திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்)

Tuesday, October 5, 2010

விளையாட்டென்பது சும்மா விளையாட்டல்ல….

எழுதியது ச.தமிழ்ச்செல்வன்
--------------------------


டெல்லியில் நடைபெற உள்ள 19-ஆவது காமன்வெல்த் விளையாட்டிலும் கைவைத்து ’விளையாடிவிட்ட’ இந்திய அதிகாரிகள்,துணைபோகும் அமைச்சர்கள் பற்றி நாள்தோறும் ஒரு செய்தியை நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.போபர்ஸ் பீரங்கியிலிருந்து ,மாட்டுத்தீவனம், சுடுகாட்டுக்கொட்டகை என எல்லாவற்றிலும் விளையாடிய நம் மகானுபாவர்கள் விளையாட்டில் மட்டும் எப்படி விளையாடாமல் இருப்பார்கள்.நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா செவலிங்கம்னு தெரியுமா? அது பற்றி ஏராளமான கட்டுரைகள் தினசரி பத்திரிகைகளில் வந்து கொண்டே இருக்கின்றன.ஆகவே இக்கட்டுரை அதுபற்றிப் பேசாமல் இன்னும் அதிகம் பேசப்படாத விளையாட்டைப்பற்றிய சில விடயங்களைப் பற்றிப் பேசவிருக்கிறது.

* * *

வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்ட 1911 ஆம் ஆண்டுதான் காமன்வெல்த் விளையாட்டுக்களுக்கான மூல விதை நடப்பட்டது.அந்த ஆண்டில் இங்கிலாந்தின் மன்னனாக ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிக் கொண்டதை ஒட்டி அவன் இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தே- அந்த எதிர்ப்பை உலகுக்காட்டவே -வாஞ்சி ஆஷைச் சுட்டுக்கொன்றார்.(வாஞ்சியைப் பற்றிய கணிப்புகள் இன்று மாறி வந்தாலும் அவர் சுட்டது ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் வருகையை ஒட்டியே என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை). நேர்மாறாக அதே ஐந்தாம் ஜார்ஜ் பதவியேற்றதைக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்காக அதே 1911இல் இங்கிலாந்தில் ஒரு விளையாட்டுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.ஆஸ்திரேலியா,கனடா,தென் ஆப்பிரிக்கா,இன்கிலாந்து போன்ற நாடுகள் அப்போட்டியில் பங்கேற்று மன்னர் முடிசூட்டிக்கொண்டதை விளையாடிக் களித்தன.அதற்கு சாம்ராஜ்ஜிய விளையாட்டு விழா என்று பேர் வைத்தார்கள்.1930இல் அவ்விளையாட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய விளையாட்டு எனப்பேர் பெற்று 1954இல் அது கனடா நாட்டில் விளையாடப்பட்டபோது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்று பேர் பெற்று 1970 இங்கிலாந்தில் விளையாடப்பட்டபோது பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்றாகி மீண்டும் 1978இல் கனடாவில் காமன்வெல்த் விளையாட்டுக்கள் என்கிற இன்றைய நாமத்தைப் பெற்றது.

காமன்வெல்த் என்பது 54 நாட்டு அரசுகளின் ஒரு கூட்டமைப்பு.அந்த 54இல் 52 நாடுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரிட்டனுக்கு அடிமைப்பட்டிருந்த முன்னாள் காலனி நாடுகள்.ஆகவே காமன்வெல்த் என்பது பழைய ராஜவிசுவாசிகளின் சங்கம் என்பதாக ஆரம்பத்தில் தோற்றம் கொண்டிருந்தது.இந்நாடுகளின் மீது அரசியல்,பொருளாதார நிர்ப்பந்தம் செலுத்த இவ்வமைப்பை இங்கிலாந்து பயன்படுத்தும் சாத்தியமும் அப்போது இருந்தது.ஆகவே காமன்வெல்த்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது (தற்காலப்படுத்தப்படுவதற்கு முந்திய )கட்சித்திட்டத்திலேயே குறிப்பிட்டது.

1971 சிங்கப்பூர் பிரகடனம் காமன்வெல்த்தில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் சுயாதிபத்திய உரிமை பெற்ற சமமான மதிப்புள்ள உறுப்பினர்கள் என்றும் இவ்வமைப்பின் லட்சியம் ஜனநாயகம்,மனித உரிமைகள்,நல்லாட்சி,சட்டத்தின் ஆட்சி,உலகசமாதானம் போன்றவைதான் என அறிவித்தது.இந்த காமன்வெல்த் விளயாட்டுகள் ஒன்றுதான் அப்படி ஒரு அமைப்பு இருப்பதை ஞாபகப்படுத்தும் நிகழ்வாக இருக்கிறது.இது தவிர வேறுசில அமைப்புகளும் காமன்வெல்த்தில் இருக்கின்றன.காமன்வெல்த் இடுகாட்டுக் கமிசன் என்பது உலகெங்கும் பரவிக்கிடக்கும் 2500 போர்வீரர் கல்லறைத்தொகுதிகளைப் பராமரிக்கிறது.உலகப்போர்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்காகப் போரிட்டு மடிந்த போர்வீரர்களின் கல்லறைகளாகும்.இதுபோல பண்பாடு,கலை இலக்கியம் போன்றவற்றுக்கான சில அமைப்புகளும் இயங்குகின்றன.ஆகவே 1950களில் இருந்த காமன்வெல்த் பற்றிய கணிப்புகள் இன்று மாறியுள்ளன.

எனினும் அதன் தலைவராக இப்போதும் எலிசபெத் ராணியே இருக்கிறார்: தலைமையகம் நிரந்தரமாக லண்டனின் மல்பரோ மாளிகையிலேயே இருக்கிறது:என்பது போன்ற உண்மைகளால்

ராஜவிசுவாச சங்கம் என்கிற அதன் தோற்றம் முற்றிலும் மறையாமல் தொடரத்தான் செய்கிறது-அதன் செயலாளர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறார் –அவர் ஐ.நா.பொதுக்குழுவில் ஒரு பார்வையாளராக அனுமதிக்கப்படுகிறார் என்றாலும் கூட.

இப்படியான ஒரு அமைப்பின் ஒரு பகுதியான விளையாட்டுத்தான் காமன்வெல்த் விளையாட்டு 2010 ம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாட்டின் முக்கிய நகரம் ஒன்றில் நடத்தப்படுகிறது.சென்ற காமன்வெல்த் போட்டிகள் 2006இல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.2014 இல் ஸ்காட்லாண்டிலும் 2018இல் இலங்கை அல்லது ஆஸ்திரேலியாவிலும் நடைபெற இருக்கிறது.

இந்த விளையாட்டுக்களை பல உறுப்பு நாடுகள் புறக்கணித்த வரலாறும் உண்டு.பெரும்பாலும் தெனாப்பிரிக்காவில் பன்னெடுங்காலமாக அமலில் இருந்த (இன்றும் தொடரும்) நிறவெறிக்கொள்கைக்கு எதிரான உணர்வுடன் 1978இல் நைஜீரியா புறக்கணித்தது.1986இல் தாட்சரின் தெனாப்பிரிக்காவுக்கு ஆதரவான விளையாட்டுக் கொள்கை காரணமாக 32 நாடுகள் காமன்வெல்த் விளையாட்டைப் புறக்கணித்தன.

* * *

இவ்விதம் விளையாட்டில் அரசியல் ஊடாடுவது என்பதைத் துவக்கி வைத்தவன் ஜெர்மானிய பாசிஸ்ட் ஹிட்லர்தான்.1931இல் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடத்த ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்தது.முதல் உலகப்போருக்குப் பின் சர்வதேச சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருந்த ஜெர்மனி(ஒவ்வொரு உலகப்போருக்குப் பின்னும் தோற்ற நாடுகள் ஒலிம்பிக்கிற்கு அழைக்கப்படவில்லை) மீண்டும் உலக நிகழ்வு ஒன்றை நடத்தும் வாய்ப்பைப்பெற்றது.ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனியில் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்புகள் ஹிட்லரை 1933இல் ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தின.ஜெர்மானிய ஆரிய இனமே உலகின் ஈடு இணையற்ற தலைமை இனம் என்கிற முழக்கத்தோடு இனச்சுத்திகரிப்புக் கொடும் செயல்களைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த ஹிட்லரின் கையில் கிடைத்த இந்த வாய்ப்பை அவன் தன் ஆரியக்கொள்கைகளை – ஆரிய ஜெர்மனியின் சிறப்பை- அதன் மீது உலகம் வைத்துவந்த விமர்சனங்களைப் புறந்தள்ளி -உலகுக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டான்.

அதற்கு முன்வரை ஜெர்மனியில் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாக இருந்த பலர் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு தேசிய விளையாட்டு அமைப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்- அவர்கள் யூதர்கள் என்கிற காரணத்துக்காக.ஆரியர்களைத்தவிர வேறு யாராலும் விளையாட்டிலும் ஜெர்மானிய தேசியத்தின் பெருமையை உயர்த்திப்பிடித்திட முடியாது என்று வாதிடப்பட்டது.ஜெர்மானிய பாக்சிங் அசோசியேசன் அந்நாட்டின் மிகச்சிறந்த பாக்சிங் வீரரான எரிக் சீலிக்கை அவர் யூதர் என்பதற்காக வெளியேற்றியது.டேனியல் ப்ரென் என்கிற உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ஜெர்மனியின் டேவிஸ் கோப்பை க்ளப்பிலிருந்து தூக்கி எறியப்பட்டார்-யூதர் என்பதற்காக.இப்படிப் பல அற்புதமான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் ஒன்றுகூடி யூத விளையாட்டு வீரர்களுக்கான அமைப்புகளைத் துவக்க முற்பட்டுக்கொண்டிருந்த வேளையில் 1936 ஒலிம்பிக் வந்து சேர்ந்தது.

ஆரம்பத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதில் அவ்வளவு ஆர்வம் காட்டாதிருந்த ஹிட்லர் அதில் உள்ள விளம்பர அம்சத்தை அவருடைய கொள்கை பரப்பு அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ் (’ஒரு பொய்யை நூறு முறை திரும்பத் திரும்பச்சொன்னால் அது உண்மையாகிவிடும் ’ என்கிற தத்துவத்தை உலகுக்கு வழங்கியவர்) எடுத்துக்கூறியபின் பிரம்மாண்டமாக ஒலிம்பிக் நிகழ்வை நடத்தினான் ஹிட்லர்.உலகில் இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே பிரம்மாண்டமான நிகழ்வு 1936இல் ஹிட்லர் நடத்தியதுதான் என்று கூறப்படுகிறது.லட்சோபலட்சம் மக்கள் பேரணிகளாகவும் அலையலையான கூட்டங்களாகவும் அந்நிகழ்வில் ஆரிய முழக்கங்களோடு பங்கேற்றனர்.ஜெர்மானிய வீரர்கள் பதக்கம் பெற மேடையேறியபோதெல்லாம் லட்சோபலட்சம் மக்கள் எழுந்து நின்று ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்து முழக்கமிட்டனர்.அன்று தொலைக்காட்சி வந்திருக்கவில்லை.வானொலி மட்டுமே இருந்தது.வானொலியை முழுமையாகக் கைக்கொண்டு ஜெர்மனியின் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் உள்ள மக்கள் வானொலி மூலம் ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் கேட்டு மேலும் தேசியப்பெருமிதமும் ஆரிய உணர்வும் கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.வெளி உலகுக்கு நாங்கள் ஒன்றும் இனவெறியர்கள் அல்ல என்று காட்டிக்கொள்ளவும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஹிட்லரின் ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் வலுவாக எழுந்தது.தலைமறைவு வாழ்க்கையில் இருந்த ஜெர்மானிய சோசலிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட்டுகளும் பெர்லின் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு உலக மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.ஆனால் ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டில் அரசியலைப் புகுத்த அனுமதிக்க மாட்டோம்.ஹிட்லர் பாசிஸ்ட் என்றால் அது உங்கள் பிரச்னை.ஒலிம்பிக் கமிட்டி சொல்லும் தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்தால் போதும் பெர்லினில் நடத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று கமிட்டி கூறிவிட்டது.விளையாட்டின் அடிப்படை சமத்துவம்.நாஜிக்களின் அடிப்படை இனச்சார்பு.ஆகவே அடிப்படையிலேயே கோளாறு இருப்பதை கமிட்டி பார்க்கத் தவறிவிட்டது.

* * *

அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் பல நாடுகள்/வீரர்கள் புறக்கணித்த சம்பவங்கள் பல உண்டு.ஒலிம்பிக் மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளாகக் கருதப்படும் ஒலிம்பிக்,ஆசியன் கேம்ஸ்,காமன்வெல்த் போட்டிகள் இம்மூன்றுக்குமே இது நேர்ந்துள்ளது.

சமாதானம்,நல்லெண்ணம்,விளையாட்டின் மகத்துவம் இவற்றையே தன் லட்சியமாக ஒலிம்பிக் கொண்டிருந்தபோதும் நீண்ட காலம் சோவியத் யூனியனும்,மக்கள் சீனமும் அழைக்கப்படாமலிருந்தது அரசியல் காரணங்களுக்காகத்தான்.அரசியலுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு என்று திரும்பத்திரும்ப ஒலிம்பிக்,ஆசிய விளையாட்டு,காமன்வெல்த் போன்ற அமைப்பினர் சொல்லிக்கொண்டிருந்தாலும் இம்மூன்று மெகா விளையாட்டுக்களும் பிறந்த காலத்திலிருந்தே அரசியலோடுதான் நகர்ந்துகொண்டிருக்கின்றன.அரசியலுக்கு அப்பால் எதுவும் இல்லை.அரசியலற்றது என்று எதுவும் இருக்க முடியாது-விளையாட்டு உட்பட என்பதே நமது கருத்து.அது எந்த அரசியலாக இருக்க வேண்டும் என்பதே இக்களத்தில் நடக்கும் போராட்டம்.

விளையாட்டல்லாத கீழ்க்கண்ட விசயங்கள் விளையாட்டுக்குள் இருப்பதை நாம் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டியுள்ளது :-

1. இவ்விளையாட்டுக்கள் வெறும் விளையாட்டுக்களாகப் பார்க்கப்படுவதில்லை.ஒரு வீரர் வெற்றி பெற்றால் அது அந்த வீரரின் திறனாகப் பார்க்கப்படுவதில்லை.மாறாக அவரது நாடு வென்றதாகக் கருதப்படுகிறது.தேசியக்கொடிகள் ஆட்டப்படுகின்றன.அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஒரு போர் வெற்றி போல ஆக்கப்படுகிறது.தேசியப்பெருமிதம் ஊதி வளர்க்கப்பட( நன்றி-ஹிட்லர்) இவ்விளையாட்டுக்கள் பயன்படுகின்றன.இந்திய பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை இந்துத்வா சக்திகள் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவது ஒரு உதாரணம்.

2. விளையாட்டுக்கள் பணமுதலைகளான கார்ப்பொரேட்டுகளின் ஆதிக்கத்துக்குள் வந்து விட்டன.விளையாட்டுக்களை வழங்குவது(ஸ்பான்சர்) ,வீரர்களை தத்தெடுத்து தங்கள் கம்பெனி தயாரிப்புக்களுக்கான விளம்பரங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்துவது ,ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தையே கம்பெனி விலம்பரத்துக்குப் பயன்படுத்துவது என்று தொடங்கி விளையாட்டின் ஒவ்வொரு அம்சமும் வியாபாரமாகிக் கிடக்கிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரமாகவும் பயன்படுகிறது.ஆசியன்,ஒலிம்பிக் மற்றும் பல கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நிறுவனங்கள் தாங்களே பெரும் பணம் படைத்த கார்ப்பொரேட்டுகளாகி அக்கமிட்டிகளுக்கான தேர்தல் போன்றவை பணமும் வன்முறையும் ஊடாடும் நிலை வந்துள்ளது. விளையாட்டு மொத்தத்தில் பணம் தொடர்பான ஒன்றாக ஆகிவிட்டது.

3. விளையாட்டென்பது எல்லோரும் பங்கேற்கும் நிகழ்வு என்பதற்காகவும் கூடி விளையாடும் சமூக அனுபவத்துக்காகவுமே நம் எல்லோராலும் காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.ஆனால் அது இப்போது வெற்றி வெற்றி என்பதையே இலக்காகக் கொண்டதாக மாறிவிட்டது.அதிலும் தங்கப்பதக்கம் பெற்றவரே கொண்டாடப் படும்போது. மீடியாக்களில் கவனம் பெறும்போது தோற்ற வீரர்களின் உழைப்பும் ஈடுபாடும் மனநிலையும் கேலிக்குரியதாகிரது.பெருவாரியான வீரர்கள் தோற்பதற்காகவே இத்தனை காலம் உழைத்தது போல ஆகிவிடுகிறது.எப்படியாவது வெற்றி ஈட்ட வேண்டும் என்பதால் வீரர்கள் ஊக்க மருந்துகள் போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற சிதைவுகளும் அரங்கேறுகின்றன.

4. விளையாட்டுக்களிலும் ஆணாதிக்கமே நிலவுவது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.பெண் வீரர்களுக்கு பயிற்சியாளர்களோ நிதி அளித்து உதவுபவர்களோ கிடைப்பதில்லை.நாடுகளும் பெண்களை அனுப்புவதில் பெரிய முயற்சிகள் செய்வதில்லை.பெண்கள் விளையாடும் விளையாட்டிலும் பாலியல் வக்கிரம் எங்கும் பரவிக்கிடக்கிரது.டென்னிஸ் வீராங்கனைகளின் உடை,நீச்சல் உடை போன்றவை விவாதத்துக்குள்ளாகின்றன.புதுக்கோட்டை சாந்திக்கு ஏற்பட்ட அவமானம் ஒரு ஆண் வீரருக்கு ஏற்பட்டதுண்டா?

5. எல்லா சர்வதேச விளையாட்டுக்களும் ஐரோப்பிய விளையாட்டுக்களாகவே உள்ளன.ஹாக்கி ஏதோ ஒரு ஓரத்தில் இடம் பிடித்துள்ளது.மேற்கத்திய நாடுகள் அல்லாத நிலப்பரப்புகளின் பல்லாயிரம் விளையாட்டுக்களுக்கு சர்வதேச விளையாட்டரங்குகளில் எந்த இடமும் இல்லை.

6. வன்முறைக்கு மரியாதை செய்யும் பாக்சிங்,மல்லுக்கட்டு போன்ற விளையாட்டுக்கள் மட்டுமின்றி ரசிகர்களை வெறி கொள்ள வைத்துத் தோற வீரர்களை மைதானத்துக்குள் புகுந்து அடிப்பது, வெற்றி தோல்வி சார்ந்து கலகம் மற்றும் ரகளையில் ஈடுபடுவது மற்றும் சில சந்தர்ப்பங்களில் நாடுகளுக்கிடையேயான போருக்குக்கூடக் காரணமாக அமையும் அளவுக்கு –விளயாட்டுகளில் இன்று வன்முறைக்கான வித்து புதைந்து கிடக்கிறது.சர்வதேச விளயாட்டுக்களின் கொள்கை முழக்கங்களுக்கு நேர் முரணானதல்லவா இது.

7. பெரும் கூட்டம் கூடுவதால் தீவிரவாதம் இவ்விளையாட்டுக்களை தம் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.மூனிச் ஒலிம்பிக்கில் நடந்த படுகொலைகள் ஓர் உதாரணம்.ஆகவே அதைத்தடுக்க ராணுவம் போலீஸ் என்று குவித்து வைக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.

8. ஒவ்வொரு ஒலிம்பிக்,ஆசியன் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடந்த நாடுகளிலும் அதற்கான இடம்,விளையாட்டுக் கிராமம் போன்றவற்றை உருவாக்கும்போது அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் துரத்தப்பட்ட –மாற்று வாழ்விடம் கொடுக்கப்படாத கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பல்லாயிரக்கணக்கான அல்ல பல லட்சம் மக்கள் இவ்விளையாட்டுக்களால் வீடிழந்து நிற்கிறார்கள்.வீடுகள் மட்டுமல்ல சாலையோர வியாபாரம் செய்து பிழைத்தவர்கள் போல பல தொழில்கள் அழிந்து வாழ்விழந்தவர் எண்ணிக்கையும் வளர்ந்து விரிகிறது.இவர்களின் கண்ணீரின் மீதுதான் தேசியப் பெருமிதம் வளர்க்கும் இவ்விளையாட்டுக்கள் எழும்பி நிற்கின்றன என்பது எவ்வளவு வேதனையான உண்மை.

9. விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள்,அமைப்புகளில் எந்த ஜனநாயகமும் இல்லை.

இவ்வாறான எதிர்மறை அம்சங்களாக நாம் பட்டியலிடுவது விளையாட்டுக்கள் கூடாது என்பதற்காக அல்ல விளையாட்டு கொடியவர்களின் கூடாரமாகவும் ஊழல் பெருச்சாளிகளின் கைப்பாவையாகவும் கார்ப்பொரேட்டுகளின் சொத்தாகவும் ஏழைகளுக்கும் உண்மையான விளையாட்டுத்திறன்களுக்கும் எட்டாக்கனியாகவும் மாறிவிடக்கூடாதே என்பதற்காகத்தான்.இன்னும் பேச நிறைய உண்டு.விளையாட்டை விளையாட்டாக நாம் எடுத்துக்கொண்டுவிட முடியாது என்பதை மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கலாம்.

பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

sa thamilselvan