் சங்கம்

சே.சு.பாலன் ராஜா, வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

இரா.மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம்

பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்

அ.குமரேசன், பத்திரிகையாளர்

மயிலை பாலு, பத்திரிகையாளர்

பிரம்மா, ஊடகவியலாளர்

தியாகச்செம்மல், ஊடகவியலாளர்

பிரளயன், நாடகவியலாளர்

பா.வீரமணி, ஆய்வாளர்

பிரின்ஸ், கல்வியியலாளர்

ந.ஸ்டாலின், சட்டம், முதுநிலை அம்பேத்கர் சட்டக்கல்லு ரி

ம.நா.குமார், எஸ்.எப்.ஐ, அமைப்பாளர்

மணிநாத், தலைவர், வடசென்னை

கி.அன்பரசன், செயலாளர், தென்சென்னை

நா.வே.அருள், செயலாளர், வடசென்னை

விடியல் கலைக்குழு, தென்சென்னை சக்திக்கலைக்குழு

போக்குவரத்து அரங்கம் வி பி சி கலைக்குழு

புதுயுகம் இசைக்குழு, பகத்சிங் இசைக்குழு, தமிழ்ஒளி இசைக்குழு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

வடசென்னை தென்சென்னை

நீதிமன்றத்தில் தமிழ்

அரசியல் சட்டத்தின் 348ஆம் பிரிவு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்கிறது. சுதந்திர இந்தியாவில் இந்த நிலையை மாற்றிட அரசியல் சட்டத்தைத் திருத்தினால்தான் முடியும். அதனால் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். அதே சட்டத்தின் உட்பிரிவு உயர்நீதிமன்றங்களின் பயன்பாட்டு மொழியாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் திகழமுடியும் என்கிறது. அதற்கு தமிழகச் சட்டமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றவேண்டும். பின்னர் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று, தமிழை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்திட ஆளுநர் அதிகாரம் வழங்கமுடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகச் சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாயிற்று. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியாயிற்று. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்பது மத்திய அரசின் ஒப்புரல்தானே? ஆனால் ஏன் இன்றுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட, மனுக்கள் தாக்கல் செய்ய, தமிழக அரசு மத்திய அரசிடம் வாதாடவேண்டும். போனது போகட்டும். இனியாவது வாதாடுமா?

நாடாளுமன்றத்தில் தமிழ்

அரசியல் சட்டத்தின் 120 ஆம் பிரிவில் நாடாளுமன்ற அலுவல்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பேசலாம். ஆனால் அமைச்சர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பதிலளிக்கவேண்டும். இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாத ஒருவர் மத்திய அரசியல் அமைச்சராக செயல்பட முடியாது. இது பெரும் அநீதி. நமது நாட்டு நாடாளுமன்றத்தில் நமது மொழியில் பேச முடியாது. இது நமது சுயமரியாதைக்கு இழுக்கு. வாக்களித்து அனுப்பிய மக்களுக்கு அவமரியாதை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவரவர் தாய்மொழியில் பேசவும் அதை உடனுக்குடன் அவரவர் மொழியில் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். இந்த விஞ்ஞான யுகத்தில் இது எளிதான காரியமே. எவ்வளவு செலவாகிப்போகும்? ஆகட்டுமே. கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகிற பல்லாயிரம் கோடி பணத்தோடு ஒப்பிடும்போது இது வெறும் கொசுறு.

(மாநாட்டுக்கு 400 கோடிதமிழுக்கு…? நூலிலிருந்து)

________________________________________________________________________________________________________

உழவுத்தமிழனை

உழைப்புத்தமிழனை

நெசவுத்தமிழனை

பசித்த தமிழனை

தாழ்த்தப்பட்ட

சாதித்தமிழனை

சபிக்கப்பட்ட

சேரித்தமிழனை

மலைகளில் வாழும்

ஆதித்தமிழனை

மலங்களை அள்ளும்

வீதித்தமிழனை

கடலுக்குள் மூழ்கும்

உப்புத்தமிழனை

கரைகளில் வாழும்

குப்பத்தமிழனை

உலைக்களம் வேகும்

நெருப்புத்தமிழனை

செருக்களம் சாகும்

துருப்புத்தமிழனை

இறுக்கிடும் சங்கிலி

எவையோ அவைதான்

என்தமிழ்த்தாயை

இறுக்கிடும் தளைகள்

//தணிகைச்செல்வன்//

Wednesday, July 21, 2010

ச தமிழ்செல்வனின் சமீப இடுகைகள்

சமச்சீர் பாடப்புத்தகங்கள் –ஒரு பார்வை

எழுதியது ச.தமிழ்ச்செல்வன்




ஆதியிலே பாடப்புத்தகங்களே இல்லாத காலம் ஒன்று இருந்தது.வரலாற்றின் ஒரு புள்ளியில்தான் பாடப்புத்தகம் வந்தது.சிலபஸ் எனப்படும் பாடத்திட்டமும்கூட வரலாற்றின் துவக்கத்தில் இருந்ததில்லை.மனிதகுலம் வர்க்க சமூகமாகப் பிளவுண்ட பிறகே ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்புதல் தரும் வண்ணம் உழைக்கும் வர்க்கத்தின் மனங்களைத் தகவமைக்க வேண்டிய அவசியம் ஆள்பவர்களுக்கு ஏற்பட்டது.மனிதகுலத்தின் பொதுவான சேகரமான அறிவைத் தனியுடமை ஆக்கிப் பெருவாரியான மக்களைக் கல்விச்சாலைகளுக்கு வெளியில் வைத்துப் பலகாலம் அறிவையும் அதிகாரத்துக்கான ஒரு சாதனமாக்கிக்கொண்டிருந்த்து ஆளும் வர்க்கம்.அதன்மூலம் தான் அறிவில் தாழ்ந்த வர்க்கம் என உழைக்கும் வர்க்கம் ஒப்புக்கொடுக்க நேரிட்டது. இந்தியாவின் ’சிறப்பான’ சாதியக்கட்டுமானம் கல்வியை காட்டுக்குள்ளே பர்ணசாலை அமைத்துப் பார்ப்பனருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் மட்டுமெனக் கொடுத்து வந்தது.அதை மீறிய ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது

இங்கிலாந்தில் வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கத்தின் ’சாசன இயக்கம் ‘தான் முதன் முதலாக அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது. அது உலகெங்கும் பரவியது. தொழிற்புரட்சி ஏற்பட்ட பின்னான காலத்தில் எழுந்த முதலாளி வர்க்கத்துக்கு எந்திரங்களைக் கையாளவும் கணக்குப் பார்க்கவும் தேவையான அடிப்படைக்கல்வி பெற்ற ஒரு உழைக்கும் கூட்டம் தேவைப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் இத்தேவையைக் காலந்தோறும் பூர்த்தி செய்ய ஆளும் வர்க்கத்தின் அரசுகள் பாடத்திட்டங்களையும் கற்பிக்கும் முறைமைகளையும் மாற்றிக்கொண்டே வந்ததுதான் கல்வியின் வரலாறும் கல்வியின் அரசியலும் ஆகும்.

“ நான் இந்தியாவின் எல்லாத்திசைகளிலும் பயணம் செய்து பார்த்துவிட்டேன்.எந்த ஒரு மூலையிலும் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ என்னால் பார்க்க முடியவில்லை.அப்படி ஒரு பொருளாதாரச்செழிப்பும் பண்பாட்டுச் செறிவும் வாழ்க்கை நியதிகளும் ஆன்மீக மதிப்பீடுகளும் ஒழுக்க நெறிகளும் மிக்கதான இத்தேசத்தை நம்மால் ஒருபோதும் அடிமைகொள்ள முடியாது. இம்மண்ணின் ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் முதுகெலும்பை முறித்துப்போடாமல் இந்நாட்டை அடிமைப் படுத்த் முடியாது.ஆகவே நான் இந்நாட்டில் நிலவும் பழைய கல்விமுறை மற்றும் பண்பாட்டு அசைவுகளை நீக்கிவிட்டு அந்த இடத்தில் புதிய கல்வி முறையையும் அதனூடாகப் புதிய பண்பாட்டு விழுமியங்களையும் இம்மக்கள் மனங்களில் ஸ்தாபிக்க வேண்டும்.தங்கள் கல்வி தங்கள் மொழி இவற்றைவிட ஆங்கிலக்கல்வி,ஆங்கிலம் உயர்வானது என்று இம்மக்கள் ஒப்புக்கொள்ளும் படி இவர்கள் கற்பிக்கப்படவேண்டும்.அப்போதுதான் இவர்கள் தங்கள் சுய கௌரவத்தையும் சொந்தப் பண்பாட்டையும் இழந்து முழுமையான அடிமைகளாக ஆவார்கள் ”

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை நமது கல்விமுறையை வடிவமைத்து நம் தலையில் திணித்த மெக்காலேயின் 1835 பாராளுமன்ற உரையாகும்.மிக வெற்றிகரமாக மேற்சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இந்தியாவில் அமலாக்கப்பட்டது.நாம் அடிமைகளானோம்.1947 ஆம் ஆண்டு அரசியல் சுதந்திரம் நமக்குக் கிடைத்தபோதும் மெக்காலேயின் கல்வி வலைக்குள் 1860களில் விழுந்த நம் தேசம் இன்னும் பண்பாட்டு ரீதியாக அவ் வலையைக் கிழித்து வெளியேறவில்லை. அதன் அடையாளமாகத்தான் இன்றும் நிலவும் நம் கல்விமுறையும் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் திகழ்கின்றன.

இதில் மாற்றம் வேண்டும் என மாணவர் இயக்கங்களும் சனநாயக எண்ணம் கொண்ட கல்வியாளர்களும் காலம் காலமாக வலியுறுத்தியும் போராடியும் வந்ததன் விளைவாகத் தமிழக அரசு சமச்சீர் கல்வியைக் கொண்டுவரச் சம்மதித்தது.ஆனாலும் இப்போது பாடப்புத்தகங்களை மட்டும் சமசீராக்குகிறோம் என்று சொல்லி இந்த ஆண்டு முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் மட்டும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வழங்கியுள்ளது.இந்த ஆண்டு இப்புத்தகத்தயாரிப்பிலும் மேற்பார்வையிடும் பணியிலும் முற்போக்கான சிந்தனை கொண்ட பல்வேறு ஆளுமைகள் ஈடுபடுத்தப்பட்டது தமிழகப் பாடப்புத்தக வரலாற்றில் முதல் முயற்சியாகும்.அதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு அழகான வடிவமைப்பில் குழந்தை மனநிலையைக் கணக்கில் கொண்டு புத்தகங்கள் வந்துள்ளன. ஆகவே இம்முயற்சியை நாம் முதலில் வரவேற்க வேண்டும்.இந்த முற்போக்கான ஆளுமைகள் சொன்னதெல்லாம் நடந்ததா என்று தெரியாது.எவ்வளவு தூரம் இவர்கள் சொன்னதற்கு மதிப்பு இருந்தது என்பதும் முழுமையாக நமக்குத் தெரியாவிட்டாலும் புத்தகங்கள் மாணவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விட்ட சூழலில் அவை பற்றிய கருத்துக்களை நாம் பதிவு செய்வது அவசியம்.

தமிழ்ப்பாடம் தவிர மற்ற எல்லாப்பாடங்களும் இதுவரை முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர் அப்படியே அவை தமிழாக்கம் செய்யப்பபட்டு வந்ததாகவும் இந்த ஆண்டுதான் முதன் முறையாக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப்பாடங்களும் நேரடியாகத் தமிழில் எழுதப்படுகின்றன என்றும் அறிய நேர்ந்தபோது நாம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானோம். மெக்காலே நம் மூளைகளில் எவ்வளவு அழுத்தமாக உட்கார்ந்திருக்கிறான் ! இந்த மாற்றம் வருவதற்கே –இந்தத் தன்னம்பிக்கையும் தமிழால் முடியும் என்கிற நம்பிக்கையும் வருவதற்கு- தமிழ் தமிழ் என்று முழங்கி வரும் திராவிடக் கட்சிகள் 43 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டு முடிக்க வேண்டி இருந்திருக்கிறது.அவர்தம் தமிழ் உணர்வு பாடத்திட்டத் தயாரிப்பில் இப்படியாகத்தான் இதுகாறும் பொங்கி வழிந்துள்ளது என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

ஆறாம் வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில் கடவுள் வாழ்த்து என்பதற்கு பதிலாக வாழ்த்து என்று போட்டு இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து ஒரு பாடல் முதல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம்.பேராசிரியர் சமாடசாமி அவர்களின் மேற்பார்வையில் இப்பாடப்புத்தகம் வந்துள்ளதன் அடையாளங்கள் புத்தகம் நெடுகிலும் கிடக்கின்றன.

இலக்கணத்தை அறிமுகம் செய்யும் முதல் பாடம் இவ்வாறு செல்கிறது :

“ இலக்கணம் எதற்கு?

நாம் பேசும் மொழியை,எழுதும் மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இலக்கணம்

தேவை.

இப்படி எழுது,அப்படி எழுது என்று கட்டளையிடுவதற்காக இல்லை.

அவன் வந்தாள் – என்று எழுதினால் யாருக்காவது புரியுமா?வந்தவர் ஆணா , பெண்ணா என்பது

எப்படித்தெரியும்?

நாம் பேசுவதும் எழுதுவதும் மற்றவர்க்கும் புரிய வேண்டும்: நமக்கும் புரிய

வேண்டும்.அதற்குத்தான் இலக்கணம் தேவைப்படுகிறது.”

இப்படி ஒரு மொழியில் குழந்தைகளின் அனுபவத்தைக் கணக்கில் கொண்ட ஒரு பாடத்தைக்காண எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனாலும் துணைப்ப்பாடங்களில் நம்மூர் நாட்டுப்புறக்கதைகளை வைக்காமல் பழையபடி வெளிநாட்டுக் கதைகள்,அறுதப்பழைய அதே தெனாலிராமன் கதை என்று வைத்திருப்பது ‘ ம்கூம். இன்னும் திருந்தலே..’ என்கிற சலிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

​” தமிழ்ப் பாடநூ​லில் நாட்​டுக்கு உழைத்த தலை​வர்​க​ளின் வாழ்க்கை வர​லாறு பாட​மாக வைக்​கப்​ப​டு​வ​துண்டு.​ ஒவ்​வொரு முறை​யும் பாடத்​திட்​டம் மாற்​றப்​ப​டும்​போது,​​ காந்​தி​ய​டி​கள்,​​ காம​ராஜ்,​​ தந்தை பெரி​யார்,​​ அறி​ஞர் அண்ணா,​​ எம்.ஜி.ஆர்.​ போன்​றோ​ருள் ஒரு​வ​ரது வாழ்க்கை வர​லாற்​றுச் செய்தி இப்​ப​கு​தி​யில் இடம்​பெற்​றி​ருக்​கும்.​ ஒரு​வ​ரைப் பற்​றிய பாடமே தொடர்ந்து பாடநூ​லில் இடம்​பெ​று​வ​தில்லை.​ ஆனால்,​​ பசும்​பொன் முத்​து​ராம​லிங்​கத் தேவர் வர​லாறு,​​ ஆறாம் வகுப்​பில் மட்​டுமே தொடர்ச்​சி​யாக மூன்​றா​வது முறை​யா​கப் பாட​மாக வைக்​கப்​பட்​டுள்​ளது.​ 1995,​ 2003-ம் ஆண்டு பாட​நூல்​க​ளைத் தொடர்ந்து இப்​போ​தும் ​(2010) இவ​ரைப் பற்​றிய பாடம் இடம்​பெற்​றுள்​ளது.​ இப்​போது வெளி​வந்​துள்ள பாட​நூல் ஆறு அல்​லது ஏழு ஆண்​டு​க​ளுக்கு நடை​மு​றை​யில் இருப்​பது உறுதி.​ அவ்​வா​றா​யின் இரு​ப​தாண்டு காலத்​தில்,​​ இடை​வெ​ளி​யின்​றித் தொடர்ந்து இரண்டு தலை​மு​றை​க​ளுக்கு ஒரே பாடப்​பொ​ரு​ளைக் கற்​றுக்​கொ​டுப்​பது ஏற்​பு​டை​ய​து​தானா?​ பாட​நூல் ஆசி​ரி​யர்​கள் இதை ஏன் கவ​னத்​தில் கொள்​ளாது புதிய சிக்​கலை உரு​வாக்​கி​யுள்​ள​னர் என்​ப​தும் தெரி​ய​வில்லை.​”


என்று தினமணியில் ஒரு கட்டுரையாளர் எழுப்பிய அதே கேள்வி நமக்கும் வருகிறது.அதுபோலவே நாட்டுப்புறத்தை நாட்டுப்புரம் என்று பாடத்தில் அச்சிட்டு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

வகுப்பறைத்திறன்கள் ,வாழ்க்கைத்திறன்கள், எது பண்பாடு என்கிற உரைநடைப்பாடம், நாட்டுப்புறப்பாடல்களை உரைநடைப்பாடத்தில் கொண்டு வந்தது எனப் பாராட்டத்தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.ஆர்.ராமானுஜம் வல்லுநராக இருந்து தயாரித்ததாலோ என்னவோ முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக் கணிதப் பாடப்புத்தகங்கள் அருமையாக வந்துள்ளன.முதல் வகுப்புத் தமிழில் எடுத்த எடுப்பில் அனா ஆவன்னா என்று பிள்ளைகள் கையை ஒடிக்காமல் விளையாட்டாகவே எழுத்துக்களையும் கற்றுக்கொளும் விதமாகப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆறுதலாக இருக்கிறது.

எல்லாப்பாடப்புத்தகங்களிலுமே பல பாடங்கள் குழந்தைகளுக்கான மொழியில் எழுதப்பட்டுள்ளது மிக மிக முக்கியமான முயற்சியாகும்.நம்து செம்மலரின் வடிவமைப்பு ஓவியர் மாரீஸ் பல பாடப் புத்தகங்களை அழகாக வடிவமைத்திருக்கிறார்.இளம் ஓவியர்கள் பலரையும் மணியம் செல்வம் போன்ற மூத்த ஓவியர்களையும் ஈடுபடுத்தியிருக்கிரார்கள்.வரவேற்கத்தக்க ஒன்று.

தனியார் பள்ளிநிர்வாகங்களுக்கு இப்பாடப்புத்தகங்கல் பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் பெருவாரியாக அரசுப்பளியில் பயிலும் லட்சோப லட்சமான குழந்தைகளுக்கு நியாயம் செய்ய தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஒரு முயற்சி நடந்துள்ளது . வரவேற்போம்.

அதே சமயம் முற்போக்கான சிந்தனையாளர்களை அவர்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகளாகவோ பி.எட். எம்.எட் என்கிற கல்வித்தகுதி இல்லாதவர்கள் என்பதற்காகவோ பயன்படுத்தாமல் விடுவது இன்னும் தொடர்கிறது.தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகள்,எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்களையெல்லாம் அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு இணைத்துக்கொண்டு பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதே நாம் எதிர்பார்ப்பது.

மெக்காலே அழித்துச் சென்ற நமக்கேயான பண்பாட்டு விழுமியங்களை பாடப்புத்தகங்களின் வழி மீட்டெடுக்க வேண்டும்.அப்பணி இன்னும் தூரத்துக்கனவாகவே இருக்கிறது.

எனினும் இந்த சமச்சீர் பாடப்புத்தகங்கள் அத்திசையை நோக்கித் திரும்ப முயற்சிக்கின்றன.

பொருள் கல்வி, புத்தகம்
2 உரையாடல்கள்
Monday, July 19, 2010சிதம்பரம் தெற்கு வாசல்-கருணாநிதி நக்கலும் தோழர் அருணனின் பொறுப்பான எதிர்வினையும்
எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் 7/19/2010 11:07:00 AM
(தீக்கதிர் நாளேட்டில் தோழர் அருணன்,தலைவர்,தமுஎகச எழுதிய கட்டுரை கீழே-இன்னும் சில கட்டுரைகளை அடுத்தடுத்து வெளியிடுவோம்.கொலையை ஜோதியில் குளித்தான் என்று மறைத்த அந்தணர்கள் சார்பாக தினமலர் வெளியிட்ட கட்டுரையில் வந்துள்ள செய்திகள் நாம் ஏற்கனவே அறிந்த ‘கதைகள்’தாம் .அதைப்படித்துவிட்டு சில நண்பர்கள் பதட்டமடைந்து பின்னூட்டம் அனுப்பியுள்ளனர்.தெற்கு வாசல் என்ற ஒன்றே இல்லை என்று ஒரே போடாகப் போட்டுள்ளனர்.நம் பயணம் தொடரும்)

சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புற வாசலைத் திறந்துவிடச் சொல்லி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை தொலைக்காட்சி மூலம் கண்டபோது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று அந்தச்சுவரைப் பார்த்து ஆவேசப் பெருமூச்சு விட்ட வர்களில் நானும் ஒருவன்.
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் வரும் நந்தன் கதையைப் படித்து விட்டு, அவன் வாழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அவன் பிறந்த மேற்கானாட்டு ஆதனூர் போனேன். அவன் வழிபட்ட திருப்புன்கூர் போனேன். அங்கே அவன் வெட்டிய குளத்தைப் பார்த்தேன். அங்கிருந்து சிதம்பரம் வந்தவன், நடராஜர் கோவிலின் தென்புற வாசல் வழியாக நுழைந்தேன். அங்கே அடுத்த பிரகாரத்தை சுவர் வைத்து அடைத்திருந்தார்கள்! நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது! அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது! ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல்! வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு! ஆம், தமிழகத்தில் முதன்முதலாகக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியவன் நந்தனே!
இப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவனைத்தான் எரித்துவிட்டார்களே, அதற்குப்பிறகு அரூப வடிவில்தானே கோவிலுக்குள் நுழைந்தான். அது எப்படி மீறலாகும்? கோவில் நுழைவுப்போராகும்? புராணமயப்படுத்துதல் என்பது நடந்தவற்றை ஆதிக்கவாதிகள் தங்களது வசதிக்கு ஏற்ப அதீதப்புனைவு செய்வதாகும். அவர்கள் யதார்த்தத்தை அமானுஷ்ய கற்பிதத்தால் மூடிவைப்பார்கள். பகுத்தறிவு கொண்டு அந்த மூடியைத் திறந்து பார்த்தால்- அதாவது கட்டுடைத்துப் பார்த்தால்- யதார்த்தம் மீண்டும் வெளிப்படும்.
இன்றைக்குச் சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சுந்தரர். இவர் பாடிய திருத்தொண்டத் தொகையில்தான் முதன்முதலாக நந்தன் பற்றிய குறிப்பு வருகிறது. செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் என்கிற ஒற்றை வரி அது. இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தன் பற்றி நான்கு வரிகள் உள்ளன. அதில்தான் அவன் பிறந்த ஊர் ஆதனூர் என்பதும், பிறந்த சாதி புலையர் என்பதும் வருகிறது.
இந்த ஐந்து வரிகளை வைத்துக் கொண்டு மட்டும் சேக்கிழார் அவ்வளவு விரிவாகப் புராணம் பாடியிருக்க முடியாது. நந்தனைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து நின்ற நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் புராணமயப்படுத்தியிருக்கிறார் சேக்கிழார். அப்படியும் நடந்த உண்மைகளை முழுசாய் மறைக்க முடியவில்லை.
கோவில் என்றாலே அந்தக்காலத்தில் சிதம்பரத்தைக் குறித்தது. அந்த அளவுக்கு சைவ சமயத்தவர் அதன் பெருமை பேசி வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நந்தனுக்கு சித்தமொடுத் திருத்தில்லைத் திருமன்று சென்று இறைஞ்ச ஆசை பிறந்தது என்கிறார் சேக்கிழார். அதாவது கோவிலுக்குள் சென்று திருமன்று தரிசிக்க - சன்னிதானத்தை தரிசிக்க- ஆசை பிறந்தது. ஆனால் அது கூடாத ஆசை, ஆகாத ஆசை. ஒன்றியனே தருதன்மை உறுகுலத்தோடு இசை வில்லை என்று அந்த ஆசை தனது குலத்திற்குப் பொருந்தாது என்று- அவனே நினைத்துக் கொண்டதாகவும் சேக்கிழார் கூறுகிறார்.
ஆசைக்கும் இயலாமைக்கும் இடையில் கிடந்து அல்லல்பட்டு, பின்னர் ஆசை மீறி நாளை போவேன் என்று தனக்குத்தானேயும், பிறரிடமும் சொல்லிக்கொள்வான். இதுவே அவனுக்குப் பட்டப்பெயராகிப் போனது. அந்தப் பெயராலேயே சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும் அவனை அழைத்திருக்கிறார்கள். சேக்கிழாரும் அப்படியே சொல்லியிருக்கிறார்.இதிலிருந்து நந்தனின் நோக்கமும் திட்டமும் கோவிலுக்குள் நுழைவதாக இருந்தது என்பது நிச்சயமாகிறது.
ஒருநாள் ஆதனூரை விட்டுக் கிளம்பி சிதம்பரம் வந்து சேர்ந்தான். ஆனால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கட்டுத்திட்டம். என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். இந்த இடத்தில்தான் சேக்கிழார் தனது அமானுஷ்ய கற்பிதத்தைச் சேர்க்கிறார். சிவபெருமானே நந்தனின் கனவில் வந்து இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்றாராம். அவனது கனவில் மட்டுமல்ல தில்லை மூவாயிரவர் ஒவ்வொருவருடைய கனவிலும் போய்ச் சொன்னாராம். அவர்களும் வேறு வழியின்றி வெய்ய தழல் அமைத்து தந்தார்களாம். அந்தத் தீக்குண்டத்தில் நந்தன் இறங்கினானாம். பின்னர் இம்மாயப் பொய்தகையும் உரு ஒழித்துப் புண்ணியமாம் முனி வடிவாய் மெய்நிகழ் பெண்ணூல விளங்க மீண்டும் எழுந்தானாம்.
நல்லது. எழுந்தவன் என்ன ஆனான் அவனுக்கு கிடைத்த புது உருவத்தோடு கோவிலுக்குள் போனானா? போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான்? திரும்பி வந்தானா? சொந்த ஊர் திரும் பினானா? தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா? ஆதனூரில் மகிழ்வோடு வாழ்ந்தானா? அதெல்லாம் தெரியாது. யாருக்கும் தெரியாது. சொன்னவர் யார்? சாட்சாத் சேக்கிழார்!
இந்த உச்சகட்டப் பாடலை நோக்குங்கள்- தில்லைவாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்/கொல்லை மான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதி இறைஞ்சி/தில்லைபோய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்/எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்க்கும் கண்டிலரால் புது உருவெடுத்தவர் கோபுர தரிசனத்தோடு நிற்கவில்லை. நெல்லை போய் உட்புகுந்தார்-கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டார். போனவர் உல குய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் அதாவது நடராஜமூர்த்தியை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அவரைக் கண்டிலர்!
விஷயம் தெளிவாகிறது. எரியுண்ட பிறகு ஒரு மனிதர் புதுவடிவம் எடுத்தார் என்பது அறிவுக்குப் பொருந்தாத விஷயம். உண்மையில் விஷயம் தலைகீழாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தீயில் புகுந்து வந்து கோவிலுக்குள் போகவில்லை. கோவிலுக்குள் தடாலடியாக நுழைந்ததால் தீக்குள் புகுத்தப்பட்டான் நந்தன். இதுவே நடந்திருக்கக் கூடியது. அதனால்தான் நந்தன் நடத்தியது கோவில் நுழைவுப்போராட்டம் என்கிறோம்.
தீண்டப்படாதோர் எனப்பட்டோர் இப்படி தர்மசாத்திர விதிமுறைகளை மீறினால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிச் செய்யப்படலாம் என்று அந்த தர்ம சாதிரங்களே வகுத்துள்ளன. அப்படி நந்தன் எரித்துக் கொல்லப்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. வருணாசிரமவாதிகள் காட்டிய ஒரே சலுகை அவனையும் நாயன்மார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி, புராணம் புனைந்து அந்த மக்களைச் சாந்தப்படுத்தியது.
இப்படி நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தது தென்புற வாசல் வழியாகத்தான். இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் பெரிய புராணத்திலேயே உள்ளது. நந்தனை எரியூட்ட தீக்குண்டம் - ஹோமக்குண்டம்- எங்கு அமைக்கப் பட்டது தெரியுமா? தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக! இப்போதும் ஓமக்குளம் எனப்படுவது கோவிலுக்குத் தென்திசையில்தான் உள்ளது!
இந்தத் தென்புற வாசலைத்தான் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள் கோவில் நிர்வாகத்தார். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு? ஆக சுவர் இடையிலே எழுந்திருக்கிறது. தீண்டாமை வெறி அதிகமான ஒரு கட்டத்தில் எழுந்திருக்கிறது.
சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் நந்தனுக்குத் தனிக்கோவில் இருக்கிறது. இதைக் கட்டியவர் சகஜானந்தர் என்கிற பஞ்சமர்குலத் தலைவர். இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தவர். இந்தக் கோவிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் யார் தெரியுமா? மகாத்மா காந்தி! அதற்கான கல்வெட்டு அங்கே உள்ளது.
இப்படித் தனிக்கோவில் எழுந்ததற்குக் காரணம் என்று அங்கிருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னது - சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புறவாசல் அருகே நந்தனாருக்குச் சன்னதி உள்ளது. அங்கும் இப்படி நந்தனார், நடராஜர் சிவகாமியோடு காட்சியளிக்கிறார். ஒரு பஞ்சமர் குலத்தவருக்கு தனிச் சன்னதியா என்று அதைச் சுவர் வைத்து அடைத்துவிட்டார்கள். இது வெளிவாசலுக்கு ஏற்பட்ட கதி. இந்தச் சன்னதியின் உள்வாசல் கோவிலுக்குள் நடனசபைக்கு அருகே உள்ளது. அதையும் அடைத்து விட்டார்கள். மரக்கதவு போட்டுப் பூட்டி விட்டார்கள். இந்தக்கொடுமையை எதிர்த்தார் சகஜானந்தர். நந்தனார் சன்னதியைத் திறந்துவிடவேண்டும் என்று தில்லை மூவாயிரவராகிய தீட்சதர்களுடன் வாதாடினர். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் நந்தனார் தீப்புகுந்த ஓமக்குளத்துக்கு அருகே இப்படியொரு போட்டிக்கோவிலை உருவாக்கினார்.
கோவில் இப்போது தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. தென்புற வாசலை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தச்சுவரைக் கலைஞர் அரசு அகற்ற வேண்டும். அது இரண்டு விஷயங்களைத் தீர்த்து வைக்கும். ஒன்று, நந்தன் நுழைந்த வாசல் என்கிற காரணத்தால்தான் அப்படிச்சுவர் வைத்து அடைக்கப்பட்டது என்று மக்கள் நெஞ்சில் காலங்காலமாக இருந்து வரும் காயம்-அந்தச் சரித்திர ரணம் ஆறிப்போகும். இரண்டு, அங்கே நந்தனுக்கு ஏற்கெனவே தனிச்சன்னதி இருக்குமேயானால் அதுவும் மக்களின் வழிபாட்டுக்கு வரும். கோவிலுக்குள்ளும் சமத்துவபுரம் உருவாகும்.
இப்படியொரு சமத்துவத்தை உருவாக்கத் தனது ஆட்சியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்தச்சுவற்றை அகற்று வதற்குப் பதிலாக போராட்டக்காரர்களைக் கேலி செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர். நந்தனார் இருந்தாரா இல்லையா என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும என்கிறார். பெரிய புராணத்தில் வரும் நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார், தில்லைவாழ் அந்தணர்கள் எல்லாம் இருந்தார்களா, இல்லையா என்பது பற்றியும் இப்படிச் சந்தேகத்தைக் கிளப்புவாரா கலைஞர்? அவ்வளவுதான் சைவப் பண்டிதர்கள் இவரைப் பிடிபிடியென்று பிடித்துவிடுவார்கள். அவர்கள் எல்லாம் வாழ்ந்தது உண்மை என்றால், நந்தன் வாழ்ந்ததும் உண்மைதான். அதுமட்டுமல்ல, நந்தன் பிறந்த, நடமாடிய ஊர்கள் எல்லாம் அதே பெயரில் இப்போதும் உள்ளன. அந்தத் தில்லைவாழ் அந்தணர்களின் வாரிசுகள் என தீட்சதர்களும் இருக்கிறார்கள்.
நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே போகவில்லை என்கிறார் முதல்வர் கலைஞர். சேக்கிழாராவது புதிய உருவத்தில் உள்ளே போனான் என்று பாடியிருக்கிறார். சோழனின் அன்றைய முதலமைச்சராவது அந்த அளவுக்கு உண்மையை ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரோ அவன் உள்ளே போகவேயில்லை என்று அடித்து விடுகிறார். உள்ளே போனான், அதனால்தான் தீட்டு என்று சொல்லி வாசலை அடைத்தார்கள் எனச் சொல்லுகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார். போனதைப் பார்த்தவர்கள் இல்லை என்கிறாரே, போகாததை உறுதி செய்ய இவர் மட்டும் என்ன அந்தக் காலத்தில் வாழ்ந்தவரா? தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா? இப்படியெல்லாம் கேட்க நம்மாலும் முடியும் என்பதை முதல்வர் உணரவேண்டும்.
பெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கலைஞர், வருணாசிரமவாதிகளின் வறட்டு வக்கீலாக மாறக்கூடாது. எந்தவொரு போராட்டத்தையும் அரசுக்கு எதிரானதாகப் பார்த்து எரிச்சல் அடையக்கூடாது. இது ஜனநாயக நாடு. பல கோரிக்கைகளும், அவற்றுக்கான போராட்டங்களும் எழத்தான் செய்யும். அவற்றின் நியாயத்தன்மை குறித்தே முதலில் யோசிக்க வேண்டும். அதுவே ஒரு ஆட்சியாளருக்கு அழகு.
நந்தன் பற்றி சேக்கிழார் பாடியதை கலைஞர் மீண்டும் படிக்கட்டும். அது பற்றிய புதிய ஆய்வுகளைத் தேடிப்பெறட்டும். அவரது கூட்டணியில் உள்ள திருமாவளவன் இந்தச்சுவரை அகற்றச் சொல்லி முன்பு போராட்டம் நடத்தினார். ஆகவே, அவரிடமும் இதுபற்றிக் கேட்கட்டும். போராட்டத்திற்கு ஆதரவாக விடுதலையில் தலையங்கம் வந்திருக்கிறது. அவர்களிடமும் கேட்கட்டும்.
இதை விடுத்து ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். அதுவும் தாழ்த்தப்பட்டோரின் அந்நாளைய, இந்நாளையத் தலைவர்களைப் பற்றிப் பேசும் போது மேலும் நிதானம் வேண்டும். வருணாசிரமம் எனும் கொடூர சமூக ஆயுதத்தால் சித்ரவதைக்கு ஆளானவர்கள் அவர்கள். அந்த வலி இன்னும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்.

உத்தப்புரம் போராட்டம்-கருணாநிதி கடிதத்துக்கு தோழர் டி.கே.ரெங்கராஜன் பதிலடி
----------------------------------------------------------------------------
எழுதியது ச.தமிழ்ச்செல்வன்
-----------------------------------

உத்தப்புரம் தலித் மக்களின் நியாயமான, நீண்டகாலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை அத்துமீறி தடியடி தாண்டவத்தில் ஈடுபட்டது. பெண்களையும் கூட அடித்து நொறுக்கிய அவலக்காட்சி அரங்கேறியது.
இந்தக் கொடுமையை எப்படியாவது நியாயப்படுத்திவிட வேண்டும் என்று ஆளுங்கட்சி துடியாய் துடிக்கிறது. முதல் நாள் முரசொலியில் (14,7,2010) மார்க்சிஸ்ட் கட்சியின் அடாவடிப் போராட்டம் என்ற தலைப்பில் பெட்டிச் செய்தி யொன்று எழுதப்பட்டுள்ளது. மறுநாள் முரசொலி யில் (15.7.2010) முதல்வர் கலைஞர் உத்தப்புரம் உணர்த்தும் உண்மை என்ன? என்ற தலைப்பில் வினா-விடை பாணியில் எழுதியுள்ளார்.
உத்தப்புரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்றவன் என்ற முறையில் தமிழ்நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் உள்ளது.
போராட்டத்தின்போது, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. தமிழக அரசு திறந்துவிட்ட பொதுப்பாதையில் தலித்மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை குறித்து நாங்கள் எடுத்துச்சொன்னபோது, அங்கிருந்த அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டதற்கு, அது உண்மைதான் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதேபோன்று, எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியும் கூட நிழற்குடை கட்ட மாவட்ட நிர்வாகம் முன் வராதது குறித்தும், தலித்மக்கள் வசிக்கும் பகுதிக்குள் ஓடக்கூடிய ஊர் சாக்கடையை ஊருக்கு வெளியே திருப்பிவிட வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும், அரசு புறம்போக்கு பகுதியில் உள்ள அரசமரத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்ட வழிபாட்டிற்கு தலித்மக்களை அனுமதிக்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலித் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நாங்கள் எடுத்துரைத்தபோது, அதிலிருந்த நியாயங்களை ஆட்சியரின் அருகிலிருந்த அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.
அரசு திறந்துவிட்ட பொதுப்பாதையில் தலித்மக்கள் வாகனங்களில் சென்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் திரும்பத் திரும்ப கூறியபோது, இதில் உண்மையில்லை என்று உடன்வந்த தலைவர்கள் மறுத்தனர். இந்த நிலையில்தான் மாவட்ட ஆட்சியர் உத்தப்புரம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். உத்தப்புரத்திற்கு பல ஆட்சியர்கள் நேரடியாக வந்து பார்த்து நிழற்குடை அமைக்கவும், அரசமர வழிபாடு நடத்தவும், தலித் மக்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவித்தனர். அது குறித்த கோப்புகளைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறினோம்.
நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியதை ஒரு உறுதிமொழியாக எழுதிக்கொடுங்கள் என்று கேட்டோம். இதற்கு ஆட்சியர் மறுத்துவிட்டார். இவ்வாறு எழுதிக்கேட்டதைத்தான் ஏதோ மாபாதகச் செயலில் ஈடுபட்டு விட்டதாக முரசொலி ஏடு ஆத்திரப்பட்டு, அடாவடி என்று வர்ணித்துள்ளது. முதல் வரும் அன்று மாலைக்குள் கோரிக்கைகளை ஏற்று எழுத்துபூர்வமாக அனுமதி வழங்க வேண்டுமென்று பிடிவாதமாகக் கூறினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து மூலமாக எழுதித் தராவிட்டா லும் உங்களது வாக்குறுதியை வெளியே உள்ள பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி செய்தியாளர்களிடம் கூறுங்கள். உத்தப்புரம் தலித் மக்களுக்கு இதனால் நம்பிக்கை பிறக்கும் என்றும் கூறினோம். அதை மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் தெரிவித்தாரா? இல்லையா? என்று தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிப்பது என்பது எந்த வகையிலும் மரபுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களுக்கு அளிக்கும் உறுதி மொழியே ஆகும் இது.
இங்கு ஒரு கடந்தகால வரலாற்று சம்பவத்தை நினைவூட்ட வேண்டியுள்ளது. 1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். டால்மியா சிமெண்ட் ஆலை உரிமையாளரான டால்மியா, ஆலை நிர்வாகி ராஜுவின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து ஆலைவாயில் அருகே மறைந்த தோழர் பி.ராமச்சந்திரன் தொடர்ந்து பத்து நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அப்போது, சங்கத்தின் தலைவராக இருந்த தோழர் ஆர். உமாநாத் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல்நிலையும் மோசமடைந்தது. அப்போது முதல்வராக இருந்த அண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த தோழர் பி.ராமமூர்த்திக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதினார். அதில், உமாநாத்தை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். பிரச்சனையை தீர்க்க நான் பொறுப்பேற்கிறேன் என்று அண்ணா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உறுதிமொழியின் அடிப்படையில் உமாநாத் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து டால்மியா சென்னைக்கு வந்து அண்ணாவை சந்திக்க முயன்றபோது அதற்கு அவர் மறுத்துவிட்டார். டால்மியாவுடன் பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி, திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தார். இந்தக்குழு டால்மியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பிரச்சனை தீரவில்லை என்பது வேறு விஷயம்.
மிகுந்த ஞாபகசக்தி கொண்ட முதல்வர் கலைஞருக்கு இந்த சம்பவம் நிச்சயம் மறந்திருக்காது. எனவே எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி கேட்டது, யாரும் செய்யக்கூடாத குற்றம் என்பது போல கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனந்தநம்பியார், ஆர்.உமாநாத் ஆகியோரிடம் ஐஏஎஸ் அதிகாரிகள் மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டத்தின் போது எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்து போராட்டம் முடிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு.
உத்தப்புரம் கிராமமக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அங்கே ஒற்றுமை நிலவக்கூடாது என்ற எண்ணத்தோடு போராட்டம் நடத்துவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அன்றைக்கு நடந்த போராட்டத்தில் உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் 128 பேர் கலந்து கொண்டனர் என்பதுதான் உண்மை. கைது செய்யப்பட்டவர்களை நான் விடுவிக்குமாறு கூறினேன் என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால் முதல்வர் இவ்வாறு காவல்துறைக்கு உத்தரவிடுவதற்கு முன்பு, கைதுசெய்யப்பட்டு தமுக்கம் மைதானத்தில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருச்சி சிறைக்கு அனுப்ப போலீசார் ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். உத்தப்புரம் தலித் பெண்களிடம் நாம் அனைவரும் திருச்சி சிறைக்கு செல்வதற்கு தயாராக இருக்கவேண்டு மென்று கூறியபோது அவர்கள் யாரும் பயப்படவில்லை. மாறாக மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் காது மூக்குகளில் போட்டிருந்த சிறுசிறு நகைகளை கழற்றி வைத்துவிட்டு சிறைக்குச் செல்ல தயா ராக இருந்தனர். அந்த நிலையில்தான் கைதுசெய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
காவல்துறை கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது உண்மை. பெண்களையும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் மயங்கி விழும் அளவுக்கு காவல்துறையால் தாக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் நன்மாறன், மகேந்திரன் ஆகியோரையும் போலீசார் வாகனத்திற்குள் தூக்கியெறிந்தனர். செங்குட்டுவன், நல்லதங்காள், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தோழர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் பல தோழர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகளில் ஒருவரான எ.கே.பொன்னுத்தாய் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தப்புரத்தில் இதற்கு முன்னர் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல் தொடர்பாக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு ஒன்றை உயர்நீதிமன்றம் நியமித்தது. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்பதை கண்டறிந்த விசாரணைக்குழு, தாக்குதலின் தன்மைக்கேற்ப நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 15லட்சத்து 20ஆயிரத்து 900 நிவாரணம் வழங்கவேண்டுமென விசாரணைக்குழு சிபாரிசு செய்தது. இந்தத் தொகை அதிகமென அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் இடைக்கால நிவாரணமாக இந்தத் தொகையை வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதுவரை ரூ.10லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது.



"உத்தப்புரம் தலித் மக்கள் பிரச்சனையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தலித் மக்கள் பிரச்சனையிலும் தமிழக காவல்துறையினர் ஒருவகையான சாதிய வன்மத்துடன்தான் நடந்துகொள்கின்றனர். அதுதான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் நடந்தது"

முதல்வர் கூறுவது உண்மை என்றால், ஒற்றுமையாக வாழ்ந்த மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது ஏன்? ஒற்றுமையை குலைக்கவா?
உத்தப்புரம் தலித்மக்கள் பிரச்சனையில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தலித் மக்கள் பிரச்சனையிலும் தமிழக காவல் துறையினர் ஒருவகையான சாதிய வன்மத்துடன்தான் நடந்துகொள்கின்றனர். அதுதான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூலை 12 அன்றும் நடந்தது.
உத்தப்புரத்தில் திமுக அரசுதான் பொதுப்பாதையை திறந்துவிட்டது என்று முதல்வர் கூறுகிறார். உத்தப்புரத்தில் அந்த தீண்டாமைச்சுவர் 20 ஆண்டுகளாக இருந்துவந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்திற்குப் பிறகுதான் அந்தச்சுவர் உலகின் கவனத்திற்கு வந்தது. மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் வருகைக்கு முதல்நாள் தான் சுவரின் ஒருபகுதி உடைக்கப்பட்டது. அந்தப்பாதையிலும் கூட இன்னமும் ஆக்கிரமிப்பு உள்ளது. டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது என்பதை மாவட்ட ஆட்சியரின் கூற்றை மேற்கோள் காட்டியதன் மூலம் முதல்வரே ஒப்புக்கொள்கிறார்.
அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்று ஆட்சி நடத்துவதாக கலைஞர் கூறியுள்ளார். டால்மியாபுரம் ஆலை பிரச்சனையில் அண்ணா காட்டிய அணுகுமுறையை உத்தப்புரம் விஷயத்தில் இன்றைய அரசு காட்ட மறுப்பது ஏன்? அன்றைக்கு அதிகாரிகள் அரசின் கொள்கைகளை செயல்படுத்துபவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு அதிகாரிகள் ஆளும் கட்சியின் மனநிலைக்கு ஏற்ப மாறுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.
அவசர நிலை காலம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்திரா காந்தி தமிழகத்திற்கு வந்தார். அப்போது திமுகவின் சார்பில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அப்போது, இந்திரா காந்தியை கொல்ல திமுகவினர் முயன்றதாகவும், அடாவடிப் போராட்டம் நடத்துவதாகவும் காங்கிரசார் கூறினர். ஆனால், திமுகவுடன் அந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்து நின்றது. திருச்சியில் திமுக தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்துடன் சேர்த்து நானும் கைது செய்யப்பட்டேன். இதேபோன்று மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களும் கைதானார்கள். கல்லக்குடி போராட்டத்தின் போது கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்த போது, அதை அடாவடி போராட்டம் என்று அன்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கவில்லை.
இந்த ஆட்சிக்கு கெட்டபெயர் உண்டாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு செயலாற்றுகிறது என்று முதல்வர் கூறியுள்ளார். மின்வெட்டு, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசில் அங்கம் வகிப்பது மட்டுமின்றி அதை நியாயப்படுத்துவது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான, உள்நாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான அணுகுமுறை என திமுக அரசு தனது சொந்த முயற்சியிலேயே நிரம்ப கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது.
இப்போது கூட உத்தப்புரம் தலித்மக்களின் சுயமரியாதையை பாதிக்கும் தீண்டாமையை அப்பட்டமாக கடைப்பிடிக்கும் அத்துமீறலுக்கு முடிவுகட்டி இந்த அரசு நல்லபெயரை சம்பாதித்துக் கொள்ளட்டும். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.


பள்ளிப்பாளையம் தோழர் வேலுச்சாமியின் குழந்தைகள்-சில தகவல்கள்
----------------------------------------------------------------
எழுதியது ச.தமிழ்ச்செல்வன்
------------------------------



பள்ளிப்பாளையம் தோழர் வேலுச்சாமியின் குழந்தைகள் தாரணியும் ரேணுகாவும் முறையே ஆறாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.ஈரோட்டில் ஒரு கிறித்துவப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கட்டணக்குறைப்புச் செய்யக்கோரிய நம் தோழர்களின் விண்ணப்பத்தை அப்பள்ளி ஏற்கவில்லை.இடம் கொடுத்துவிட்டார்கள்.நன்றி.கடைசிப்பையன் வினோத் இரண்டாம் வகுப்பு என்பதால் அவனுடைய சித்தப்பா வீட்டிலிருந்து படிக்கிறான்.

பள்ளி விடுதிக்கட்ட்ணம் இருவருக்குமாக மாதம் 1600 ரூபாய் வருகிறது.சேலம் பக்கம் கள்ளக்குறிச்சி அருகே ஒரு சிற்றூரைச்சேர்ந்த நண்பர் ஜாபர் அலி தற்சமயம் குவைத்தில் வாழ்கிறார்.அவர் இக்குழந்தைகளின் விடுதிக் கட்டணத்துக்காக மாதம்தோறும் ரூபாய் இரண்டாயிரம் அனுப்புகிறார்.அவ்ர் முகத்தைக்கூட நான் பார்த்ததில்லை.வலைப்பூ வழியேயும் தொலைபேசி வழியேயும் மட்டுமே அறிமுகமான அவர் மிகுந்த பொறுப்போடும் மகிழ்வோடும் இதை என் கடமை என்று சொல்லி ஏற்றுக்கொண்டுள்ளார்.இன்னும் திருச்சி நாகநாதன்,டெல்லியிலிருந்து ஒரு நண்பர் எனச் சிலர் உதவி செய்துள்ளனர்.இன்னும் பல வெளிநாடுவாழ் நண்பர்கள் என்ன உதவி தேவை என்று கேட்டுள்ளனர்.

தேவைப்படும் நேரத்தில் அந்த உதவிகளைக் கேட்டுப் பெறுவோம்.திருச்சி எஸ் ஆர்வி பள்ளி முதல்வர் நண்பர் துளசிதாஸ் இக்குழந்தைகளை நமது பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைத்து நல்ல மதிப்பெண்களோடு அனுப்பலாமே என்று கேட்டார்.குழந்தைகள் தற்சமயம் தமிழ்வழிக்கல்வியில் இருக்கிறார்கள்.ஆங்கிலவழி குறித்த அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.ஒன்பதாம் வகுப்பில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோம்.

எல்லா அன்பு நெஞ்சங்களும் இவ்வளவு அக்கறை செலுத்தி தாயும் தகப்பனும் இல்லாத அக்குழந்தைகள்பால் அன்பு பாராட்டுவது மனம் கசியச் செய்கிறது.

நாம் எல்லோருமாகச் சேர்ந்து அக்குழந்தைகளுக்கு விரும்பும் வரையிலான கல்வியை அளித்துவிடமுடியும் என்கிற நம்பிக்கை வலுவடைந்துள்ளது.ஆளுக்கு ஒரு கை கொடுத்தால் தேர் தன்னாலே ஓடி விடுமல்லவா?

பொருள் உதவிக்கரம், கல்வி
1 உரையாடல்கள்
நந்தன் நடந்த பாதை
எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் 7/15/2010 03:19:00 AM



பத்திரிகைச் செய்தி

”சிதம்பரம் நடராசர் ஆலயத்திற்கு தலித் சமுகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட்டுள்ள கதவைத் திறந்திடவும், தடுப்புச் சுவரை அகற்றிடவும் வலியுறுத்தி புதனன்று (ஜூலை 14) எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடைப்பை அகற்றுவதற்கு மாறாக, தமிழக அரசின் காவல்துறையினர் அந்தக் கதவை திறக்கக் கோரி போராடியவர்களைக் கைது செய்தனர். நந்தன் சென்ற பாதையில் தாங்களும் நடந்து சென்று இப்போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டார்கள்.”


மேற்கண்ட போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் நடத்தியது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் அம்முன்னணியின் உயிர்ப்புள்ள ஓர் அங்கம்.நானும் எமது அமைப்பைச் சேர்ந்த படைப்பாளிகள் பலரும் நேற்றைய (14.7.10) மறியலில் பங்கேற்றுக் கைதானோம்.

இன்று சில தொலைக்காட்சிகளில் அந்தப் பாதைக்கும் நந்தனுக்கும் தொடர்பில்லை.அது வேறு காலம் இது வேறு காலம் என்று வரலாற்று அறிஞர் என்ற பேரில் ஒரு பக்தர் பேட்டி கொடுப்பதைக் காட்டினார்கள். தமிழக அரசும் சிதம்பரம் ஆலயத்தில் ட்ய்ஹமிழக அரசு மேற்கொண்டுவரும் நல்ல காரியங்களைக் கெடுக்கவே இப்படிப் போராட்டங்கள் நடத்தப்படுவதாகக் கண்டனம் செய்துள்ளதாக அச்சேனல் (ஜீ தமிழ்)கூறியது. நல்லது.உத்தப்புரம் பிரச்னையில் அத்தனை தடியடி நடத்தியபிரகும் கம் என்று உட்கார்ந்திருக்கும் தமிழக அரசு தில்லைவாழ் அந்தணர்களுக்காகவேனும் வாய் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சிதம்பரம் நடராசர் கோவில் கட்டப்பட்டது கி.பி.600 வாக்கில் இருக்கலாம்.நந்தன் வாழ்ந்ததும் திருப்புன்கூரில் அவர் சிவனைத் தரிசித்ததும்( சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று நந்திக்கு சிவன் ஆணையிட்டதும்) பின்னர் அத்தைரியத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் அவர் நுழைந்ததும் அங்கே அவர் தில்லைவாழ் அந்தணர்களால் தீயில் தள்ளி உயிரோடு எரிக்கப்பட்டதும் கி.பி.700 களில் நடந்தது.சிதம்பரம் கோவிலின் இன்றய கட்டட அமைப்பு பின்னர் குலோத்துங்க சோழன் மற்றும் பல குறுநில மன்னர்கள் செல்வந்தர்களால் கி.பி.1000த்தை ஒட்டி அல்லது அதற்கு முன் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டவை.ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டவை அல்ல.நந்தன் வாழ்ந்த ஊர் ஆதனூர் அது சிதம்பரம் கோவிலின் தெற்கு வாசல் பக்கம்தான் இருக்கிறது. தெற்குவாசல் கட்டப்பட்டு அது பின்னர் ஏன் சுவர் வைத்து மறிக்கப்பட்டது என்பதற்கான சரியான சால்ஜாப்புகளை தில்லைவாழ் அந்தணர்களோ தமிழக அரசோ இதுவரை சொல்லவில்லை.உண்மையில் அது நந்தன் நடந்ததால் தீட்டான பாதை என்பதற்காகவே அடைக்கப்பட்டது.இது ஒரு lore – வழக்காறாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாகப் புழங்குவது.எரித்துக்கொன்ற நந்தன் கொலை வழக்கை தானே தீயில் (ஓமக் குளத்தில்) (ஓமக்குளமும் கோவிலுக்குத் தெற்கேதான் இருக்கிறது) இறங்கி ஈசனின் ஆணைப்படி பறையன் என்னும் பிறப்பால் ஏற்பட்ட தீட்டை எரித்து பிராமணனாக புது அவதாரம் எடுத்துத் திருநாளைப்போவாராகக் கோவிலுக்குள் நுழைந்தார் என அந்தணர்கள் கதை கட்டி விட்டதைப் போல இப்பாதை குறித்தும் பல கதைகளை அந்தணர்கள் உலவ விட்டுள்ளனர்.அவையும் சில நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பதால் இப்போது அவற்றையெல்லாம் இப்போராட்டக் காலத்தில் பலரும் ‘அவுத்து’ விடுகின்றனர். தெற்குவாசலும் கீழ வாசலும் குடமுழுக்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் பயன்பாட்டில் வைப்பதில்லை . ஆகவே தெற்குவாசல் மூடப்பட்டது என்று சில தீட்சிதர்கள் நேற்று எங்களிடம் கூறினர். அப்படியானால் கீழவாசல் ஏன் சுவர் வைத்து மறிக்கப்படவில்லை என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.



மற்ற சைவக்கோவில்களைப்போல அல்லாமல் இக்கோவிலில் நடராசர் தெற்கே பார்த்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு நேராக இருக்க வேண்டிய நந்தியை அவரைப் பார்க்க விடாமல் சுவர் வைத்து மறைத்துள்ளனர்.இது சைவ ஆகம விதிகளுக்கே புறம்பானதாகும் என்று சைவ அறிஞர்கள் கூறுகின்றனர்.இப்படி ஆகம விதிகளையே புறக்கணித்துச் சுவர் எழுப்பியிருக்கிறார்கள் என்றால் சும்மா ஏப்பை சாப்பையான காரணங்களுக்காக அதைச் செய்திருக்க முடியாது.பாதை நந்தன் வருகையாலும் கொலையாலும் தீட்டுப்பட்டது என்கிற வலுவான காரணத்தாலேயே அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்பிரச்னையைக் கையில் எடுத்துள்ளது.நேற்று நடைபெற்ற போராட்டத்துக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நானும் உடன் இருந்தேன்.கோவில் அதிகாரி எங்களிடம் உச்சநீதிமன்றம் மறு உத்தரவு வரும்வரை இக்கோவிலிலின் கட்டமைப்பில் எதையும் மாற்றக்கூடாது(புதிதாக எதையும் கட்டவும் கூடாது.இடிக்கவும் கூடாது) என்று தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால் இச்சுவரை இப்போது இடிக்க முடியாது என்றுதான் கூறினார்.உடனிருந்த கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்,காவல்துறை அதிகாரிகள் எல்லோருமே இச்சுவர் ஏன் வந்தது என்பது எல்லோருக்குமே தெரியும் சார் நாங்க என்ன சார் செய்ய முடியும் கவர்மெண்ட்டுதானே முடிவு எடுக்கணும் என்றுதான் கூறினார்களே ஒழிய இது நந்தன் நடந்த பாதை என்பதற்காக அடைக்கப்படவில்லை என யாருமே கூறவில்லை.

இதே பிரச்னைக்காக முன்னர் தோழர் தொல்.திருமா தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது.அவருக்கு அந்தணர்கள் எதிர்சேவை செய்து அவருக்குப் பரிவட்டம் கட்டி உள்ளே அழைத்துச்சென்றபடியால் மனம் குளிர்ந்து போராட்டத்தைக் கைவிட்டார் என்று கேள்விப்பட்டோம்.இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே பிரச்னைக்காக அடுத்த வாரம் களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளது. எல்லாருமே முட்டாள்கள் அல்லர்.சரித்திர ஞானம் அற்றவர்களும் அல்லர்.எந்தப் போராட்டத்தையும் மாசு மருவற்ற தன் சாதனை ஆட்சிக்கு எதிரான கலகமாகவே பார்ப்பதை விடுத்து இன்னும் மிச்சம் மீதியிருக்கும் (இருப்பின்) தந்தை பெரியாரின் வாசனையில் கொஞ்சத்தையேனும் பயன்படுத்தி இச்சுவரை இடிப்பதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு காண வேண்டும்.



13ஆம் தேதி தீக்கதிரில் வெளியான முழக்க வரிகளைக் கீழே தருகிறேன் :






நந்தன் அழைக்கிறான்

ச.தமிழ்ச்செல்வன்


நந்தன் அழைக்கிறான்

நானிலமே கிளர்ந்தெழுக !

பிறப்பின் தீட்டழிக்க

நெருப்பில் குளித்தெழுந்து

புறப்பட்டு வா எனவே

ஈசன் சொன்னான் எனக்

கட்டிவிட்ட கதைக்குள்ளே

எரிகின்றான் நந்தன் எரிகின்றான்.

அவன் உடலம் எரிந்து

எலும்புகள் தெறிக்கையில்

சிரித்துக் கைகொட்டிச்

சுற்றிநின்ற சாதியத்தின்

வேரறுத்து வீழ்த்திடவே

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக.

அவன் நடந்து வந்த பாதை

நடராசன் கோவிலிலே

தீட்டுப் பட்டதெனச்

சுவரெழுப்பி மறித்தார்கள்.

நந்தன் மடிந்துவிட்டான்

நெருப்பிட்டுக் கொலை செய்த

அந்தணரும் மரித்து விட்டார்.

சுவர் இன்னும் நிற்கிறது -

சுற்றிவரும் போதெல்லாம்

சாதியால் தாழ்த்தப்பட்ட எம்

சரித்திரத்தை நினைவூட்டி.

அந்நினைவுகளின் வலி மறக்கத்

திமிர்ந்து நிற்கும் இச்சுவர் தகர்த்து

வரலாற்றை நேர் செய்ய வா.. .. ..

நெருப்புக்கு உள்ளிருந்து

கங்குகளில் சொல்லெடுத்து

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

நாட்டு மக்கள் நீர் அருந்த

நாடெல்லாம் குளம் வெட்டிக்

கோயிலும் கோபுரமும்

உயர்ந்திடவே மண்சுமந்து

கட்டி முடித்த கோவில்

எட்டி உதைத்ததாலே

காயம்பட்ட இதயத்தின்

எரிகின்ற நெருப்பாக

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

வரலாற்றைப் படைத்தவர்கள்

வரலாறாய் வாழ்ந்தவர்கள்

வரலாற்றின் பக்கங்களில் ஒரு

வரியிலும் இடம் பெறாதவர்கள்

அவ்வலியின் நினைவை மட்டும்

சுமந்தபடி வாழ்பவர்கள்

வலிகளின் நினைவுகளை

நித்தம் புதுப்பிக்கும் இச்

சிதம்பரத்துச் சுவர் தகர்த்துச்

சீர்படுத்த வேண்டுமெனச்

சாதியரால் சதித்துக் கொலையுண்ட

சரித்திர நாயகனாம்

நந்தன் அழைக்கின்றான்

நானிலமே கிளர்ந்தெழுக!

தில்லைவாழ் அந்தணர்கள்

தின்று செழித்திடவே

சொந்தக்கோவிலாகச்

சிதம்பரத்து நடராசன்

சிறைப்பட்டுக் கிடந்த காலம்

தேவாரம் திருவாசகம் எனச்

செந்தமிழும் சிறைப்பட்ட கொடுங்காலம்.

சாதிகாத்த அரசுகள்

சரிந்து வீழ்ந்தபின்னும்

சாதிக்கு எதிராகத் தமிழ்ச்சாதியை

எழுப்பி விட்ட காவிய நாயகனாம்

பெரியாரின் வழிநின்று

சமத்துவபுரம் எழுப்பும்

சனநாயக காலத்திலும் ஒரு

சாதிச்சுவர் இன்னும் நின்று சிரிப்பதா?

அரசின் கைகளில் கோவில் வந்தபின்னும்

அச்சுவர் மட்டும் இன்னும் அசையாமல் நிற்பதா?

நந்தன் கேட்கின்றான்

நானிலமே பதில் பேசு.


குறித்து வைக்கிறோம் ராஜராஜசோழரே..
---------------------------------------
எழுதியது ச.தமிழ்ச்செல்வன்
----------------------------



உத்தப்புரம்.

மதுரை மாவட்டத்தின் ஒரு சிற்றூர்.

தீண்டாமையின் உச்சபட்ச வடிவமாக தலித் மக்களை ஊருக்குள் நுழையவிடாமல் தடுக்கும் 600 அடித் தீண்டாமைச்சுவருடன் இன்றும் சாதியக்கொடுமையின் ரத்த சாட்சியாக வாழும் ஊர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னனியும் மார்க்சிஸ்ட் கட்சியும் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்தால் அச்சுவரில் 15 அடி மட்டும் தமிழக அரசால் இடிக்கப்பட்டது.ஆனாலும் அந்தப் 15 அடிப் பாதையைப் பயன்படுத்த ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை இன்றும்.ஆதிக்க சாதியினரின் சார்பாக 24 x 7 நாட்களும் இரவும் பகலும் காவல்துறை அங்கே தவம் கிடந்து தீண்டாமைக்குக் காவல் காக்கிறது.சட்டப்படி அரசு இடித்துக்கொடுத்த பாதை வழியே செல்ல அனுமதி கேட்டு உண்ணாவிரதம் இருந்த மக்களைத் தடியடி செய்து ஊர்த்தலைவர் தோழர் பொன்னையா உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அவர்களை ஜாமீனில் வெளியே எடுத்தபோது சிறை வாசலிலேயே 2008,2009 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட பழைய வழக்குகளில் மீண்டும் கைது செய்து அடைத்துள்ளனர்.

அந்த 2008 ,2009 வழக்குகள் ஏற்கனவே தமிழக முதல்வர் தலையீட்டின்பேரில் முன்பு கைவிடப்பட்ட வழக்குகளாகும்.

உத்தப்புரம் தலித் மக்களின் இன்னும் இரு முக்கியக் கோரிக்கைகள் அவர்களின் பாரம்பரிய அரச மர வழிபாட்டு உரிமையை மீண்டும் தருவதும் (உண்மையில் இந்த அரசமரத்துக்காகத்தான் முதலில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டது) பேருந்து நிழற்குடை அமைத்துத் தருவதும் ஆகும்.மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் நிழற்குடை அமைக்க தன் எம்.பி நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கினார்.ஆனால் அதைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அப்பணத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பிவிட்டது.நிழற்குடை கட்டினால் உத்தப்புரத்துச் சாதிமான்கள் கோபித்துக்கொண்டு மலைமேல் ஏறிவிட்டால் என்ன செய்வது என்று மாவட்ட நிர்வாகம் கண்ணீர் வடிக்கிறது.

ஊர்ப்பெரியவர்களை விடுதலை செய்யக்கோரியும் எந்த நியாயமும் அடிப்படையும் இல்லாமல் மறுக்கப்பட்டு வரும் நீதியை உத்தப்புரம் தலித் மக்களுக்கு வழங்கக் கோரியும் தோழர் டி.கே.ரெங்கராஜன்,தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாநிலத்தலைவர் சம்பத்,பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் இன்று 12.7.2010 காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தின் முன் நடைபெற்ற அமைதியான முற்றுகைப்போராட்டத்தின் மீது காவல்துறை ஆத்திரத்தோடு தாக்கித் தடியடி செய்ததில் 40 பேர் காயமடைந்தனர்.

நாளெல்லாம் உழைக்கும் மக்களுக்காகத் தம் உடல் பொருள் ஆவியனைத்தும் தத்தம் செய்து பாடுபடும் செங்கொடி இயக்கத் தோழர்கள் தாக்கப்பட்டார்கள்.தாக்குதல் அவர்களுக்குப் புதிதல்ல.ஆனால் தாக்கிய காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதி சொல்லித் திட்டியபடியும் தலைவர்களைக் கெட்ட வார்த்தைகளில் ஏசியபடியும் தாக்கியுள்ளனர்.

சாதி காக்கும் அரசு என்று தந்தை பெரியார் அன்று சொன்னது சமத்துவபுர நாயகராகத் தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட செம்மொழி நாயகர் முத்தமிழ்க்காவலர் உலகத் தமிழர் தலைவர் ( மைனஸ் தலித் மக்கள்) கலைஞரின் ஆட்சியைத்தான் என்று அன்று யாருக்கும் புரியவில்லை. மேல்சாதியாரின் வாக்குகளுக்காக ( வேற என்னா புளியங்கொட்டை இருக்கு இதிலே? )அவர்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக உத்தப்புரம் தலித் மக்களையும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் தோழர்களையும் குறிவைத்துத் தாக்குகிறது கலைஞர் அரசு. மதுரை தீக்கதிர் புகைப்படக்கலைஞர் லெனின் எடுத்துள்ள புகைப்படங்கள்( கீழே ) கலைஞர் அரசின் வன்கொடுமைகளுக்குச் சாட்சியாக நிற்கின்றன.

குறித்து வைக்கிறோம் ராஜராஜசோழரே

உரிய நேரத்தில் பாட்டாளி வர்க்கம் பழி தீர்க்கும்




மெல்லச்சாகும் மொழிகள்
--------------------------
எழுதியது ச.தமிழ்ச்செல்வன்
----------------------------


மெல்லத்தமிழினிச்சாகும் என்று ஒரு பண்டிதர் சொல்ல அவரைப் பேதை என்று கோபத்துடன் குறிப்பிட்டு ‘என்றந்தப் பேதை உரைத்தான்’ என ஒருமையில் திட்டினான் பாரதி.

மேலும் ஒரு கட்டுரையில் பாரதி இவ்விதமாகப் பேசுகிறார்:

“தமிழ் பாஷை இறந்து போய்விடுமென்றும் நமது நாட்டில் எல்லா பாஷைகளுக்குமே பிரதியாக இங்கிலீஷ் பாஷை ஏற்படுமென்றும் நம்பிய மூடர்கள் சுமார் 10 வருஷங்களின் முன்பு நமது ஜனங்களிலே பலர் இருந்தார்கள்.இப்போதும் அந்நம்பிக்கையுடையவர் ஆங்கிலேயர்களிலே அனேகர் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பாஷைகளெல்லாம் மடிந்துபோய் அவற்றினிடத்திலே இங்கிலீஷ் நிலவி வருமென்பது இவர்களுடைய எண்ணம். இஃதிவ்வாறிருப்ப , மகா வித்துவான் ஸ்ரீ உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் சில தினங்களின் முன்பு இவ்விஷயத்தைப் பற்றிப் பேசியபோது பின் வருமாறு கூறியிருக்கிறார்:

’அன்னியர்களைக் குறை கூறிப்பயனில்லை.தமிழ்ப்பாஷையின் செல்வங்களையெல்லாம் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளாத குற்றம் நம்மவர்களையே சார்ந்ததாகும்.எவ்வாறாயினும் நமது தாய்மொழி ஸாமனியத்தில் இறந்துவிடக் கூடியதன்று.பெரியோர்கள் இதனைக் “கன்னி”த்தமிழ் என்று பெயரிட்டழைத்திருக் கிறார்கள்.இது எக்காலமும் வனப்பும் இளமையும் மாறாத கன்னிகையாகும்.இதற்கு முதுமையே கிடையாது.மரணமுமில்லை.”

பாரதியின் கோபமும் தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் நம்பிக்கையும் மதிப்புமிக்கவை.ஆங்கிலேயர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த அந்த நாட்களிலேயே இவ்விதமான நம்பிக்கையை வெளியிட்ட இவ்விரு மகான்களின் மொழியுணர்வு பின் வந்த காலங்களில்- குறிப்பாக விடுதலை பெற்று ஆங்கிலேயர் நாட்டை விட்டுப் போன பிறகு –இன்னும் குறிப்பாக 1967க்குப் பின் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆட்சி இடையறாது நடைபெற்று வரும் பின்னணியில் – மேலும் வளர்வதற்கு மாறாகத் தேய்ந்து கொண்டே வந்ததையே வரலாறு நமக்குக் காட்டுகிறது.

இன்று தமிழ் அழிந்து விடவில்லை.வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனாலும் பாரதியும் உ.வே.சா.வும் பேசிய அதே நம்பிக்கையான தொனியில் நம்மால் இன்று பேச முடியுமா?

யுனெஸ்கோ நிறுவனம் வரைந்துள்ள இலக்கணங்களின்படி பல்வேறு மொழிகள் அழிந்து வருவதைக் கண்ணுறும்போது நாம் அச்சப்படாமல் இருக்க முடியவில்லை.இன்று உலக மக்கள் பேசும் மொழிகளாக 6900 மொழிகள் இருக்கின்றன.இவற்றில் 2500 மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன.அல்லது இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் நிச்சயம் அழிந்துவிடும் நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன.2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது அழியும் ஆபத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 900 ஆகவே இருந்தது.இப்போது அந்த எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது என யுனெஸ்கோ நிறுவனம் அறிவிக்கிறது.

உலகமயப்பொருளாதார நடவடிக்கையின் விஸ்தரிப்பின் பகுதியாக ஆங்கிலத்தின் ஆதிக்கம் உலக நாடுகளில் எல்லாம் வெகு வேகமாகப்பரவி வருவதன் தொடர்ச்சியாகவே இம்மொழிகளின் அழிவை நாம் பார்க்க வேண்டும்.ஒப்பீட்டளவில் எந்த நாடுகளில் இத்தகைய அழியும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அந்த நாடுகள் இதுபற்றி மிகமிகக் கவலையுடன் அவசரமாக அம்மொழிகளைக் காக்க ஆனதெல்லாம் செய்ய வேண்டும் என யுனெஸ்கோ நிறுவனம் அறிவுறுத்துகிறது.

உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்கிறது யுனெஸ்கோவின் புள்ளிவிவரம்.ஒரு நாடாளுமன்றக் கேள்விக்கு அளித்த எழுத்துப் பூர்வமான பதிலில் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இந்திய மொழிகளில் 196 மொழிகள் அழிவின் விளிம்பில் நிற்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.இவற்றில் 9 மொழிகள் அழிந்தே விட்டன,36 மொழிகள் உடனடியாக அழியும் அபாயத்தில் உள்ளன,62 மொழிகள் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கின்றன,84 மொழிகள் அபாயத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன என்று அமைச்சர் அப்பதிலில் பட்டியலிட்டுள்ளார்.

உலகில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 192 மொழிகளும் பிரேசிலில் 190 மொழிகளும் இந்தோனேசியாவில் 147 மொழிகளும் சீனா மற்றும் மெக்சிகோவில் தலா 144 மொழிகளும் அபாயத்தில் இருப்பதாக கபில் சிபல் குறிப்பிடுகிறார்.

இன்றைய நிலையில் வட கிழக்கு மாகாணங்களில் வாழும் மொழிகளில் 120 , இமாச்சலப்பிரதேசம்,ஜம்மு காஷ்மீர்,உத்தர்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் வாழும் மொழிகளில் 44, ஒரிஸ்ஸா,ஜார்கண்ட்,மே.வங்கத்தில் 42 ஆபத்தில் இருக்கின்றன. இம்மொழிகள் 20-30 ஆண்டுகளில் அழிந்துவிடக்கூடும்.

இப்பட்டியலில் இன்று தமிழ் இல்லை என்று நாம் ஆசுவாசப்பட முடியாது.இன்னும் 50 ஆண்டுகளில் இப்பட்டியலுக்கு வர வாய்ப்புள்ள மொழிகள் என்று பார்த்தால் (இன்றைய போக்கு இப்படியே நீடித்தால்) தமிழ் நிச்சயம் அந்த அபாயத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகில் இன்றுள்ள மொழிகளில் 50 சதவீதமானவை அழிந்தே தீரும் என்று யுனெஸ்கோ கூறியுள்ள புள்ளிவிபரம் நம்மை உண்மையிலேயே அச்சுறுத்துகிறது.

யுனெஸ்கோ மற்றும் உலகின் மொழியியல் அறிஞர்கள் அழியும் மொழிகள் பற்றிக் கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்துகிறார்கள்:-

1. அழிந்துவிட்ட மொழிகள் –பேச,எழுத யாருமே இல்லாது போன மொழிகள் (extinct languages)

2. அநேகமாக அழிந்துவிட்ட மொழிகள்-பேசுபவர்கள் யாரும் இருக்கிறார்களா என உறுதிப்படுத்த இயாலாத நிலையில் உள்ள மொழிகள்(possibly extinct languages)

3. கிட்டத்தட்ட அழிந்துவிட்ட மொழிகள்- பேசுபவர்கள் பத்துக்கணக்கில் மட்டுமே-அவர்களும் வயதானவர்கள்(nearly extinct languages)

4. கடுமையான ஆபத்தில் உள்ள மொழிகள் –பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம்.ஆனாலும் அவர்கள் மத்தியில் குழந்தைகளே இல்லை என்கிற நிலையில் உள்ள மொழிகள்(seriously endangered languages)

5. ஆபத்தில் உள்ள மொழிகள் – சில பகுதிகளில் குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால் அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும் நிலையில் உள்ள மொழிகள்(endangered languages)

6. இயல்திறன் ரீதியாக ஆபத்தில் உள்ள மொழிகள்-நிறையக் குழந்தைகள் இம்மொழிகளைப் பேசலாம்-ஆனாலும் அதிகாரபூர்வமான மொழியாக ஒரு மரியாதைக்குரிய மொழியாக இல்லாம்ல் இருக்கும் நிலையில் உள்ள மொழிகள்(potentially endangered languages)

7. ஆபத்தில் இல்லாத மொழிகள்-அடுத்த தலைமுறைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் கடத்தப்படும் மொழிகள்( not endangered languages)

இன்று நம் தமிழ் மொழி சந்தேகத்துக்கிடமில்லாமல் 7 ஆவது வகையில்தான் உள்ளது.ஆனால் 5 மற்றும் 6 ஆவது வகை ஆபத்துக்கள் நமக்குக் காத்திருக்கின்றன.மத்தியில் ஆட்சி மொழியாக தமிழ் இல்லை.மாநிலத்தில் பாதிக்கும் குறைவான சதவீதமே நிர்வாக மொழியாக உள்ளது.நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக இல்லை.கோவில்களில் வழிபாட்டு மொழியாக இல்லை.ஊடகத்தில் தமிழ் சிதைந்து கொண்டிருக்கிறது.தமிழ் மக்களின் பேச்சிலாவது தமிழ் மிச்சமாக இருக்கிறதா? தமிங்கிலம்தான் தமிழரின் பேச்சு மொழியாகக் கோலோச்சுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் மனம் வெந்து சொன்னது போல’ “ மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை.தோப்பில் நிழலா இல்லை.தமிழகத்தில் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை”

மிக மிக முக்கியமாக பயிற்றுமொழியாகத் தமிழ் இல்லாமல் போகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் சூழல்தான் நமக்கு மிகுந்த அச்சமளிக்கிறது.ஆங்கிலவழியில் கற்றால் மட்டுமே நாளைய உலகம் நம் பிள்ளைகளுக்குக் கிட்டும் என்கிற அச்ச உணர்வு கொண்ட தமிழ்ப் பெற்றோரின் மனவியாதிக்கு உடனடியாக மருந்து வேண்டும்.அதை அரசுகள் மட்டுமே வழங்க முடியும்.தமிழ் மட்டுமல்ல.இந்திய மொழிகள் அத்தனைக்குமே ஆங்கிலம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பூதாகரமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. உள்ளூர் பயிற்று மொழியின் நிலை குறித்து கல்விக்கான திட்டமிடல் மற்றும் நிர்வாகத்துக்கான தேசியப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அகில இந்திய அளவிலான புள்ளிவிவரம் கீழே:

பயிற்று மொழி- மாணவர் சேர்க்கை எண்ணிக்கை

மில்லியன்களில்

2004 2009

1. இந்தி 7.2 83.2

2.ஆங்கிலம் 8.4 15.3

3.வங்காளி 1.4 13.3

4.மராத்தி 10.6 12.4

5.தெலுங்கு 9.1 7.6

6.குஜராத் 6.4 7.3

7.தமிழ் 7.9 7.0

8.கன்னடம் 6.3 6.2

9.ஒரியா 5.7 6.2

10.அஸ்ஸாமி 3.2 4.6

11.உருது 3.0 3.6

12.மலையாளம் 2.9 2.8

13.பஞ்சாபி 2.4 2.4

பல்வேறு கிளை மொழிகள்,மலைவாழ்/பழங்குடி மக்களின் மொழிகளை விழுங்கி இந்தி வளர்ந்துள்ளது.இருளர்,குறும்பர் போன்ற மலைவாழ் மக்களின் மொழிகளைத் தமிழ் தின்றுள்ளது.பொதுவாக தென்னாட்டு மொழிகள் தேய்மானத்தில் உள்ளதையும் ஆங்கிலவழிக்கல்வி இருமடங்கு அதிகரித்திருப்பதையும் நாம் இப்புள்ளி விவரத்தில் காண முடிகிறது.

மத்திய அரசின் தவறான மொழிக்கொள்கையின் விளைவாக இச்சிதைவு எல்லா இந்திய மொழிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.திராவிட ஆட்சிகள் அதைத்தடுக்கப் போராடவும் இல்லை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.மாறாக ஆங்கிலத்தைத் தங்கள் தோள்களில் சுமந்து பரப்பிவருகிறார்கள்.1967க்கு முன் இருந்த ஆங்கிலப்பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்காக பல்கிப்பெருகி இருப்பது திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தான் என்கிற ஒரு சான்று போதும் இதை விளக்க.1930களிலும் 60களிலும் தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்டங்களின் காலத்தில் இந்தியால்தான் தமிழுக்கு ஆபத்து என நம்பினோம்.ஆனால் இன்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலம்தான் அசலான ஆபத்தாக வந்து நம் எதிரே பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது-அரசுகள் உடுக்கடிக்க.

பேய் ஆடுவதற்கான இந்த உடுக்குச் சத்தத்தை பேயை விரட்டுவதற்கானதாக மாற்றுவது மக்கள் கையில்தான் உள்ளது.

தாண்டவகோன் வலைபதிவிலிருந்த

27/09/2008 அன்று...காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திருப்பூர் பத்மாவதிபுரம் கேபிகே நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறுவர் திரைப்பட விழா நடத்தப்பட்டது.விழாவைத் தொடக்கி வைத்து மாவட்ட செயலாளர் தோழர் ஈஸ்வரன் பேசினார்.

திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்து 116 சிறுவர் சிறுமியர் வந்து கலந்து கொண்டார்கள். தமுஎச அட்டைகள் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. தமுஎச குறித்த அறிமுகம் செய்யப்பட்டது.சில்ரன் ஆப் ஹெவன், பூங்கா, அமெரிக்கா பாடல், சென்ஸ், உறவின்கதை, என்று தணியும், ரெட்பலூன் ஆகிய படங்கள் திரையிடப்பட்டு சிறுவர்களின் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டன. சிறுவர் திரைப்படங்களின் மீது சிறுவர்களிடம் மிகையான ஆர்வம் காணப்பட்டது.

தாண்டவக்கோன் திரைப்படங்களைத் திரையிட்டு, தொகுப்புரை வழங்கி நிகழ்வை நடத்தினார். மதியம் 1.30 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப் பட்டது. தினமலர், தீக்கதிர் பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். மதியம் 2.30 மணிக்கு தோழர் நிசார் அகமது விழாவை நிறைவு செய்து உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் - தனபால், குழந்தைவேலு,வே.நா.கணேஷ்குமார், நிசார் அகமது, பாண்டியராஜன், ரவிக்குமார், பி.ஆர்.கணேசன், தாண்டவக்கோன், ஆர்.ஈஸ்வரன் லட்சுமணன், சந்திரசேகரன், நாகராஜ், சண்முகம் (வள்ளுவர் நகர்)ஆகியோர் கலந்து கொண்டனர்.

9/11/2008 அன்று...காலை திருப்பூர் காந்திநகர் சர்வோதய சங்க வளாகத்தில் மாதாந்திர இலக்கிய அமர்வு நடத்தப்பட்டது.காலை 10.30 மணிக்கு தாண்டவக்கோன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. வரவேற்புரை நிகழ்த்தினார் ஆசிரியர் திரு. கணேஷ்குமார்.கவியரங்க நிகழ்ச்சியில் ஏற்கனவே தரப்பட்ட அழைப்பிதழ் ஓவியத்தின் கவிதைகள் இடம்பெற்றன. கவிஞர்கள் சிவதாசன், ஜோதி, சோ.பிரபாகரன், ரஜினி செந்தில், ஆர்ஆர்பி சார்பாக குழந்தைவேல், தங்கவேல் சார்பாக பிஆர்.கணேசன், ஆசிரியை மீனாட்சி, பேச்சிமுத்து, காயாதவன், மாணவி சிந்து, மாணவர் அமர்நாத் ஆகியோர் கவிதை வாசித்தனர்.சிறுமி கிருபாவின் கார்ட்டூன் ஓவியம் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. சிற்பக் கலைஞர் ஆனந்தின் முட்டை மற்றும் மூங்கில் சிற்பங்களும் அவரது சிற்பப் படங்கள் நிறைந்த தொகுப்பும் பார்வைக்கு வைக்கப்பட்டது.மாவட்ட செயலாளர் திரு.ஈஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் சுப்பாரதிமணியன், புதுகை சஞ்சீவியின் ‘வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். தொகுப்பிலிருந்து மூன்று கதைகளை தோழர்கள் கே.பொன்னுசாமி, கோவை சதாசிவம், ரகுகுமார் ஆகியோர் கதையாகச் சொன்னார்கள்.சஞ்சீவியின் புத்தகம் 10 பிரதிகள் விற்பனையானது. அடுத்து புதுகை சஞ்சீவி ஏற்புரை நிகழ்த்தினார். கந்தர்வன் சிறுகதைப்போட்டி 2008 ல் ஆறுதல் பரிசு பெற்ற தாண்டவக்கோனின் சான்றிதழை அறிவிப்போடு வழங்கினார். தோழர்.கே.அருணாச்சலம் நன்றியுரை நிகழ்த்தினார்.

9/11/2008 அன்று..வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தில் நடைபெற்ற பயங்கர வாத எதிர்ப்புக் கூட்டத்தில் ‘மின்சார டாக்டர்’ நாடகம் நடத்தப்பட்டது.

16/11/2008 அன்று..அண்ணா காலனிப் பகுதியில் ‘நல்ல தம்பி’ சிறுவர் நாடகம் நடத்தப் பட்டது.

16-01-2009 அன்று...அண்ணா காலனிப் பகுதியில் நடைபெற்ற பொங்கல் கலைவிழா நிகழ்ச்சியில் தமுஎச வடக்கு கிளை சார்பாக ‘மாப்பிள்ளை கடை’ மற்றும் ‘ஒத்திகை’ ஆகிய நாடகங்கள் நடத்தப்பட்டன.மாப்பிள்ளை கடை நாடகத்தில் ரகுகுமார், பாண்டியராஜன், சின்னச்சாமி, வேணுப்பிள்ளை மற்றும் பெரியார் காலனி குழுவினர் 4 பேர் பங்கேற்றனர்.ஒத்திகை நாடகத்தில் பி.ஆர்.கணேசன், ரங்கராஜன், தாண்டவக்கோன், ரகுகுமார், ராம் ஆனந்த், சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

30-01-2009 அன்று..மகாத்மா காந்தி நினைவு நாளில் திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் காந்தி சிலை முன்பாக தமுஎச மாவட்டக் குழு சார்பாக நடைபெற்ற ‘ பயங்கர வாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு’ கூட்டத்தில் தமுஎச திருப்பூர் வடக்கு கிளை சார்பாக பிஆர்.கணேசன், தாண்டவக்கோன், ரகுகுமார், குழந்தைவேலு, அய்யப்பன், ரவிக்குமார், தூயவன், அருணாச்சலம், பாண்டியராஜன், சந்திரசேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

30/1/2009 முதல்...திருப்பூர் 6வது புத்தகக் கண்காட்சி 2009 ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக

30/1/2009 முதல் 8/2/2009 வரை 10 நாட்கள் குறும்பட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சராசரியாக நாளன்றுக்கு 40 பார்வையாளர்கள் பங்பேற்றனர். தமுஎகச மாவட்டக் குழு தோழர் ராஜாமணி மற்றும் வடக்குக் கிளை தாண்டவக்கோன், ஆர். ரவிக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.22/02/2009 அன்று... மாலை 6மணிக்கு திருப்பூர் காந்திநகர் அப்ரோ-90 தோழர் ஈஸ்வரன் இல்ல வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க வடக்கு கிளையின் மாதாந்திர இலக்கிய அமர்வு நடத்தப்பட்டது. மூத்த தோழர் ஆர்.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. கவியரங்க நிகழ்ச்சியில் ஏற்கனவே தரப்பட்ட அழைப்பிதழ் ஓவியத்தின் கவிதைகள் இடம்பெற்றன. கவிஞர்கள் சிவதாசன், ஜோதி, சோ.பிரபாகரன், ஆர்ஆர்பி, தங்கவேல், காயாதவன், யாழி, பேச்சிமுத்து, காயத்ரி சார்பாக தாண்டவக்கோன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.தி.குழந்தைவேலுவின் ‘அகலாத நினைவுகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூலை அறிமுகம் செய்து தோழர் கே.பொன்னுசாமி வாழ்த்துரை வழங்கினார். தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளை ஆசிரியர் ரமேஷ்குமார், பி.ஆர்.கணேசன் ஆகியோர் கதையாகச் சொன்னார்கள். அகலாத நினைவுகள் புத்தகம் 4 பிரதிகள் விற்பனையானது. தொகை படைப்பாளிக்குத் தரப்பட்டது. அடுத்து தி.குழந்தைவேலு ஏற்புரை நிகழ்த்தினார். ஆர்.ரவிக்குமாரின் ‘எதிர்வினை’ குறும்படத்தை தோழர் அருணாச்சலம் வெளியிட ஆசிரியர் சந்திரன் பெற்றுக் கொண்டார். கிருஷ்ணா தியேட்டர் பிகே.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.துசோ.பிரபாகரின் ‘தக்காளி’ குறும்படத்தை தோழர் ஆர்.குமார் வெளியிட பழ.விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார். தக்காளி 6 பிரதிகள் விற்பனையானது. தொகை படைப்பாளிக்குத் தரப்பட்டது.ராமின் ‘உருமாற்றம்’ குறும்படத்தை தோழர் சி.சந்திரசேகர் வெளியிட தோழர்.டிஎம்எல். ஆறுமுகம் பெற்றுக் கொண்டார்.குறும்பட இயக்குனர்களை வாழ்த்தி தாண்டவக்கோன் உரையாற்றினார். நிகழ்வில் ‘ஒருநிமிடம்’ மற்றும் ‘சென்ஸ்’ குறும்படங்கள் திரையிடப்பட்டன. அனைத்துக் குறும்படமும் திரையிட்ட பிறகு பார்வையாளர்களின் கருத்து கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. தோழர் வேநா. கணேஷ்குமார் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

22/03/2009 அன்று...மாலை 5 மணிக்கு திருப்பூர் அப்ரோ-90 வளாகத்தில் மாதாந்திர அமர்வு நடத்தப் பட்டது. பிஆர்.கணேசன் தலைமை வகித்தார். நிகழ்வுகளை தாண்டவக்கோன் தொகுத்தளித்தார். கவியரங்கத்தைத் தொடர்ந்து திருப்பூர் குமாரின் ‘தீட்டு’ நாவல் அறிமுகப்படுத்தப்பட்டது. கதை சொல்லி அறிமுகம் செய்தார் கே.ரங்கராஜ்.சென்னை நா.மணிமேகலை நாகலிங்கத்தின் ‘தூ’ குறும்படம் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேலும் சென்னை எம்.சிவக்குமாரின் ‘கண்ணீர் துடைப்போம்’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டு கருத்துக் கேட்கப்பட்டது.கோவை சதாசிவம் வாழ்த்துரை வழங்க திருப்பூர் குமார் ஏற்புரை செய்தார். தாண்டவக்கோன் நன்றியுரைத்தார். நிகழ்வில் 50 பேர் கலந்து கொண்டனர்.

13/9/2009 அன்று...திருப்பூர் பெரியார் காலனி துவக்கப் பள்ளி வளாகத்தில் மாலை 6.30 மணி முதல்8.30 மணி வரை சங்கத்தின் மாதாந்திர இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியார் காலனி தோழர்கள் செய்திருந்தனர். 6.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. ரகுகுமார் வரவேற்புரையும் பி.ஆர்.கணேசன் தலைமையுரையும் நிகழ்த்தினர். நிகழ்ச்சியை தாண்டவக்கோன் தொகுத்தளித்தார்.கவிஞர்கள் மதுராந்தகன், அருணாச்சலம் ஆகியோர் ‘விலைவாசி ஏவுகணை’ எனும் தலைப்பில் கவிதைகள் வாசித்தனர்.கவிஞர் நிறைமதியையும் அவரது கவிதைத் தொகுப்பையும் வேலா.இளங்கோ அறிமுகம் செய்து பேசினார். நிறைமதி ஏற்புரை நிகழ்த்தினார்.மாயமான் இயக்குனர் து.சோ.பிரபாகர் அறிமுகம் செய்யப் பட்டார். மாயமான் குறும்படத்தை டி.சரோஜா வெளியிட்டார். திமு.ராசாமணி திரையிட்டு மதிப்புரை வழங்கினார்.கனவு இயக்குனர் ராம் அறிமுகம் செய்யப் பட்டார். கனவு குறும்படத்தை கே.ரங்கராஜ் வெளியிட்டார். மதுராந்தகன் மதிப்புரை வழங்கினார்.நிகழ்வுகள் பற்றிய கருத்துக்களைப் பார்வையாளர்கள் பதிவு செய்தனர். இயக்குனர்கள் து.சோ.பிரபாகர் மற்றும் ராம் ஏற்புரை நிகழ்த்தினர். தாண்டவக்கோன் நன்றியுரை வழங்கினார்.

29/11/2009 அன்று.. திருப்பூர் அணைப்பாளையத்தில் மாதாந்திர இலக்கிய அமர்வாக ‘திரைவிழா’ நடைபெற்றது. மாதர் சங்கக் கிளைச் செயலாளர் செல்வி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. தாண்டவக்கோன் நிகச்சியினை ஒருங்கிணைத்து வழங்கினார்.நிகழ்வில் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ ஆவணப்படமும் தாண்டவக்கோனின் ‘இப்படிக்குப் பேராண்டி’ குறும்படமும் திரையிடப் பட்டன. அய்யப்பன் நன்றி கூறினார். நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

12/12/2009 அன்று...திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்ற தமுஎகச வின் கலை இரவுக்காக தமுஎகச ‘வரிசை’ எனும் நாடகம் தயாரிக்கப்பட்டது.

6/12/2009 முதல் 12/12/2009 வரை தீவிர ஒத்திகை நடத்தப்பட்டது. கலை இரவு மேடையில் நாடகம் அனைவரும் பாராட்டும் வகையில் அரங்கேற்றப்பட்டது. நாடகக் குழுவில் ரகுகுமார், பாண்டியராஜ், வேணுப்பிள்ளை, சின்ராஜ், தாண்டவக்கோன், ராம்ஆனந்த், சண்முகம், தெற்கு சண்முகம், மணி, லெனின், அப.குமார் ஆகியோர் நடித்தனர். பிஆர்.கணேசன் மற்றும் வீரபாண்டி குமார் நிர்வாகித்தனர்.

25/12/2009 அன்று...சிறுபூலுவ பட்டியில் ‘சவம்’ மற்றும் ‘வரிசை’ நாடகங்கள் நடத்தப்பட்டது.புதிய உறுப்பினர் சுபாஷ் மற்றும் ரங்கராஜ், ரகுகுமார், தாண்டவக்கோன், பாண்டியராஜ், ராம்ஆனந்த், நவநீதன், சின்ராஜ், சந்திரமோகன், கார்த்தி,(பெரியார் காலனி சிறுவன்) , லெனின், சண்முகம் ஆகியோர் நாடகங்களில் நடித்தனர்.

02/01/2010 அன்று..மாலை 6 மணிக்கு திருப்பூர் காந்திநகர் முத்தண்ண செட்டியார் திருமண மண்டபத்தில் இலக்கிய அமர்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஆதவன் தீட்சண்யா அவர்களோடு இலங்கைப் பயண அனுபவங்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.6,45க்கு தொடங்கிய கலந்துரையாடல் இரவு 9,45 வரை இடைவிடாது நடந்தது. பங்கேற்பாளர்களின் இலங்கை நடப்புக்கள் குறித்த கவனத்தை உணர்த்தியது. 60க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.ஆசிரியர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். தாண்டவக்கோன் தொகுத்தளித்து நன்றி கூறினார்.

16/1/2010 அன்று...வேலம்பாளையம் பிகேஆர் நகரில் நடந்த விளையாட்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக ‘கதைகள் திருடும் கனவுப் பெட்டி’ எனும் குழந்தைகள் நாடகம் நடத்தப்பட்டது. பெரியார் காலனிப் பகுதியைச் சேர்ந்த 15 குழந்தைகள் நடித்தனர். நாடகத்தை 600க்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்தனர்.

17/1/2010 அன்று...ஜீவா காலனியில் நடந்த நடந்த விளையாட்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக ‘கதைகள் திருடும் கனவுப் பெட்டி’ எனும் குழந்தைகள் நாடகமும் ‘சவம்’ மற்றும் ‘சும்மா’ எனும் நாடகங்களும் நடத்தப்பட்டது. சுமார் 800 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

29/1/2010 முதல்...திருப்பூர் 7வது புத்தகக் கண்காட்சி 2010 ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக 29/1/2010 முதல் 7/2/2010 வரை 10 நாட்கள் குறும்பட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சராசரியாக நாளன்றுக்கு 60 பார்வையாளர்கள் பங்பேற்றனர். தமுஎகச வடக்குக் கிளை தாண்டவக்கோன் மற்றும் ஆர். ரவிக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

4-7-2010 அன்று ... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கிய அமர்வு நடந்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய அந் நிகழ்வில் திருப்பூர் கவிஞர்கள் சிவதாசன், ரத்தினமூர்த்தி, ரஜினிசெந்தில் ஆகியோர் கவிதை வாசித்தனர். ஆர்.ஈஸ்வரன் அனுப்பியிருந்த கவிதை ஒன்றும் வாசிக்கப் பட்டது.-பன்முக ஆய்வுக்காக 'லைப் ஈஸ் பியூடிபுள்" எனும் இத்தாலியப் படம் திரையிடப் பட்டது.படத்தின் கதை நுட்பம் காட்சிக் கூறுகள் குறித்து விளக்கப்பட்டது.பார்வையாளர்கள் பெரிதும் வரவேற்றனர். -மேலும் நிகழ்வில் திருப்பூர் ரவிகுமாரின் 'கண்ணாமூச்சி' எனும் குறும் படத்தை பி.ஆர்.கணேசன் அறிமுகம் செய்து திரையிட்டார். கண்ணாமூச்சி பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.-நிகழ்வில் திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் , தமுஎகச வினர், குறும்பட இயக்குனர் ரவிகுமார் நடிகர் ஜெயபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வை வழக்கறிஞர் ரவி, தாண்டவக்கோன் ஒருங்கிணைத்தனர். 50 பார்வையாளர்கள் பங்கேற்றனர்.