திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Saturday, July 8, 2017

பாய்ச்சல் வேகத்தில் பாசிசம் – செங்கொடி பிடித்து களமிரங்குவோம் – ச.தமிழ்ச்செல்வன்

தீக்கதிர் செய்தி 

கோவை, ஜூலை. 7 –
பாய்ச்சல் வேகத்தில் பாசிசம் தெருமுனைக்கு வந்துவிட்ட நிலையில் அறிவின் அடிப்படையில் பெருவாரியான மக்களை திரட்டி பாசிச சக்திகளை விரட்டியடிக்க வேண்டிய வரலாற்று கடமை கம்யூனிஸ்டுகளின் முன்னால் இருக்கிறது என்று தியாகி முத்து நினைவுதின பொதுக்கூட்டத்தில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.
கோவையில் பஞ்சாலை தொழிலாளியாய் உரிமைக்கான போர்க்களத்தில் பஞ்சாலை முதலாளிகளின் குண்டர்களாள் படுகொலை செய்யப்பட்டார் தியாகி உப்பிலியபாளையம் முத்து. இவரது 64 ஆவது நினைவுதின பொதுக்கூட்டம் கோவை உப்பிலியபாளையம் பூங்கா திடலில் வெள்ளியன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இனைந்து நடத்திய கூட்டத்திற்கு எம்.தங்கவேல் தலைமை தாங்கினார். என்.வாசுதேவன் முன்னிலையில் ஆர்.பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக தமிழ்ச்செல்வன் பேசுகையில், தமிழக அரசு இடைவிடாது டாஸ்மாக் கடைகளை திறந்து கொண்டிருக்கிறது. குடிப்பது என்பது நாகரிகத்தின் அடையாளமாக மாற்றப்படுகிறது. எதிர்த்து குரல் கொடுப்பவர்களை அடக்குகிறது, ஒடுக்குகிறது, தாக்குதல் நடத்துகிறது, வழக்கு போட்டு அச்சுறுத்துகிறது. ஆனால் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என கம்யூனிஸ்டுகள் இடையிராது பாடுபடுகிறோம் தியாகம் செய்கிறோம். குடிகாரர்களை உருவாக்குகிறது ஒரு கட்சி, தியாகிகளை உருவாக்குகிறது இன்னொரு கட்சி. எங்கள் மேடைகளில் தியாகிகளை நாங்கள் போற்றுகிறோம். மறுபுறம் ஓபிஎஸ்,இபிஎஸ் என ஆளுக்கொரு நாடகம் நடத்தியும் தியாகத்தலைவி எப்படி மரணம் அடைந்தார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இயற்கையாக இறந்தாரா செயற்கையாக இறந்தார என்கிற விவாதம் இன்றுவரை நடந்து கொண்டே இருக்கிறது.   இதுதான் மற்ற கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உள்ள அடையாளம்.
இந்தியா பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று நம்பி இந்திய மக்கள் தேசவிரோதிகளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டார்கள். நாட்டின் அடிப்படை என்பது மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிச, குடியரசு என்கிற நான்கு வார்த்தைகளுக்குள் இந்தியா நிற்கிறது. இந்த நான்கு வார்த்தையும் அரசியல் சட்டத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்கிற கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பது மிக அபாகயரமானது. இந்த எச்சரிக்கையை இன்னும் மக்கள் உணரவில்லை. இந்த உணர்த்த வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக் உள்ளது. இன்று நிலவும் சுதந்திரம் நீடிக்குமா என தெரியவில்லை. இவர்கள் வைக்கிற ஒவ்வொரு தப்படியும்  திட்டமிடப்பட்டவை. பத்து அமைப்புகள் பத்துவிதமாக பேசுவார்கள் மக்களை குழப்புவார்கள். இது அனைத்தும் திட்டமிடப்பட்டவையே. இந்தியாவை இந்தியும், சமஸ்கிருதம் மட்டுமே ஆளவேண்டும் என நினைக்கிறார்கள்.
கும்பிட்டு பழகியவர்கள் அம்மா மரணத்திற்கு பிறகு யாரை கும்பிடுவது எனத்தெரியாமல் தற்போது மோடியை கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களின் அடிப்படையான வாழ்வாதரப்பிரச்சனையில் இருந்து திசைதிருப்ப மாட்டிறைச்சி உண்ணக்கூடாது உள்ளிட்டு வாரம் ஒரு பிரச்சனையை தேசிய அளவில் கிளப்பி விடுகிறார்கள் பாஜகவினர். இவை அனைத்தும் பண்பாட்டுத்தளத்தின் மீதான தாக்குதல். இத்தகைய நிலையில் இருந்து நமது மொழியுரிமையை பண்பாட்டு உரிமையை பாசிச சக்திகளிடம் இருந்து பாதுகாக்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைவரும் ஒன்றினைந்து போராட்டக்களத்திற்கு வரவேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். ஆர்எஸ்எஸின் வழிகாட்டுதலில் ஆட்சிசெய்யும் பாஜக தனது பாசிச கொள்கையை ஜானதிபதி தேர்தலுக்கு பிறகு முழுவீச்சில் அமலாக்குமா அல்லது அடுத்த ஐந்து வருடத்தில் அமலாக்க போகிறதா என்கிற அபாயம் தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் இருந்துதான் இந்த தேசத்தை பாதுகாக்க கம்யூனிஸ்டுகள் களம்காண்கிறோம். அறிவியலுக்கு விரோதமாக கருத்துக்களை பாஜக முன்வைக்கிறது, அறிவியல் பூர்வமான கருத்துக்களை நாம் முன்வைத்து அறிவார்ந்த மக்களை, கற்றரிந்த மக்களை திரட்டுகிற வரலாற்று கடமை நமக்கு இருக்கிறது. முன்னைக்காட்டிலும் முனைப்போடு செயல்பட வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. சாதி, சமயங்களற்ற சமூகமாக தமிழ்ச்சமுகம் இருந்தற்கான ஆய்வு கீழடியில் கிடைத்திருக்கிறது. இதுபோன்ற அறிவியல் பூர்வமான, வரலாற்று பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று கற்றரிந்த பெருவாரியான மக்களை திரட்டி தெருமுனைக்கு வந்துவிட்ட பாசிச சக்திகளை உயர்த்திப்பிடித்த செங்கொடியோடு முஷ்டியை உயர்த்தி முழக்கமிட்டு விரட்டியடிப்போம் என்று ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.

No comments:

Post a Comment